ஆளுமையின் அதிசயம்

-மகேஸ்வரி சற்குரு

அரசு அலுவலகங்களில் உள்ள கதவுகள் சிலவற்றில் ‘தள்ளு’ என்று எழுதியிருக்கும். இதைக் கிண்டல் செய்து எத்தனையோ மேடைகளில் பலர் பேசியதும் உண்டு. ஆனால் வெற்றிக்கான கதவுகள் திறக்க வேண்டுமென்றால் தள்ளுதல் இருக்கவேண்டும். தள்ளுதல் சாத்தியமாவது நம் ஆளுமை சக்தியால்தான்.

சிலந்தி வலைப்பின்னலாக இருக்கின்ற வாழ்க்கையில் எப்படி எப்படி நாம் போகப் போகிறோம் என்பதுதான் கணக்கு. கணக்கிடலை மிகச் சரியாக செய்வதுதான் ஆளுமையின் அதிசயம்! நம்மீது வீசப்படுகின்ற விமர்சனங்கள் என்ற கற்களை மைல்கற்களாக மாற்றும் அதிசயம் ஆளுமைத் திறனால் முடியும். ஆளுமை என்பதற்கு ஒரு சிலர் வகுத்துக்கொண்டுள்ள நியதி எவருடனும் நட்புணர்வுடன் பேசாமல், பந்தாவோடு இருப்பது என்று. அதில்லைங்க! மற்றவர்களுடன் பேசாமல் இருப்பது அல்ல ஆளுமை, மற்றவர்களால் (நாம்) பேசப்படுவதுதான் ஆளுமை! அதுதான் ஆளுமையின் அதிசயமும் கூட.

வெற்றியை கற்றுக்கொடுக்கும் குரு யார் தெரியுமா? என்று ஒரு S.M.S. பதில் பெற்றோர்? உறவினர்? ஆசிரியர்? எதுவும் இல்லை. வெற்றியைக் கற்றுக் கொடுக்கும் குரு தோல்வி! தோல்விக்கும் நமக்கும் இடையேயான போட்டியில் ஜெயிக்க வேண்டியது நாம்தான். இரண்டுமுறை (2000, 2007) உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்ற விஸ்வநாதன் ஆனந்த், அக்டோபர் 2008ல் நடந்த 12 சுற்றுகள் கொண்ட போட்டியில் 10வது சுற்றுப் போட்டியில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். ஆனாலும் அடுத்த 2 சுற்றுக்களில் மிகச் சிறப்பாக காய் நகர்த்தி ரஷிய வீரர் விளாடிமிர் கிராம்னிக்குடன் டிரா செய்தார். மீண்டும் உலக சாம்பியன் பட்டம் பெற்றார். மூன்று முறை உலக சாம்பியன் ஆன நம்பிக்கை நட்சத்திரம்.

காத்திருப்புகள் மட்டும் சரித்திரம் படைப்பதில்லை. காத்திருக்கும்போது நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதுதான் சரித்திரம் படைக்கும் என்றார் மகாத்மா காந்தி. உடைகள் ஆளுமைப் பண்பை அதிகப்படுத்திக்காட்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும், உடைகளை மீறிய விஷயம் இரண்டு உண்டு (1) எளிமை! (2) சொற்கள்! சரியாக பயன்படுத்தப்படும் ஒரு சொல் அணுசக்தியைவிட பலமடங்கு ஆற்றல் கொண்டது. அஹிம்சா என்ற ஒரு சொல் மந்திரம் அவருடைய ஆளுமைத்திறனை உலகிற்குக் காட்டியது. இந்திய ரூபாய் தாள்களில் மோனாலிசா புன்னகையைவிட சிறந்த புன்னகையைத் தரமுடிந்தது.

22 வயது சாதனைப் புயல் ஷெர்லே ஷெங்! பிறந்தபோது மற்ற குழந்தைகள் போன்றுதான் இருந்தாள் ஷெர்லே. சில மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சலுக்குப் பிறகு கால்கள் முடமாயின. 11 வயதுவரை மருத்துவமனைதான் வாழ்க்கை என்றாகிப் போனது. பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. 12 வயதிலே 180 நாட்கள் சிறப்புக் கல்வி பயின்றாள். தன்னுடைய வாழ்க்கைத் தோல்விகள் மீது ஆக்ரோஷமான தாக்குதல். கிடைத்தது வெற்றி. எழுத்துலகம் ஷெர்லேயிடம் மண்டியிட்டது. ஷெர்லே எழுதிய 9 புத்தகங்களுக்கு விருது கிடைத்தது. 97ஆம் வருடம் சிறுகதைகளின் ராணியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டாள். 99ல் ‘வானவில்லின் வண்ணங்கள்’ என்ற கவிதைக்கு விருது கிடைத்தது. 2006ல் நியூயார்க் டைம்ஸ் நடத்திய சர்வதேச கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்றாள். சீனப்பெண் ஷெர்லேவின் எழுத்தில் இருந்த ஆளுமைத் திறனை கண்டு அமெரிக்கா அதிசயித்தது. எழுத்தாளர், கவிஞர், நம்பிக்கை நட்சத்திரங்களை அள்ளித்தரும் பேச்சாளர், சமூக நிகழ்ச்சி ஒருங் கிணைப்பாளர், ஆளுமைத்திறன் மேம்பாட்டு பயிற்றுனர், இத்தனை பரிமா ணங்களையும் பெற்ற ஷெர்லேக்கு மீண்டும் ஓர் இடி!

17 வயதில் கண்பார்வை போனது. என்னுடைய கண்பார்வை திரும்ப கிடைத்துவிடும். அறிவியல் துறையில் சாதிப்பேன்! ஹார்வர்டு யூனிவர்சிட்டியில் டாக்டரேட் வாங்குவேன்!

இவருடைய ஆதங்கம் எல்லாம் மருத்துவர் மேல்தான். என்னுடைய உடல்சார்ந்த பிரச்னைகளை மருத்துவர்கள் காது கொடுத்துக் கேட்டிருந்தால் நான் இவ்வளவு சிரமங்களை அனுபவித்து இருக்கவேண்டி இருக்காது. என் அன்னை வருத்தங்களையும் சுமக்க வேண்டி இருக்காது. இந்த நெருடலையும்கூட சாதனையாக மாற்றியதுதான் ஷெர்லே ஷெங்கின் ஆளுமைத்திறன். அதுமட்டுமா! பெற்றோர் குழந்தைகள் நலனுக்கு வழக்காடும் வழக்கறிஞராக உள்ளார்.

ஷெர்லேவின் வெற்றி வாசகம்:

“நான் பார்வை இழந்துவிட்டாலும் என்னால் இந்த உலகை பரந்து விரிந்த நிலையில் பார்க்க முடிகிறது. கால்கள் ஊனமாக இருந்தாலும் என்னால் சிகரத்தில் ஏறமுடியும். என்னுடைய நம்பிக்கை என்கின்ற கயிறு என்னைப் பிடித்து இழுத்துவிடும்”.

“வையத் தலைமை கொள்” என்ற பாரதியின் வரிகளை நிஜமாக்கியவள் ஷெர்லே ஷெங்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *