ஆயிரம் சிறகுகள் முளைத்தன

– சிந்தனை கவிஞர் கவிதாசன்

எனது முதல் கவிதை நூல் நனவுகளும் கனவுகளும் தலைப்பிரசவ வேதனையோடு 1983இல் வெளிவந்தது. நிகழ்காலத்தின் அவலங்களின் அழு குரல்களோடு எதிர்காலத்தின் நம்பிக்கைக் கீற்று களும் ஏக்கப் பெருமூச்சுகளும் அதில் கவிதைகளாக அரங்கேறி இருந்தன.

சிற்பியில் விழுகின்ற மழைத்துளி முத்தாக மாறுவதைப்போல, நெஞ்சின் ஆழத்தில் விழும் சமுதாயப் பதிவுகளும் எதிர்பார்ப்புகளும் கவிதை களாகக் கருக்கொள்கின்றன. காதல்தான் ஒருவனைக் கவிஞராக்குகின்றது என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். காதல் என்பது ஆண் மீது பெண்ணும், பெண் மீது ஆணும் கொள்கின்ற உயிர் நேசிப்பை மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. நாம் வாழும் மண்மீதும் அதில் வாழும் மக்கள், பயிரினங்கள், பறவைகள், விலங்குகள் போன்று உயிருள்ளன, உயிரற்றன எல்லாவற்றின் மீது கொள்கின்ற உயிரன்பும் காதல்தான்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரும், அடிமை விலங்கொடித்து சுதந்திரக் காற்றை நாம் சுவாசிப்பதற்காக தனது கனல் கவிதைகள் மூலம் சுதந்திர நெருப்பைப் பற்ற வைத்த பாரதியும், தமிழ்மீது காதல் கொண்ட பாரதிதாசனும், நமது நெஞ்சை அள்ளும் பாட்டுக் கோட்டை பட்டுக்கோட்டையாரும், கண்ண தாசனும் கவிதைத்தடம் பதித்தவர்கள். உணர்வு களில் சிகரங்களை உருவாக்கியவர்கள். அச்சிகரங்களின் அடியில் நின்று பிரம்மித்துப் போவதையே சுகம் என நினைப்பவன் நான்.

ஒவ்வொரு நிகழ்வும் கவிதையாகச் சிறகு விரிக்கும் போது மனம், மேகங்களைப் போல எல்லையில்லாத ஆனந்தத்தில் தவழ்கின்ற அனுபவத்தைப் பெறத் தொடங்கினேன். பழுத்த சொற்கள் பக்குவமாக இணைக்கப்படுகின்றபோது அவை கவிதைகளாகி விடுவதைக் கண்டு நானே மகிழ்ந்திருக்கிறேன். பத்து மாதங்கள் கருவில் உருவாக்கிய மழலையைக் கொஞ்சும் பெற்ற தாய்போல எனது கவிதைகளை நானே கொஞ்சிக் குலாவியிருக்கிறேன். ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் தாய்தான் முதல் ரசிகை. ஒவ்வொரு கவிதைக்கும் அதைப் படைத்த கவிஞன்தான் முதல் ரசிகன். ஆம்! ஒவ்வொரு படைப்பாளியும் தான் ரசித்ததை, தன்னை ஈர்த்ததை மட்டுமே மற்றவர்களுக்குப் படைக்க முடியும்.

எனது முதல் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழாவிற்கு, எங்கள் அரசுக் கலைக் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் கு.தேவராஜ் அவர்கள் தலைமை வகிக்க, விழா சுத்த சன்மார்க்க சங்க அரங்கில் நடைபெற்றது. எனது பேராசிரியர் திரு.குருபரன், டாக்டர் ஹக்கீம் மற்றும் எனது நண்பர்கள் கிருஷ்ண குமார், ஆடிட்டர் காசிலிங்கம், நெல்லை சு.பாலகுமார் போன்றவர்கள் வாழ்த்துரை எழுதிக் கொடுத்தார்கள்.
எதிர்காலத்தில் நான் சிறந்த கவிஞனாக வருவேன். எனது சிந்தனைகள் அனைவருக்கும் வழி காட்டியாக அமையும் என விழாவில் கலந்து கொண்டவர்கள் பேசியதாக எனக்கு நினைவு. விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி நண்பர்கள் கமால்தீன், இளங்கோ, மதுக்கரை சண்முகம், கிரிஸ்டல் மோகன்ராஜ், ஈஸ்வரமூர்த்தி, கணேசன், முரளிதரன் ஆகியோர் செய்திருந்தனர்.

ஆயிரம் சிறகுகளை முளைக்க வைப்பது காதல், சிறகே இல்லாமல் பறக்க வைப்பது நட்பு என்பதை அன்றே நான் உணர்ந்து கொண்டேன். நல்ல நண்பர்கள் நமது வளர்ச்சிக்கு அஸ்திவாரமாக இருக்கிறார்கள். தீய நண்பர்கள் நமது வாழ்வின் அஸ்திவாரத்தையே தகர்த்துவிடுவார்கள்.

நல்ல நண்பர்களை எவ்வாறு அடையாளம் காண்பது? இதுதான் அனைவரின் கேள்வி. யாருடன் சேரும்போது நமக்கு நல்ல சிந்தனை வருகின்றதோ, அவர்கள் நல்ல நண்பர்கள். யாருடன் சேரும்போது நமக்கு நச்சு சிந்தனை வருகின்றதோ அவர்கள் தீயவர்கள். ஆகவே மனதிற்கு மட்டுமல்ல. வாழ்க்கைக்கே துணையாக இருப்பவர்களை மட்டும் நாம் தேர்வு செய்ய வேண்டும்.

கண்ணீரைத் துடைப்பவன் அல்ல, நல்ல நண்பன். கண்ணீரே வராமல் தடுப்பவன் தான் நல்ல நண்பன். தவறான வழிக்கு நம்மை அழைக்காமல், நாம் தவறான வழியில் செல்ல முற்படும்போது நம்மைத் தடுப்பவன்தான் நல்ல நண்பன்.

நட்பு என்பது கரும்பு சாப்பிடுவதைப் போல இனிப்பானது. கரும்பை நுனியில் இருந்து அடிக் கரும்பை நோக்கிச் சாப்பிட்டால்தான் ஒவ்வொரு கடியிலும் சுவை கூடிக்கொண்டே இருக்கும். அது போல ஒவ்வொரு நாளும் நட்பு இனிமையாக வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஆம்! நட்பு வளர்பிறையாக இருக்க வேண்டுமே தவிர, தேய்பிறையாக இருக்கக்கூடாது.

உண்மையாக உதவும் குணமே இருவரின் நட்பை வலுப்படுத்தும்; ஆலமரம் போல் விழாமல் தாங்கி நிற்கும். சுயநலத்தை மட்டுமே சுமக்கின்ற மனங்களில் நட்புப் பறவைகள் என்றுமே கூடு கட்டுவதில்லை.

எனது நண்பர்கள், ஜேம்ஸ்பால் (சூரிய நிலவன்), கணேசன், ஷாஜகான், அசோக்குமார் ஆகியோருடைய அழைப்பின் பேரில் கல்லூரியில் இயங்கிக் கொண்டிருந்த நாட்டுநலப் பணித் திட்டத்தில் (சநந)-ல் நான் சேர்ந்தேன். அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணத்தை பள்ளியில் படிக்கும் போதே எனக்குள் விதைத்தவர் எனது தமிழாசிரியர் செ.பெரியசாமி அவர்கள்.

எனது மேல்நிலைக் கல்வியை, சிவானந்தா பள்ளியில் படிக்கும்போது நான் விடுதியில் தங்கியிருந்தேன். திரு.செ.பெரியசாமி அண்ணா அவர்கள் எங்களுடைய விடுதிக்கு காப்பாளராகவும் இருந்தார். விடுதியில் சமையலுக்கு உதவியாக, காய்கறிகளை நறுக்கித் தரச் செல்வார். அத்துடன் மாணவர்களுக்கு சாதம் பரிமாறவும், சுற்றப் புறங்களைத் தூய்மை செய்யவும், தோட்ட வேலை செய்யவும் எங்களை ஊக்கப்படுத்தி ஈடு படுத்துவார்.

அத்துடன் பெரியநாயக்கன்பாளையம், ஈஸ்வரன் கோவில் வெள்ளிக்கிழமைதோறும், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அவர்களை நெறிப்படுத்துவதற்கு எங்களை அனுப்புவதோடு, பக்தர்களின் காலணிகளை வாங்கி வைத்துத் திருப்பித் தரவும் பணிப்பார். அப்பொழுதெல்லாம், சேவையின் மகிமையையும், பெருமையையும் எடுத்துக் கூறி, “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்று விளக்குவார்.

அன்று மனதில் விழுந்த, சமுதாய சேவை என்கிற விதை எனக்குள் முளைக்கத் தொடங்கியதன் விளைவுதான், நான் என்.எஸ்.எஸ்-இல் சேர வைத்தது என்று நினைக்கிறேன். நாடு நலம் பெறுவதற்கு தன்னலமற்ற இளைஞர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. படிக்கின்ற காலத்தில் வண்ணக்கனவுகளோடு வலம் வருகின்ற மாணவர்கள், தேச முன்னேற்றத்திலும், சமுதாய சேவையிலும் பங்குகொள்ள வேண்டும் என்பதற் காகவே நாட்டு நலப்பணித்திட்டம் ஒவ்வொரு கல்வி நிலையத்திலும் செயல்படுகிறது.

சுற்றுச்சூழலை தூய்மையாகவும், பசுமையாகவும் பராமரித்தல், மழைநீர் சேகரிப்பு, சாலை பாதுகாப்பு, உடல்நல விழிப்புணர்வு, சுகாதாரம் பேணுதல், மருத்துவ முகாம்கள் மூலம் நலவாழ்விற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பன்முகச் சமுதாயச் சேவைகளில் மாணவர்களை நேரடியாக ஈடுபடுத்தும் முகாம்களும் என்.எஸ்.எஸ் மாணவர்களுக்கு நடத்தப் படும். கிராமங்களில்தான் இந்தியா வாழ்கின்றது என்றார் மகாத்மா காந்தியடிகள். அதனை நினைவு கூறும் விதமாக, சமூகச்சேவை முகாம்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில்தான் நடை பெறும்.

நான் முதன்முதலாகப் பங்கேற்ற என்.எஸ்.எஸ் முகாம், சென்னை பல்கலைக் கழகத்தின் கோவை முதுநிலை பட்டவகுப்பு மையத்தில் (தற்போதைய பாரதியார் பல்கலைக் கழகத்தில்) நடைபெற்றது. நானும் அதில் கலந்து கொண்டேன். பத்து நாட்கள் நடைபெற்ற முகாமில் நான் கற்றுக் கொண்டவை ஏராளம்! ஏராளம்! எதையும் நேரடியாகச் செய்யும்போது தான் நமக்கு அனுபவம் கிடைக்கின்றது. இம்முகாமின்போது நாங்கள் சாலை களைச் சீரமைத்தோம், பல்கலைக்கழகம் முழுவதும் மரக்கன்றுகளை நடவு செய்தோம்!

இப்பொழுதும் பாரதியார் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் போதெல்லாம், வளர்ந்துள்ள மரங்கள் மகிழ்ச்சியோடு தலையசைத்து எனக்கு மகிழ்ச்சியைத் தெரிவிக்கும். மனிதர்கள் இல்லாமல் மரங்களால் வாழ முடியும்! ஆனால் மரங்கள் இல்லாமல் மனிதர்களால் வாழமுடியுமா? சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒவ்வொருவரும் தன்னால் இயன்றளவு மரங்களை வளர்க்க வேண்டும்.

அடுத்த தலை முறைக்கு பூமியை நல்ல நிலையில் கொடுத்து விட்டுச் செல்வது ஒவ்வொரு மனிதனின் சமுதாயக் கடமையாகும்.

முகாமில் நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டேன். எனக்குள் முளைத்த வண்ணச் சிறகுகளை அசைத்து அசைத்து நட்பு மனங்களில் பறக்கத் தொடங்கினேன். என்.எஸ்.எஸ். பொறுப்பாளர்கள் திரு.மூர்த்தி, திரு.ரசாக் போன்றவர்களின் வழி காட்டுதல் எனக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்தது.

“வீழாமல் இருப்பதல்ல வெற்றி; வீழும் போதெல்லாம் எழுவதுதான் வெற்றி; நாம் எத்தனை முறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல; எத்தனை முறை எழுந்தோம் என்பதுதான் முக்கியம்” என்பதை பேராசிரியர் திரு.மூர்த்தி அவர்கள் உணர வைத்தார்கள். அவர் கணிதத் துறையின் பேராசிரியராகவும், என்.எஸ்.எஸ்-இன் பொறுப்பாசிரியராகவும் இருந்தார்.
என்.எஸ்.முகாமின் நிறைவு நாளில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *