தமிழக மக்களின் தனித்தன்மைகளில் ஒன்று, ஒரே குரலில் ஓங்கி ஒலிப்பது. கிராமம் நகரம் என்னும் பேதமின்றி, செல்வந்தர் -ஏழைகள் என்னும் வேறுபாடின்றி, படித்தவர் -பாமரர் என்னும் வித்தியாசமின்றி ஒருமித்த குரலில் ஒரு தீர்ப்பைத் தருவதில் தனி முத்திரை பதிப்பவர்கள் தமிழக மக்கள்.
இந்தத் தேர்தலிலும் இது நிகழ்ந்துள்ளது. அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ள அரசு உருவாகியுள்ளது. ஊடகங்கள் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வும், தேர்தல் ஆணையம் விதைத்துள்ள பொறுப்புணர்வும் அரசியல் தலைவர்களைப் புடம்போடும் நெருப்பாகப் பூத்துச் சிரிக்கின்றன.
அரசு அலுவலகங்களில் கட்டணம் செலுத்துவது முதல் எத்தனையோ தேவைகளுக்கு மக்கள் கால்கடுக்க நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் கால விரயமும் ஆகிறது. இணைய தளங்களில் படிவம் நிரப்பி, ஆவண சரி பார்ப்பு நிகழ்த்தி பெரும்பாலான பணிகளை இணையம் மூலமாகவே முடிக்கும் தொழில் நுட்பம் முடுக்கி விடப்பட வேண்டும்.
சாலைகளை சீர்ப்படுத்துவதில் வேகமும், மின்வெட்டை சீர்செய்ய மாற்று ஏற்பாடுகளும் உடனடித் தேவைகள். கல்விக்கட்டணத்தில் காணப்படும் குழப்ப நிலைகளும் மாறவேண்டும். கல்வியாண்டு தொடங்குவதால் இதற்கு அரசு முதலிடம் தர வேண்டும்.
மாநிலத்தின் நிர்வாகத்திற்கு வேண்டிய பணிகளை முடுக்கிவிட்டு தமிழகத்தை மறு சீரமைக்க இருப்பதாய் அறிவித்திருக்கிறார் முதல்வர். முழுப்பொறுப்பையும் கைகளில் ஒப்படைத்த மக்களின் கனவுகள் நிறைவேறும் என்கிற நம்பிக்கையுடன் புதிய அரசை வாழ்த்துவோம்.
Leave a Reply