– இயகோகா சுப்பிரமணியம்
தொடர்
வரி செலுத்தவதால் வரும் தொழில்
வரிகள் – பலதரப்பட்டவை, மாநிலத்துக்கு மாநிலம், நாட்டுக்கு நாடு மாறுபட்டவை. எப்படி வரிகள் விதிக்கப்படுகின்றன, வசூலிக்கப் படுகின்றன, வளர்ச்சிக்காகவும், நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் உபயோகப்படுத்தப் படுகின்றன என்பவையும் நாட்டுக்கு நாடு வேறு பட்டவை. ஆனால் அடிப்படையில் நாட்டுக்கு வருமானம் என்பது அதிகமாக வரிகளின் மூலமாகத்தான் உண்டாகிறது. முந்தைய காலங்களில் ஆறில் ஒரு பங்கு (அதாவது சுமார் 16 சதவிகிதம்) தான் வரி விதிக்கப் பட வேண்டும் என்றும், வரி வசூலிப்பது என்பது பூவிலிருந்து தேன் எடுப்பதுபோல வரி கொடுப்போர் வருந்தா வண்ணம் இருக்க வேண்டும் என்பதும் பழைய தமிழ் இலக்கியங்களிலும் மற்றைய மொழி நூல்களிலும் காணப்படுகின்றன.
ஆங்கிலேய ஆதிக்கத்திற்குப்பின்னர், தொழில் வளர்ச்சி ஏற்பட்டபோது, அவர்களது ஆட்சியின்கீழ் பல வரிகள் விதிக்கப்பட்டன. அதற்குண்டான ஆவணங்கள் பட்டியலிடப்பட்டு, முறைப்படுத்தப்பட்ட ஓர் அமைப்பும் உருவாக்கப் பட்டது. ‘கலெக்டர்’ என்ற பதவியே மாவட்ட நிர்வாகத் தலைவர் என்பதை விடவும், வரி வசூல் என்பதற்காகவே உருவாக்கப்பட்ட பதவிதானே?
ஆனால், அப்படிப்பட்ட வரிகளை ஆங்கில அரசாங்கம் விதித்தபோது, இந்திய நாட்டுச் சொத்தை அவர்களது நாட்டுக்குக் கொள்ளை அடித்துச் செல்வதற்கு ஏதுவாக, தொழில் செய்யும் வெள்ளையர்களுக்கு ஒரு சட்டமும், இந்தியர் களுக்குத் தனிச்சட்டமாகவும் உருவாக்கப்பட்டன. தனிச்சட்டம் என்பதை விடவும், வெள்ளையர் களுக்குச் சாதகமான அம்சங்கள் உள்ளடக்கிய சட்டமாக உருவாக்கப்பட்டன. உதாரணமாக, இந்தியத் தொழிலதிபர்கள் தொழில் மூலம் ஈட்டும் லாபத்துக்கு வருமான வரி சுமார் 95 சதவிகிதம். இலாபத்தில் 95 சதவிகிதத்தைக் கொடுத்துவிட்டு யார்தான் தொழில் செய்யமுடியும். எனவே அவர்கள் ஏதாவது ஒரு வழியில் வரியை ஏய்க்க முயல்வார்கள். அப்போது அவர்கள் அரசின் பிடியில் சிக்குவார்கள். ஆங்கில அரசும் இந்தச் சாதுரியத்துடன் வரிகளை விதித்து நம் நாட்டின் பொருளாதாரத்துடன் விளையாடி வந்தது. எப்படியோ, ஒரு கால கட்டத்தில் இவ்வளவு பெரிய பாரதத்தை நிர்வகிக்க முடியாமல், ‘போதுமடா சாமி’ என்று நமக்குச் சுதந்திரத்தை அளித்துவிட்டு, அவர்கள் விடுதலை பெற்றுச் சென்றுவிட்டனர்.
நாம் பேருக்குத்தான் சுதந்திரம் அடைந்தோமேயொழிய, ஆங்கில அரசு விட்டுச் சென்ற அதே வரிவிதிப்பு அமைப்பை மாற்றாமல், ஏதோ அவைதான் நமது வேதம் என்று எண்ணி அப்படியே பல காலம் கடைப்பிடித்துத் தொழில் வளர்ச்சியை மந்தகதியில் முன்னேற்றி, வரி ஏய்ப்பை ஒரு கலையாக மாற்றி, ஊழலுக்கும், கருப்புப் பணத்துக்கும் வித்திட்டுத் தலைமுறைகள் பல வற்றைக் கெடுக்கக் காரணமானோம்.
இந்த நிலையில்தான் சுமார் இருபது ஆண்டுகளுக்குள், ‘உலகமயமாக்கல்’ என்று ஆரம்பித்து, ஓரளவு வரிவிதிப்பு, வரி வசூலிப்பு போன்றவற்றில் நல்ல மாற்றங்களை அரசு கொண்டு வந்தது. இந்த மாற்றங்கள் தொழில் வளர்ச்சிக்கு அருமருந்தாக அமைந்தன என்பதையும் மறுக்க முடியாது. அதே சமயம் வரிகள் குறைக்கப் பட்டதால் பெருவாரியான தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள் வரிகளைச் செலுத்திவிட வேண்டும் என்ற துடிப்போடு இருப்பதும் கண் கூடாகத் தெரிகின்றது.
சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, அங்கே தொழில் தொடங்கினால் இத்தனை ஆண்டுகளுக்கு விற்பனை வரி, வருமான வரிச்சலுகை உண்டு என்று அறிவித்து அரசாங்கமே ஊக்கி வளர்ப்பதையும் பார்க்கின்றோம். சுங்க வரி, கலால் வரி போன்றவற்றிலும் பல மாறுதல்களை ஏற்படுத்தி ஓரளவு நட்போடு அணுகும் முறையையும் தற் சமயங்களில் நிறையப் பார்க்கிறோம்.
வரி செலுத்தும் எல்லாப் படிவங்களையும் கூட கணினியில் ஏற்றி ஆன் – லைன் மூலமாகவே ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் எளிதான முறைகள் கூட தொடங்கி விட்டன.
சேம்பர் ஆப் காமர்ஸ், சிஐஐ போன்ற அமைப்புகள் அங்கங்குள்ள வரி வசூலிக்கும் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, அந்த அதிகாரிகளோடு நேர்முகமான உரையாடல்கள், சந்தேகத்திற்கான விளக்கங்கள், யாராவது தவறான முறையில் அச்சமூட்டும் வகையில் நடந்து கொண்டால் நேரடியாக விசாரிக்கும் புகார் மனுக்களுக்குப் பதில்கள் என்று ஒருபுறம் நம்பிக்கை ஊட்டும் வண்ணம் தொடர்ந்து நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. வரி ஏய்ப்புச் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் தவறானது. நல்ல ஆடிட்டர்களைக் கொண்டு புதிய முதலீடுகள், காப்பீட்டுத் திட்டங்கள் போன்றவற்றைப் பயன் படுத்தி வரிக்குறைப்பு செய்யலாமே ஒழிய, வரி ஏய்ப்பு கூடவே கூடாது. சில பேர் விசித்திரமான காரணங்கள் சொல்வார்கள். நாட்டில் ஊழல் அதிகம் ஆகி விட்டது. நாம் கொடுக்கும் வரிப் பணங்கள் பல விதமான தவறான காரணங்களால் அரசியல்வாதிகளின் கணக்கில் கருப்புப்பணமாக மாறிவிடுகிறது. வரிப்பணத்தை விரயமாக்கி இடைத் தரகர்கள் செல்வாக்கோடு உலவுகிறார்கள் என்று தாங்கள் வரி ஏய்ப்பதற்கு இப்படிப்பட்ட காரணங்களை கூறிக்கொள்கிறார்கள். இவற்றில் உண்மையும் உண்டு. ஆனால் தீவிரமாக ஆராய்ந்தால் இது சரியான காரணமன்று. அரசாங்கத்திலோ தனியார் நிறுவனத்திலோ பணி புரிபவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அனைவருக்கும் வருமான வரிப்பிடித்தம் அவர்களுக்குச் சம்பளம் கொடுக்கும்போதே பிடித்துக் கொள்ளப்படுகிறது. அவர்களால் வரியை ஏய்க்கவே முடியாது. குறிப்பிட்ட காலத்தில் பணி ஓய்வு பெறும்போது நிறைய சேமிப்பு இல்லாமலும் போகலாம். அவர்கள் வாங்கும் எல்லாப் பொருளுக்குமே பெருவாரியாக வரி செலுத்தித் தான் வாங்க வேண்டி இருந்திருக்கும். பெருவாரியான நடுத்தர வர்க்க மக்கள் இந்த அடிப்படையில்தான் வாழுகின்றார்கள். இவர்கள் தங்களது பிள்ளைகளில் கல்விக்காகவும், பயிற்சிக்காகவும் தங்கள் வாழ்நாள் சேமிப்பைக் கூட இழந்து செலவிடுகிறார்கள். சரி! ஒரு தொழிலைத் தொடங்கும்போது நமக்கு என்னென்ன தேவை, அவை எப்படிக் கிடைக்கின்றன என்று பாருங்கள்.
