மாணவர் பகுதி
புதுவாசல்
தேவை நூறு விவேகானந்தர்
நூறு இளைஞர்களை கேட்டார் விவேகானந்தர். அவர் கேட்டது போல் இன்று ஆயிரம் இளைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை வழிநடத்த, ஒரு விவேகானந்தர் கூட இன்று இல்லை.
காந்தியடிகளுக்கு பிறகு ஒட்டு மொத்த தேசத்தையும் ஒருங்கிணைக்கிற தலைவர் இன்னும் கூட உருவாகவில்லை என்பதுதான் வேதனை.
ஒரு நாடாகட்டும் அல்லது வீடாகட்டும் ஏன் ஒரு நிறுவனமாகட்டும் நல்ல தலைவர்கள் தான் அதன் வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறார்கள். நிறுவனங்கள் அளவில்கூட வேலைக்கு பணியாளர்கள் தாராளமாக கிடைக்கிறார்கள் ஆனால் அவர்களை சிறப்பாக வழிநடத்த தலைவர்கள்தான் கிடைப்பதில்லை.
படித்த பல பேருக்கு உயர் பதவிகளுக்குரிய வேலை கிடைக்காததற்கு காரணம் அவர்களிடம் தலைமைப்பண்பு இல்லாததுதான் என்கிறது ஓர் ஆய்வு.
ஏன் தலைவர்கள் அருகி வருகிறார்கள்? ஏன் தலைமைப்பண்பை இங்கே யாரும் வளர்த்துக் கொள்வதில்லை? தலைமைப்பண்பிற்குரிய உயரிய குணங்கள் மக்களிடம் அருகிவருகிறதா? இந்தக் கேள்விகள் பல நேரங்களில் என்னிடம் கேட்கப்படுகிறது.
தலைவர் என்பது ஒருவர் வகிக்கிற பதவி அல்ல. ஒருவருக்கு இருக்கிற தகுதி.
வகிக்கிற பதவி என்று நினைப்பவர்கள் பதவியில் இருக்கும் வரை மதிக்கப்படுகிறார்கள். இருக்கிற தகுதி என்று நினைப்பவர்கள் என்றென்றும் நினைக்கப்படுகிறார்கள்.
பதவி வேண்டும் என்று ஆசைப்படும் பலரும் தகுதி வேண்டும் என்று நினைப்பதில்லை. அதனால்தான் தலைவர்கள் நம்மிடம் நிறைய உருவாகவில்லை.
யாரோ தேவதூதர்கள் வந்து இந்த உலகத்தை உன்னதமாக்க மாட்டார்கள். நாம்தான் உலகத்தை வழிநடத்த வேண்டும்.
தலைமைப்பண்பை வளர்த்துக்கொண்டு நாம் என்ன அரசியலுக்கா போகப்போகிறோம்? என்ற எண்ணம் தவறு. உங்கள் குடும்பத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்றால், அதற்கும் கூட தலைமைப்பண்புகள் வேண்டும்.
நீங்கள் கணவராய் இருந்தால் உங்கள் மனைவியை தலைவராக்குங்கள்.
உங்கள் மனைவியை இரண்டாம் கட்ட தலைவராகவாவது உருவாக விடுங்கள். கணவன் என்ன சம்பாதிக்கிறார் என்றுகூட தெரியாத அப்பாவி மனைவிகள் கணவன் இறந்த பிறகு குடும்பத்தை நடத்தத் தெரியாமல் தடுமாறுவதை பார்த்திருக்கிறேன்.
தான் தலைவராக இருக்கும்போதே தனக்கு அடுத்து ஒருவரை தயார் செய்வதே சிறந்த தலைவருக்கான அடையாளம்.
எனவே நீங்கள் பெற்றோராய் இருந்தால், உங்கள் குழந்தைகளை தலைவராக்குங்கள். உங்கள் வீட்டின் தலைமைப் பொறுப்பை, உங்கள் குழந்தைகள் வசம் ஒப்படைத்து அதற்கு அவர்களை பழக்கப்படுத்துங்கள்.
நீங்கள் ஆசிரியராய் இருந்தால், உங்கள் மாணவர்களை தலைவராக்குங்கள். பள்ளியில் உள்ள சின்ன சின்ன வேலைகளையும் மாணவர்களிடம் பிரித்துக்கொடுத்து, அதை திறம்பட நிறைவேற்ற பயிற்சி கொடுத்து, அவர்களை தலைவர்களாக்குங்கள்.
அதற்கு, கணவர், தந்தை, ஆசிரியர் என எந்த நிலையில் இருந்தாலும் நீங்கள் முதலில் தலைவராகுங்கள்.
விவேகானந்தர்களுக்காக காத்திருக்காமல் நாமே விவேகானந்தராய் மாறுவோம்.
என்றென்றும் நம்பிக்கையுடன் ….
கிருஷ்ண.வரதராஜன்.
நூற்றுக்கு நூறு இயக்கம்,
சுதந்திரா ஹாலிடே ஸ்கூல்.
Leave a Reply