கடந்த வாரத்தில் ஒருநாள் விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஐயா அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன்.
அவர் பேச்சில் இருக்கும் வேகம் எனக்கு ரொம்ப பிடிக்கும். இரண்டு நிமிஷத்தில் மூன்று விஷயங்களை சொல்லி முடித்துவிடுவார். உற்சாகமான மனிதர்.
அவருடன் என் முதல் அறிமுகம் ஒரு பத்திரிகையில் வந்த அவருடைய பேட்டி. எப்போதோ படித்த அந்த பதில் இன்னும் ஞாபகம் இருக்கிறது.
முன்பின் தெரியாதவர்கள்கூட, விற்பனைக்காக புத்தகங்கள் கேட்டால் அனுப்பி விடுவாராம். விற்று விட்டு ஒழுங்காக பணம் அனுப்புவார்களா? என்று, யாராவது கேட்டால், ”புத்தகம் படிப்பவர் மட்டுமல்ல. புத்தகம் வாங்குபவரும் நிச்சயம் தரமானவர்களாகத்தான் இருப்பார்கள்” என்பாராம்.
சகமனிதர்கள் மீதான அவரது நம்பிக்கை இன்றுவரை தொடர்வது வியப்பாகத்தான் இருக்கிறது.
விற்பனைக்காக புத்தகங்கள் பெற்றுச் சென்ற ஒருவரிடமிருந்து சில மாதங்களாகியும் பணம் வரவில்லை. அலுவலகத்தில் பணம் அனுப்ப நினைவூட்டி கடிதம் எழுதச்சொல்லி ஐயாவிடம் வலியுறுத்தியபோது அவர் எழுதிய கடிதம், ‘இந்த தேதியில் புத்தகங்களை அனுப்பியிருந்தோம். பெற்றுக் கொண்டீர்களா? விபரம் தெரியப்படுத்தவும்’. பணம் எப்போது அனுப்புவீர்கள் என்று ஒரு வார்த்தைகூட அதில் இல்லை.
கடிதம் போய்ச்சேர்ந்த அடுத்த நாளில் விற்பனையாளரின் மனைவியிடமிருந்து போன். கணவருக்கு கிட்னி பெயிலியராகி மருத்துவமனையில் இருப்பதாகவும், மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டு உடல் நலம் தேறி வருவதாகவும் விரைவில் பணம் அனுப்புவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
வேலாயுதம் ஐயா, அலுவலக பணியாளரைக்கூப்பிட்டு சொன்னார், ‘நிச்சயம் அவர்கள் உடல் நலம் பெற்று வந்தவுடன் பணம் அனுப்புவார்கள். அதுவரை அவர்கள் கேட்கும் புத்தகங்களை அனுப்பி வைக்கவும். பணத்தைப் பற்றி பேசி அவர்களை சங்கடப்படுத்த வேண்டாம்.’
வணிகம் என்று வந்துவிட்டால் அதில் மனிதாபிமானத்திற்கோ நம்பிக்கைக்கோ இடமில்லை என்கிற, இன்றைய காலகட்டத்தில்கூட இப்படிப்பட்ட மனிதர்கள்தான் நம்பிக்கையை இன்னும் உயிரோடு வாழ வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
நாமும் அதில் இணைவோம்.
Leave a Reply