நீங்கள் மற்றவரிலிருந்து வேறுபட்டவர்தானே?

– ருக்மணி பன்னீர்செல்வம்

நம்மை மற்றவருடன் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லதா? ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லதா என்பதைக் காட்டிலும் ஒப்பிடுதல் தேவையானதுதானா?

இக்கேள்விகள் மிகவும் சிக்கலானவை. அதற்குரிய பதில்களோ இன்னும் சிக்கலானவை.

தங்களின் பிரச்னைகளுக்கு கவுன்சிலிங் எனப்படும்

ஆலோசனைகளை நாடி எங்களை அணுகுபவர்களிடம் இருந்து நாங்கள் ஒரு மிகப் பெரிய உண்மையைக் கண்டோம். அது பெரும் பாலோனோரின் வாழ்க்கை ஒப்பிட்டுப் பார்ப்பதிலேயே கழிகிறது என்பதுதான்.

தங்களின் மனஅழுத்தத்திற்கு தீர்வுதேடியும், தாங்கள் ஈடுபட்டிருக்கும் துறையில் பின்னடைவுகளை களைவது குறித்தும் எங்களிடம் ஆலோசனை கேட்பவர்கள் மறக்காமல் ஒன்றை குறிப்பிடுகிறார்கள். தன்னைவிட கீழ்நிலையில் இருந்தவர்கள் இன்றைக்கு தங்களைத் தாண்டிச் சென்று விட்டார்கள் என்றும் அவர்களைவிடவும் அதிக சிரத்தையுடன் பாடுபட்டும் தங்களால் மேலே வரமுடியவில்லை என்றும் பெரிதும் வேதனையை வெளிப்படுத்துகிறார்கள்.

அவர்கள் கூறுவதைக் கேட்கின்ற நாங்கள் அவர்களுக்கு அளிக்கும் முதல் ஆலோசனையே ஒப்பிட்டுப் பேசுவதை விட்டுவிடுங்கள் என்பது தான். அதற்குப் பின்னர்தான் அவர்கள் பின் பற்றிய வழிமுறைகளை கேட்டறிகிறோம். அதன் நிறை குறைகளுக்குத் தகுந்தாற்போல் அவர்களின் மன அழுத்தம் களையவும், தொழிலில் முன்னேற்றம் காணவும் அவர்களுக்கு பயிற்சிகளை வழங்குகிறோம்.

பொதுவாக மக்கள் யார் யாரோடு தங்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்கிறார்கள் என்றால் தன்னுடன் படித்தவர்கள், தன்னுடைய உறவினர்கள், நண்பர்கள், தான் ஈடுபட்டிருக்கும் துறையில் இருப்பவர்கள், தன்னுடைய தொழில் போட்டியாளர்கள், தன் தெருவில், தன்னுடைய ஊரில் வாழுகின்ற தனக்குத் தெரிந்தவர்கள் ஆகியோரோடுதான் பெரும்பாலும் தன்னை, தன் நிலையை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வார்கள்.

தனக்குக் கிடைக்காத ஒன்று, முகம் தெரியாத யாரோ ஒருவருக்கு கிடைக்கிறது என்றாலோ அல்லது அறிமுகம் ஆகாத ஒருவருக்கு கிடைப்பது தெரியவந்தாலோ இவர்கள் கவலைப் படுவதில்லை. அதே நேரத்தில் தனக்குத் தெரிந்தவர் களுக்கோ, தன்னுடைய நண்பர்கள், உறவினர் களுக்கோ கிடைத்துவிட்டால் தனக்கு ஏன் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட ஆரம்பித்து விடுகிறார்கள். அது மட்டுமல்லாது கிடைக்கப் பெற்றவர்களை அவர்களின் தகுதிக்கும் மேலாக அவர்கள் அடைந்துள்ளதாய் நினைத்து காழ்ப்புணர்ச்சியும் கொள்கிறார்கள்.

பிறருக்கு கிடைப்பது தனக்கு ஏன் கிடைக்கவில்லை என்கிற இந்த ஒப்பீட்டுப் பார்வையானது வளர்ச்சிக்கு வழிவகுத்தால் அதனை வரவேற்கலாம். மாறாக பொறாமை, அவ நம்பிக்கை, தாழ்வு மனப்பான்மையை கொண்டு வருகிறதென்றால் எவ்வளவு விரைவாய் ஒப்பிடும் குணத்தை நம்மிடமிருந்து அகற்ற முடியுமோ அத்தனை விரைவாய் அகற்றுதல் அவசியமாகும். பிறருடன் ஒப்பிடும்போது தம்முடைய நிலையும், செயல்பாடுகளும் உன்னதமாய் இருந்தால் அது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பெருமை கொள்ள வைக்கிறது. சில நேரங்களில் கர்வத்தையும் வரவழைத்து விடுகிறது.

அதேநேரம் தம்மை பிறருடன் ஒப்பிடுபவர்கள் அவரைவிட தான் தாழ்நிலையில் இருப்பதாய் மனதிற்குள் ஓர் எண்ணத்தை கொண்டுவிட்டால் மிகவும் சோர்ந்து போகிறார்கள். மன அழுத்தத்திற்கும் ஆளாகி விடுகிறார்கள். அதுமட்டுமல்லாது, தான் ஒப்பிட்டுப் பார்க்கும் நபரை தம்முடைய எதிரியாகவும் கருதத் தொடங்குகிறார்கள்.
தேவையில்லாமல் அவரை வெறுக்கவும் அவர்தான் ஏதோ தம்முடைய முன்னேற்றத்திற்கு தடையாய் இருப்பதாய் உண்மைக்கு மாறாக ஒரு பதிவை ஏற்படுத்திக் கொள்ளவும் செய்கிறார்கள்.

