நாம் வசிக்கிறோமா? வாழ்கிறோமா?

– ருக்மணி பன்னீர்செல்வம்

தத்துவப் பேராசிரியர் ஒருவர் தன் வகுப்பிற்குள் நுழையும்போது சில பொருட் களையும் எடுத்துக்கொண்டு வந்திருந்தார். வகுப்பறை மேசையின் மேல் அப்பொருட்களை பரப்பி வைத்தார். வகுப்பு தொடங்கியவுடன் எதுவும் பேசாமல் ஒரு பெரிய குவளையை எடுத்து அதற்குள் கற்களைப் போட்டு நிரப்பினார். அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த மாணவர் களை நோக்கி,
‘இந்தக் குவளை நிரம்பியுள்ளதா?’ என்று கேட்டார்.

மாணவர்கள் ‘ஆமாம்’ என்றனர்.

பின்னர் அந்தக் குவளையைச் சற்று குலுக்கி விட்டு அதனுள் சிறிய கூழாங்கற்களை போட்டார். கற்களுக்கு இடையில் இருந்த இடங்களில் சென்று கூழாங்கற்கள் உட்கார்ந்துகொண்டன. இப்போது மீண்டும் ‘இந்தக் குவளை நிரம்பியுள்ளதா?’ என்று கேட்டார். மாணவர்களும் ‘ஆமாம்’ என்றனர்.

கற்களும், கூழாங்கற்களும் நிறைந்த அந்தக் குவளையை மீண்டும் லேசாக குலுக்கிவிட்டு இப்போது மணலைக் கொட்ட ஆரம்பித்தார். இடைவெளி இருந்த இடங்களில் எல்லாம் மணல் போய் நிரம்பியது. திரும்பவும் அதேகேள்வி, ‘இந்தக் குவளை நிரம்பியுள்ளதா?’ என பேராசிரியர் கேட்டவுடன் மாணவர்களும் ‘ஆமாம்’ என்றனர்.

இப்போது அந்தக் குவளையைத் தூக்கிக் காண்பித்து பேசத் தொடங்கினார்.
”இக்குவளைதான் உங்கள் வாழ்க்கையாக நீங்கள் கருத வேண்டும்.

இக்குவளையில் அடங்கியுள்ள பொருட் களைப் போல் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எதற்கு முன்னுரிமை அளிப்பது என்பதில் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும்.
முதலில் போட்ட திடமான கற்கள் மிக மிக முக்கியமானவை. அவைதான் உங்களுடைய குடும்பம், உங்களின் வாழ்க்கைத்துணை, உங்களுடைய குழந்தைகள், உங்களுடைய உடல் நலம்.

மற்ற எல்லாவற்றையும் இழக்க நேர்ந்தால் கூட இவற்றையெல்லாம் இழந்துவிடக் கூடாது.

எப்போதும் உங்களுடனே, உங்களுக்காகவே இருக்கக் கூடியது, திடமான கற்களைப் போல் நிலைத்திருப்பது உங்கள் குடும்பம்தான்.

கூழாங்கற்களைப் போல் இடத்தைப் பிடித்திருக்க வேண்டியவை – உங்களின் வேலை அல்லது தொழில், உங்களின் கார் உள்ளிட்டவை.

மற்றவை எல்லாமே சின்னச்சின்ன விஷயங்கள். அவைதான் மணலைப் போன்றவை.
இந்தக் குவளையில் முதலில் மணலைக் கொட்டியிருந்தால் அது முழுஇடத்தையும் பிடித்துக் கொண்டிருக்கும். கற்களுக்கும், கூழாங் கற்களுக்கும் இடமே இருந்திருக்காது.
உங்கள் வாழ்க்கையும் இதைப்போல்தான்.

மணலைப் போன்ற சின்னச்சின்ன விஷயங்களுக்கே நீங்கள் முன்னுரிமை அளித்து நேரத்தையும், சக்தியையும் வீணாக்கிக் கொண்டி ருந்தால் மிக முக்கியமானதான குடும்பத்தின்மீதும், வேலை-தொழிலின்மீதும் கவனத்தை செலுத்த முடியாமல் போய்விடும்.

எனவே எந்த நேரத்திலும் உங்களின் முன்னுரிமை உங்கள் குடும்பத்திற்குத்தான் என்பதில் மிகச்சரியாக செயல்படுங்கள்” என்று விளக்கி தன் வகுப்பை நிறைவு செய்தார் தத்துவப் பேராசிரியர்.

என்னதான் பெரிய பணியில் இருந்தாலும், பெரும் வருவாய் ஈட்டுகின்ற தொழிலில் ஈடுபட்டி ருந்தாலும் குடும்பத்தினருக்காக மகிழ்ச்சியாய் நேரம் ஒதுக்குவதும், அவர்களுடைய தேவைகள், ஆசைகள் இவற்றை கேட்டறிவதும், கூடுமானவரை ஈடுபாட்டோடு அவற்றை நிறைவேற்றித் தருவதிலும் உள்ள மகிழ்ச்சிக்கு இணை எதுவும் இல்லை. அது மட்டுமல்லாது அது நம்முடைய கடமையும் அல்லவா!
நிறைவேற்ற இயலாதவற்றிற்கு பொறுமையாக, மென்மையாக அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மையான பதில்களை அளிப்பது செய்வதைக் காட்டிலும் முக்கியமானது.

தான் மட்டுமே எல்லாவற்றிற்கும் கவனம் செலுத்த வேண்டியுள்ளதே என்று கவலைப் படுவது, சலித்துக் கொள்வதை எல்லாம் தவிர்த்துவிட்டு வீட்டில் உள்ள மற்றவர் களால் என்னென்ன பொறுப்புகளை ஏற்று செய்ய முடியும் என்பதைப் பேசி அவர்களிடம் ஒப்படைப்பது பணிச்சுமையை குறைப்பதோடு, எப்போதுமே வீட்டிலுள்ளோரோடு இணைந்து இருக்கும் சூழலை ஏற்படுத்தும்.

வேலை-தொழில் காரணமாகவும், எதிர் பார்ப்புகள் பொய்த்துப்போவதால் உறவுகளில் ஏற்படும் விரிசல் காரணமாகவும் இன்றைய குடும்பங்கள் மிகச்சிறியதாகி விட்டன. பெற்றோரும், பிள்ளைகளும்கூட தனித்தனி குடும்பங்களாகி வாழ்கின்ற நிலைதான் இன்றுள்ளது.

அதற்கும் ஒருபடி மேலே போய் கணவன், மனைவி, ஒவ்வோர் இடத்திலும் குழந்தைகள் விடுதியிலும் வாழ்கின்ற சூழலையும் நாம் பார்க்கிறோம்.
நம் மறைவிற்குப் பின் நம்முடைய ஆன்மா மிகச்சிறந்த நிலையை அடைய வேண்டும் என்றால் அதற்கு நாம் நல்ல முறையில் வாழவேண்டும் என்றும், அவ்வாறு அடையும் நிலையை ‘வீடு பேறு’ என்றும் நம்முடைய பெரியோர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.

உயிர் வாழும் காலத்தில் நாம் வசிக்கும் இடத்திற்கும் ‘வீடு’ என்றுதான் பெயர் வைத்திருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் மில்லியன் டாலர் கேள்வி என்பார்களே, அதைப்போல் மிக முக்கியமான இப்போதைய கேள்வி,

”நம் வீட்டில் நாம் வசிக்கிறோமா? வாழ்கிறோமா?” என்பதுதான்.

நான் நடத்தும் பயிற்சி வகுப்புகளில் புதிதாய் பங்கேற்கும் ஒவ்வொரு குழுவினரிடமும் தவறாமல் ஒரு கேள்வியை நான் கேட்பதுண்டு.

”வாழ்க்கை எதனால் செய்யப்பட்டது?” என்பதுதான் அந்தக் கேள்வி.

ஒவ்வொருவரும் அவரவர்களின் அன்றைய சூழலைப் பொறுத்தும், அவரவர் அறிவுக்கெட்டிய வகையிலும் பதிலைக் கூறுவார்கள். எப்போதாவது ஒருமுறை சரியான பதிலும் கிடைப்பதுண்டு.

”வாழ்க்கை நேரத்தால் ஆனது.”

நம்முடைய வாழ்க்கை இரகசிய நேரத்தால் ஆனதுதானே. யார் யார் எவ்வளவு காலம் வாழ்வோம் என்பதை நம்மால் அறிந்து கொள்ளவே முடியாது என்பது நமக்குத் தெரியும்.

நம்மைவிட்டு உயிர் பிரிந்து போய் விட்டாலும், நம் கைகளை விட்டு நேரம் கடந்து போய்விட்டாலும் எத்தனை முயன்றாலும் மீண்டும் வராது என்பதும் நமக்கு மிக நன்றாகத் தெரியும்.

ஆனால், உயிர்ப்பாய் நமக்கு கிடைத்தி ருக்கின்ற ஒவ்வொரு விநாடிக்கும், உயிரோடு நம்முடனே வாழ்பவர்க்கும் உரிய மதிப்பை நாம் அளிக்கிறோமா என்பதைத்தான் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நம்மோடு வாழ்பவர்கள் நமக்கு உரிய மதிப்பை அளிக்கவில்லையே என்றெல்லாம் நாம் கவலைப்படத் தேவையில்லை. அதை அவர்கள் தானாகவே உணரும்படிச் செய்வதில்தான் நம்முடைய வெற்றி அடங்கியுள்ளது.

இப்போதிருக்கும் அலுவலகப்பணிகள், தொழில் ஆகியவை நம்முடைய பெருவாரியான நேரத்தை எடுத்துக் கொள்பவையாக இருக்கின்றன அல்லது நாம் அவ்வாறு அமைத்துக் கொண்டிருக் கிறோம். அதற்கு நாம் கூறும் காரணம், இது போட்டிகள் மிகுந்த உலகம். இதில் நாம் ஜெயிக்க வேண்டுமென்றால் அதற்கு நிறைய நேரத்தை செலவழித்தால்தான் முடியும்.

ஒரு சிலவற்றிற்கும் ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலும்தான் இது பொருந்துமே தவிர எல்லாவற்றிற்கும் பொருந்தாது. ஆனால் பெரும் பாலானவர்கள் அதையே சொல்லி குடும்பத்திற் கான நேரத்தையும் கொள்ளையடித்து வெளியி லேயே செலவழித்துக் கொண்டிருப்பது நியாய மாகுமா?

எல்லாவற்றிற்கும் ஒரு வரையறை இருப்பது போல் நம்முடைய வெளியுலகப் பணிகள், தொழிலுக்காக செலவழிக்கும் நேரத்திற்கும் ஒரு வரையறை வைத்துக்கொள்ள வேண்டும்தானே.

நாங்கள் நடத்தும் கணவன்-மனைவிக்கான ‘இனிய இல்லறம்’ பயிலரங்கிற்கு வருகின்ற பெரும் பாலான பெண்கள் கூறும் குறைபாடு, தம்முடைய கணவர் தம்மோடும் குழந்தைகளோடும் குறைந்த நேரத்தைக்கூட செலவழிப்பதில்லை என்பது.
அதற்கு அவர்களுடைய கணவர்கள் கூறும் பதில் – ”குடும்பத்தினருக்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை நாங்களும் உணர்ந்துள்ளோம். ஆனால் எங்களுடைய தொழில் அவ்வாறு உள்ளது. என்ன செய்வது? ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்தவுடன் கண்டிப்பாக மனைவி, குழந்தைகளுக்காகவே நேரத்தை செலவழிப்போம்.

மனைவி எப்போதும் இப்படித்தான் குறை கூறிக் கொண்டே இருப்பாள். வெற்றியாளர்களின் பேட்டிகளை எல்லாம் படித்துப்பாருங்கள். எல்லாச் சாதனைகளையும் படைத்துவிட்டு ஓய்ந்த பின்னர்தான் அவர்களுடைய குடும்பத்தைப் பற்றி சிந்திக்கிறார்கள்” என்றும், ”இதுநாள்வரை என் குடும்பத்தை கவனிக்காமலே இருந்துவிட்டேன், ஓய்வு பெற்ற பின் என்னுடைய நேரமெல்லாம் என் குடும்பத்திற்குத்தான்” என்று கூறும் சச்சின் டெண்டுல்கர் போன்றவர்களை பட்டியலிட்டும் உதாரணம் காட்டுகிறார்கள்.

