பாலகுமாரன் நேர்காணல்

-மரபின் மைந்தன் ம. முத்தையா

(எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்கள் சமூகம், ஆன்மீகம், காதல் என்று, பல்வேறு பரிமாணங்களில் வாழ்க்கையின் உன்னதங்களைத் தனது படைப்புகளில் பதிவு செய்து வருபவர். இவரை, பல்லாயிரக்கணக்கான வாசகர்கள், தங்கள் வழிகாட்டியாக வரித்துக்கொண்டிருக்கின்றனர். நமது நம்பிக்கை வாசகர்களுடன் ஒரு விரிவான உரையாடலை நிகழ்த்துகிறார் திரு. பாலகுமாரன்.)

இளமைக்காலத் தவறுகள், தோல்விகள், அவமானங்கள் பற்றியெல்லாம் முன்கதைச் சுருக்கம் என்கிறஉங்கள் சுயசரிதையிலும், சில நாவல்களிலும் மிக வெளிப்படையாக எழுதியிருக்கிறீர்கள். அவற்றைவெளிப்படுத்துவதன் மூலம் சமுதாயத்திற்கு நீங்கள் உணர்த்த விரும்புவது என்ன?

இந்த உலகத்தில் உதைபடாதவன் என்று எவனுமில்லை. தோல்விகள், காயங்கள், அவமானங்கள் எல்லாம், எல்லோருக்கும் வரும். எனக்கும், அந்தத் தோல்விகள், அவமானங்களால் பெரிய பெரிய காயங்கள் எல்லாம் ஏற்பட்டன. எத்தனைபெரிய காயமென்றாலும், அதனைக் காலம் ஆற்றும். ஆஹா என்று முதல் தோன்றுகிறபிரச்னை. இரண்டு நாட்களில் சாதாரணமாகிவிடுகிறது. எனக்குப் பின்னால் இத்தனை தோல்விகள் இருக்கின்றன என்று வெளிப்படப்பேசுவது என் வாசகனுக்கு உரமூட்டுகிறது. வாழ்க்கையை எதிர்கொள்ள அவனுக்கு வலிமை தருகிறது.

எனது நேற்றைய சந்தோஷம் நாளைக்கு நீர்த்துவிடும். போனவாரத்துத் துக்கம் இந்த வாரம் சாதாரணமாய்த் தெரியும். திங்கட்கிழமை இருந்த வலியும் வேதனையும் புதன்கிழமை வரை கூட இருப்பதில்லை. இந்தப் புரிதல் மனிதனுக்கு வந்துவிட்டால் சோர்ந்து போகாமல் தனது கடமையைத் தொடர்ந்து கொண்டிருப்பான். என் கடந்த காலப் பதிவுகள் மூலம் நான் தர விரும்புகிறநம்பிக்கை இதுதான்.

உங்கள் காயங்கள் மற்றும் அவமானங்களிலிருந்தெல்லாம் நீங்கள் எவ்வாறு மீண்டு வந்தீர்கள்?

முதலில், என் செயல்கள் பற்றியெல்லாம் நான் மற்றவர்களிடம் அபிப்பிராயம் கேட்டதில்லை. என் செயல்களுக்கு நான் பொறுப்பு. அவற்றின் விளைவுகளுக்கும் நானே பொறுப்பு. மற்றவர்களின் அபிப்பிராயங்களும் ஆலோசனைகளும் என்னை உயர்த்திவிடாது தாழ்த்தியும் விடாது.பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும், தத்தம்கருமமே கட்டளைக் கல் தீதும் நன்றும் பிறர்தர வாராஅது மட்டுமில்லாமல், பிரச்சினைகளுக்குத் தீர்வு என்று என் உள்ளுணர்வு எதைச் சொல்கிறதோ அதையே செய்திருக்கிறேன். அது பெரும்பாலும் சரியாகவே இருந்திருக்கிறது.

உள்ளுணர்வு உணர்த்துகிறவிசயம் சரியாக இருக்கும் என்கிறீர்கள். உள்ளுணர்வை வளர்த்துக்கொள்வதற்கென்று ஏதேனும் வழிமுறைகளைச் சொல்ல முடியுமா?

உள்ளுணர்வு என்பது எல்லோருக்கும் ஏற்படக்கூடிய விஷயமில்லை. அமைதியாக இருத்தல், தியானம், போன்றசில நல்ல இயல்புகள் அதற்குத் தேவை. அதிலும் சரியான வழிகாட்டுதல், ஆன்ம வளர்ச்சிக்குத் துணைபுரிகிறசத்சங்கம் போன்றவை யெல்லாம் அமைந்தால்தான் அது சாத்தியம். ஆன்மீகத்தேடல் உள்ளவனுக்கு இவையெல்லாம் கிட்டும்.

ஆன்மீகத் தேடல் தேவை என்கிறீர்கள். தன்னை வேறொரு சக்தியிடம் ஒப்படைத்துவிட்டால், அது பார்த்துக் கொள்ளும் என்கிறஉணர்வு வந்துவிட்டால் உழைப்பு குறையும் என்றும் சிலர் கருதுகிறார்கள். தன்னம்பிக்கை வளர ஆன்மீகம் துணை செய்யுமா? இடையூறு செய்யுமா?

நம்மை யாரோ பார்த்துக் கொள்ளுவார்கள் என்கிறஉணர்வு ஏற்படுவதென்பது கவிழ்ந்து படுத்துக்கொள்வதற்காக அல்ல. சொல்லப்போனால், அந்த உணர்வு உற்சாகம் கொடுக்கும். சுறுசுறுப்பாய் இருக்கத் துணை புரியும். வாழ்க்கையை வளமாக்கும். தன்னை, தன்னினும் பெரிய சக்தியிடம் ஒப்படைப்பதற்குப் பெயர் அச்சமல்ல. அதற்குப் பெரிய துணிச்சல் வேண்டும்.

சமூக நாவல்களையே அதிகம் எழுதி வந்த நீங்கள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஆன்மீக விசயங்கள் குறித்து எழுதத் தொடங்கினீர்கள். அதுவும், பொழுது போக்கிற்கு என்று கருதப்படும் மாத நாவல்களில் மிகவும் கனமான விசயங்களை எழுதி வெற்றியும் பெற்றுள்ளீர்கள். அதை இந்த அளவு வெற்றி பெறும் என்று தெரிந்து எழுதினீர்களா? அல்லது பரிசோதனையாக மேற்கொண்டீர்களா?

நீண்ட காலமாக எழுதி வருகிறவன் என்கிறமுறையில் நான் செய்வதெல்லாம் இதுதான். என் வாசகனுக்கு என்ன தேவை இருக்கிறது. எது சொல்லப்பட வேண்டும் என்பதை அறிந்து கொள்கிறேன். அதை எழுதும்போது மிக உண்மையாக எழுதுகிறேன். சமூகம் சார்ந்த நாவல்கள் எழுதும்போதும் அப்படித்தான். எந்த ஒரு செயலையும் உண்மையாக செய்கிறபோது அது உரிய மரியாதையைப் பெறுகிறது. இந்தத் தலைமுறைக்கு உண்மையான ஆன்மீகம் பற்றி வழிகாட்டுதல் தேவை என்பதை உணர்கிறேன். மிகுந்த சிரத்தையோடு அதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன்.

வாழ்க்கையில் பெற்றஅனுபவங்களை, வாழ்க்கை பற்றிய தெளிவு ஏற்படுவதற்காக எழுதுகிறீர்கள். உங்கள் எழுத்துக்களைப் படிக்கும் சிலருக்கு, அந்த எழுத்துக்கள் யாரைக் குறிப்பிடுகின்றன என்று அறிகிறஆர்வம் ஏற்பட்டுவிடவும் வாய்ப்பிருக்கிறதல்லவா?

எனது நாவல்கள் எல்லாமே வாழ்க்கையிலிருந்து வருபவைதான்-வாழ்க்கை என்றால், என்னைப் பற்றியும், என்னைச் சுற்றியுள்ள மனிதர்களைப் பற்றியும் எழுதுவதுதான் சாத்தியம். மனிதர்கள்தானே வாழ்க்கை. குரங்கை வைத்தா கதை எழுத முடியும்? எழுத்துக்கள் என்ன சொல்கின்றன என்பதை விட்டு விட்டு அவை யாரைச் சொல்கின்றன என்பது நோக்கி எந்த வாசகராவது நகர்வார் என்றால் அவருக்குப் பக்குவம் போதவில்லை என்பது அர்த்தம். மனிதர்களின் அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ளலாமே தவிர, அவர்கள் யார் என்கிறஆராய்ச்சியில் ஈடுபடுவது அர்த்தமில்லாத வேலை.

இன்று இளைஞர்கள் அறிவு ரீதியாக பலமாக இருக்கிறார்கள். மனரீதியில் மிகவும் பலவீனமாக இருக்கிறார்கள். நட்பு முறிவு, காதல் தோல்வி போன்றவற்றில் உடைந்துபோய் விடுகிறார்கள். இவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இது போன்றதோல்விகள் நிறைய ஏற்பட வேண்டும் என்கிறேன். பலமாக அடிபட வேண்டும். காதலி பிரிந்து போவாள். நண்பர்கள் புறம் பேசுவார்கள். எதிரிகள் உருவாகி அவர்களால் அவமானப்பட நேரிடும். இயலாமை தரும் தோல்விகள் நொறுங்கிப் போக வைக்கும். இப்படி வரிசையாக அடிவிழுந்து கொண்டே இருக்கிறபோது ஏதாவது ஒரு இடத்தில் உட்காருவோம். உட்கார்ந்து யோசிப்போம். ஏன் இப்படி நிகழ்கிறது என்று யோசிக்க யோசிக்க, தெளிவு பிறக்கும்.தெளிவு நமது செய்கைகளைத் தீர்மானிக்கும் இனிமேல் விழாதபடிக்கு எழமுடியும். நம்மை நாம் இனம் காணுவதற்கு நம் தோல்விகள் நமக்கு உதவியாக இருக்கின்றன. எனவே தோல்விகள், துரோகங்கள் வரட்டும், அவை நம்மை வலுப்படுத்தும்.

இன்று தன்னம்பிக்கை தருகிறநிறைய நூல்கள் மேற்கத்திய நாடுகளில் இருந்து மொழி பெயர்க்கப்படுவதால், தன்னம்பிக்கைகூட இறக்குமதிச் சரக்காகிறது என்கிறமுணுமுணுப்பு இருக்கிறது. இதுபற்றி…

தன்னம்பிக்கை என்பதே ஒரு நல்ல விஷயம் அது எங்கிருந்து வந்தால் என்ன? நல்ல விஷயங்களை யார் சொன்னாலும் கேட்டுக் கொள்ளலாம். சிலருக்கு இராமகிருஷண பரமஹம்சர் சொல்வது பிடிக்கும். சிலருக்கு காப்மேயர் சொன்னால் பிடிக்கும். சொல்லப்படுகிறவிஷயம்தான் முக்கியம்.

காந்தியடிகள் ”ஙஹ் ப்ண்ச்ங் ண்ள் ம்ஹ் ம்ங்ள்ள்ஹஞ்ங்” என்று தனது வாழ்க்கையையே செய்தியாகத் தந்தார். அப்படி நீங்களும் சொல்ல இயலும் என்று கருதுகிறீர்களா?

கண்டிப்பாக சொல்லமுடியும். வாழ்க்கையில் ரொம்பக் கீழேயிருந்து நான் மேலே வந்தவன். அப்படியானால் என் வாழ்க்கையிலிருந்து செய்தி எடுத்துக் கொள்ள முடியும். என் வாழ்க்கையில் பல நல்ல சம்பவங்களும் உண்டு. கெட்ட சம்பவங்களும் உண்டு. இரண்டிலும் இருந்து அடுத்தவர்கள் பாடம் கற்றுக் கொள்ள இயலும்.

இன்று வெற்றி பெறுகிறஇளைஞர்கள் பலர் உறவுகள், பழைய நட்பு போன்றவற்றிலிருந்து விலகி நிற்கிறார்கள். இது நல்லதா?

இப்போதில்லை. எல்லா தலைமுறையின் இளைஞர்களிடம் இது நடக்கிறசேதிதான். இளைஞர்களாக இருப்பவர்கள் இளமையின் ஆரம்பகட்டத்தில் தான் மட்டுமே மிக உயர்வு என்றும் தன்னால் தனித்து வாழ முடியுமென்றும், தனக்கு எவர் உதவியும் எப்பொழுதும் தேவையில்லை என்றும், மற்றவர்களுடைய உதவியெல்லாம் துச்சம் என்றும் உறவுகள் சுமையென்றும் தன் உழைப்பு, தன் கெட்டிக்காரத்தனம், தன் தனித்தன்மையே தனக்கு பெரிய மதிப்பு என்றும் அதுவே தன் தொடர்ந்த வெற்றிக்குக் காரணம் என்றும் நினைத்துக் கொள்கிறார்கள். அது ஒரு வயது. ஒரு மனோநிலை. அது வித மயக்கம் என்று கூடச் சொல்லலாம். இதற்கு எதிர்பதமாக கொஞ்சம் திறமையில்லாதவர்கள். சோம்பேறிகள் தெளிவான முடிவு எடுக்க பயிற்சி இல்லாதவர்கள் அல்லது கடின உழைப்பு போதாதவர்கள் எங்க அம்மா சொன்னா நான் மீறமாட்டேன் என்று முடங்கிக் கிடக்கவும் கூடும். வெளிநாடு போகறதுக்கு எங்கவீட்ல விடமாட்டங்கடா என்று சமாதானம் சொல்லவும் கூடும். இந்த இரண்டுமே தவறான விஷயங்கள். உண்மையில் ஒரு இளைஞன் எப்படியிருக்க வேண்டும் என்றகேள்வி வரலாம்.

சார்ந்தும், சாராத நிலைதான் உத்தமம். நல்ல உறவுகளும், நட்புகளும் இருந்தால்தான் சுகம். இல்லையெனில் நீங்கள் பெற்றவெற்றியை எவரிடம் போய் பகிர்ந்து கொள்வது. யார் உங்களைப் பாராட்டுவார்கள். பாராட்டுவதற்கு ஆள் இல்லையெனில் எதற்காக வெற்றி பெறுவது என்றகேள்வி வருகிறது. மனித வாழ்க்கை நொடிப்பொழுதில் சிதறிவிடக்கூடிய லட்சணம் கொண்டது. ஒருநாள் உணவு வயிறு பிரண்டால், விஷமானால் அதனால் மலமிளகிப் போனால் கைக்காலை தூக்க முடியாது. மரணம் கண்முன் வந்து நிற்கும். அம்மா என்று அலறத்தான் தோன்றும். அம்மா என்று எப்பொழுது அலறினீர்களோ அப்பொழுது அதற்குள் எல்லா உறவுகளும் அடக்கம். வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்தவர், நான் தனி நானற்று இவ்வுலகமில்லை என்று எண்ணமாட்டான். எல்லோரையும் நேசிக்கும் சுபாவம் மரணம் தெரிந்தவருக்கு வந்துவிடும். அதே சமயம் உழைக்காமல் வீட்டோடு இருப்பது என்பது கேவலம். தானும் சந்தோஷமாகி மற்றவரையும் சந்தோஷப்படுத்துவதே வாழ்க்கை. ஏனெனில் மனிதன் கூடிவாழும் இயல்பினன். இங்கு தான் மட்டுமே என்று எந்த இளைஞன் நினைத்தாலும் அது தற்காலிகம்.

திருமணமாகி ஒரு குழந்தை பெற்றதும் மெல்ல குணம் மாறும். இங்கே சகலமும் இறைவன் இட்ட பிச்சை என்றபுத்தி வரும்.
உங்கள் எழுத்துக்களின் தாக்கம் பெற்றுப் பல இளைஞர்கள் ஆன்மீக ஈடுபாடு கொள்கிறார்கள். அவர்கள் ஆன்மீகத்தில் அடுத்த கட்டத்துக்கு நகர்வதெப்படி?

என் குருநாதர் யோகிராம் சுரத்குமார் அடிக்கடி ஒரு வாக்கியம் சொல்லுவார். புலி வாயில் போன மாமிசமும், குருவுக்கு அருகே போன சீடனின் வாழ்வும் கபளீகரம் ஆகும் என்பார்.அதேவிதமாக ஆன்மீகத்தில் முழுமனதாய் நுழைந்தபிறகு அடுத்த கட்டம் ஆன்மீகமே சொல்லித்தரும். அது நுழைந்தவர்களுக்குத் தெரியும். நுழையாதவர்கள்தான் இந்தக்கட்டம், அடுத்த கட்டம் அதற்கு அடுத்தகட்டம் என்று பேசுவார்கள். அது ஸ்டெப் பை ஸ்டெப் அல்ல. செங்கல் செங்கலாக அடுக்குவது அல்ல. கடவுள் தேடல் என்பது மிகச் சத்தியமாக ஆரம்பித்துவிட்டால் வெறுமே மற்றவர்களை விசாரித்துக் கொண்டு உள்ளுக்குள் ஆழ்ந்து அதுபற்றி யோசிக்கத் துவங்கிவிட்டால் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்று சிந்திக்கத் துவங்கிவிட்டால் சடங்குகளா ஆன்மீகம், விதிமுறைகளா மதம். ஒரு குரு மனப்பான்மையா கடவுள் தேடல் என்று விசாரிக்கத் துவங்கிவிட்டால் அந்த விசாரம் வந்து விட்டால் பிறகு மெல்ல மெல்ல பெரும் பரப்புக்குள் அழைத்துப் போகும். அந்த பிரமாண்டத்தின் ஒரு துளி எப்போதேனும் அவர் உணர்ந்துவிட முடியும். அவர் உணர்ந்துவிட கடவுள்பற்றிய பெரும் திகைப்பும், சடங்கும், மதச்சம்பிரதாயங்களும் வெறும் வாகனம் என்பதும் புரிந்து போகும். பயணப்படுவதினுடைய சுகம் தெரிந்து போகும். இதை விசாரிக்கத் துவங்கிய பிறகு குரு என்கிற விஷயம் கூட கழன்று விழுந்துவிடுகிறது. இதற்காக எந்த வனாந்தரத்திற்கும் போகவேண்டிய அவசியமில்லை. உலகத்தினுடைய சகல காரியங்களிலும் விழுந்து புரண்டு கொண்டு தன்னை இடையறாது கவனித்துக் கொண்டிருக்க சட்டென்று ஒருநாள் மின்னல் அடித்தது போல, கால் சறுக்கியது போல சகலமும் மாறும். இதற்கு அடிப்படைத் தேவை உண்மை தன்னிடம் நெல்முளையளவும் பொய் பேசாத தன்மை. எங்கள் மதமே சிறந்தது என்று மதமாற்றம் செய்ய முனைபவர்களுக்கும் ஆன்மீகத்திற்கும் சம்மந்தமேயில்லை. அவர்கள் வெறும் வியாபாரிகள். இதை விசாரிக்க ஆரம்பித்ததும் ஒருவனுடைய லட்சணம் புரிந்துவிடும். அதற்குப் பிறகுதான் இருக்கிறது உண்மையான பிரச்சினை.

இது நவீன குருமார்களின் யுகமென்று தோன்றுகிறது. பாரம்பரியமான மடங்களின் பெயர் சரிவதும் நவீன குருமார்களின் செல்வாக்கு வளர்வதும் எதை உணர்த்துகிறது?

சத்தியத்திற்கு நவீனம் என்றோ பாரம்பரியம் என்றோ எந்தவித நிலையும் இல்லை. சத்தியம் பழையதானது அல்ல. அது புதியதும் அல்ல. எப்பொழுதும் ஒரே விதமாக இருப்பது. இடையறாது ஜொலித்துக் கொண்டிருப்பது. குரு என்பவருக்கு சத்தியம் என்று பெயர். சத்தியம் என்பதை தன்னுள் தான் உணர்ந்து அதை மற்றவருக்கும் சொல்லாமல் சொல்லிக் கொடுப்பதுதான் ஒரு குருவின் வேலை. எனவே, குருமார்கள் என்றபெயரை மிகக் கவனமாக உபயோகப்படுத்துங்கள். மடாதிபதிகள் அரசியல்வாதிகள் போல, அயிரை இட்டு வரால் வாங்குபவர்.

3 Responses

  1. Sridhar

    Such a great interview, Yogi ram surat kumar jaya guru raya

Leave a Reply

Your email address will not be published.