பிரபலங்களின் நம்பிக்கை நொடிகள்

– கனக லஷ்மி

இந்த மாதம் திரு. லேனா தமிழ்வாணன்

நான் சென்னை தியாகராயர் நகர் ராமகிருஷ்ண பள்ளியில் படித்தேன். அப்போதே என் தந்தையின் பெயரால் அறியப்பட்டிருந்தேன். ஏறத்தாழ 1500 மாணவர்கள். என் பள்ளியில் இருந்த படிக்கட்டுகளை கடந்து தான் என்னுடைய வகுப்புக்கு செல்ல வேண்டும். ஒவ்வொரு முறை மேலே ஏறுகிறபோதும் நான் பல வகுப்புகளை கடந்து செல்ல வேண்டியிருக்கும். அப்போ தெல்லாம் மாணவர்கள் என்னைப்பார்த்து, “இதோ இவன்தான் தமிழ்வாணனோட பையன்” என்று பேசக் கேட்டிருக்கிறேன். நான் பள்ளியின் தேசிய மாணவர் படையில் இருந்தபோது அதில் பங்கு பெறும் மாணவர்கள் எல்லாம் கூட்டம் கூட்டமாக என்னைப் பார்த்து, “இவன் தமிழ்வாணன் பையன் டா” என்று கிசுகிசுப்பார்கள். இது ஒரு விதத்தில் மகிழ்ச்சியாகவும், பெருமிதமாகவும் இருந்தாலும் கூட, எனக்குள் ஓர் ஏக்கமும் இருந்தது. நாம் எப்போதும் தந்தையால் தானே அறியப்படுகிறோம். நம்மால் தந்தை அறியப்பட வேண்டும் என்ற மன எழுச்சி வந்தது.

ஆனால் அந்த மாணவப் பருவத்தில், இளம் வயதில் எனக்குள் உருவான அந்த எழுச்சிக்கு எப்படி செயல் வடிவம் கொடுப்பது, அதற்கான வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது என்ற வழிகள் எனக்குத் தெரியவில்லை. அந்த சமயம் நான் பி.யூ.சி படித்து கொண்டிருந்தேன். இப்போது “நேஷனல் ஜியோகரபிக்” என்ற பெயரில் வெளிவரும் சேனல் அப்பொழுது புத்தகமாக வெளிவந்த கொண்டிருந்த காலம். அதில் நான் ஒரு கட்டுரையை படித்தேன். தென் ஆப்ரிக்கா நாட்டில் ஒரு வேட்டைக்காரர் சிறுத்தையை வேட்டையாட காட்டிற்கு செல்கிறார். அவர் தொழில்ரீதியாக “மிருக மருத்துவர்” ஆகவும் இருப்பவர். அவர் காட்டிற்கு வேட்டையாடச் செல்கிறபோது ஒரு சிறுத்தையைப் பார்க்கிறார். அதற்காக குறி வைத்த போது அதன் குறி தவறி அந்த சிறுத்தையை கொல்லாமல் அதை துடிதுடிக்க வைக்கிறது. அந்த சிறுத்தை ஓடவும் இல்லை, சாகவும் இல்லை. அதை பார்க்க அவருக்கே மனம் இடம் தரவில்லை. எனவே அதற்கு ஒரு மயக்க ஊசி போட்டு, அந்த சிறுத்தையை அவருடைய முகாமிற்கு எடுத்துச் செல்கிறார். அவர் மிருக மருத்துவராகவும் இருப்ப தால் அதன் குண்டை நீக்கிவிட்டு அதற்கு சிகிச்சை யளித்து, எந்த இடத்தில் அச்சிறுத்தையை சுட்டாரோ, அதை இடத்தில் அதைக் கொண்டு விட்டு விட்டார். ஆனால் அந்தச் சிறுத்தை இறங்க மறுக்கிறது… இருந்தாலும் விடாப்பிடியாய் அதை இறக்கி விடுகிறார். அந்த சிறுத்தை அவருடைய வாகனத்தை பின் தொடர்ந்து ஓடி வருகிறது. “இது ஒரு மனிதனுக்கு மிருகத்தின் மேல் இருந்த நேயம். மிருகத்திற்கு மனிதன் மேல் இருந்த பாசம்”.

இதை படித்தபோது 1971 நான் பி.யூ.சி. படித்து கொண்டிருந்த காலம். அந்த சமயத்தில் இந்த சம்பவம் என்னை மிகவும் தாக்கியது. இதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று தோன்றியது. உடனே அதை தமிழில் மொழி பெயர்த்து என் தந்தையார் இடத்திலே கொண்டு கொடுத்தேன். அதை வாங்கி பார்த்தவர், அதை தூக்கி ஒரு மேஜையின் மீது போட்டு விட்டார். இந்த செயலில் என் மனம் முற்றிலுமாக உடைந்தே போனது. ஆனால் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குப் பிறகு வந்த கல்கண்டு இதழில் அந்த கட்டுரை முழுவதுமாக இடம் பெற்றது. என்னுடைய எழுத்து முதன்முதலில் அச்சான தருணம் அதுதான். அதைவிட வியப்பாக சில நாட்களுக்குப் பிறகு என் தந்தை 20,30 கடிதங்கள் அடங்கிய தொகுதி ஒன்றை என்னிடம் கொடுத்தார். “இவை உன் கட்டுரைக்கு வந்த பாராட்டுகள் அப்பா” என்று என்னிடம் கொடுக்கவும் அதில் அப்படி ஒரு பாராட்டு, அப்படி ஒரு நெகிழ்ச்சி. அதில் எனக்கு அளவிட முடியாத ஓர் ஊக்கம் கிடைத்தது. அந்த நொடி அப்படியே வானத்தை நோக்கி குதிக்க வேண்டும் போல உற்சாகமாய் இருந்தது.

அதற்குக் காரணம், என் தந்தை எந்த ஒரு கருத்தும் சொல்லாமல், வாசகர்கள் தான் நீதிபதிகள் என்று எனக்கு உணர்த்திய பின் அந்த கடிதத்தை என்னிடம் கொடுத்திருந்தார். அதில் இருந்த நெகிழ்ச்சி எனக்கு பெரும் மனயெழுச்சியை கொடுத்தது. அதன்பிறகு 15 நாட்களுக்குப் பின் 15 ரூபாய்க்கான காசோலை ஒன்றையும் எனக்கு கொடுத்தார். அந்தக் காலத்தில் 15 ரூபாய் என்பது ஒரு மாணவனுக்கு மிகப்பெரிய தொகை. அப்பொழுதெல்லாம் திரையரங்கில் படம் பார்ப்பதற்கான டிக்கெட் விலையே வெறும் 2 ரூபாய் 90 காசுகள்தான். இப்பொழுது தான் படிக்கும்பொழுதே சம்பாதிக்கும் பழக்கம் பரவலாக அறியப்படுகிறது. இப்பழக்கம் எழுபதுகளிலேயே எனக்கு சாத்தியப் பட்டது. ஆக மாதம் நான்கு கட்டுரைகள், 15 ரூபாய் வீதம் மாதம் 60 ரூபாய் எனக்கு சம்பாத்தியம். அப்பொழுது எனக்கு அது மிகப்பெரிய தொகை. காரணம் என் பள்ளி கட்டணமே 9 ரூபாய். என் பாடப் புத்தகங்கள் 10 ரூபாய்தான். ஆக எனக்கு அந்த வயதிலேயே சம்பாதிக்கிறோம் என்ற சந்தோஷம் இருந்தது.

ஆனாலும் என்னை பாதிப்புக்குள்ளாக்கிய சம்பவம் ஒன்று அப்பொழுது நடந்தது. நான் படித்த பச்சையப்பன் கல்லூரி இருபாலரும் பயிலும் கல்வி நிறுவனம்.

நான் யாருடனோ சிரித்து பேசுவதை பார்த்த என் ஆசிரியர் ஒருவர் என்னை மிகவும் கடுமையாக கண்டித்தார். அவர் சொன்ன வார்த்தைகள் “நீ ஏதோ உன்னை பெரிய இடத்து பிள்ளை என்று நினைச்சுட்டு இருக்கே… நீ எப்படி பெரியாளா வரேன்னு நான் பார்க்கிறேன்” என்று அவர் சொன்னபோது.. என் வகுப்பில் மொத்தம் 19 மாணவர்கள் என 13 மாணவிகள். அவர்கள் முன் உபயோகித்த கடும் சொற்களால் நான் மிகவும் கூனிக் குறுகிப் போனேன். அவமானத் திற்குள்ளானேன். அந்த அதிர்ச்சியிலிருந்து என்னை சுதாரித்துக்கொண்டு, “சார் நான் நிச்சயம் உங்கள் வாயாலேயே பாராட்டு பெறுவேன் என்று” என் மனதில் ஒரு கரம் வைத்து கொண்டேன். அது எனக்கு ஒரு எழுச்சியாக இருந்தது… எந்த ஒரு மனிதன் அவமானங்களை வெகுமானங்களாக எடுத்துக்கொள்கிறானோ, அவனுக்குக்தான் போராட்ட குணம் வரும். வெற்றி பெற வேண்டும் என்ற உந்துதல் வரும். யார் ஒருவர், அவமானம் நிகழ்த்தப்படுகிறபோது கூனிக்குறுகி அங்கேயே நின்று விடுகிறாரோ அவர்கள் மேல் எழ வாய்ப்பே இல்லை.

இவர் ஆசிரியர் என்பதால், இவர் வாயாலேயே பாராட்டு பெற வேண்டும் என்று இலக்கை வைத்துக்கொண்டேன். பத்து, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அதே கல்லூரிக்கு விழா நாயகராக, ஓர் மைய பேச்சாளராக சென்றபோது அதே பேராசிரியர் என்னை பார்த்து, “உன்னை என்னமோ நினைச்சேன். நீ செய்து காட்டிட்டே” என்றார். அவர் கூறியபோது எனக்கு வியப்பாக இருந்தது. பாரதி சொல்வதுபோல், ஓர் காடு, அந்தக்காட்டில் ஓர் மரப்பொந்து, அதற்குள் ஓர் நெருப்புக் குஞ்சு என்பதுபோல் நான் என் மனதில், நெஞ்சில் வைத்திருந்த கரத்தை, இலக்கை இவர் இன்னும் ஞாபகம் வைத்து என்னை பாராட்டுகிறாரே என்பதை உணர்ந்த அந்த நொடி மேலும் என்னை ஊக்கப்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல் என் தந்தை இறந்தபோது, மிகப்பெரிய ஜாம்பவான்கள், எழுத்தாளர்கள் பலரும் அந்தப் பதவிக்கு வருவதற்கு பிரியப்பட்டார்கள். அப்பொழுது நான் கல்லூரியில் படித்து கொண்டிருந்ததால் எனக்கு அந்த எண்ணம் இருக்கவில்லை. என் தாயை ஏற்றுக் கொள்ளச் சொல்லி வேண்டு கோள்கள் வந்தபோது, 70களில் கணவனை இழந்த ஒரு பெண் பதவிக்கு வருவது என்பது ஜீரணிக்க முடியாத ஒரு விஷயமாக இருந்தது. அப்பொழுது அந்த வாய்ப்பு அவருடைய வாரிசுக்குத்தான் செல்ல வேண்டும் என்று எஸ்.ஏ.பி. அண்ணாமலை அய்யா அவர்கள் கூறி எனக்காக களத்தை அமைத்துக் கொடுத்தார்கள். ஒருவருக்கு என்ன தான் தேடல் இருந்தாலும், திறமைகள் இருந்தாலும் அவர்கள் சாதிப்பதற்கான களம் யார் கொடுத்தது? என்பதுதான் முக்கியம். அந்த வகையில் எஸ்.ஏ.பி.அவர்கள் எனக்கு ஏற்படுத்தி கொடுத்த வாய்ப்புதான் என் வாழ்வின் திருப்பு முனை.

என் முதல் எழுத்து அச்சான நேரம், வாசகர்கள் எனக்கு கொடுத்த ஊக்கம், என் தந்தை எனக்களித்த வாய்ப்பு, என் ஆசிரியர் எனக்கு வைத்த குட்டு மற்றும் எஸ்.ஏ.பி அவர்கள் எனக்கு வழங்கிய களம் இவையெல்லாம்தான் என்னை ஒரு எழுத்தாளனாக அறிய உதவியது. நாம் எழுத்தாளன் ஆவதற்கான சூழலும் தேவையும் வந்திருப்பதை உணர்த்திய அந்த நொடிகள் என் நம்பிக்கை நொடிகள்!!!

24 Responses

  1. deepa

    the content in this book are very nice and itis interesting

  2. N.Dharmalingam

    i am also waiting for this kind of confidene seconds. all the best for your continue sucess.

  3. SRC

    innum edhirpokkirom, become a trainer for personality development so that more tamil youths will come up in life

  4. சிவஹரி

    திரு. லேனா தமிழ்வாணன் அவர்களைப் பற்றிய மிகவும் பயனுள்ள பதிவு.

    நன்றி

  5. SARASWATHI

    puli ettadi yenral kutti pathinaaru adi yenbathil pulikkum mattra yellorukkm perumai.

  6. SINGARAVADIVEL

    I happend to know about the book from my Fianciall advison its great to know that Motivanal books are avalable at a very offordable price and i also came to know that previous early issues are sold at a reasonable price
    Studying these type of books in MOTHER tounge gives more in depth awakening i prefer to take distubuter ship for chennai as i was not able to get in book stalls
    I Look forward that college students travelling in college buses should be given for them to read and this should be with all the youth and younger generation
    Singaravadivel
    981334212

  7. Sekar

    மிகவும் அருமையான நம்பிக்கை கட்டுரை……..பயன் பெற்றேன்….நன்றி…

  8. ராஜ்கண்ணன் ச

    தங்கள் தொகுப்புக்கு மிக்க நன்றி.

  9. SELVARAJA

    லேனா தமிழ்வாணன் அவர்களின்
    உற்சாக கட்டுரை இளைஞர்களுக்கு
    ஓர் உந்து சக்தி.
    -கவிஞர்செல்வராஜா

  10. Panneer Selva Mudaliar

    I love Tamilvanan who inspired me a lot when I was young.I read his detective novels.I enumerated the stories to my children.They were happy to receive those stories.still my children have been fashinated by the stories.I am also.The chataractors like Sangerlal and Tamilvanan-those I could not forget.I learnt the world that I could not know in those days.I imitate some characters still in my life.
    When I read this colum I remember my father and mother who had moulded me like Tamilvanan brought his son.Tamilvan was rich,is rich and makes the people prosperous through his noble son.

  11. உறரணி

    அன்புள்ள..

    வணக்கமுடன் உறரணி.

    திரு லேனா தமிழவாணன் போன்றோரின் அனுபவம் வைராக்கியம் இவற்றால் பெற்ற (தன் தந்தையின் நிழலைப் பயன்படுத்தாமல்) வெற்றி போன்றவற்றைத் தொகுத்து நுர்லாக வெளியிடவேண்டும். இவை காலத்திற்கும் பொக்கிஷங்கள்.

  12. Ravi Perumal. S.

    Very impressive!
    Lena my one of the god father.
    Be blessed by the divine!

  13. n.megala

    It is very beautiful.and best wish for your continue success.

  14. jagadees

    vaaipugalai payan paduthubavargal sathikkirargal……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *