இந்த மாதம் இயக்குநர், நடிகர் திரு பாண்டியராஜன்.
(இன்று புகழின் உச்சியைத் தொட்டவர்களும் தங்களுக்கான நம்பிக்கையை எங்கிருந்தோ பெற்றிருப்பார்கள். அந்த அனுபவங்கள் குறித்து உதவி ஆசிரியர் கனகலட்சுமியுடன் உரையாடுகிறார்கள்
பிரபலங்கள்)
தமிழ் சினிமாவின் தரத்தை உலக அரங்கிற்கு எடுத்து சென்றவர். பிரேசிலில் நடைபெற்ற உலகளவிலான திரைப்பட விழாவில் தேர்ந் தெடுக்கப்பட்ட 55 குறும்படங்களில், ஆசியாவில் இருந்து தேர்வான ஒரே குறும்படம் இவருடையது. இயக்குனர், நடிகர் என்று சிநேகமாய் நகைச்சுவையாய் நமக்கு அறிமுகமான திரு.பாண்டியராஜன் அவர்களின் புதிய பரிமாணம் இது!
அவர் இயக்கிய ”ஹெல்ப்” என்ற ஆங்கிலக் குறும்படம் திரைப்படவிழாவில் தேர்வாகி சாதனை படைத்த தருணத்தில் அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட நம்பிக்கை நொடிகள் இதோ!!
எனக்குள் நம்பிக்கை விதைத்தவர்களில் முதன்மையானவர் எனது தந்தையார் மறைந்த திரு. ரத்னம் அவர்கள்தான். அவரைப்போல வாழ்க்கையை ரசித்து வாழ்ந்தவர்களும் மற்றவர் களுக்காக வாழ்ந்தவர்களும் மிகக்குறைவு. அவரது மரணப்பொழுதின்போது மருத்துவமனையில் இருந்தோம். அடக்கம் செய்யப் பணமில்லை. அவருடைய உடலை நீராட்டுவதற்காக சட்டையைக் கழட்டியபோது இறுதிக் செலவுக்கான பணத்தை உள்ளேயே வைத்திருந்தார்.
சிறுநீரக நோய் வந்து சிரமப்பட்டார். அவருக்கான பணிவிடைகளை மிகுந்த கவனத்தோடு செய்வேன். ”பாண்டியா! நான் செத்தபிறகு நீ ரொம்ப நல்லா வருவே” என்று ஆசி வழங்கினார். அது பலித்திருக்கிறது. நான் சினிமா எடுக்கத் தொடங்கியதும் அவரது பெயரிலேயே, ”ரத்னம் ஆர்ட் மூவிஸ்” என்று தொடங்கி அவர் பஸ் ஓட்டுனராக இருந்ததைக் குறிக்கும் விதத்தில் பஸ் ஸ்டீயரிங்கை சின்னமாக வைத்தேன். எவ்வளவு பெரிய நம்பிக்கையாளராக இருந்தாலும் வாழ்க்கையில் மற்றவர்கள் உதவி ஓரளவாவது தேவை என்றாலும் எனது நம்பிக்கை பல அபாயங்களிலிருந்து என்னை மீட்டிருக்கிறது.
உதாரணத்திற்கு எனக்கு 26 வயது இருக்கும் போது மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் ”மனைவி ரெடி” என்ற படம் எடுத்தேன். அந்தப் படத்தில் உடனிருந்தவர்களே ஏமாற்றியதில் 12 இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் கடனாளியாகவும் நேர்ந்தது. மிகவும் இடிந்து போயிருந்தேன். பத்திரிகைகளில் எல்லாம் செய்தி வந்தது. அப்போது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தார். ராமாவரம் தோட்டத்திலிருந்து அழைப்பு வந்தது. காவல்துறை உயரதிகாரிகள் இருந்தார்கள்.
”உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டம் பற்றி முதல்வர் நாளிதழ்களில் பார்த்தார். ஏமாற்றிய வர்கள் யாரென்று உங்களிடம் கேட்டறிந்து உடனே நடவடிக்கை எடுக்குமாறு உத்தர விட்டிருக்கிறார். வேறு உதவிகள் வேண்டி யிருந்தால் நீங்கள் முதல்வரை சந்திக்கலாம் என்றும் கூறியுள்ளார்” என்பதாகத் தெரிவித்தனர். நான் சிறிது யோசித்துவிட்டு சொன்னேன். நான் சில பேரை அதிகம் நம்பியதால் இந்த நஷ்டத்திற்கு ஆளாகியிருக்கிறேன். ஒருவேளை இன்னார் என்று நான் அடையாளம் காட்டி நீங்கள் கைது செய்தால் அவர்களுடைய பெற்றோர்கள் என்னிடம்தான் வந்து அழுவார்கள். அப்புறம் ஜாமீனில் எடுக்க நானே வர வேண்டியிருக்கும். எனவே, உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். பல ஆண்டுகள் முயன்று அந்தக் கடனை அடைத்தேன். சில இழப்புகளை நாமாகத்தான் ஈடுகட்ட வேண்டும்.
”எனக்கு மேக்கப் போட்ற அண்ணா லாட்டரி டிக்கெட் வாங்குவார். அதை பார்த்த நான் ஒரு நாள் அவர்கிட்ட கேட்டேன். ஏண்ணே பரிசு பல நேரங்கள்ல விழறதில்லையே. எத நம்பி வாங்குறீங்க? அவர் சொல்வார், பரிசு விழலேன்னா குலுக்கல் முடியறவரைக்கும் நமக்குதான் பரிசு விழும்னு ஒரு நம்பிக்கை இருக்கே. அதுக்காகவே பல தடவை வாங்கலாம்” என்பார். இந்த வாசகம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
நான் இயக்கிய முதல் ஆங்கிலக்குறும் படம் ”ஹெல்ப்” பெயரில் வெளியாகி உள்ளது. இதை பிரேசிலில் நடை பெற்ற திரைப்பட விழாவிற்கு அனுப்பி இருந்தேன். விழா குழுவினரிடம் இருந்து மின்னஞ்சல் ஒன்று வந்தது. இன்னும் என் திரைப்படத்தின் டி.வி.டி வந்து சேரவில்லை. அதை விரைவில் அனுப்புமாறும் என் கதைக்களத்தை பார்த்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பியதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள்.
இணையத்தில் இருக்கும் சில மென் பொருட்களின் உதவியுடன் அந்த திரைப்படத்தை அனுப்பி னேன். ஆனால் டி.வி.டி வந்து சேராத வரை என் திரைப்படம் அதிகாரப் பூர்வமாக தேர்ந்தெடுக்கப் பட்டதாக அறிவிக்கப்படமாட்டாது என்று தெரிவித்தனர். எனக்கு தெரிந்த விரைவு கூரியர்களில் அனுப்பிக் காத்திருந்தேன்.
இதற்கிடையே என் அம்மா கடந்த 18ஆம் தேதி அன்று மறைந்து விட்டார். துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டிருந்தது. அம்மாவிற்கு 20ஆம் தேதி பால் வைத்துவிட்டு மன மாற்றத்திற்காக என் மின்னஞ்சலை திறந்தேன். என் குறும்படம் அதிகாரப்பூர்வமாக தேர்வு பட்டியலில் இடம் பிடித்திருந்தது.
உலகத்தில் இருந்து மொத்தம் தேர்வான 55 படங்களில் ஆசியாவில் இருந்து தேர்வாகியிருந்த ஒரே படம் ‘ஹெல்ப்’, ‘ஆங்ள்ற் ஈண்ஞ்ண்ற்ஹப் நர்ச்ற்’ என்ற பிரிவில், விருதுக்காக மொத்தம் ஐந்து நாட்டின் இயக்குனர் களை தேர்வு செய்திருந்தார்கள். அமெரிக்கா, யுகுவே, பிரேசில், இங்கிலாந்து மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பாண்டியராஜன். விருதுகள் அறிவிக்கும் முன்பு தேர்வான திரைப்படங்கள் திரையில் திரையிடப்பட்டது. அமெரிக்க திரைப் படத்தை தொடர்ந்து இரண்டாவதாக ஒளிப் பரப்பப்பட்ட திரைப்படம் ஹெல்ப். அவர்கள் விருதுக்கான இயக்குனரை அறிவிக்கும் வரை பரிட்சை முடிவிற்காக கண் இமைக்காமல் காத்திருக்கும் மாணவன்போல் விருது நமக்காக இருக்கும் என்று காத்திருந்தேன். ஆனால் விருது இங்கிலாந்து நாட்டின் இயக்குனருக்கு கிடைத்தது.
எனக்கு இதில் ஏமாற்றம் எதுவும் இல்லை விருது கிடைக்காவிட்டாலும் உலக சினிமாவில் நானும் இருக்கிறேன் என்ற பிடிப்பு, இன்னும் பல உயரங்கள் தொடவேண்டும் என்ற எண்ணத்திற்கு உந்துதலாக இருந்தது. வெற்றி மட்டுமே குறிக் கோள். உயரம் மட்டுமே குறிக்கோள் என்றால் அதை அடைந்தபிறகு முயற்சிக்காமல் கூட போகலாம். ஆனால் இந்த திரைப்படவிழா என்னை இன்னும் சாதிக்கத் தூண்டியிருக்கிறது. உலக சினிமாவினுள் செல்ல முடியாது என்ற கருத்து தகர்க்கப்பட்டிருக்கிறது.
இந்த செய்தியை இந்தியாவின் பல முன்னணிப் பத்திரிகைகள் பாராட்டி எழுதினார்கள்.
வெற்றி பெற்றவர்கள் மட்டும் சாதனை யாளர்கள் அல்ல. நம்பிக்கையுடைய அனைவரும் சாதனையாளர்கள்தான்.
அந்த வகையில், தோல்வி என்பதை விடவும் நான் முன்னால் சொன்னதுபோல் ஒவ்வொரு நொடியும் வெற்றி நமக்குத்தான் என்று உற்சாகத்தோடு காத்திருந்த அந்த நொடிகள் என் நம்பிக்கை நொடிகள். அவை இன்னும் பல உச்சங்களை தொட எனக்கு ஊக்கமாய் இருக்கும் நொடிகள்.
Leave a Reply