நம்முடைய குழந்தைகளின் அந்தந்த பருவத்தை உடன் இருந்து அனுபவியாமல் பின்னால் வந்து என்ன பயன்? மழலை பேசும் குழந்தைகளின் கொஞ்சல் பின்னர் கிடைக்குமா? பள்ளி செல்லும் பிள்ளைகளின் அனுபவங்கள் பின்னர் கிடைக்குமா? மற்ற விஷயங்களும் இதைப் போன்றதுதானே. தனக்கும் குழந்தைகளுக்கும் ஒரு இடைவெளியை உருவாக்கிவிட்டு பின்னாளில் நான் அவர்களுக்காக எவ்வளவு உழைத்தேன்? எவ்வளவு சொத்து சேர்த்தேன்? இப்போது தன்னை நலம் விசாரிப்பது கூட இல்லையே என்று வருத்தப்பட்டு என்ன பயன்?

பெரும்பாலான நேரங்களை வெளியிலேயே செலவழித்துவிடுபவர்கள், குடும்பத்திற்காகத் தானே அப்படி உழைக்கிறேன் என்பவர்கள் குடும்பத்தினரின் தேவைக்குமேல் பணத்தைக் கொடுத்துவிடுகிறேன். மற்றவற்றை அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்பவர்கள், எல்லோருமே எப்போதாவது வரும் விருந்தினர் போல்தான் வீட்டிலும் நடந்துகொள்வார்கள்.

வீடு என்பது நேரம் கிடைக்கும்போது உண்பதற்கும் ஓய்வு எடுப்பதற்குமான இடமாக செயல்படுபவர்கள் எல்லாம் வீட்டில் வாழ் பவர்கள் அல்ல; வசிப்பவர்கள்.
வெளிஉலகமே வாழ்க்கையாக இருப்பவர் களுக்கு வீடு என்பது தேவையில்லை. அவர்களுக்கு விடுதியே போதும்.

அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களுடைய தொழிலில் பெறும் வெற்றியைத்தான் வெற்றியாகவே கருதுவார்கள். அதற்காக குடும்பத் தினரும் சேர்ந்து எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள்.

தொழிலில் வெற்றிபெற வேண்டும் என்று நினைப்பதிலும் அதற்காக குடும்பத்தினரின் ஒத்துழைப்பினை எதிர்பார்ப் பதிலும் தவறில்லை. ஆனால் தன்னுடைய எதிர்பார்ப்பினை மதிப்பதுபோல் நம்மைச் சார்ந் தோரின் எதிர்பார்ப்புகளையும் மதிக்க வேண்டுமல்லவா.

சிலருக்கு வெளியில் கிடைக்கும் பேரும், புகழும், பெருமையுமே போதுமானதாகி விடுவதால் குடும்பத்தினரின் அங்கீகாரத்தைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை.

தன் மீது குடும்பத்தார் வைத்திருக்கும் எதிர் பார்ப்பு, கருத்துமாறுபாடு, தாம் செய்ய வேண்டிய கடமைகள், இவையெல்லாவற்றிற்குமே பணமும், வசதி வாய்ப்புகளுமே தீர்வு என்று கருதிக்கொண்டு அதையெல்லாம் கொடுத்து விட்டாலே போதும் என்று நினைத்து அவற்றை மட்டுமே நிறைவேற்றி வைப்பார்கள்.

தன் குடும்பத்தினர் வசதியோடு வாழ வேண்டும் என்று நினைத்து செய்தாலும்கூட பணம் மட்டுமே எல்லா எதிர்பார்ப்பையும் நிறைவேற்றிவிடாது என்பதில் நமக்கு தெளிவு வேண்டுமல்லவா!

நம்முடைய முன்னுரிமைகளை வரையறை செய்வதில் நாம் கவனமாய் இருப்பது மிக மிக அவசியம். எதை இழந்தாலும் மீண்டும் பெற்றுவிட முடியும். ஆனால் குடும்பத்தை, குடும்பத்தினரின் அன்பை, ஆதரவை இழந்துவிட்டால் மீண்டும் பெறுவதென்பது இயலுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *