– சோம வள்ளியப்பன்
தொடர்.. 2
தொடர்ந்து வளர்தல்
சென்னையில் அமைந்திருக்கும் ஒரு அமைதியான காலனி அது. ஒரு காலை நேரம் அகலமாக இருந்த அந்த காலனியின் தெருக்கள் வழியாக நடந்து போய்க்கொண்டிருந்தேன்.
இரண்டு பக்கமும் பெரிய பெரிய வீடுகள். சில இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட பங்களாக்கள். வேறு சில சமீபத்தில் கட்டப்பட்ட பெரிய வீடுகள். அந்த வீடுகளை எல்லாம் பார்த்தபடியே நடந்தேன்.
பழைய வீடுகளின் மீது கவனம் போனது. மிகப்பெரிய வீடுகள். அடேயப்பா! அந்தக் காலத்திலேயே எவ்வளவு பெரிய வீடுகள் கட்டியிருக்கிறார்கள்! இப்படிக் கட்ட, அவர்கள் எவ்வளவு சம்பாதித்திருக்க வேண்டும், எத்தனை செல்வாக்காக இருந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
உடன் பக்கத்திலேயே இருந்த ஒரு புதிய கட்டிடத்தினையும் பார்த்தேன். மிக சமீபத்தில்தான் கட்டப்பட்டிருக்க வேண்டும். அந்த புதிய கட்டிடத்தின் அந்த உரிமையாளர் பெயர், வாசல் அருகில், மதில் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த பித்தளை தகட்டில் பளபளப்பதும் கண்ணில் பட்டது. அவர் புதுப்பணக்காரர். யாரிடம் இருந்தோ, அந்த இடத்தினை வாங்கி மிகப்பெரிய வீடு கட்டிக்கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன்.
இவர் வாங்கியிருக்கிறார் என்றால், யாரோ விற்றிருக்கிறார்கள். அவ்வளவு நல்ல இடத்தில் கட்டியிருந்த வீட்டினை விரும்பியா விற்றிருப் பார்கள்? நல்ல விலைக்கே விற்றிருந்தாலும் கூட, விற்றுவிட்டார்களே!
இப்போது அங்கே இருக்கும் பல பழைய பெரிய வீடுகள்… இன்னும் எவ்வளவு காலத்திற்கு வீட்டைக் கட்டியவர்களிடமே இருக்கும்? வேறு புதிய பெரிய பணக்காரர்கள் வந்து விலைக்கு கேட்கும்வரை இருக்கலாம். அப்படி எவரும் கேட்டாலும் இவர்களால் கொடுக்காமல் இருக்க முடியாதா என்ன? தவிர்க்கலாம். மறுக்கலாம். ஆனால் புதிய பணக்காரர்கள் கூடுதல் விலை கொடுக்கத் தயார் என்பார்களே, கொடுக்கவும் செய்வார்களே!
கொடுப்பதற்கு சக்தி வேண்டும். மறுப்பதற்கும் சக்தி வேண்டும். சக்தி இருப்பவர் வெற்றி பெறுகிறார். முன் காலத்தில் சக்தி இருந்ததனால் வாங்க முடிந்தது. அதே நபர்கள் இப்போது புதியதாக வாங்க வேண்டாம். அவர்கள் இருப்பதை தக்க வைத்துக் கொண்டாலே போதும். அதற்கே சக்தி தேவை. இல்லாவிட்டால் கூடுதல் சக்தி படைத்தவர்கள், வாங்கிக் கொண்டு விடுகிறார்கள்.
தொடர்ந்து நடந்தேன். இது வேறு இடம். சாலை நன்றாக இருந்தது. தார் சாலை. ஏற்கனவே போடப்பட்டிருந்ததன்மீது மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஜல்லி பரப்பி தார் ஊற்றி, ரோலர் போடுகிறார்கள். விளைவு? சாலை உயர்ந்துகொண்டே போகிறது. சில பல ஆண்டுகளல் அதன் உயரம் கணிசமாகவே அதிகரிக்கிறது.
சாலை ஓரம் இருக்கும் வீடுகள் கட்டப்பட்ட போது சாலையின் உயரத்தினை விட, வீட்டினை உயர்த்திக் கட்டியிருந்தார்கள். சாலையில் ஓடக்கூடிய மழைத்தண்ணீரோ வேறு தண்ணீரோ வீட்டிற்குள் வந்து விடாது. ஆனால் சாலைகள் தொடர்ந்து மேம்பாடு செய்யப்பட, வீடுகள் மட்டும் அப்படியே அதே போல இருக்க உயர வேறுபாடுகள் வந்துவிட்டது. சில வீடுகள் பள்ளத்தில் கட்டப்பட்டது போலக் கூட ஆகி விட்டன.
முதலில் அந்தப் பெரிய காலனியில் பார்த்த ”பழைய-புதிய வீடுகளுக்கும்” இந்த சாலை உயர்வு காரணமாக, ‘தாழ்ந்துபோனது போல தெரியும் வீடுகளுக்கும்’ இடையே உள்ள ஒற்றுமை என்ன?
முன்பு சிறப்பாகவே இருந்திருந்தாலும் தொடர்ந்து உயராவிட்டால் சிரமம் என்பதுதான் ஒற்றுமை. இரண்டு உதாரணங்களும் சொல்லும் செய்தியும் அதுதான்.
அலுவலகம் போகும் நேரம். அண்ணா மேம்பாலம் அடியில் ஒரு சிக்னலில் இருந்தேன். வண்டிக்குள் இருந்து சுற்றிலும் நடப்பதைப் பார்த்தேன். திரும்பிய பக்கமெல்லாம் கார்கள், ஸ்கூட்டர்கள், மோட்டார் சைக்கிள்கள், நடப்போர் வெகுசிலரே கண்ணில் பட்டார்கள்.
பச்சை விளக்கு எரிய ஆரம்பித்ததும் எல்லா வண்டிகளும் முண்டியடித்தன. ஒன்றை ஒன்று முந்தின. ஒரு சைக்கிள்காரரும் வேகமாக மிதித்தார். ஆனால் அவரால் அவ்வளவு வேகம் போக முடியவில்லை. அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு போக வேண்டிய அவசரம் போலும். அவருக்கு பின்னால் மோட்டார் வண்டிகளில் இருந்தவர்கள் ஹாரன் அடிக்கவில்லை. ஹாரன் மூலம் அலறினார்கள்; அதட்டினார்கள்.
அங்கே இருந்த போக்குவரத்து போலீஸ்காரரும் சைக்கிள்காரரைத்தான் அதட்டினார். மொத்தத்தில் அந்த சைக்கிள் காரர் அங்கே பெரும் அவதிக்குள்ளானார்.
அவர் செய்த தவறு என்ன? அங்கே சைக்கிள் ஓட்டக்கூடாதா என்ன?
ஓட்டலாம். தடையேதுமில்லை. ஆனாலும் அவருக்குச் சிரமம். காரணம், அவர் அங்கே ஞன்ற் ர்ச் டப்ஹஸ்ரீங். பெரும்பாலனவர்கள் மோட்டார் வாகனங்கள் ஓட்ட, இவர் மட்டும் சைக்கிள் என்றால், அது அங்கே ஞன்ற் ர்ச் நண்ய்ந். ஒத்து வரவில்லை. ஒட்டவில்லை.
இந்த சைக்கிள்காரர் உதாரணமும் அதே செய்தியை தெரிவிப்பதற்குத்தான். ஒரு காலத்தில் பிரமாதமாக இருந்ததுதான் சைக்கிள். இப்போது பலரும் மோட்டார் வாகனங்கள் வாங்கிவிட அவர்கள் வேகமாக போகும் இடங்களில் சைக்கிள் தொந்தரவாக தெரிகிறது.
வளர்ச்சி வேண்டும். தொடர்ந்து வளருதல் வேண்டும். முந்தைய சாதனைகள் மட்டும் போதாது. காரணம் சுற்றியுள்ள உலகம், எவர் எவரோ புதுப்பணத்துடன் வந்து பழைய வீடுகளை வாங்குவதைப் போல் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது. மேலே மேலே போடப் படும் சாலை போல வளர்ந்து கொண்டே இருக்கிறது.
இது பணத்திற்கு மட்டுமல்ல, அறிவிற்கும் பொருந்தும். பழையது, ஒரு காலத்தில் போற்றப்பட்டது மட்டுமே எல்லா காலத்திற்கும் போதாது.
R.Sridharavenkatesan
Wonderful thoughtprovoking words.