சமீபத்தில் நான் பார்த்து ரசித்த விளம்பரம் இது. பறவை ஒன்று, அநாதையாக கிடக்கும் குழந்தையை எடுத்துக்கொண்டு ஆறு, மலை, கடல், பாலைவனம் எல்லாவற்றையும் தாண்டிப் பறக்கும். நடுவில் அந்தக்குழந்தைக்கு வரும் ஆபத்துக்களையும், மழையையும் திறமையாக எதிர்கொண்டு கடைசியில் குழந்தையை பத்திரமாக ஒரு வீட்டில் கொண்டு சேர்க்கும்.
பல வருடங்கள் கழித்து, அநாதையாக விட்டுவிட்டு வந்த குழந்தை எப்படி இருக்கிறது என்று பார்க்க, பறவை அந்த வீட்டுக்கு மறுபடி வரும்.
இப்போது குழந்தை இருபத்தைந்து வயது இளைஞனாகியிருக்கும். பறவை அந்த இளைஞனை ஆர்வத்தோடு பார்க்கும். அவன் சோம்பேறித்தனமாக கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பான். அசுவாரஸ்யமாக ஏதோ வேலை செய்துகொண்டிருப்பான். சுருக்கமாக சொன்னால் சராசரி மனிதனாக இருப்பான். பறவை ஏமாற்றத்தோடு திரும்பிப்போகும்.
விளம்பரம் முடிந்துவிடும். அழகான அந்த விளம்பரம் சொல்லும் செய்தி இதுதான். அந்த பறவை அதன் ஆற்றலையும் தாண்டி பல காரியங்கள் செய்து அந்தக் குழந்தையை காப்பாற்றியது. ஆனால் அவன், அவன் ஆற்றலுக்கு உட்பட்ட காரியங்களை செய்துகூட சாதனை படைக்காமல் சோம்பேறியாக இருக்கிறான்.
இந்த விளம்பரத்தை பார்த்தவுடன் எனக்கு எழுந்த கேள்வி, கடவுள் என்று ஒருவர் இருந்து, அவர் இந்த பூமிக்கு வந்தால், நம்மைப்பார்த்து மகிழ்வாரா? இல்லை வருந்துவாரா?
இந்தக்கேள்வியை நீங்களும் உங்களைப்பார்த்து கேட்டுக்கொள்ளுங்கள். கடவுள் உங்களைப் பார்த்ததும் என்ன நினைப்பார் ?
என் படைப்பின் நோக்கம் நிறைவேறியது என்று பூரிப்பாரா? ஏன் படைத்தோம் இவனை என்று வேதனைப்படுவாரா ?
பழசையெல்லாம் விட்டுத்தள்ளுங்கள். இப்போது நினைத்தால்கூட கடவுள் தன் காலரை தூக்கிவிட்டுக்கொள்ளும்படியான ஒரு வாழ்க்கையை நீங்கள் வாழமுடியும்.
நான் அடிக்கடி யோசிப்பதுண்டு, ‘கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவர் எந்த மொழியில் பேசுவார்? எல்லோரையும் படைத்த கடவுளுக்கு எல்லா மொழியும் தெரிந்திருக்கும், இருந்தாலும் அவர் மொழி எது? அவருக்கு பிடித்த மொழி எது ?’
பிறகுதான் தோன்றியது. எந்த மொழியில் பேசினாலும் நம்பிக்கையோடு பேசுவதைத்தான் கடவுள் விரும்புவார்.
என் விருப்பமும் அதுதான். நம்பிக்கையோடு பேசுங்கள். நம்பிக்கையோடு வாழுங்கள். ஒருவேளை கடவுள் இருந்தால், நிச்சயம் அவர் உங்களைப்பார்த்து பெருமைப்படுவார்.
என்றென்றும் நம்பிக்கையுடன்
கிருஷ்ண.வரதராஜன்
துணை ஆசிரியர் – நமது நம்பிக்கை
சுதந்திரா ஹாலிடே ஸ்கூல்
நூற்றுக்கு நூறு இயக்கம்
Leave a Reply