நன்றியுடன்

-வழக்கறிஞர். த, இராமலிங்கம்

குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லை
என்று ஒரு திரைப்படப்பாடலில் எழுதுகிறார் கண்ணதாசன். தான் ஈன்ற குட்டி களின் மீது இயல்பாக இருக்கும் பாசம் தவிர, விலங்குகளிடத்தில், மற்ற மெல்லிய உணர்வுகளைப் பார்க்க முடிவதில்லை. அப்படி ஏதேனும் கேள்விப் பட்டால், கண்டிப்பாக அது ஒரு செய்திதான்!

மனிதனே, உணர்வுகளுக்கு ஆட்பட்டவன். உடன் பிறந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்றெல்லாம் எல்லைகளை விரித்துக் கொண்டவன் மனிதன்தான்.

மெல்லிய உணர்வுகளிலேயே மேம்பட்ட உணர்வு, நன்றி. வீட்டுப்பிராணிகளில் நாயை மட்டும் மனிதன் பாசத்துடன் வீட்டில் வளர்ப்பதற்குக் காரணம், அது என்றும் அவனிடம் நன்றியோடு இருப்பதே!

மனிதரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்துவதும், இதே நன்றியுணர்வுதான். ‘நேர்மையாக நடந்து கொள்ள வேண்டுமா… அல்லது நன்றியுணர்வோடு நடந்து கொள்ள வேண்டுமா?’ என்ற குழப்பத்தைச் சந்திக்காதவர்கள் இருக்கமுடியாது.

மிக இக்கட்டான நேரத்தில் உதவி செய்து நம்மைக் காப்பாற்றிய ஒருவர், நியாயத்திற்கு முரணான செயலைச் செய்யும்போது, அவரை ஆதரிப்பதா… அல்லது எதிர்ப்பதா? இந்த நிலை மிகச் சிக்கலானதுதான்.

‘நன்றியுடன் இருக்க விரும்பினால் கும்பகர்ணனைப் பின்பற்றுங்கள். அறத்தின்படி நடக்க விரும்பினால் வீடணனைப் பின்பற்றுங்கள்’ என்று இரண்டு பாத்திரங்களை இராமாயண காவியம் உலவவிட்டிருப்பதாகச் சொல்லப்படுவது உண்டு.

ஒரு கோணத்தில் பார்த்தால் கும்பகர்ணன் நன்றி காரணமாகத் தன் அண்ணனுடன் இருந்து விட்டான் என்று சொல்லமுடியாது. ஆறு மாதங்கள் தூங்கி ஆறுமாதங்கள் விழித்திருந்தவன் அவன். இராவணனுக்கு அரண்மனையில் இருந்த அனைத்து உரிமைகளும் அவனுக்கும் உண்டு. மாபெரும் வீரன். அவனைப் பொறுத்தவரை இராமன் மூன்றாம் மனிதன்தான். அண்ணன் செய்தது தவறே ஆனாலும், மூன்றாம் மனிதனிடம் தலை குனிந்து நிற்பது, தான் பிறந்த குலமானத்திற்கு எதிரானது என்ற எண்ணமே, இராவணனுடன் அவனை நிற்க வைத்தது.

நன்றியைப் பற்றி எண்ணும்போது, கர்ணனை நினைக்காமல் இருக்கமுடியுமா என்ன? அவமானப்பட்ட நேரத்தில் உதவிய நண்பனுக்கு நன்றியுடன் இருப்பதைவிட அறம் எதுவுமில்லை என்று எண்ணியவன் அவன்.

நன்றியுணர்வுக்கும், நியாயப்படி நடப்பதற்கும் முரண் வந்தால், எந்த வழிதான் சரியானது? திருக்குறளில், செய்ந்நன்றி அறிதல் என்னும் அதிகாரத்தில், நன்றியுணர்வின் உயர்வினை பத்துக்குறட்பாக்களில் படித்துவிட்டு, அடுத்த பக்கத்தினைப் புரட்டினால், நடுவு நிலைமை என்னும் அதிகாரத்தில் பத்து குறட்பாக்கள் இருக்கும்.

“நன்றியை நினைத்து, அறத்தின் வழி சிதைந்துவிடக்கூடாது என்பதாலேயே, ‘செய்ந் நன்றி அறிதல்’ அதிகாரத்தை அடுத்து ‘நடுவு நிலைமை’ அதிகாரம் வைக்கப்பட்டது” என்று விளக்கம் சொல்கிறார், திருக்குறளுக்கு முதன்மை யான விளக்கத்தைத் தந்துள்ள பரிமேலழகர்.

எல்லாவகையான சமூகக் குற்றங்களைச் செய்பவர்களைச் சுற்றி, எப்போதும் சிலர் துணையாகவும் ஆதரவாகவும் இருப்பதனைப் பாருங்கள். நன்றியுணர்வுதான் காரணம். தவறான வழிகளில் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சிறு பகுதியினை, அவசியத் தேவைகளில் இருப்பவர் களுக்குத் தூக்கியெறியும்போது, அதைப் பெறுபவர்கள் அவர்களுக்கு நன்றியோடு இருந்து விடுகிறார்கள்!

மிக உயர்ந்த அறங்களுக்காக, உதவி செய்தவர்களை ஒதுக்கிவிட்டுச் செல்வதில் தவறில்லை என்பதே நமது முன்னோர்கள் நமக்குச் சொல்லியிருக்கும் செய்தி. ஏனெனில் உதவியைச் செய்வது என்பதும், பெறுவது என்பதும், இரண்டு தனிமனிதர்களுக்கு இடையில் நிகழ்வது. ஆனால் அறம் என்பது, சமூகம் சார்ந்தது. தனி மனிதர்களுக்கு இடையேயான உணர்வுகளைவிட, நாம் வாழும் சமூகத்தின் நலன்தான் முக்கியம். எனவேதான், நன்றியுடன் இருப்பதைவிட, அறத்தின் வழி நிற்பதே அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது.

‘அறத்தின் வழி நிற்பது’ என்னும் ஒரு விதி விலக்குத் தவிர, நன்றியை மறப்பது போன்ற குற்றம் ஏதுமில்லை. ‘நன்றி கொன்றவர்களுக்கு உய்வில்லை’ என்கிறான் வள்ளுவன்.

பத்து மாதங்கள் வயிற்றில் சுமந்து, பெற்றெடுத்து, சீராட்டி வளர்த்த தாய்; தன் நேரத்தையும் ஓய்வையும் உழைப்பாக்கி, வாழ்வில் உயர்த்திவிடும் தந்தை; இவர்கள் இருவரும், தம்மை அழித்துக்கொண்டு நம்மைப் பெருமைப் படுத்துபவர்கள் அல்லவா? ‘இவர்கள் என்றும் என் நன்றிக்கு உரியவர்கள்’ என்னும் எண்ணமும், அந்த எண்ணத்தினைச் செயலாக்கும் முனைப்பும் இல்லாத வாழ்க்கை, என்ன வாழ்க்கையாக இருக்க முடியும்?

வாங்கும் சம்பளத்துக்கு என்றில்லாமல், உண்மையில் நம்மீது அக்கறையுடன் அறிவு புகட்டி, நமது வளர்ச்சியைப் பார்த்து மகிழும் குரு ; நேரம் காலம் பார்க்காமல், ஓடி வந்து நமக்கு உதவி செய்யும் நண்பன்; குடும்பத்தின் நலனுக்காவும் மகிழ்ச்சிக்காவும் சலிப்பின்றித் தமது உழைப் பினைத் தரும் கணவன் மனைவி இவர்களெல்லாம் இல்லாமல் நாம் ஏது?

ஓடுகிற ஓட்டத்தில், நன்றி என்னும் இந்த மெல்லிய உணர்வினை நாம் இழந்து விட்டோமோ என்று கவலையாகத்தான் இருக்கிறது. ‘செய்தார்கள் சரி…இல்லையென்று சொல்லவில்லை; ஆனால் என் வாழ்க்கையையும் வளர்ச்சியையும் நான் பார்க்க வேண்டுமே’ இதுதான். நன்றி மறந்தவர்கள் சொல்லிக்கொள்ளும் சமாதானம்!

விலங்கையும் நம்மையும் பிரித்து வைத்திருக்கும் உணர்வுகளில், நன்றியுணர்வும் ஒன்று. ‘இன்று நான் இந்த நிலையில் இருப்பதற்குக் காரணம் இவர்கள்’ என்பதனை மறக்காமல் இருப்பதும், எவ்வளவு வளர்ந்த நிலையிலும் அதனைக் கூச்சமின்றிப் பெருமையுடன் நினைவு கூர்தலுமே மனிதத்தன்மை.

இந்தத் தன்மையால் பயன்பெறுபவர்கள், நாமாகவே இருப்போம். நாம் பெற்ற உதவிகளையும், நமக்கு உதவியவர்களையும் எண்ண எண்ண, பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும் நமக்குள் படிந்துவிடுகிறது. இந்தச் செய்திகளை மகிழ்வுடன் வெளியே சொல்லச் சொல்ல, நமக்குப் பின்னால் வருபவர்களுக்கும் இந்த குணம் படிந்துவிடுகிறது.

நம்மையே அறியாமல், அடுத்த தலை முறைக்கு நாம் விட்டுச்செல்லும் உயர்ந்த பண்பும் இதுவாகத்தான் இருக்கமுடியும்!

Leave a Reply

Your email address will not be published.