பேப்பர் முழுக்க வேலைக்கு ஆட்கள் தேவை விளம்பரங்கள் வரும் காலத்தில், இனிவரும் நாட்களில் தலைப்பு செய்திகள் இப்படி இருக்கலாம் – எக்ஸ் நிறுவனத்திற்கு ஒரே நாளில், வேலைக்கு 20 பேர் கிடைத்திருக்கிறார்கள்.
நிச்சயம் அந்த தினசரி அன்று பரபரப்பாக விற்கும். அந்த அளவிற்கு வேலைக்கு ஆட்கள் இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது.
நிறுவனங்கள் நடத்துகிறவர்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் எல்லாம், ”எங்க தாத்தா காலத்தில வேலையில்லா திண்டாட்டம்னு ஒண்ணு இருந்ததாம்” என்று ஆச்சரியமாக பேசிக் கொள்வார்கள்.
வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்பதால், ஏராளமான நிறுவனங்கள் ஆட்டோ மேஷன் செய்துவிட்டு பணியாளர்களே தேவை இல்லை என்ற நிலையில் வணிகம் செய்யத் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். பணியாளர்களை வைத்து மட்டுமே நடக்கும் பிஸினஸ் என்றால் ஆள் இல்லாத காரணத்தால் பலர் இப்போது பிஸினஸை விட்டே வெளியேறி விட்டார்கள்.
ஆட்டோமேஷனும் செய்ய முடியாமல், பிஸினஸை விட்டு விடமுடியாமலும் இருக்கும் சிலர்தான் பணியாளர்களைத்தேடி வேட்டைக்கு கிளம்பி விட்டார்கள். அதற்காக என்ன சம்பளம் வேண்டுமானாலும் கொடுக்கத்தயாராய் இருக்கி றார்கள். வேலைக்கு ஆட்களை சேர்த்துவிட்டால் அதற்கும் பணம் கொடுக்கத்தயாராய் இருக்கிறார்கள்.
எலி பிடிக்க பொறியில் தேங்காயை வைப்போம். வடையை வைப்போம். வடை தின்பதில் எக்ஸ்பர்ட்டான சில எலிகள், பொறியில் சிக்காமல் வடையை மட்டும் காலி செய்து விட்டு காணாமல் போய்விடும். அதுபோல சம்பளத்தை வைத்து ஈர்க்க நினைத்தால் வேலை மாறுவதால் கிடைக்கும் உயர்வுக்காக நம் நிறுவனத்தில் சிலர் வேலைக்கு வருவார்கள். ஒரு வருடத்திற்குள் அடுத்த வடைக்காக அடுத்த இடத்திற்கு சென்று விடுவார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் என்ன செய்வது என்பதைத்தான் இனி நாம் முடிவு செய்ய வேண்டும். இந்த இடத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது, பணத்திற்காக நம் நிறுவனத்திற்கு வேலைக்கு வருபவர்கள் நாளை அதே பணத்திற்காக நம்மை விட்டு சுலபமாக சென்றுவிடுவார்கள்.
எனவே பணத்தால் அதாவது சம்பளத்தால் மட்டுமே பணியாளர்களை ஈர்க்க நினைப்பது நிச்சயம் பயனுள்ளதாக இருக்காது.
சம்பளத்தை வைத்து ஈர்க்க நினைத்தால் சம்பள நாட்டம் உள்ளவர்களையே பெறுவோம். எனவே உழைக்க வேண்டும்; முன்னேற வேண்டும் என்று உள்ளவர்களாக தேடிப்பிடித்து நம் நிறுவனத்தில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் இந்தப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். கற்றுக்கொள்ள வேண்டும்; சாதிக்க வேண்டும் என்று நினைப்புள்ளவர்களை கண்டறிய வேண்டும் என்றால் நம் விளம்பரம் அத்தகையவர்களை ஈர்க்கும் விதமாக இருக்க வேண்டும்.
பிரபல ஜுவல்லரி ஒன்றிற்கு அச்சீவ்மெண்ட் மோட்டிவேஷன் உள்ளவர்களை கண்டறிய வேண்டும் என்பதற்காக நாங்கள் வடிவமைத்த விளம்பரம் இது.
வேலைக்கு ஆட்கள் தேவையில்லை
சாதிக்கத் துடிப்பவர்கள் தேவை
தமிழகத்தின் முன்னணி ஜுவல்லரிக்கு கீழ்க்கண்ட பணிகளுக்கு நிறுவனத்தோடு இணைந்து வளரும் விருப்பமுள்ளவர்கள் தேவை.
விற்பனையாளர்கள் – புன்னகைக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.
சிறப்பம்சங்கள்: கல்வியைப்போலவே ஆர்வமும் உற்சாகமும் தகுதியாக கொள்ளப்படும்.
வாடிக்கையாளர்களை போலவே பணியாளர்களையும் மதிக்கும் நிறுவனம்.
கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் அடுத்தடுத்த பதவிகளுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ள நிறுவனம்.
இந்த விளம்பரத்திற்கு நல்ல பலன் கிடைத்தது. இண்டர்வியூவிற்கு அதிகம் பேர் வந்திருந்தார்கள். அதிகம் பேர் வேலைக்கு சேர்ந்தார்கள். சுறுசுறுப்பாக வேலையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.
J.VELPANDI
I Want to the interested job.