கானல் தாகங்கள் உனக்கெதற்கு – உன்
கங்கையைத் தேடிப் புறப்படு!
கூனல் நினைவுகள் நமக்கெதற்கு- நல்ல
கூரிய உணர்வுகள் படைத்திடு!
தானாய்க் கிடைப்பது எதுவுமில்லை- நீ
தகுதிகள் பெரிதாய் வளர்த்திடு!
போனால் வராதது பொழுதுதான் -இதைப்
பொறுப்புடன் உணர்ந்து செயல்படு!
நிச்சயம் ஜெயித்திட வேண்டுமென்று- – சட்டம்
நீட்டிட ஒருவரும் இல்லையே!
உச்சம் தொடுகிற தவிப்பன்றி- – பிற
உந்து சக்தியும் இல்லையே!
மெச்சும் விதமாய் உயர்வதும்- – அன்றி
மெத்தைக் கனவில் புரள்வதும்
நிச்சயம் நீ செய்யும் முடிவுதான் – அதில்
நெருப்பாய் இருந்தால் உயர்வுதான்!
கல்லைத் தேடியும் உளிவரலாம் – உன்
கனவுகள் தேடுதல் உன்பொறுப்பு!
வில்லும் அம்பும் தனித்தனியே – அதை
வளைத்துப் பொருத்துதல் உன்பொறுப்பு!
எல்லாத் திறன்களும் உன்னிடமே – அதை
எய்வதும் வெல்வதும் உன்பொறுப்பு!
சொல்லாக் கனவுகள் ஆயிரமே – அவை
செய்து முடிப்பது உன்பொறுப்பு!
fathima
superb thank you
agalya
thank u