நேர்காணல்…
– கனகலஷ்மி
எதிர்பாராத வறுமையில் இளமைப் பருவம். புதிய சூழலில் புதிரான வாழ்க்கை. திசைதெரியாத நிலையில் திடீர் வெளிச்சம். திக்கு
தெரிந்ததும் தொடரும் வெற்றி. இதுதான் இந்த சாதனை மனிதரின் வாழ்க்கை. மலேசியாவின் மிகப்பெரிய ஜவுளித் தொழிலதிபர் திரு.ரகுமூர்த்தி. வியர்வையில் வரைந்த தனது வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறார்.
உங்கள் ஆரம்பகாலம் பற்றி?
சரித்திரப் புகழ்பெற்ற மலாக்கா மாநிலத்தில் அசாஹான் தோட்டத்தில் தோட்ட கிராணியாக என் தந்தை பணியாற்றி வந்தார். எனது குடும்ப சூழ்நிலை காரணமாக இந்தியாவிற்கு வர வேண்டியதாயிற்று. எனது ஒன்பதாம் வயதில் இந்தியாவின் தென்தமிழகத்தின் ஒரு பகுதியான சேலம் மாவட்டத்தில் தொடக்க கல்விக்காக மலைவாழ் இன மாணவர்களுக்கான உறைவிடப் பள்ளியில் சேர்க்கப் பட்டேன். இதற்கிடையே இந்தியாவில் என் தந்தை துவங்கிய தொழில் நஷ்ட மடைந்தது. மூன்றாண்டு காலத்தில் அவர் இறந்து போனார். அதற்குப் பிறகு இரவு நேரங்களில் சினிமா திரையரங்குகளில் டிக்கெட் கிழித்துக் கொடுத்தும், டீ கடையில் தேநீர் விற்கும் வேலைகளைப் பார்த்தேன். பல சிரமங்களுக்கு இடையே ப்ளஸ் டூ வரை பயின்றேன். என் ஆரம்ப நாட்கள் கசப்பானவையே.
இந்தியாவிலிருந்து நீங்கள் மீண்டும் மலேசியா வரும் வாய்ப்பு எப்படி கிடைத்தது, வந்தபின் மலேசியாவில் உங்கள் ஆரம்ப நாட்கள் எப்படி இருந்தது?
என் தந்தை என்னை மலேசியாவிலிருந்து இந்தியா அழைத்துச் செல்லும் போது எனக்கான பாஸ்போர்ட்டை எடுத்திருந்தார். அப்போது எனக்கு 19 வயது நிரம்பியிருந்தது. என் பள்ளிப் படிப்பை முடித்திருந்தேன். அதே சமயம் நான் இந்தியாவில் வசிப்பதற்காக வழங்கப்பட்ட விசா முடிவுக்கு வந்தது. மலேசியாவில் இருந்த என் அண்ணன் எனக்கு விமான டிக்கெட் எடுத்துத் தருவதாகவும் என்னை மலேசியா வந்துவிடும் படியும் கூறினார். நான் மலேசியா சென்றேன். அங்கு என் அம்மா உயிரோடு இல்லை. என்னை நானே கவனித்துக் கொள்ள வேண்டியநிலை ஏற்பட்டது. படிப்பைத் தொடர முடியவில்லை. பின்பு மலேசியா, முவாரில் உள்ள பஞ்சோர் என்ற பாமாயில் தோட்டத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்த வேலை அதிகாலை நான்கு மணி துவங்கி நாள் முழுவதும் செய்ய வேண்டி இருந்தது. மிகவும் கடினமாக இருந்ததால் ஆறு மாதங்களில் அந்த வேலையை விட்டு நிற்கும் நிலை ஏற்பட்டது. நான் ஏதாவது புதுமையாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் நெருப்பு போல் என்னுள் இருந்தது. சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் மலாக்கா மாநிலத்திலிருந்து அறிமுகம் இல்லாத சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள கிள்ளான் என்ற பகுதியை வந்தடைந்தேன்.
அந்த காலகட்டத்தில் கிள்ளான் மாவட்டம் எப்படி இருந்தது? உங்களுக்கு ஜவுளி வியாபாரத்தின் அறிமுகம் எப்படி கிடைத்தது?
1980களில் கிள்ளானில் அதிகபட்சம் 4 அல்லது 5 இந்திய கடைகள்தான் இருந்தது. மற்ற அனைத்து கடைகளும் சீனர்களுக்கு சொந்தமாக இருந்தது. மாலை நேரங்களிலேயே கடைகள் அடைக்கப்பட்டு மக்கள் வெளியே நடப்பதற்கே பயப்படுவார்கள். அந்த சூழ்நிலையில், கிள்ளான் பகுதியில் கொண்டசாமி செட்டியார் என்பவரின் ஜவுளி நிறுவனத்தில் மாதம் 50 வெள்ளி ஊதியத்தில் வேலை செய்தேன்.
அந்த நிறுவனத்தில் அனைத்து வேலை களையும் செய்தேன். துடைப்பது, விற்பனை செய்வது, முதலாளியின் துணிகளை துவைத்துப் போடுவது என்று தினசரி 16 மணி நேரமும் வேலை செய்தேன். என் மனம் வியாபாரத்தை மட்டுமே நாடியது. வேலை செய்த காலத்தில் விடுமுறைகூட எடுத்தது கிடையாது. என்னுடைய சுறு சுறுப்பையும் கடின உழைப்பையும் கண்டு மற்றொரு நிறுவனத்தார் என்னை வேலைக் கழைத்தனர். அன்றைய தினம் புகழ்பெற்ற யஎட சாரி சென்டரில் வேலைக்குச் சேர்ந்தேன். 1983ஆம் ஆண்டு 500 வெள்ளி சம்பளம் பெற்றேன். எனக்கு அது போதுமானதாக இல்லை. என் மனம் இன்னும் பல உயர்வான கனவுகளை சிந்தித்த படியே இருந்தது.
என்னுடைய கடின உழைப்பின் காரணமாக மூன்றே மாதங்களில் அந்நிறுவனத்தின் மேலாளராக நியமிக்கப்பட்டேன். எனக்கு வியாபாரத்தில் நிறைய அனுபவம் கிடைத்தது யஎட நிறுவனத்தில்தான். என்னுடைய முதலாளி திரு. ஜி. சுப்ரமணியம் என்னை அவருடைய மகனைப் போல பாவித்து வந்தார். அந்நிறுவனத்திற்குத் தேவையான சரக்குகளை வாங்க அமர்த்தப்பட்ட ஒரு தொழிலாளியைப் போல் நான் வேலை பார்க்கவில்லை. என்னுடைய சொந்த நிறுவனமாகவே எண்ணி அங்கு 4 ஆண்டுகள் வேலை செய்தேன்.
உங்கள் சொந்த நிறுவனத்தை நீங்கள் எப்பொழுது துவங்கினீர்கள்?
எனக்கு வியாபாரத்தில் இருந்த அனுபவம் காரணமாக 1987-ல் கூட்டு வியாபாரம் செய்தேன். அதன் பின் 1988-ல் எனது சொந்த நிறுவனமான ‘காயத்ரி சில்க் எம்போரியம்’ என்ற நிறுவனத்தை துவங்கினேன். எனக்கு என் வாடிக்கையாளர்கள், நண்பர்கள் என பலரும் உதவி செய்தனர். என்னிடம் போதுமான அளவு பணம் இல்லாததால் 700 அடி பரப்பளவில் சிறிய நிறுவனத்தை துவங்கினேன். பின்பு அந்நிறுவனம் 1620 சதுர அடி பரப்பளவில் விரிவாக்கப்பட்டது. ஜவுளி ரகங்கள் மாத்திரம் இன்றி, வீட்டு உபயோகப் பொருட்களும் கிடைக்குமாறு 1997-ல் “கேஷ் அண்ட் கேரி” என்ற சூப்பர் மார்க்கெட் துவங்கப்பட்டது.
அந்த சூழ்நிலையில் பல வாடிக்கையாளர் களால் என் நிறுவனத்திற்கு வந்துபோக முடியவில்லை. எனவே சில வாகனங்களை வாடகைக்கு எடுத்து, அந்த வாகனத்தில் துணிகளை விற்பனை செய்தேன். மலை பகுதி வாழ் மக்களும் பயனுறும் வண்ணம் இது அமைந்தது. என் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களைக் கடனில் வழங்கினேன்.
உங்கள் வியாபாரத்தில் வெற்றி காணும் முன் நீங்கள் சந்தித்த தடைகள் என்னென்ன? அதிலிருந்து எப்படி மீண்டு வந்தீர்கள்?
1991 முதல் 1992 வரை வியாபாரம் மந்தமாக இருந்தது. எனக்கு கடன் கொடுத்து உதவிய யாவருக்கும் என்னால் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. என்னுடைய கடை சீல் வைத்து மூடும் நிலையை அடைந்தது. எனக்கு சரக்கு கொடுத்த வியாபாரிகள் அனைவரும் என்னை நெருக்கினார்கள்.
அந்த சமயம் ஒருவர் என்னை சந்தித்தார். ஒருமுறை அவர் உடல் சரியில்லாத போது நான் அவருக்கு உதவியிருந்தேன். இன்று அவர் நல்ல நிலையில் இருப்பதால் என் கடன் தொல்லைகள் தீர அவரே முன்வந்து உதவி செய்தார். நான் நெகிழ்ந்து போய் விட்டேன்.
பின்பு வெறித்தனமாக இயங்க ஆரம்பித்தேன். அதன் பின் ஒவ்வொரு கிளை களாக திறந்து இன்று மலேசியா நாடெங்கும் மொத்தம் 24 கிளைகள் கொண்டு மாபெரும் நிறுவனமாக இயங்கி வருகிறது.
உங்கள் அடுத்த இலக்கு என்ன ?
என்னுடைய அடுத்த இலக்கு, மலேசியாவை தாண்டி வெளி நாடுகளிலும் எங்கள் நிறுவனம் கால்பதிக்க வேண்டும் என்பதே. விரைவில் சிட்னி, ஆஸ்திரேலியாவிலும், இந்தோனேசியாவிலும் கிளை பரப்ப வேண்டும் என்பதே என் அடுத்த நோக்கம்!
வாழ்க்கையிலும், தொழிலும் வெற்றி பெறத் துடிக்கும் நண்பர்களுக்கு உங்கள் கருத்து என்ன?
ஒரு தொழிலை சரியாகப் பழகிக் கொண்டு விட்டால் மட்டும் போதாது. அதில் முழு ஈடுபாட்டுடன் உழைக்க வேண்டும்.
எல்லாத் தொழிலிலும் ஏதாவது பிரச்சினை இருக்கும். பிரச்சினைகள் வரவர தொழில் மீதான காதல் வளர வேண்டும். உதவுபவர்களுக்கே உதவிகள் கிடைக்கின்றன என்பதை எந்தச் சூழலிலும் மறக்கக் கூடாது.
வாய்ப்பு என்று தனியாகத் தேடி கொண்டிருக்காதீர்கள். எதிர்ப்படும் எல்லா வற்றிலும் வாய்ப்புகளை நீங்களே உருவாக்குங்கள்.
Leave a Reply