– கனகலஷ்மி
ஏழை நாடு, செல்வ செழிப்புமிக்க நாடு என்ற வித்தியாசத்தை உணர்த்த பணம் என்ற அளவு கோல் மாத்திரம் போதும் என்பது பலரின் கருத்து. நடைமுறையில் நாடு, மொழி, இனம், மதம் என அனைத்தையும் உயர்ந்தது தாழ்ந்தது என்று பிரிப்பது பணம்தான். உண்மையில் பணத்தை மிஞ்சிய மாபெரும் சக்தி ஒன்று உண்டு. அந்த மாபெரும் சக்திதான் ஒரு மனிதனில் துவங்கி அவன்
வாழுகிற சமூகம், நாடு என அனைத்தையும் புரட்டி போடும் வல்லமை படைத்தது. அந்த மாபெரும் சக்தி ஏதோ அதிர்ஷ்டசாலிகளும், கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட தெய்வ பிறவிகளும் மாத்திரம் பெறுவதல்ல. உயிருடன் பிறக்கிற எல்லா ஜீவராசிகளுடனும் ஒட்டி பிறப்பது. உடலும் அறிவும் வளர்ச்சியடையும் போது நம் உள்ளிருக்கும் அந்த சக்தியையும் கண்டு கொள்வதுதான் நம் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றும் ரகசிய மந்திரம்.
பிறப்பில் சாதாரணமாக பிறப்பது நம் தவறல்ல. இறப்பிலும் சாதாரணமானவர்களாகவே இறப்பது நிச்சயம் நம் தவறுதான். இந்த பொறுப்புணர்ச்சி முழுமை பெற நம்முள் நாம் உணரவேண்டிய அந்த மாபெரும் சக்தி, “ஜெயிக்க வேண்டும் என்ற முனைப்பு”
எந்த மனிதர் தனக்குள் இருக்கும் குறைகளை கண்டறிந்து வெற்றி கொள்கிறாரோ, தோல்வியின் விளிம்பிலும் ஜெயிக்கத் துடிக்கிறாரோ அங்கே அவர் சமூகம் ஜெயிக்கும். அந்த நாடே வெற்றி கொள்ளும்.
பல திரைப்படங்களிலும் பாட நூல்களிலும் செல்வம் நிறைந்த நாடு என்று எனக்கு அறிமுகமான நாடான மலேசியாவை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. கோவையிலிருந்து ஈரோடு செல்லும் துரம்தான் சென்னையிலிருந்து மலேசியா செல்லும் தூரம். வெறும் மூன்று மணி நேரத்தில் மாற்றமடைந்தது விமான நிலையம் மட்டுமல்ல. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு இன்னும் எத்தனையோ. இறங்கிய சில மணித்துளிகளில் பணக்கார நாடு என்பதற்கான சுவடுகள் தெரிய ஆரம்பித்தன. மனிதர்களையும் கார்களையும் தவிர மற்ற அனைத்தும் உயரமானவை. கட்டிடங்களின் உயரம் அந்த நாட்டு வளர்ச்சியின் அடையாளச் சின்னம். பணத்தின் அடிப்படையில் நிச்சயமாக இது செல்வம் நிறைந்த நாடுதான். ஜெயிக்க வேண்டும் என்கிற முனைப்பும் தவிப்பும் இருக்கிற மக்களை பார்த்தால் இந்த நாட்டின் வெற்றியை தீர்மானித்து விடலாம் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. அந்த நாட்டின் வெற்றியை தீர்மானிக்கிற மனிதர்களை நான் தேட ஆரம்பித்தது மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில். அனைவருள்ளும் பரபரப்பு. இரவென்ற பகலென்ற பாகுபாடு அந்த நாட்டின் மக்களுக்கு இல்லை. வாழ்க்கையை நகர்த்துகிற வேலையில்தான் அவர்கள் மூழ்கியிருந்தார்கள்.
மலேசிய அரசின் கூட்டமைப்புப் பிரதேசம் மற்றும் நகர்ப்புற நல்வாழ்வுத்துறை துணை அமைச்சர் டத்தோ. மு. சரவணன், நாற்பத்தோரு வயது நிரம்பிய இளம் தலைவர். கடந்த பொதுத் தேர்தலில் அவர் சார்ந்துள்ள மலேசிய இந்திய காங்கிரஸ் பின்னடைவை சந்தித்த நிலையிலும் தாபா தொகுதியில் வெற்றி பெற்றவர். மலேசிய கம்பன் கழகம், கோலாலம்பூர் கண்ணதாசன் அறவாரியம் ஆகியவற்றின் தலைவர் இவர்.
தமிழகத்தில் இருந்து ஒரு குழுவாக சென்றிருந்தோம். அவர் வெற்றிபெற்ற பாராளு மன்ற தொகுதியான தாப்பாவை பார்வையிடவும் அவருடைய பயணத்தில் எங்கள் குழு உடன் இருக்கவும் சம்மதித்தார். ஒரு ஞாயிறு அன்று எங்கள் பயணம் தாப்பாவை நோக்கி கிளம்பியது. கட்டிடங்கள் மறைந்து மலேசியாவின் உண்மைப் பாரம்பரியம் மலைகளாக விரிய ஆரம்பித்தன. குழந்தைகள் செப்பு சாமான் அடுக்கி விளையாடுவது போல் நேர்த்தியாக வரிசையில் கட்டப்பட்ட வீடுகள். சிறிது நேரத்தில் கோலாம்பூரின் பிரம்மாண்டம் மறைய ஆரம்பித்தது. அது தாப்பாவின் ஆரம்பம். அங்கு பல கூட்டங்களும் மாலைகளும் மரியாதையும் நம் தாய்நாட்டின் நினைவினை எழுப்பி அடங்கியது.
சாலை வழி பயணங்கள் ஓய்ந்து தாப்பாவின் மற்றொரு பகுதிக்கு பயணத்தை தொடர்ந்தோம். மலைப்பாதைகளில் சீறி சென்ற அமைச்சரின் கார் எங்கள் கண்களில் இருந்து மறைந்து விடக்கூடாது என்ற துடிப்பில் அதே வேகத்தில் பின் தொடர்ந்தோம். தாப்பா தொகுதியின் பழங்குடியினர் இருப்பிடமாகிய ஒரான் அசிலி என்ற பகுதியில் கார் போய் நின்றது. ஐம்பது வருடங்களுக்கு முன்னர்கூட இலை தழைகளைக் கட்டிக் கொண்டு வாழ்ந்தவர்கள் சமீபத்தில்தான் ஆடை கலாச்சாரத்திற்கே மெதுவாக நகர்ந்து வந்திருக்கிறார்கள்.
அமைச்சரின் தொகுதியில் இவர்களுக்கான வீடுகள் பள்ளிக்கூடங்கள், அனைத்தும் கட்டித் தரப்பட்டுள்ளன. ஆனால் இவர்களுக்கு மன நிறைவைத் தருவது மலையை குடைந்து இவர்கள் எழுப்பியுள்ள மூங்கில் வீடுகளும், அதன் அடியில் கூண்டுக்களுக்குள் உணவுக்காக வேட்டையாடி வைக்கப்பட்டுள்ள காட்டு பன்றிகளும்தான். ஒரு நிமிடம் மலேசியா என்கிற மாயை மறைந்து செல்வம் நிறைந்த நாடு என்கிற வார்த்தைகள் வெறும் ஒலியாய் கரைந்துபோயின. நாட்டின் வெற்றியை தலைநகரங்களும் உயிரில்லாத கட்டிடங்களும் தீர்மானிப்பதில்லை. இதுபோன்று நாட்டின் கடைகோடியில் எந்த வளர்ச்சியும் இல்லாமல் இருக்கிற மனிதர்கள் தான் தீர்மானிக்கிறார்கள் என்பது புலப்படுகிறது.
அங்கு பழங்குடியினருக்கு அமைச்சர் ஒரு விருந்தினை ஏற்பாடு செய்திருந்தார். அந்த விருந்திற்கு முன்னதாக குறை கேட்கும் படலமும் அரங்கேறியது. நான் மலேசியாவில் இறங்கிய நாள் தொடர்ந்து மலேசியாவின் வெற்றியை தீர்மானிக்கிற மனிதரை தேடி வந்ததன் பயன் அங்குதான் கிட்டியது. சாதாரண லுங்கி அணிந்து கொண்டு, பைஜாமா ஜிப்பா அணிந்து மிக அழகாயிருந்தாள் அந்தப் பெண். அது அந்த நாட்டு பெண்களுக்கான பாரம்பரிய உடை. பழங்குடியினரின் சாயல் அவளுக்கு இல்லை. அவள் பேசிய வார்த்தைகள் எதுவும் எங்களுக்குப் புரியவில்லை. கோலாலம்பூர் நகர்களில் வண்ண விளக்குகளால் இரவு நேரங்களுக்கு பகலின் வண்ணம் பூசப்பட்டிருக்கும் அத்தனை வெளிச்சத்தையும் தோற்கடிக்கிற ஒளி அந்த பெண்ணின் கண்களில் மின்னியது.
கூட்டம் முடிந்ததும் அவள் கோரிக்கைகள் எங்களுக்கு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. காட்டு பன்றிகளை வேட்டையாடுகிற கூட்டத்தில் நாட்டின் அமைச்சரையே கேள்விகள் கேட்டு அசர வைத்தவள். பழங்குடியினரின் கூட்டத்திலேயே படித்து பட்டம் பெற்ற ஒரே பெண். தன் இனத்திற்காக உரிமைக் குரல் எழுப்புகிற நோக்கில் அவள் கேள்விகள் இருந்தன. தன் இன மக்களுக்கு இலவச படிப்பு வழங்க வேண்டும். மூங்கிலில் வாழ்ந்து வரும் இவர்கள் மலேசியாவின் முதுகெலும்பாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே அவள் வாதம். ஜெயிக்க வேண்டும் என்ற தவிப்பு. வாய்ப்புகள் இல்லாத இடத்தில் தனக்கான இடத்தை அமைத்துக் கொண்ட நம்பிக்கை நிறைந்த பெண். அங்கு உள்ள குழந்தைகள் இவளை ஒரு கதாநாயகியாகவே பார்த்தார்கள். “இந்த அக்கா மாதிரிதான் வரணும்” என்ற அவர்கள் ஏக்கப் பார்வை மொழி பெயர்க்கப் படாமலேயே எங்களுக்குப் புரிந்தது.
அந்தப் பெண்ணின் மனம் கண்ட கனவும் சாதிக்க வேண்டும் என்று அவளுக்குள் இருக்கும் முனைப்பும்… நிச்சயம் அந்த சமூகத்தை மாற்றுவதற்கான ஆணி வேர்.
மிகவும் பிற்பட்ட வாழ்க்கைச் சூழலிலும், தீவிர இலட்சியத்தோடு துடிக்கிறது ஒரு மனது. அதனுள்ளே ஆழமாய் ஒரு கனவு.
Leave a Reply