அவருடைய வளர்ச்சி அனைத்துமே தம்மிடமிருந்து பறிக்கப்பட்டு வந்தவை என்று எண்ணுவதோடு மட்டுமின்றி பல நேரங்களில் அவதூறாய் அவற்றை பிறரிடத்தில் பரப்பவும் செய்கிறார்கள்.

நாம் எல்லோருமே ஒருவரிலிருந்து மற்றவர் வேறுபட்டவர் என்கின்ற உண்மையை பெரும் பாலும் பலர் உணர்வதேயில்லை. ஒவ்வொருவருடைய ஆசைகள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள், தேவைகள், முயற்சிகள், சூழ்நிலைகள் அனைத்துமே மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவை. ஒரே குடும்பத்தில் உறவுமுறையாய் வாழ்பவராய் இருந்தாலும் உயிர் நண்பர்களாய் இருந்தாலும்கூட இதுதான் உண்மை.

நம்மை பிறருடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்வது தீவிரமாய் போய்விடும்போது அது நம்மையே நாம் அவமானப்படுத்திக் கொள்வதாகும். மற்றவரோடு ஒப்பிடுவதால் ஒரு பயனும் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

ஒப்பீடு செய்வது ஒரு நோயாகும். நம்பிக்கை என்கிற எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் தான் இந்நோயால் பாதிக்கப்படுகிறார்கள். தன்னுடைய தலைவிதி இவ்வளவுதான் என்றும், தான் அதிர்ஷ்டமில்லாத பிறவி என்றும் தன்னையே பழித்துக் கொள்கிறார்கள். ஒப்பிட்டுப் பார்க்க ஒதுக்குகின்ற நேரத்தை தம்மை உயர்த்திக் கொள்வதற்கு செலவழிக்கலாம்.

நான்கு வேர்க்கடலை செடிகளைப் பறித்துப் பாருங்கள். நான்கிலும் விளைந்துள்ள அனைத்து மணிலாக்களும் ஒரே அளவில், ஒரே தரத்தில் உள்ளதா என்று?
வளமான மண்ணில் ஊன்றியிருந்தாலும், சரியான அளவில் நீர்பாய்ச்சினாலும், போதுமான சூரிய வெளிச்சம் இருந்தாலும் அவற்றை எல்லாம் பெற்று பயனுள்ள செடியாய், மரமாய் வளர்வ தென்பது விதையின் வீரியத்திலும் அல்லவா அடங்கியுள்ளது.

உள்வாங்கிக் கொள்ளும் சக்தியையும், திரும்ப வெளிப்படுத்தும் சக்தியையும் மிகச் சரியான அளவில் செய்கின்ற மண்ணாக இருந்தாலும் சரி, மனிதனாயிருந்தாலும் சரி… பெரிதும் போற்றக் கூடிய நிலை கைகூடி வரும் என்பதுதானே உண்மை.

அசைகின்ற காட்சிகளை காண்பிக்க நமக்கு அசையாத திரை ஒன்று தேவைப்படுகிறது. நம்மை சஞ்சலப்படுத்தும் அளவு அசைக்கின்ற சூழல்கள் கண்ணெதிரே தென்பட்டாலும் அவை நம்முள் ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விடாத படி நம் மனத்தை உறுதியான நிலையில் அசையா நிலையில் வைத்திருப்பது அவசியமாகும்.
நமக்கென்று தனிப்பாதையும், நம் முன்னேற்றத்திற்கான வழிமுறைகளும் தனிப்பட்ட முறையில் அமைக்கும்போதுதான் நாம் வெற்றி வாசலை அடையமுடியும்.

வாழும் கலையை வெறுமனே அறிந்து வைத்திருப்பதில் பயனில்லை. அறிந்ததை நடை முறைப்படுத்தி முழுமையாய் வாழ்வதுதானே சிறந்தது.

கவிஞர் இக்பால், மனிதனாகிய தன்னுடைய படைப்பையும், மனிதனைப் படைத்ததாய் கருதப்படும் இறைவனின் படைப்பையும் ஒப்பிடுவதைப் பாருங்கள்.

”இறைவா, இருள் ஆட்சி செலுத்தும் இரவைப் படைத்தவன் நீ;
இருள் அகற்றி ஒளிபரப்பும் விளக்கைப் படைத்தவன் நான்!
களிமண்ணைப் படைத்தவன் நீ;
அழகு சிந்தும் வண்ணக் கிண்ணம் படைத்தவன் நான்!
பாலை நிலத்தையும் மலைகளையும் காடுகளையும் படைத்தவன் நீ;
பூங்காக்களையும் தோட்டங்களையும் பழமுதிர்ச் சோலைகளையும் படைத்தவன் நான்!
நீ கல்லைப் படைத்தாய்;
நல்லழகு உணர்த்தும் கண்ணாடியை நான் படைத்தேன்!
நஞ்சைப் படைத்தவன் நீ என்றிடில்
அதை நல் மூலிகையாக மாற்றியவன் நான்!”

ஒப்பிட்டுப் பார்ப்பதில் தவறில்லை. ஆனால் நம்முடைய ஆற்றலையும், திறமையையும் உயர்வாகக் கருதி ஒப்பிடுவது வளர்ச்சிக்கு வழி காண்பிக்கும். ஒருவேளை நாம் பின் தங்கியிருந்தாலும் உயர்வான ஒப்பீடே நாம் செய்ய வேண்டியதையும் மறைமுகமாய் நினைவூட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *