மரபின் மைந்தன் ம. முத்தையா
வாழ்க்கையில் வெற்றி பெறுவது குறித்த போதனையாளராக மட்டுமின்றி சாதனையாளராகவும் திகழ்பவர் இறையன்பு ஐ.ஏ.எஸ். இந்திய ஆட்சிப் பணியில் எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் உள்ள எத்தனையோ அதிகாரிகள் இருந்தார்கள், இருக்கிறார்கள். ஆனால், இறையன்பு வித்தியாசமான கலவையின் விளைச்சலாய் விளங்குகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நேர்காணலில் அவர் குறிப்பிட்டு இருந்தார் ‘ஐ.ஏ.எஸ்’ பட்டம் என்பது ஒரு நுழைவுச் சீட்டு மாதிரிதான். அதைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு நல்ல இடத்தைச் சென்றடைய முடியும். அந்த இடத்தில் முத்திரை பதிப்பது நம்முடைய தனித் தன்மையில்தான் இருக்கிறது என்று.
அவரது வார்த்தைகளுக்கு அவரே வாழும் இலக்கணம் என்றால் மிகையாகாது. இந்தியாவில் அறிவாளி என்ற சொல்லுக்கு தகவல்களைத் திரட்டி வைத்திருப்பவர் என்று பொருள் கொள்வதுதான் பொதுவாக நிலவுகிறது. கதிரொளியின் வெப்பத்தைத் தாவரங்கள் செரித்துக் கொள்வது மாதிரி கற்ற விஷயங்களைச் செரித்து, வாழ்வியலோடு இணைத்து, அந்தத் தகவல்களுக்கு அறிவின் அந்தஸ்தை அளிப்பவர்கள் மிகச் சிலர்தான். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் இறையன்பு.
ஏறக்குறைய இருபதாண்டுகளுக்கு முன்பு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவராக விளங்கிய காலகட்டத்திலேயே இளம் இலக்கியவாதியாய் அறியப்பட்டவர் அவர்.அந்த நாட்களில் இளைஞர் கவியரங்குகள் பலவற்றில் அவர் கவிஞராக மட்டுமின்றி, கவியரங்கத் தலைவராகவே பங்கேற்பார். அரும்புப் பருவத்திலேயே அவரது புலமைப் பண்பும் தலைமைப் பண்பும் பரவலாக அறியபட்டன.
அவரது இயல்பான அறிவுத் தேடல், தான் திரட்டிய தகவல்களுக்குள் புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறது. புதுமையான பார்வையில் வித்தியாசமான சிந்தனைகளை வெளிப்படுத்தி வருகிறது.பொதுவாகவே கீழை தேசங்களின் சுயமுன்னேற்றச் சிந்தனைகளுக்கும், மேற்கத்திய சுயமுன்னேற்றச் சிந்தனைகளுக்கும் இருக்கிற அடிப்படை வேற்றுமை மிக முக்கியமானது.மன அழுத்தம் – தாழ்வு மனப்பான்மை -தோல்வி குறித்த அச்சம் போன்ற வந்துவிட்ட நோய்களுக்கு வைத்தியம் பார்ப்பவை, மேலை நாட்டின் சுயமுன்னேற்றக் கோட்பாடுகள். அதன் இன்னொரு பிரிவு, நேர நிர்வாகம் – உரையாடல் கலை போன்ற உத்திகளைச் சுற்றியே உலா வருகிறது.ஆனால், அழுத்தமான தத்துவப் பின்புலத்தில் உருவாகும் கீழை தேசத்து சுயமுன்னேற்றக் கோட்பாடுகள், வருமுன் காக்கும் உபாயங்கள்.
மேற்கத்தியச் சிந்தனைகள் நுண் கிருமிகளைக் கொல்லும் மருந்துகள்போல. கீழைதேசச் சிந்தனைகள் நுண்ணூட்டச் சத்து தரும் வைட்டமின் மாத்திரைகள் போல.இந்த வேரிலிருந்து விலகிவிடாமல் சுயம் உணரத் தூண்டும் சுயமுன்னேற்றச் சிந்தனையாளர் களில், இந்தக் காலகட்டத்தில் இரண்டு முத்திரை மனிதர்கள் முக்கியமானவர்கள். ஒருவர், சுகி.சிவம். இன்னொருவர் இறையன்பு.
இறையன்பு சில விஷயங்களை எடுத்துக் கொண்டு விளக்கத் தொடங்குகிறபோதே சிக்கலை விடுவிக்கக் கூடிய முதல் முனை நம் கைகளில் தட்டுப்படுகிறது. அதையே கவனமாகப் பற்றிக் கொண்டு பயணமாகிறபோது தெளிவும் கிடைக்கிறது.
தோல்வி பற்றிய அவரது கருத்துக்களைப் பாருங்களேன்.தோல்வியில் இரண்டு வகைகள் உண்டு.முதல் வகை – உலகப் பார்வையில் நம் மதிப்பு குறைந்து போகிற மாதிரியான நேர்வுகள்.இரண்டாவது வகை – நமக்கு நாமே நிர்ணயித்துக் கொண்ட தராசுகளில் நாம் தட்டுத் தடுமாறுவது.
இதை நான் குறிப்பிடுவதற்குக் காரணம், இந்த உலகம் வெற்றி எனக் கொண்டாடுவது குறித்து நாம் கவலைப்பட வேண்டியதில்லை. நாம் நம்முடைய இலக்கை சரியாகத் தீர்மானித்துக் கொண்டால் போதும்.இந்தச் சிந்தனை, தோல்வி குறித்த அடிப்படைக் கண்ணோட்டத்தை அறவே மாற்றுகிறது. மற்றவரின் அளவு கோலுக்குள் நாம் அகப்பட வேண்டியதில்லை என்கிறபோதே, அவமான உணர்வு அகன்று போய் விடுகிறது.
மற்றவர்களின் வெற்றிக் கதைகளை நாம் விரும்பிப் படிக்கிறோம். இக்கட்டான கால கட்டங்களிலிருந்து எப்படி மீண்டார்கள் என்பதை ஆர்வத்துடன் அறிந்து கொள்கிறோம்.எதற்காக என்றால், நமக்கு அத்தகைய நெருக்கடிகள் நேரும் போது நாமும் நமது சுயமான சிந்தனையைப் பயன்படுத்தி மீண்டு வருவதற்கான முன்னுதாரணங்களாய் அவர்களைக் கொள்கிறோம்.சரியாகச் சிந்தித்தால் எந்தச் சிக்கலில் இருந்தும் மீண்டு விட முடியும் என்கிற நம்பிக்கை ஏற்படுவதுதான் முக்கியமே தவிர, அவர்கள் பயன்படுத்திய அதே உத்திகளை நாம் பின்பற்ற முடியாது.இந்த உண்மையை, அதிர்ச்சி தருகிற -ஆனால் மிகப் பொருத்தமான உதாரணத்தோடு பொட்டில் அடித்தது போல் பேசுகிறார் இறையன்பு.
“வெற்றியடையத் தனியான சூத்திரங்கள் ஏதுமில்லை. நாமாகத்தான், அதற்கான சூத்திரத்தை நமக்கு மட்டுமே ஏற்றவாறு கண்டறிய வேண்டும். மற்றவர்களின் சூத்திரங்கள், அவர்கள் உள்ளாடைகளைப் போல அவர்களுக்குத்தான் பயன்படுமே தவிர போர்வையைப் போல எல்லோருக்கும் உபயோகமாகாது”.குழந்தை வளர்ப்பின் அடிப்படையான அம்சங்களில் நாம் கவனம் செலுத்தினால், அவர்கள் வளர்ந்த நிலையில் வருகிற பிரச்சினைகளை எளிதாகத் தவிர்த்துவிட முடியும் என்பதை இறையன்பு உணர்த்துகிற கோணம் வித்தியாசமானது.
“சின்ன வயதில் அதிகம் குறும்பு செய்யும் குழந்தை, விடலைப் பருவத்தில் அமைதியாகவும் எச்சரிக்கையாகவும் நடந்து கொள்கிறது. தன்னிடமிருந்த அளவுக்கதிகமான குறும்புகளை குழந்தைப் பருவத்திலேயே வெளியேற்றிவிட்டதால், விடலைப் பருவத்தில் அதன் சக்தியை ஆக்கபூர்வமான செயல்களுக்கு உபயோகப்படுத்துகிறது.
குழந்தைப் பருவத்தில் குறும்புகள் செய்வதை நாம் தடை செய்தோமானால் அதன் குறும்பு விடலைப் பருவத்தில் கூடத் தொடர்கின்றது” என்கிறார் இறையன்பு.குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான அம்சம் இது.
புத்தர்-கபீர்-ஓஷோ-ரமணர்-ஜே.கே-என்று பல ஞானியரின் பார்வைகளை உள்வாங்கி, அவற்றை சமகாலப் பார்வையுடன் வித்தியாசமாக வெளிப்படுத்துவது இறையன்புவின் மிகப் பெரிய பலம்.எண்ணங்களின் மேன்மையை எழுதுகிற போது இறையன்பு இப்படிச் சொல்கிறார்.”நம் எண்ணங்கள் வலிமையானவை. அவற்றை நாம் பூக்களைப் போலத் தூவவும் முடியும். கற்களைப் போல எறியவும் முடியும்.நாம் பூக்களைத் தூவினால், அவை மாலையாக வருகின்றன. நாம் கற்களை எறிந்தால், அவை காயங்களாக நமக்கே திரும்பி வருகின்றன”.தன் எண்ணத்தின்படியே மனிதனின் வாழ்க்கை அமைகிறது என்கிற சிந்தனையின் மிக அழகான வெளிப்பாடு இது.
சுயமுன்னேற்றச் சிந்தனைகளையும், இயற்கையின் முக்கியத்துவத்தையும் கட்டுரைகளாக எழுதிக் கொண்டே போகிறபோது, இறையன்புவிற்குள் இருக்கிற கவிஞரும் அடிக்கடி வெளிப்படுகிறார்.”தந்தம் இருந்தால் தானே நம்மைக் கொல்கிறார்கள். இந்தத் தந்தமே வேண்டாம் என்று சில யானைகள் சின்ன வயதிலேயே மரத்தில் உராய்ந்து தந்தமே வளராமல் பார்த்துக் கொள்கின்றனவாம். களிறுகள் பிளிறுவதை விட்டு விட்டு அலறுவதற்கு ஆரம்பிக்கும் அளவு மனிதனின் விரல்களில் விஷம் தடவப்பட்டு விட்டது.
மிகையாக உத்வேகப்படுத்தும் உற்சாக மொழிகளை உதறிவிட்டு, வாழ்வியலின் எதார்த்தங்களை வலிமையாகப் பதிவு செய்து, முன்னேற விரும்பும் இளைஞன் தன் முழுமையான ஆற்றலைத் தெரிந்துகொள்ளத் துணை புரியும் விதமாக அமைந்திருக்கின்றன, இறையன்புவின் எழுத்துக்கள்.”நாம் பிரச்சினைகளை எதிர்கொள்ளப் பழக வேண்டும். கழுதையின் முதுகில் கம்பீரமாக அமர்வதைக் காட்டிலும், முரட்டுக் குதிரையின் முதுகிலிருந்து தூக்கி எறியப்படுவதில்தான் வாழ்க்கையின் சாராம்சம் அடங்கியிருக்கிறது” என்கிறார்.
“தோல்விகள் பலவிதமாக நிகழலாம். முயற்சியின்மையால் ஏற்படலாம். சரியான நேரத்தில் செய்யாததால் நிகழலாம். நம் மதிப்பீடு சரியாக இல்லாததால் உண்டாகலாம். நம் எதிர்பார்ப்பு ஏராளமாக இருந்தால் ஏற்படலாம்.
ஒவ்வொரு முறை நாம் தவறும் போதும் ஆழ்ந்து பரிசீலனை செய்ய வேண்டும். எங்கே நாம் இடறியிருக்கிறோம் என்பதை நாம்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிற இறையன்பு,”நாம் தோற்ற காரணத்தைக் கண்டு பிடித்தாலே போதும் நாம் வெற்றிக்கான திறவு கோலை வடிவமைத்து விட்டோம் என்று பொருள்” என்றும் உற்சாகப்படுத்துகிறார்.இத்தகைய கருத்துக்களின் அடிப்படையில், இறையன்புவின் சிந்தனைப் பாங்கை மதிப்பிட முயல்கையில் ஒன்று புரிகிறது,
தனிப்பட்ட அறிவுத்தேடல் காரணமாய்த் தான் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் அவரிடம் ஒரு தெளிவு ஏற்பட்டிருக்கிறது. அந்தத் தெளிவு, அழுத்தமான வாழ்வியல் சிந்தனைகளாய் வெளிப்படுகின்றன.
கீழை நாட்டின் தத்துவங்கள் என்பவை ஏதோ வாழ்க்கைக்கு வெளியே இருப்பவை என்பது போன்ற பிரமையை உடைத்து, வாழ்க்கை குறித்த தெளிந்த சிந்தனை மரபு, இந்தத் தத்துவங்களில் உண்டு என்பதை அவர் உணர்த்தி வருகிறார்.
இந்தப் போக்கு இன்னும் அழுத்தமாக முன்னெடுத்துச் செல்லப்படும் போது, அழுத்தமும், கம்பீரமும், சுயம் உணர்ந்த சுடரும் கொண்ட இளையபாரதம், தலைமையேற்கும் உரத்தோடும் திறத்தோடும் உருவாகும்.
madheena manzil
flowers,stone those lines are grate
priyar
saluate to ve.iraiyanbu
shanmugam
“வெற்றியடையத் தனியான சூத்திரங்கள் ஏதுமில்லை. நாமாகத்தான், அதற்கான சூத்திரத்தை நமக்கு மட்டுமே ஏற்றவாறு கண்டறிய வேண்டும். மற்றவர்களின் சூத்திரங்கள், அவர்கள் உள்ளாடைகளைப் போல அவர்களுக்குத்தான் பயன்படுமே தவிர போர்வையைப் போல எல்லோருக்கும் உபயோகமாகாது”.குழந்தை வளர்ப்பின் அடிப்படையான அம்சங்களில் நாம் கவனம் செலுத்தினால், அவர்கள் வளர்ந்த நிலையில் வருகிற பிரச்சினைகளை எளிதாகத் தவிர்த்துவிட முடியும் என்பதை இறையன்பு உணர்த்துகிற கோணம் வித்தியாசமானது.
excellent example!!
GURU SELVAM.A
touchable………
siva
super lines but motivation energy this article gives only 60% only