நிலம், கட்டிடம் முதலீடு செய்து வாங்கப் படுகின்றது. மின்சாரம் அரசாங்கம் உற்பத்தி செய்து தருகின்றது. தொலைத்தொடர்பு வசதிகளை அரசு தருகின்றது. ஆலைக்குத் தேவையான நீர், போக்குவரத்து வசதிகள், பாதுகாப்பு வசதிகள் அரசு தருகின்றது. கடன் அரசு வங்கிகள் மூலமாகக் கிடைக்கும்படி ஏற்பாடு செய்து தருகின்றது. ஆரம்ப கால கட்டங்களில் தொழில்களின் அமைப்பைப் பொறுத்து வரிச் சலுகை, வரித்தள்ளுபடி, முதலீட்டில் ஒரு பங்கு திரும்பப் பெறுவது, குறுகிய காலத்திற்கு குறைந்த வட்டிக்கடன், விற்பனை வரிச்சலுகை, மூலப் பொருள் வரிகளை விற்பனை வரியில் கழித்துக் கொள்வது – எனப் பல சலுகைகள், உதவிகள் அரசுதான் உங்களுக்கு வழங்குகின்றது.
எல்லாவற்றையும் விட, உங்கள் ஆலையின் பணிக்குத்தேவையான நிர்வாகிகள், அதிகாரிகள், தொழிலாளர்கள் அனைவருமே ஏதாவது ஒரு வகையில் ஒரு துறையில் மேல்படிப்பு முதல், பள்ளிப்படிப்பு வரை கட்டாயம் படித்திருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். அந்தக் கல்வியை அரசுதான் வழங்குகின்றது. அதற்கு அரசு உங்களிடம் தனியாக ஏதும் பணம் பெறுவதில்லை. எனவே நீங்கள் ஒரு தொழில் முனைவோராக உருவாகும்போது, உங்களது தொழில் தொடர்ந்து இயங்கவும், வளரவும் அரசு, சமுதாயம் இரண்டுமே பின்னணியில் உங்களுக்குப் பெரிய பலமாக இருந்து பிரதிபலன் பாராமல் உங்களைத் தூக்கி நிறுத்துகின்றன.
என்னால்தான் இந்தத் தொழில் உருவானது, என்னிடம் ஆயிரக்கணக்கில் பணிபுரிகிறார்கள். நான் அவர்களது குடும்பங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறேன். நேரடியாக நான் அரசுக்கு இவ்வளவு கோடிகளில் அல்லது லட்சங்களில் வரி செலுத்துகின்றேன் – என்று சட்டைக்காலரைத் தூக்கிவிட்டுப் பெருமைப்படும்போது, அந்த சாதனையை மற்றவர்களும் உணர்ந்து பாராட்டும் போதும், பின்னணியில் இந்த உயர்வுக்கு உங்களை அனுமதித்து, ஆதரித்து, தொடர்ந்து உதவிக் கொண்டே இருக்கும் அரசாங்க அமைப்புகளும், சமுதாயமும், இன்னும் பல தொழில்களும், சந்தையும் வளர உதவ வேண்டுமானால் நீங்கள் அதற்குச் சரியாக வரிகளைச் செலுத்தினால்தானே இயலும்.
நீங்கள் ஏறிச்செல்லும் ஒவ்வொரு படியையும் தாங்கி நிற்பது இந்த அரசாங்கமும், இந்நாட்டு மக்களும் என்பதை எக்காரணத்தைக் கொண்டும் நாம் மறந்துவிடக்கூடாது. வரிப்பணங்களை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஏய்க்காமல் முழுமையாக அது நாட்டுக்கும், நமக்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணம் தேவைதான். ஒரு ஜனநாயக நாட்டில் அது காலப்போக்கில்தான் மாறும். அந்த மாற்றத்தைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டுமே ஒழிய, ஒரேயடியாக வரி ஏய்ப்பு வேலைகளில் ஒரு தொழில் முனைபவர் ஈடுபடக்கூடாது. அப்படி ஈடுபட்டால் உங்களது வெற்றி, ‘வெளிச்சத்திற்கு’ வராமல் ஓரத்தில் முடங்கிவிடும்.
ஒரு நண்பர். சிறிய தொழிலை ஆரம்பித்து மிகவும் உயர்தரமான ஒரு பொருளைத் தயாரித்து அதை சந்தையில் அறிமுகப்படுத்தினார். வரவேற்பு நன்றாகவே இருந்தது. மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து வந்து ஓரளவு கஷ்டப்பட்டு, எத்தனையோ தடைகளை மீறி இந்த வெற்றிக் கோட்டை எட்டியிருக்கின்றார். வியாபாரம் அதிகமான உடனேயே வரிகட்டாமல் வியாபாரம் செய்து நிறையவும், ஓரளவு வரி கட்டிக் குறைவாகவும் வியாபாரம் செய்து பணம் சேர்த்துள்ளார். இன்றும் நல்ல நிலையில் இருக்கின்றார்.
இவரிடமிருந்து பிரிந்து சென்ற ஒருவர், இதே போன்ற தொழிலை ஆரம்பித்து, அவரும் இரண்டு மூன்று ஆண்டுகளில் நன்றாக வியாபாரம் செய்து முன்னுக்கு வந்துவிட்டார். அதே சமயம், வரிகளை ஏய்க்காமல் ஒழுங்காகச் செலுத்தி வந்திருக்கின்றார்.
ஒரு சமயம் ஒரு மிகப்பெரிய சர்வதேச நிறுவனத்திற்கு இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது பொருட்களை அனுப்பி அவர்களோடு வியாபாரத் தொடர்பு கொள்ள ஆசைப்பட்டுத் தங்களது விலை மற்றும் வியாபாரத்துக்குண்டான எல்லா விவரங்களையும் தொகுத்து அனுப்பி இருக்கிறார்கள்.
அந்த மிகப்பெரிய சர்வதேச நிறுவனம் இரண்டாமவருக்குத்தான் தனது வியாபாரத்தைக் கொடுக்க முடிவு செய்தது.
இத்தனைக்கும் பொருளின் விலை, தரம் மற்ற நிபந்தனைகள் எல்லாமே ஒன்றாகவே இருந்தபோதும் இரண்டாமவரை ஏன் சர்வதேச நிறுவனம் தேர்ந்தெடுத்தது என்றால், வரிகளை ஒழுங்காகச் செலுத்தி வந்ததன் காரணமாக அவரது நிதிநிலை அறிக்கையில் நிறுவனத்தின் மொத்த வியாபாரம், நிறுவன மதிப்பு ஆகியவை அதிகமாக இருந்ததோடு, வங்கிகளின் ஆதரவு, நம்பகத்தன்மை போன்றவை மிகவும் சாதகமாக இருந்துள்ளன.
இரண்டாமவரை விட, முதலாமவர் நிறைய வியாபாரம் செய்தாலும், கணக்கில் கொண்டு வராத காரணத்தால் அந்த வியாபாரத்தொடர்பை இழந்து விட்டார். ஒரு முறை என்னை நேரில் சந்தித்தபோது, இந்த இழப்பைக் குறிப்பிட்டு என்னிடம் மிகவும் வேதனைப்பட்டார்.
நான் அவருக்குக் கூறிய ஒரே அறிவுரை, வரிகளை ஒழுங்காகச் செலுத்தி நிறுவனத்தைப் பலப்படுத்து. உன்னை பலப்படுத்தி நிறுவனத்தையோ, ஆலையையே பலவீன மாக்கினால் நீயும் தோற்பாய். நிறுவனமும் தோற்கும். நிறுவனத்தை பலப்படுத்தினால், அது என்றும் உன்னைத் தாங்கும் என்று கூறி அனுப்பினேன்.
பல ஆண்டுகள் கழித்து, அவரைச் சந்தித்த போது மிகவும் மகிழ்ச்சிகரமாகக்கூறியது எனக்கு மனநிறைவை அளித்தது.
எந்த நிறுவனம் இவருக்கு வியாபாரம் தர மறுத்ததோ, இன்று அந்த நிறுவனம் இவரோடு வியாபாரப் பங்குதாரராக முதலீடு செய்து இணைந்துள்ளது என்று கூறினார். முன்னைக் காட்டிலும் ஆலை விரிவுபடுத்தப்பட்டு, நிறைய ஆட்களும் பணிக்கு அமர்த்தப்பட்டு, நல்ல முறையில் லாபகரமாக இயங்கி வருவதாகவும் கூறினார்.
‘
வெற்றி வெளிச்சம்’ நம் மீது படர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்றால், வரிகளை ஒழுங்காகச் செலுத்துவதோடு அரசு கூறும் அத்தனை கட்டுப்பாடுகளையும் சரிவரச் செய்தால் தான் முடியும். இது நமது தேர்வைப் பொறுத்து அமைவதல்ல. கட்டாயம் செய்ய வேண்டிய கடமை.
Leave a Reply