திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன்..!

-சிந்தனைக்கவிஞர் கவிதாசன்

முதன்முதலாக எனது மேடைப் பேச்சு, கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில்தான் அரங்கேறியது. உலகநாடுகளிடையே இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறதா? நிற்கவில்லையா? என்பதுதான் தலைப்பு. ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் இருவர் கலந்துகொண்டு ஒருவர் தலைப்பை ஒட்டியும் மற்றவர் வெட்டியும் பேச வேண்டும் என்பதுதான் நிபந்தனை.

கல்லும் கல்லும் மோதினால் மணல் கிடைக்கும். கற்கண்டும் கற்கண்டும் மோதினால் சர்க்கரை கிடைக்கும் என்பார்கள். சிந்தனைக் குதிரையைத் தட்டிவிட்டு, கற்பனை மேகங்களைக் குளிரவைத்து கருத்துமழை பொழிய பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவப் பேச்சாளர்கள் அணிவகுத்து நின்றார்கள்.

நான் தலைப்பை ஒட்டி, அதாவது உலக நாடுகளுக்கிடையே இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது என்று பேசினேன். இந்தியத் தாயின் மீது எனக்கு அளவுகடந்த மதிப்பு. ”அரிது அரிது மனிதராய் பிறப்பது. அதனினும் அரிது இந்தியனாய் பிறப்பது” என்று எண்ணி எண்ணி எப்பொழுதும் மகிழ்ந்து கொண்டிருப்பவன் நான். நமது பாரம்பரிய பண்பாடும் பார்போற்றும் வாழ்க்கை முறையும் வணக்கத்திற்குரியது.

முதன்முலாக அதுவும் ஒரு மகளிர் கல்லூரியில், ஆர்வத்தோடு காத்திருக்கும் அழகு தேவதைகளுக்கு முன்பாக பேசுவதில் கூச்சமும், தயக்கமும் நெஞ்சம் முழுக்க படர்ந்திருந்தன என்றாலும், பேச்சை கொஞ்சம் வித்யாசமாகத் தொடங்க வேண்டும் என்பது குறித்தே சிந்தித்துக் கொண்டு இருந்தேன்.

நான் பேசும் தருணம் வந்தது. நான் எழுந்து,
”விழாக்காலத்து நிலாக்களுக்கு
ஒரு குட்டி நட்சத்திரம்
குனிந்து
வணக்கம் செலுத்துகின்றது”
என்றேன்.

மாணவியர்களின் கைத்தட்டலில் அரங்கம் அதிர்ந்தது. எனக்குள் நம்பிக்கை மலர்ந்தது. தொடர்ந்து பேசினேன். பரிசு கிடைக்கவில்லை என்றாலும் எனக்கு வருத்தமில்லை. மாணவியர் களின் கைதட்டலே சிறந்த பரிசு. அதைவிட வேறென்ன வேண்டும் ஒரு பயிற்சிப் பேச்சாளருக்கு? கல்லூரி நாட்களில் எனது கற்பனை சிறகுகளை விரிப்பதற்காக, கவியரங்குகள், மேடைப் பேச்சுகள் ஆகியவற்றில் ஆர்வத்தோடு கலந்து கொண்டேன்.

பரிசு கிடைக்கின்றதோ! இல்லையோ! பங்கேற்றால் போதும் என்பதே எனது நோக்கமாக இருந்தது. நல்ல செயல் செய்தவற்கு வேறு நோக்கம் இருக்க வேண்டியதில்லை. ஏனென்றால் நல்லதைச் செய்வதே வாழ்வின் நோக்கம்.

அனைத்துக் கல்லூரிகளுக்கிடையே நடை பெறும் இலக்கியப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு அரசு கலைக்கல்லூரியின் சார்பில் என்னையும் இன்னொரு மாணவரையும் தொடர்ந்து அனுப்பி வைப்பார்கள். அத்தகைய போட்டியில் கலந்து கொள்வதற்காக, நிறைய படிப்பேன். கல்லூரி நூலகம் மற்றும் கோவை மாவட்ட மத்திய பொது நூலகத்திலும் சென்று வாசிப்பேன். மேலும், பல்வேறு நூல்களைப் படித்து, அவற்றில் உள்ள முக்கியக் கருத்துக்களை குறிப்பெடுத்து வைத்துக் கொள்வேன்.

என்னை நானே உணர கோவை மாவட்ட மைய நூலகம்தான் முக்கிய காரணமாக இருந்தது. எனது வகுப்பு நண்பர் நாராயணசாமியும் என்னுடன் நூலகம் வருவார். நல்ல நல்ல நூல்களைத் தேர்வு செய்து எனக்குப் படிக்கக் கொடுப்பார். அத்துடன் குறிப்பெடுக்கவும் உறு துணையாக இருப்பார். நல்ல நண்பர்கள் வெற்றிக்கு அஸ்திவாரமாக அமைகிறார்கள். சிறகுகளை முளைக்க வைப்பதுதான், சிறகே இல்லாமல் பறக்க வைப்பதுதான் நட்பு.

எதையும் எளிமையாகவும் புதுமையாகவும் சொல்ல வேண்டும் என்பது மட்டும் எனது மனதில் எப்பொழுதும் தவழ்ந்து கொண்டே இருந்தது. அத்துடன் எதை வாசித்தாலும் அதை எனது நோக்கில் அலசிப்பார்க்கவும் செய்யத் தொடங்கினேன்.
அப்பொழுதெல்லாம், சுதந்திரத்தைப் பற்றிய ஒரு கவிதை பிரபலமாகப் பேசப்பட்டு வந்தது. அதை எழுதியவர் ரங்கநாதன் என்று நினைக்கிறேன். அந்த கவிதை இதுதான்.

”இரவிலே வாங்கினோம்
அதனால் –
இன்னும்
விடியவே இல்லை”

இந்த வரிகள், என்னை ஆழமாகச் சிந்திக்க வைத்தது. எதற்கும் இன்னொருபக்கம் இருக்கும் என்று எண்ணவும் வைத்தது. ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்துவிட்டு மறுபுறத்தைப் பார்க்காமல் நாம் ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடாது. ஒரு ரோஜாவை ரசிக்கும்போதே அதைச் சுற்றியுள்ள முள்ளும் நமது சிந்தனைக்கு வரவே வேண்டும்.

ஒரு கனியைச் சுவைக்கும்போது, அதை கொடுத்த மரத்தையும் யாருடைய கண்ணுக்கும் தெரியாமல், மண்ணுக்கடியில் மவுனமாக இருக்கும் வேர்களுக்கு நன்றி செலுத்தும் நற்பண்பு வேண்டும். சோற்றில் கை வைக்கும் போது, அதற்கு காரணமாக சேற்றில் கால் பதித்தவர்களையும் மானசீகமாக வணங்க வேண்டும்.

அப்பொழுதுதான் மனங்களில் உலாப் போகும் உணர்வுகள் புனிதம் பெறுமாம். உள்ளத்தின் உணர்வுகள் குழப்பமாக இருக்கும் போது எதையும் சிறப்பாக எழுத முடியாது. ஏனென்றால் கவிதை என்பது உணர்வுகளுக்குச் சூட்டப்படுகின்ற கிரீடமாகும்.

ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை இருக்கிறது என்பதுதான் விஞ்ஞானம். அது போல எந்த ஒவ்வொரு கருத்துக்கும் ஈடு இணையற்ற மறுகருத்து இருக்கும் என்பதுதான் வாழ்வியல் சித்தாந்தம். இந்த உண்மையைப் புரிந்து கொண்டவர்கள் மட்டுமே மாற்றுக் கருத்துக்களை வளர விடுகிறார்கள். அதன் மூலம் தமது சொந்தக் கருத்தையும் செதுக்கிக் கொண்டு ஜொலிப்பார்கள்.

அந்த வகையில்தான், விடியாத சுதந்திரம் பற்றிய அக்கவிதையை என்னால் ஏற்க முடியாமல்,

”இரவில் வாங்கினோம்
இன்னும் விடியவேயில்லை
என்பதெல்லாம் பொய்!
விடிந்து வெகுநேரமாகியும்
நீதான்
சுதந்திரமாகத் தூங்கிக் கொண்டே
இருக்கிறாய்!

விழித்தால்தானே
வெளிச்சம் தெரியும்!
எழுக! இளைஞனே! என்று எழுதினேன்.

இந்த புதிய சிந்தனை இளைஞர்களிடையே மட்டுமல்ல. எல்லாத் தரப்பு மனிதர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பல பேச்சாளர்கள் தங்களுடைய மேடைப் பேச்சில் இக்கவிதையை குறிப்பிட்டு பேசினார்கள். அதன் மூலம் நான் மெல்ல மெல்ல இலக்கிய உலகிற்கு அறிமுகமாகத் தொடங்கினேன். நமது முன்னேற்றத்திற்கு வேண்டிய வாய்ப்புகளை நாமே உருவாக்கினால் அவ்வாய்ப்புகள் நம்மை நாமே உருவாக்கிக் கொள்ள இன்னொரு வாய்ப்பை உருவாக்குகின்றது.

கவிஞர் நிலாதீபன், கவிஞர் இளையவன் போன்றவர்கள் இணைந்து ”இளைய கரங்கள்” என்ற சிற்றிதழ் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார்கள். அவ்விதழை நான் கோவை மைய நூலகத்தில் காண நேர்ந்தது. நானும் எனது நண்பர் நாராயண சாமியும் கோவை இராமநாதபுரத்தில் இருந்த ”இளைய கரங்கள்” அலுவலகத்திற்கு, சென்று கவிஞர் நிலா தீபன் அவர்களைச் சந்தித்தேன். அப்பொழுது, கவிஞர் இளையவனும் உடனிருந்தார்.

எனது கவிதைகள் சிலவற்றை அவர்களிடம் படித்துக் காட்டினேன். எனது கவிதைகளை ”இளையகரங்களில்” வெளியிடுவதாகவும், எனது கவிதைகளை இன்னும் சிறப்பாக எழுதுமாறு எனக்கு அறிவுரை கூறினார்கள்.

அத்துடன், கவிஞர் புவியரசு பற்றியும், ‘வானம் பாடிக் கவிஞர்’களைப் பற்றியும் எனக்கு எடுத்துக் கூறினார்கள். அத்துடன் கோவையில் அப்பொழுது செயல்பட்டு வந்த ”பூங்கா கவியரங்கம்” பற்றியும் கூறினார்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை ஐந்து மணிமுதல் இரவு ஏழுமணி வரை கோவை வ.உ.சி பூங்காவில் நடைபெற்று வந்த அக்கவியரங்கத்திற்கு என்னையும் வருமாறு அழைத்தார்கள்.
அதன்பின் பூங்கா கவியரங்கில் கலந்து கொண்டேன்.

அங்கு பல கவிஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. கவிஞர் மானூர் புகழேந்தி என்னை ஊக்கப்படுத்தி, நிறைய எழுதச் சொன்னார். தொலை தொடர்புத் துறையில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், எனக்கு அவர் நெருக்கமாக இருந்தார். அவருடைய நட்பு எனக்கு இலக்கிய உறவில் புதிய பரிணாமத்தை கொடுத்தது. அவருடைய அன்பும் அணுகு முறையும் என்னை ஈர்த்தது. அவருடைய சிந்தனையும் அவருக்குள்ள தமிழ்ப்பற்றும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.

எனது கவிதைகளை எல்லாம் தொகுத்து ஒரு நூலாக வெளியிட வேண்டும் என்ற ஆவலை நண்பர்கள் ஏற்படுத்தினார்கள். கோவை மதுக்கரை அருகில் உள்ள மரப்பாலம் என்ற இடத்தில் கிரிஸ்ட்டல் என்ஜினியரிங் கம்பெனியின் நிறுவனர் திரு.மோகன் ராஜ். அவர் எனக்கு நண்பர் கிருஷ்ணகுமார் மூலமாக அறிமுகமாகியிருந்தார். உதவும் உள்ளம் படைத்தவர். எனது கவிதை களை ரசிப்பதில் முதன்மையானவர்.

அவரிடம் எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். அதற்கென்ன செய்து விடலாம் என்று கூறியதோடு, கோவை காட்டூரில் இருந்த ரெக்ஸ் பிரிண்டர்ஸ்க்கு என்னை அழைத்துச் சென்றார். எனது கவிதைகள் அடங்கிய நோட்டைக் கொடுத்து, இதை உடனடியாக ஒரு நூலாக வெளியிட வேண்டும், அதற்கு என்ன செலவாகும் என்று கேட்டேன். கையில் பணமில்லை. ஆனால் நெஞ்சம் நிறைய நம்பிக்கை இருந்தது.

அங்கு மேசையின் மீது கவிஞர் மு.மேத்தாவின் கவிதை நூல் ஒன்று இருந்தது. அதை எடுத்து புரட்டினேன். அதில் ஒரு கவிதை மின்னலைப் போல தெறித்து எனது விழிகளில் ஒளியேற்றியது.

அது,

”நம்பிக்கை நார்மட்டும்
நம் கையில் இருந்துவிட்டால்
உதிரிப் பூக்களெல்லாம்
ஒவ்வொன்றாய்
வந்து ஒட்டிக் கொள்ளும்!
கழுத்து மாலையாகவும்
தன்னைத் தானே கட்டிக் கொள்ளும்”

இந்த வரிகளை நெஞ்சில் பதியம் போட்டுக் கொண்டு, எப்படியும் கவிதை நூலை வெளியிட்டு விடவேண்டும் என்ற உறுதியோடு அந்நூலுக்கான தலைப்பை எழுதினேன். அது…

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *