– திருமதி. ருக்மணி பனனீர்செல்வம்
ஒளியின் வேகத்தையும், ஒலியின் வேகத்தையும் அறிவியல் அறிஞர்கள் அளந்து கூறுவதைக் கண்டு வியக்கின்ற நாம், நம் மனதில் உதிக்கின்ற எண்ணங்களின் வேகத்தைப் பற்றி வியப்பதுமில்லை, கவலைப்படுவதுமில்லை.
காற்று வாகனமேறிச் செல்லும் ஒலியின் வேகத்தை விடவும், எத்தனையோ இலட்சம் மைல்களுக்கப்பால் ஆகாயவெளியில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் நட்சத்திரங்களின் ஒளி பூமியை வந்தடையும் வேகத்தையும் விடவும் நம் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களின் வேகம் அதிகம் என்பது தெரியுமா நண்பர்களே!
தோன்றி மறைகின்ற எண்ணங்களைப் பற்றி நாம் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும் அல்லது கவலைப்பட வேண்டும்? எண்ணங்களின் வேகத்தைப் பற்றி அறிந்து கொள்வதால் என்ன நன்மை? ஒவ்வொரு நாளும் எத்தனையோ வித எண்ணங்கள் நம் உள்ளத்தில் உதிக்கின்றன. அவை பற்றியெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தால் அன்றாட வேலைகள் தடைபட்டுப் போகும். எனக்கு என்னுடைய தினசரி வேலைகள் தடைபடுவதிலோ அல்லது உடைபடுவதிலோ உடன்பாடில்லை என்று எண்ணுபவர்கள்தான் ஏராளம்.
அன்றாடம் நம் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்றவாறு நமக்குள் எத்தனையோ எண்ணங்கள் உதித்துக்கொண்டே இருக்கின்றன. இவற்றில் நம்மையும் நம் வாழ்வையும், நம்மைச் சார்ந்து இருப்போரின் வாழ்வையும் உயர்த்த வேண்டும் என்ற நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கு வலுசேர்த்து வழிகாட்டும் எண்ணங்களும் உண்டு.
மேலே சொன்ன இரண்டையும் தாண்டி “அய்யோ, நம்முடைய முன்னேற்றத்திற்கு நாம்தானே திட்டமிட்டோம். அதற்குள் நாமே மனம்மாறி விட்டோமே” என்று ஆதங்கப்பட வைக்கும் மூன்றாவது எண்ணமும் நமக்குள்ளேயே தோன்றி செயலில் இறங்க முடியாது சோகத்தை சுமந்துகொண்டே நம்மை நடமாட வைப்பதுமுண்டு.
உள்ளக் குளத்தில் கல்லெறிந்து நம் எண்ண அலைகளை கிளப்பிவிட ஒவ்வொருநாளும், எத்தனையெத்தனையோ மனிதர்கள் மட்டுமின்றி பல நிகழ்வுகளும், காட்சிகளும், நிறுவனங்களும் நம் கண்முன்னே வரிசை கட்டி நிற்கின்றன.
மனதில் தோன்றும் எண்ண அலைகளும், அதையொட்டி அமையும் செயல்பாடுகளும். அதனால் ஏற்படும் விளைவுகளும் ஒன்றுக்கொன்று நெருங்கிய பிணைப்பைக் கொண்டவை என்பதாலேயே, மனதைக் கட்டுப்படுத்தும் அல்லது எண்ணங்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைத் தேடி எத்தனையோ ஞானிகள் அலைந்தார்கள்.
நாம் அப்படியெல்லாம் அலைய வேண்டியதுமில்லை. நமக்கு அதற்கு நேரமுமில்லை. அதற்கான தேவையும் இல்லை. நமக்குள் பூக்கும் எண்ணங்களில் எதை அலட்சியப்படுத்த வேண்டும். எதை இலட்சியமாகக் கொள்ள வேண்டும் என்பதில் மட்டும் தெளிவும், சரியாக எடுக்கும் முடிவும்தான் நமக்குத் தேவை.
ஒன்றை நாம் இலட்சியப்படுத்த வேண்டும் என்ற முடிவில் இருக்கும் போதே அதை அலட்சியப்படுத்தவும் நம் மனமே எண்ணங்களை உருவாக்கிவிடும் என்பதால் எச்சரிக்கையோடு நம் எண்ணங்களை கையாள்வது அவசியம்.
எண்ணங்கள் உடனுக்குடன் மாறக்கூடியது என்பதை நம்முடைய பெரியவர்கள் எந்த அளவிற்கு உணர்ந்து செயல்பட்டார்கள் என்பதற்கு பல்வேறு உயர்ந்த மனிதர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள் பல உண்டு.
பேரறிஞர் அண்ணாவின் எழுத்தாற்றலைக் கண்ட தந்தை பெரியார் அவர்கள் விடுதலை ஏட்டிற்கு அவரை ஆசிரியராக்கினார். ஒரு முறை அண்ணா எழுதிய “ரிப்பன் மாளிகைச் சீமான்கள்” என்ற தலையங்கத்தைப் படித்துவிட்டு தந்தை பெரியார் அவர்கள், அண்ணா தங்கியிருந்த தமது வீட்டின் மூன்றாவது மாடிக்கு குறுகலான, வளைவான படிக்கட்டுகளில் மிகத் துன்பப்பட்டு ஏறிச்சென்று அண்ணாவை அழைத்தார். பெரியாரின் குரல் கேட்டு ஓடோடி வந்த அண்ணா,”ஐயா தகவல் சொல்லியனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே, இவ்வளவு சிரமப்பட்டு நீங்கள் மேலே வரவேண்டுமா” என்று கேட்டார். “நீங்கள் எழுதியிருந்த ரிப்பன் மாளிகைச் சீமான்கள் ரொம்ப நல்லாயிருந்தது. அதற்கு பாராட்டு தெரிவிக்கத்தான் மேலே வந்தேன்” என்றார் பெரியார். தான் கீழே வந்தபிறகே பாராட்டியிருக்கலாமே என்று அண்ணா அவர்கள் கேட்டதற்கு அதற்குள் என் மனம் மாறிவிட்டால் என்ன செய்வது என்றுதான் உடனே வந்துவிட்டேன் என்று சொல்லி அண்ணாவை நெகிழவைத்தார் பெரியார்.
மனதின் எண்ணங்கள் எந்த அளவிற்கு மாறக்கூடியது என்பதை பெரியார் அவர்கள் உணர்ந்திருந்தார் என்பதற்கு இச்செயல் ஒரு நல்ல உதாரணமாய் திகழ்கின்றது. அதனால்தான் பாரதி, மனதின் எண்ணங்கள் தன் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கின்றார். தன் மனதை நோக்கியே உன் தலைவன் நான் என்கிறார்.
“பேயாயுழலுஞ் சிறு மனமே
பேனா யென்சொல் இன்றுமுதல்
நீயா யொன்றும் நாடாதே
நினது தலைவன் யானே காண்” என்பது பாரதியின் பாடல்
ஆக்கபூர்வமாக, நம் முன்னேற்றத்திற்கு செய்ய வேண்டிய சில வேலைகள் திடீரென நம் எண்ணத்தில் மின்னலிடும். அதை அப்போதே குறித்து வைத்துக்கொண்டு நமக்கான நேரம் கிடைக்கும்போது நிதானமாய், குறித்து வைத்து அவ்வெண்ணத்தைப் பற்றி சிந்தித்தோமானால் செயல்படுத்துவதற்கான எண்ணங்கள் உருவெடுக்க ஆரம்பிக்கும்.
உடனடியாய் அவற்றையும் ஒரு குறிப்பேட்டில் குறித்து வைத்துக் கொள்வது நல்லது . ஏனெனில் நீண்ட நாளாய் நாம் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு செயல் நடைமுறைப்படுத்தும்போது முக்கியமாக செய்ய வேண்டிய பலவற்றை நாம் மறந்துவிட்டிருப்போம். இதற்கு நல்ல உதாரணம், அவரவர் வீட்டுவிழாக்கள் நடந்த அனுபவத்தை நினைத்துப் பார்த்தாலே போதும்.
நம் மனதின் எண்ணங்களை ஒழுங்குபடுத்தி நமக்கொரு இலட்சியப் பாதையை அமைத்துத் தரும் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்தான் நம் வெற்றியின் முதல்படிக்கட்டு ஆரம்பிக்கின்றது.
DK
It’s Nice Sir Keep it up