– சிந்தனைக் கவிஞர் கவிதாசன்
வானொலியில் எனது கவிதை ஒளி
நாட்டு நலப்பணித்திட்ட முகாமின் நிறைவு விழாவில் என்னை, ”சிறந்த மாணவத் தொண்டர்” என்று பாராட்டி எனக்கு நற்சான்றிதழ் வழங்கினார்கள். நண்பர்களின் கரவொலிக்குள் நான் சிறகுகளை கட்டிக்கொண்டு மகிழ்ச்சி வானில் பறந்தேன். வெற்றி என்பது விபத்தல்ல; அது ஒரு வியர்வைத் துளிகளின் விளைச்சல் என்பதை உணர்ந்தேன். எனக்குக் கிடைத்த பாராட்டையும் விருதையும் என் நண்பர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன் என்று எனது ஏற்புரையில் ஆனந்தக் கண்ணீர் மல்க கூறினேன். உணர்ச்சியின் ஊர்வலத்தில் நண்பர்களும் கலந்து கொண்டு நெகிழ்ந்து போனார்கள். உறவுகளை விட நட்பு தான் நம்மை அதிகமாக நேசித்து ஊக்கப் படுத்துகிறது என்பதையும் உணரத் தொடங்கினேன்.
”நனவுகளும் கனவுகளும்” என்ற எனது முதல் கவிதைத்தொகுப்பு வெளியான பிறகு கோவையில் உள்ள பல கல்லூரி மாணவர்களுக்கு நான் அறிமுகமாகத் தொடங்கினேன். புதிய அறிமுகங்கள் புத்துணர்வை எனக்கு ஏற்படுத்தின. கனவுகள் விரியத் தொடங்கின.
புதிய முயற்சிகளை எடுக்கும்போது நமக்கு நாமே மனத்தடையை ஏற்படுத்தக்கூடாது. நமக்கு நாமே தடையாக இருப்பதென்றால், நமது எதிர் மறையான என்ணங்களே முயற்சிச் சிறகுகளை முறித்தெறியாதவாறு நம் விழிப்போடும் விவேகத்தோடும் செயல்படவேண்டும். நமது வாழ்க்கைச் சூழல் நமது முயற்சிகளுக்குத் தடையாக இருந்தால் அதை மென்மையாகத் தகர்த்துவிட்டு முன்னேற வேண்டும் என்பதையும் வளர்கின்ற நிலையில் உள்ளவர்கள் மென்மையாகவும் தன்மையாகவும் பேச வேண்டும் என்பதையும் நான் உணர்ந்து கொண்ட காலம் அது.
அத்தகைய சிந்தனையை ஒரு சிறுகதைதான் எனக்குள் விதைத்தது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.
‘சாவியைப்பார்த்து, சுத்தியல் கேட்டது. உன்னைவிட நான் வலிமையானவனாக இருக்கிறேன். ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன். ஆனால் நீ சீக்கிரம் திறந்து விடுகிறாயே அதெப்படி? அதற்கு சாவி சொன்னது. நீ என்னை விட பலசாலிதான். அதை நானும் ஒப்புக் கொள்கிறேன். பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய். ஆனால் நான் பூட்டின் இதயத்தைத் தொடுகிறேன்” என்றதாம்.
அதுபோல ஒருவரை அறிவுரீதியாக அணுகுவதைவிட உணர்வுரீதியாக இதயத்தைத் தொடும்படி மென்மையாக அணுகினால் எதையும் சாதிக்க முடியும். நமது கருத்துக்கள் வலிமையாக இருந்தாலும் அதை உணர்வுப்பூர்வமாகவும் மற்றவர்கள் உள்ளத்தில் மென்மையாகத் தெளிக்கும்போதுதான் வெற்றியின் வைகறை விழிகளில் தென்படத் தொடங்குகின்றது. வரலாற்றில் நாம் காணும் சாதனையாளர்களின் வெற்றிக்கு மனிதநேயமும் அன்பான அணுகு முறையும் அடிப்படைக் காரணமாக இருந்திருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அச்சில் எனது எழுத்துக்களைப் பார்த்து மகிழ்ந்தவர்கள், எனது கவிதைகள் வானொலியிலும் ஒலிவலம் வரவேண்டும் என்றும், அப்பொழுதுதான் எனது கருத்துக்கள் அனைவருக்கும் போய்ச்சேரும் என்றும் கூறினார்கள். அத்துடன் புதுப்புனல் என்ற ஒரு பகுதியில் புதியவர்களின் கவிதைகளை வானொலி ஒலிபரப்பி”வருவதாகவும் அறிந்தேன். ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு 9.30 மணி முதல் 10 மணி வரை புதுப்புனலில் புதியவர்களின் கவிதை வெள்ளம் சீறிப்பாய்வதை நானும் கேட்கத் தொடங்கினேன்.
எதுபோன்ற சிந்தனைகளைச் செதுக்கி கவிதையை உருவாக்குகின்றார்கள் என்பதையும் கூர்ந்து கவனிக்கத்தொடங்கினேன். மென்மையான காதல் உணர்வுகளைச் சொல்லும் கவிதைகளோடு, பெரும்பாலும் சமுதாயச் சிக்கல்களை படம் பிடித்துக்காட்டுவதோடு அவற்றிற்கான தீர்வுகளையும் சிந்திக்க வைக்கும் சமுதாய நோக்கம் கொண்ட கவிதைகளே புதுப்புனலில் அரங்கேறி வருவதைக் கவனித்தேன். சமூக அக்கறை கொண்ட ஒரு கவிஞனாகவும் எழுத்தாளனாகவும் உயர வேண்டும் என்ற சிந்தனை மின்னல் எனது நெஞ்ச வானில் தோன்றத் தொடங்கியது.
சமுதாய நிகழ்வுகளைப் படம் பிடிக்கும் எனது கவிதைகளை ஒரு நோட்டில் எழுதி வைக்கத் தொடங்கினேன். அவற்றில் ஒன்று,
”உரிமை ஆடை
உடுத்த ஆசைப்பட்டு
விடுதலை என்கிற
விசித்திரத் தறி வாங்கினோம்!
நெசவு வேலையில்
நமக்கு அக்கறையில்லாமலேயே!
அதனால்தான்
இன்னும் நிர்வாணமாகவே
நின்று தவிக்கின்றோம்!
சுதந்திரத்தை வைத்துக்கொண்டு, உழைத்து உயராமல், உண்டு களித்து ஊர்க்கதை பேசி, துண்டுவிரித்துத் தூங்கிவிட்டு, விதியை நொந்து கொள்ளும் வேதனை மனிதர்கள்மீது எனக்கு எப்பொழுதும் ஒரு கோபம் இருக்கும்.
பாரதியின் கவிதைகளை வாசித்து வாசித்துத் தான் இத்தகைய கோபம் எனக்குள் குடியேறியது போலும். ஒளிபடைத்த கண்ணோடும், உறுதி கொண்ட நெஞ்சோடும், கடுமை கொண்ட தோளோடும் தேசநலனையே மூச்சாகக் கொண்ட இளைஞர்களைத்தான் புரட்சிக்கவி பாரதி போற்றி வரவேற்றார்.
1982இல் பாரதியின் நூற்றாண்டு. தமிழகமெங்கும் பாரதிக்கு விழா. கவியரங்கங்கள், பட்டி மன்றங்கள், கட்டுரைப் போட்டிகள் என அனைத்திலும் பாரதியின் தரிசனமே தமிழகமே தரிசித்தது. நானும் பற்பல மேடைகளில் பாரதியைப் பற்றி கவிதை வாசித்தேன். அத்துடன் அவருடைய எழுச்சியை நேசிக்கத் தொடங்கினேன். ஆம். அவர் கவிதைகளை வாசித்து நெஞ்சில் வலிமை ஏற்றினேன். யாக்கையைப் பற்றி பாடிய புலவர்களுக்கு மத்தியில் காக்கையைப் பற்றி பாடிய பாரதியை எனது குருவாக ஏற்றேன்.
நோக்கமில்லாமல் அலையும் வாலிப மனசை பக்குவப்படுத்தும் உத்தியை கல்லூரி நாட்களிலேயே நான் கற்றுக்கொண்டுவிட்டேன். ஆம். அலைபாயும் மனதை அடக்கி அதை கலை மேவிய மனதாக்கி அதில் கவிதைப்பயிர் வளர்க்கத் தொடங்கினேன்.
கட்டுக்கடங்காத ஆற்றல் பெருக்கெடுக்கும் வாலிபநதியை விபத்தின்றிக் கடக்க, கவிதை எனக்கொரு தோணியானது. இலட்சிய வேட்கை அதை இயக்கும் துடுப்பானது. உணர்வுகளைச் செதுக்கி அவற்றுக்கு உயிரூட்டுவதே கலை என்பார்கள். நெஞ்சின் ஆசைகளை ஓசைப்படாமல் காவியமாக்குகின்றபோது, ஒரு மனிதன் கலைஞனாகிறான்.
பின்னர் தனது படைப்புகளின் மூலம் அவனே பல பிறவிகளை எடுக்கின்றான். கூடு விட்டுக் கூடுபாயும் விக்கிரமாதித்தனை நம்பாத என் மனது ஒரு கலைஞன் கூடுவிட்டுக் கூடுபாயும் ஆற்றல் பெற்றவன் என்று நம்பத் தயங்கியதே யில்லை. வாசிக்கத் தெரியாதவர்களையும் நேசிக்க வைக்கின்ற ஆற்றல் ஓவியத்திற்கும் சிற்பத்திற்கும் உண்டு. இவற்றுடன் மற்ற கலைகளையும் மனதுக்குள் வைத்துப் பூஜிக்கின்றபோது பாமரனும் பண்டிதன் ஆகிவிடுகிறான்.
எழுத்துக்களால் என்னைச் செதுக்கும் முயற்சியில் நான் இறங்கியபோதெல்லாம் கவிதைகளின் பிரசவம் நிகழ்ந்தது. அதில் குறை பிரசவம் உண்டு. ஒவ்வொரு கவிஞனும் தன்னை முழுமையாகப் பிரசவிக்கவே முயல்கின்றான். ஆனால் ஒவ்வொரு பிரசவத்திலும் தன்னைத் தானே இழக்கிறான். அதன்மூலம் தன்னைத் தானே புதுப்பித்துக்கொண்டு அதிக ஆற்றலோடு மீண்டும் மீண்டும் முயல்கிறான். கற்பனைக் கடலில் மூழ்கி மூழ்கி கவிதை முத்தெடுக்கும் கவிஞனின் முயற்சி மூச்சுள்ளவரை தொடர்ந்து கொண்டு இருக்கும். தனக்காக மட்டும் வாழாமல் தான் வாழும் சமுதாயத்திற்காகவும் வாழத் தொடங்கும் ஒவ்வொருவனும் மனிதல்ல; மாமனிதன்.
கோவை வானொலியில் எனது கவிதைகளின் ஒலிவலம் நிகழ்ந்தது. கன்னி முயற்சியில் கருத்துக்களின் அரங்கேற்றம் கவிதைகளை சிதைத்துவிடாமல் அவற்றைச் மென்மையாகச் செதுக்கிச் செதுக்கிச் சிகர மேற்றினார் திரு.ஜெ.கமலநாதன்.
புதியவர்களை ஊக்குவித்து, அவர்களை மாமனிதர்களாக்கும் நற்பண்புகளைக் கொண்ட அவருடைய அன்பான அணுகுமுறையும் அக்கறையோடு கவனமாகவும் களைகளை நீக்கி கருத்துப்பயிர் வளர்க்கும் தனிப்பக்குவமும் என்னை மிகவும் கவர்ந்தது. வளர்ந்துள்ளவர்கள், தவழும் இலக்கிய ஆர்வலர்களை படிப்பாளிகளாகவும் படைப்பாளிகளாகவும் மாற்றுவதற்கு முயற்சி எடுக்கவேண்டும் அதுதான் சமுதாயத்திற்கு அவர்கள் செய்கின்ற முதற்கடமை என்பதை, அவர் மூலம் நான் புரிந்து கொண்டேன்.
தான் மட்டும் முன்னேறாமல், தன்னுடன் வளரும் சமுதாயத்தையும் அழைத்துக் கொண்டு வெற்றியின் திசைநோக்கிச் செல்லவேண்டும். அப்பொழுதுதான் வாழையடி வாழையாக இலக்கிய உலகம் வளர்ந்து இமயமாக உயரும் என்பதை உலகிற்கு உணர்த்தும் விதத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை அமைத்து பல புதியவர்களை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ள பெருமை அவருக்கு உண்டு.
எனக்குள் இருந்து என்னை வழிநடத்தும் பல்வேறு பண்புகளை நான் அவரிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன். அவருக்கு நன்றி செலுத்தும் போதுதான் நான் நிறைவு பெறுகிறேன்.
எந்த நிலைக்கு வந்தாலும் வந்த நிலையை மறவாதவர்களைத்தான் சமுதாயம் மாமனிதர்கள் என்று போற்றுகிறது.
எனது கவிதை நோட்டை எடுத்துக்கொண்டு நண்பர்களோடு கோவை விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் திரு.மு.வேலாயுதம் அவர்களைச் சந்திக்கச் சென்ற போது….
தொடரும்.
Leave a Reply