தடுமாற்றம் இல்லாத தொடர் வெற்றி

– ரகுராம்

தொழிலில் ஏற்படுகிற ஏற்றத்தாழ்வுகளால்
உங்கள் உறுதியும் தடுமாறுகிறதா?
உங்களை நீங்களே சரிபார்க்க…
இதோ சில அடிப்படை அவசியங்கள்!

வார்த்தைகளில் உண்மை:

சொன்ன வார்த்தைகளுக்கு உண்மையாக இருங்கள். சொன்ன நேரத்திற்கு எதையும் முடித்துத் தருவதில் உறுதியாய் இருங்கள்.

தவிர்க்க முடியாத தாமதங்களையும் முன் கூட்டியே கணித்து, முன்னதாகவே அறிவித்து, கூடுதல் அவகாசத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இது எப்போதாவது தான். எப்போதும் செய்யக் கூடியதல்ல. எந்த சமயத்திலும் நீங்கள் தந்த வார்த்தையின் தரத்தை தரை மட்டமாக்காதீர்கள்.

நேர மேலாண்மை:

நீங்கள் ஒப்புக்கொண்ட சந்திப்புகளுக்குத் தாமதமாக வருவது, சந்திப்பவர்களை அவமதிப்பது. நீங்கள் ஏற்பாடு செய்த சந்திப்புக்கு தாமதமாகச் செல்வது, உங்களை மதித்து வந்தவர்களை அவமதிப்பது. ஒவ்வொரு விநாடியும் மதிப்புள்ளது என்பதை உங்கள் செயல்பாடுகள் உணர்த்தும்போது வித்தியாசத்தை நீங்களே உணர்வீர்கள்.

கணக்குகள் சமர்ப்பித்தல்:

நீங்கள் உண்மையானவர், நியாயமானவர் என்று பிறர் உங்களை போற்றக் காரணமாக இருப்பவை கணக்குகள். இனிப்பென்று நினைத்து கடித்த பழம் புளித்தால் முகம் சுளிப்பதுபோல் தவறான கணக்குகள் தருபவர்கள்மீது மற்றவர்களுக்கு மனச்சுளிப்பை ஏற்படுத்தும்.

பழகுவதற்கு எளிமையாக இருங்கள்:

உலகின் ஒரு நிறுவனத்தின் வெற்றி அதன் தலைவர்கள் பழக எளிமையானவர்களாக இருக்கிறார்களா என்பதைப் பொறுத்தே அமைகின்றன என்று நிர்வாகவியல் ஆய்வுகள் சொல்கின்றன. நீங்கள் பழக எளிமையானவர் களாக இல்லையென்றால் உங்களுடன் வணிக தொடர்பு வைத்துக்கொள்ள பெரும்பாலோர் தயங்குவார்கள். உங்களுடன் பணியாற்றக்கூடிய யாவரும் தங்கள் நிலையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இயலாது. இது உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை பாதிக்கும்.

கூட்டுமுயற்சி:

ஒரு நிறுவனத்தின் வெற்றி அதன் பின் இயங்குகிற ஒட்டுமொத்த குழுவை சார்ந்தே இருக்கிறது. தனி மனிதனின் திறமைகளைத் தாண்டி பிறரின் கருத்துகளுக்கு செவி சாய்த்து, மற்ற பணியாளர்களின் திறமைகளை அங்கீகரிக்கிற போது, நிறுவனத்தின் வெற்றி தானாகவே உயரும். இந்தக் கூட்டு முயற்சியின் மூலமாக சக பணியாளர்களிடையே நம்பிக்கை, பொறுமை, சிக்கல்களை எதிர்கொள்கிற விதம் என அத்தனை திறமைகளும் வளரும்.

செயலில் ஒழுக்கம்:

பலர், வேலை நேரங்களில் எந்நேரமும் வீண் பேச்சுகள் பேசி பொழுதைக் கழிப்பார்கள். அலுவலக உடைமைகளை தவறான வழியில் பயன்படுத்துவார்கள். புரளி பேசுவார்கள், உயர் அதிகாரிகளை விமர்சனம் செய்வார்கள். இது செயலொழுக்கம் இல்லாத சூழ்நிலை. இந்நிலையை மாற்ற ஒரு நிறுவனம் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

துணிவு:

வெற்றியின் அடிப்படையே உங்கள் தடைகளை தகர்த்தெறிந்து செயலில் ஈடுபடுதல் தான். பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு வித்தியாச மான அணுகுமுறை மூலம் தீர்வு காணுகிறபோது உங்கள் போட்டி நிறுவனங்களுக்கு உங்கள் மீது பயம் ஏற்படுவது நிச்சயம். நீங்கள் அசந்துவிடுகிற நொடியில் உங்கள் கண்களுக்கு எட்டா தூரம் நீங்கள் பெற்ற வெற்றியை கடந்து உங்கள் போட்டியாளர் ஓடிக்கொண்டிருப்பார்! எனவே துணிந்து செயல்படுங்கள். உங்கள் திறமைகளை உணர்ந்து செயல்படுங்கள்.

அழுத்தத்தை எதிர்கொள்ளுங்கள்:

அழுத்தம் இல்லாத எந்த துறையும், வேலையும் இன்றளவும் கண்டுபிடிக்கப்பட வில்லை. உங்கள் வேலையில் அழுத்தம் இருப்பது தவிர்க்க முடியாத ஒன்று. நிலத்தில் அழுந்திப் பதிகின்ற பந்துகள் விண் நோக்கி எம்புவது போல், நீங்கள் எதிர் கொள்கிற வேலையின் அழுத்தம் உங்களை வெற்றியின் உயரத்திற்குக் கொண்டு செல்லும்.

நீங்கள் தற்பொழுது அடைந்து உள்ள நிலை மிகவும் சுகமானதாக, போதுமானதாக தோன்றும். ஆனால் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் நகர வேண்டும். தேடுதலை நிறுத்தினால் தேக்கம்தான். எனவே தொடர்ந்து செயல்படுங்கள்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *