– ருக்மணி பன்னீர்செல்வம்
நம் இலட்சியமாக இருக்கின்ற துறைகளை நம்மால் சாதனை நிகழ்த்தக் கூடிய துறைகளை முதலில் பட்டியலிட்டுக் கொள்வதுதான் நாம் செய்யவேண்டிய முதல் வேலை. ஒரு சிலரின் கனவு ஒரே துறையைச் சார்ந்து இருக்கும். சிலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட துறைகளில் சாதனை புரிய வேண்டும் என்றதுடிப்பு இருக்கும். எதுவாயிருப்பினும் பட்டியல் அவசியம். எழுதி
பட்டியலிட்டுக் கொண்ட பிறகு செய்யவேண்டிய மிக முக்கியமான பணி, முதலில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுப்பது ஆகும். நாம் தேர்ந்தெடுக்கும் துறையில் ஈடுபடத் தொடங்குவதன் முதல் கட்ட வேலைகள் பல இருக்கின்றன. அவற்றில் பொதுவான சிலவற்றை இங்கே பார்ப்போம்.
: நாம் தேர்ந்தெடுக்கும் துறையானது நிகழ்காலத்தில் மட்டுமின்றி வருங்காலத்திலும் மக்களிடம் தேவையுள்ள துறைதானா?
: நாம் எதிர்பார்க்கும் வருவாயை ஈட்டித் தரக்கூடிய வாய்ப்புகள் நிறைந்துள்ள துறையா?
: எந்தத் துறையாய் இருந்தாலும் அனுபவ அறிவு தேவையாய் இருக்கும். இதில் ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம். நாம் ஈடுபடப் போகும் துறைக்கு அனுபவ அறிவு தேவைதானா? அப்படியானால் நமக்கிருக்கும் அனுபவ அறிவு போதுமானதா? இல்லை நம் துறை சார்ந்த அனுபவ அறிவினை இன்னும் பெறவேண்டி உள்ளதா?
: நாம் வாழும் ஊரிலோ, அல்லது மற்ற இடங்களிலோ நமக்கும் முன்பே அத்துறையில் யார் யார் ஈடுபட்டு இருக்கிறார்கள்? அத்துறையில் இதுவரை அவர்கள் அடைந்திருக்கும் நிலை என்ன?
: நாம் ஈடுபடப் போகும் துறையில் நமக்கும் முன்பே இயங்கிக் கொண்டிருப்பவர்களைக் காட்டிலும் சிறப்பாய் இயங்குவதற்கும், நமக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்துவதற்கும் நம்முடைய திட்டங்கள் என்னென்ன?
: யாருமே இதுவரை ஈடுபடாத புதிய துறை எனில், மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கவும், தொடர் தேவையை உண்டுபண்ணவும் என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறோம்?
: பொருளை உற்பத்தி செய்கின்ற துறையெனில், மூலப் பொருட்கள் உள்ளிட்ட எல்லாத் தேவைகளுக்கும் பொருளாதார ஆதாரம் எந்தளவு நம் கைகளில் உள்ளது? அல்லது அதற்கான ஏற்பாடுகள் திருப்திகரமாய் இருக்கின்றதா? வருவாய் ஈட்டும் வரையில் சிக்கல்களின்றி சமாளிக்கக்கூடிய பொருளாதாரச் சூழல் உள்ளதா?
: சரியான இடத்தை தேர்வு செய்திருக்கிறோமா? தேவையான அளவு இடவசதி உள்ளதா? வளர்ந்து வரும்போது விரிவாக்கம் செய்யும் அளவு சுற்றுப்புறச் சூழல் உள்ளதா? போக்குவரத்திற்கும், துறை சார்ந்த அனைத்துப் பிரிவினரும் வந்து செல்லவும், உகந்த இடமா?
: தேர்ந்தெடுக்கப்படும் இடம் மக்கள் வாழும் பகுதியெனில், நீர், காற்று, ஒலி இவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய துறையா? அப்படியானால் மக்களாலும், அரசாலும் மறுப்பு சொல்ல முடியாத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த திட்டங்கள் என்னென்ன?
: துறை சார்ந்த அடிப்படைத் தேவைகள் பற்றாக்குறையின்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளனவா?
: விற்பனைக்கான அடிப்படை ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளனவா? தேவை, உற்பத்தி, விற்பனை அடிப்படையில் ஆய்வறிக்கைகள் வைத்திருக்கிறோமா?
: நம்முடைய துறைக்கு தேவையான அனைத்துப் பிரிவு பணியாளர்களையும் அவரவர்க்குரிய தகுதிகளோடு தேர்ந்தெடுக்க விளம்பரம், நேர்முகம் உள்ளிட்ட திட்டங்கள் தயாரிக்கப்பட்டுவிட்டனவா?
: ஒவ்வொரு பிரிவு பணியாளர்களுக்கும் அவரவர் தகுதிக்கேற்றவாறு புறச் சூழல்களை அனுசரித்து ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?
: பணியாளர்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற அவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா?
: அலுவலகப் பணிக்கு பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் என்னென்ன என்கின்ற பட்டியல் தயாரித்தாகிவிட்டதா?
: நம் நிறுவனத்தை வெளியே அடையாளப்படுத்தக் கூடிய பணியாளர்களுக்கான உடைகள் (ஈழ்ங்ள்ள் ஸ்ரீர்க்ங்), அடையாள அட்டை, போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்டவை வடிவமைக்கப்பட்டுள்ளனவா?
மேற்கண்டவை மட்டுமின்றி அவரவர் தேர்ந்தெடுக்கும் துறைசார்ந்து தேவையான அனைத்தையும் ஆய்வுசெய்து செயல்திட்ட அறிக்கையை தயார் செய்து கொள்வது அவசியமாகும்.
எந்தச் செயலில் நாம் ஈடுபடுவதென்றாலும் திட்டமிடுதலையும், தெளிவான வழிமுறைகளையும் கைக்கொள்வதுதான் அச்செயலை வெற்றிகரமாக்கவும், தொடர்ந்து இயங்கவும், நிலைத்த இடத்தை பெறவும் அடித்தளம் அமைத்துக் கொடுக்கும்.
வெற்றி பெறுபவர்களைப் பார்த்து எந்த அளவிற்கு உற்சாகம் கொள்கிறோமோ, அதே அளவிற்கு தோல்வியுற்றவர்களையும் உற்று கவனித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
ஒரு துறையில் தம்முடைய உறவினரோ, நண்பரோ, தெரிந்தவரோ பரவலாய் வெற்றி அடைந்து வருவதை பார்க்கின்ற பலரும் தானும் அதே துறையில் ஈடுபட ஆர்வம் கொள்வதென்பது இயல்பாக எங்கும் இருக்கக்கூடியதுதான். ஆனால் அதே நேரத்தில் அத்துறையில் நுழைவதற்கு முன் தெரிந்திருக்க வேண்டியவற்றைப் பற்றி யோசிக்காமல் எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு மிக வேக வேகமாக பணத்தைப் புரட்டி தொடங்கிவிடுவார்கள். நாட்கள் செல்லச் செல்லத்தான் முன்னெச்சரிக்கையுடனும், முன்னேற்பாடுகளுடனும் இறங்காமல் அவசரப்பட்டு விட்டதை அறிந்து கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கிவிடுவார்கள். அவர்களின் தோல்விகளுக்கான காரணங்களையும் பொதுவாக நாம் தெரிந்து வைத்துக் கொள்வது நமக்கு பெரிதும் உதவியாய் இருக்கும்.
: தொடர்ந்து மூலப்பொருட்கள் பெறுவதில் ஏற்படும் தாமதம்.
: அனுபவம் இல்லாததால் தரத்தைப் பற்றி கவலைப்படாமல் முடிந்தவரை பொருட்களை தயாரித்து வெளியே அனுப்புவது. தரமின்மையால் விற்பனை பாதிப்பும், அவப்பெயரும் உண்டாவது.
: தயாரிக்கப்பட்டு வெளியே சென்ற பொருட்களுக்கான பணத்தைப் பெறுவதில் விளையும் தாமதம், பல நேரங்களில் பெறமுடியாமல் போவதால் ஏற்படும் ஏமாற்றம், இவற்றால் விளையும் பொருளாதார நெருக்கடி.
: முதலீட்டிற்காகவும் தொடர் செலவுகளுக்காகவும் வாங்கிய கடனையோ அல்லது வட்டியையோ அடைக்க முடியாமல் திண்டாடுதல்.
: ஊதியம் வழங்குவதில் ஏற்படும் தாமதம் மற்றும் குறைபாடுகள், அடிப்படை வசதிகள் இலலாமையால் பணியாளர்கள் நின்றுவிடுதல்.
: போட்டியாளர்களைச் சமாளிக்க முடியாமல் திணறுதல்.
: புதுமைகளையும், தனித்துவத்தையும் வெளிப்படுத்தத் தெரியாததால் ஏற்படும் வீழ்ச்சி, மன உளைச்சல்.
: இவற்றாலும் மேலும் அவரவர் தொழில் சார்ந்து ஏற்படும் பல்வேறு இன்னல்களாலும் ஆர்ப்பாட்டத்தோடு திறப்பு விழா செய்தவர்கள் மிகவும் அடக்கத்தோடு மூடுவிழா செய்துவிடுகிறார்கள்.
உற்சாகத்தோடும், நம்பிக்கையோடும் மலையேற்றம் கொள்கின்றவர்கள் என்னென்ன இன்னல்கள் வருமென்பதையும் அறிந்துகொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளோடுதான் தொடங்குகிறார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் மேற்கண்டவைகளை கூறினேன்.
நாம் சாதிக்க விரும்பும் துறையில் தொடர் வெற்றியைப் பெறவேண்டுமெனில் அடிப்படையான தொடக்கம் மிகவும் வலுவானதாகவும் குறைபாடுகள் ஏற்பட்டாலும், உடனுக்குடன் சரிப்படுத்திக் கொள்ளக்கூடிய கட்டமைப்பு வசதிகளுடனும் அமைவது இன்றியமையாததாகும்.
வெற்றி என்பது ஒரு கட்டத்தில் அடைந்துவிட்டு அதோடு நின்றுவிடுவதல்ல. வெற்றி ஒரு தொடர் பயணமாகும். பயணித்துக்கொண்டே இருப்பதுதான் சிகரத்தின் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருப்பதன் அடையாளம்.
Leave a Reply