புது வாசல்

மாணவர் பகுதி

சுதந்திரா ஹாலிடே ஸ்கூல் நூற்றுக்கு நூறு இயக்கம் நமது நம்பிக்கை இணைந்து வழங்கும்

புது வாசல்

நம்பிக்கை பரவட்டும்

சினிமாவிற்கு ஆயிரக்கணக்கில் திரள்கிறார்கள். ஆனால் ஒரு சுயமுன்னேற்ற பயிற்சி வகுப்புக்கு நூற்றுக்கணக்கில்தான் திரள்கிறார்கள். ஏன் இந்த வித்தியாசம்? என நண்பர் ஒருவர் வருத்தப்பட்டார்.

வைரம் வாங்க கூட்டம் திரள்வதில்லை. எனவே கூட்டம் சேர்வதை வைத்து எதையும் மதிப்பிட முடியாது.

பொழுதை போக்க விரும்புகிறவர்கள்தான் சினிமாவுக்கு கூடுகிறார்கள். பொழுதை பயன்படுத்த விரும்புகிறவர்கள் மட்டுமே சுயமுன்னேற்ற பயிற்சிகளுக்கு வருகிறார்கள். இதனால்தான் இவ்வளவு பெரிய வித்தியாசம்.

இந்த தேசத்தையே மாற்றிய தலைவர்கள் திரையரங்குகளினால் உருவானவர்கள் அல்ல, நல்ல புத்தகங்களாலும் நல்ல சிந்தனைகளாலும் உருவானவர்கள்.

தங்கள் எதிர்காலம் பற்றிய குழப்பத்தில் இருக்கிற கூட்டம், தற்காலிக ஆறுதலாக சினிமாவை பார்க்கிறது. திரையில் பார்க்கிற கதாநாயகனின் ஹீரோயிசத்தில் தனது கோழைத்தனத்தை மறக்கிறார்கள். கதாநாயகனின் வெற்றியில் தனது தோல்வி விரக்தியை மறக்கிறார்கள். அதிலேயே திருப்தி அடைந்து விடுகிறார்கள்.

மேலும் சினிமா என்ற ஒன்றை ஊருக்கு பத்து தியேட்டர் கட்டி, காலம் காலமாக காட்டி, நாம் மக்களுக்கு பழக்கப்படுத்திவிட்டோம். அதே அளவு சுவாரஸ்யத்தோடு, வெற்றிக்கு வழிகாட்டும் சுயமுன்னேற்ற பயிலரங்கங்களை, அந்த அளவு நம் மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்கவில்லை.

மக்களுக்கு சுயமுன்னேற்ற பயிலரங்கங்களை பழக்கப்படுத்தும் முயற்சிதான் நமது நம்பிக்கையின் சிகரம் உங்கள் உயரமும், சுதந்திரா ஹாலிடே ஸ்கூலின் நூற்றுக்கு நூறு இயக்கமும்.

‘எப்படி இருக்கீங்க?’ என்று யாரிடமாவது கேட்டுப்பாருங்கள். ‘ஏதோ இருக்கேன்’ என்பார்கள். இதையே இங்கிலீஷில், ‘ஹவ் ஆர் யூ?’ என்று கேளுங்கள். ‘ஐயம் பைன்’ என்று பதில் வரும். அது எப்படி தமிழில் ஒருவர் கஷ்டப்படுகிறார். இங்கிலீஷ் என்றால் மட்டும் நன்றாக இருக்கிறார். ஸ்கூலில் சொல்லிக்கொடுத்த பழக்கம்தான் காரணம். இப்படிக் கேட்டால் இப்படித்தான் பதில் சொல்ல வேண்டும் என்று பழக்கி விட்டார்கள்.

நம்பிக்கையும் நாம் பழகிக்கொள்ள வேண்டிய பழக்கம்தான். எந்த விஷயம் குறித்தும் விரக்தியாக பேசுவதில்லை என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.

இனி யாரிடம் பேசினாலும் நம்பிக்கையாக பேசுங்கள். பிறகு உங்களுடன் பழகுபவர்களும் நம்பிக்கையோடு பேசுவார்கள்.

நம்பிக்கை தரும் செய்திகளை கற்க நமது நம்பிக்கையை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

எங்கும் நம்பிக்கை பரவட்டும்.

என்றென்றும் நம்பிக்கையுடன்…

கிருஷ்ண.வரதராஜன்.

துணை ஆசிரியர், நமது நம்பிக்கை

சுதந்திரா ஹாலிடே ஸ்கூல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *