புதுமையின் பெருமை
நீங்கள் ஈடுபட்டிருக்கும் துறையில் தொடர் வெற்றியைக் காண வேண்டுமா? பயனுள்ள புதுமைகளை புகுத்தத் தயாராகுங்கள் ஆக்கப்பூர்வமான புதுமைகளுக்கு என்றைக்குமே அதிக வரவேற்பு உண்டு என்பதை காலம் நமக்கு பலவகையிலும்
உணர்த்திக் கொண்டிருக்கிறது. எனவே புதிய நுட்பங்களைக் கையாளக் கற்றுக்கொள்வது காலத்தின் தேவையாகும்.
சில நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்தும் போது புதுமை புதுமை என்று கூறுவார்கள். ஆனால் அப்பொருளின் நிறமோ அல்லது வடிவமோ மட்டுமே மாறியிருக்கும், அப்பொருளின் பயன்பாட்டில் எவ்வித முன்னேற்றமும் இருக்காது.
நீங்கள் ஒரு பொருள் உற்பத்தியாளராய் இருந்தால் வழக்கமாய் வந்து கொண்டிருக்கும் வடிவம், நிறம் மாற்றுவது மட்டுமல்ல, கூடுதல் பயன்பாட்டை மையப்படுத்தி புதுமையை அறிமுகப்படுத்துவதுதான் எளிதில் வெற்றியைக் கொண்டு வந்து சேர்க்கும்.
எடுத்துக்காட்டாய் செல்போன் எனப்படும் கைப்பேசியை எடுத்துக் கொள்வோம். கைப்பேசி முதலில் அறிமுகமாகும் போது அது ஒரு தொலைபேசியின் பணியையும், பெயர்களைப் பதிவு செய்துகொள்ளும் ஒரு குறிப்பேடாகவும் மட்டுமே அறிமுகமானது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு கைப்பேசியானது வடிவத்தில் சற்றுப் பெரியதாகவும் விலை எல்லோராலும் வாங்க இயலாத நிலையிலும்தான் இருந்தது. அப்போது அதன் விற்பனையும் மிகக் குறைவுதான்.
ஆனால் அதே கைப்பேசியில் புகைப்படம் எடுத்தல், குறுஞ்செய்தி அனுப்புதல், பேசுவதை பதிவு செய்யும் வசதி, பாடல்கள் படக்காட்சிகளை பதிவு செய்து கொள்ளுதல், அவற்றை பிறரின் கைப்பேசிக்கு அனுப்பும் வசதி, விதவிதமான விளையாட்டுகள், இணையதளத்தை பயன்படுத்தும் வசதி அன்றாடச் செய்திகள் விளையாட்டுகளைப் பற்றி அறிந்துகொள்ளும் வசதி, தொடர்வண்டி, விமானப் போக்குவரத்தின் நேரம் கால அட்டவணையை அறிந்துகொள்ளும் வசதி என இன்னும் சொல்லிக் கொண்டே போகும் அளவிற்கு பயன்களை ஒவ்வொரு கைப்பேசி நிறுவனமும் போட்டிபோட்டுக் கொண்டு அறிமுகப்படுத்தியதோடு விலையையும் குறைத்ததன் விளைவு இன்றைக்கு கைப்பேசியை பயன்படுத்தாதவர்களே இல்லை என்று கூறுமளவிற்கு விற்பனையும் பெருகிவிட்டது.
எந்தத் துறையாய் இருந்தாலும் தனித்துவம் மிளிர செயல்படுவதுதான் பெயர், புகழ், பொருள் அனைத்தையும் ஈட்டித்தரும். அதுமட்டுமின்றி அத்துறையினைப் பற்றி பிறர் பேசும்போது நம் பெயரை எடுத்துக்காட்டிப் பேசுமளவுக்கு காலத்தால் நிலைத்து நிற்கும் புதுமைகளை சிந்தித்து செயல் படுத்துதல்தான் நமக்கு சிறப்பினைத் தரும்.
புதுமையைத் தருபவர்களை காலம் என்றைக்கும் தன் கைகளிலேயே வைத்திருக்கிருக்கிறது.
சித்திரக் கலைஞர்கள் எல்லாம் ஒரேமாதிரியாய் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த காலத்தில் தன் அழகிய புரட்சிகரமான எண்ணங்களை வண்ணங்களில் குழைத்து Anamorphosis என்கின்ற ஒரு புதுமையான சித்திரக்கலையை படைத்தவர், அந்த எளிமையான ஆனால் மிகத்திறமையான ஓவியர்.
நேராய் நின்று பார்க்கும்போது மாறுபட்ட வடிவத்தையும், ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பார்க்கும்போது நேராகவும், ஓவியத்தின் பிரதிபலிப்பை வளைந்த கண்ணாடியில் பார்க்கும்போது மிகவும் திகைப்பூட்டும் வண்ணமாகவும் பார்ப்பவரைப் பரவசப்படுத்தும் மிக நுட்பமான Anamorphosis ஓவியக் கலையினை அறிமுகப்படுத்திய அந்த அற்புதமான ஓவியர் இன்றைக்கு ஓவியம் என்றாலே எக்காலத்திலும் எல்லோராலும் நினைக்கும்படி தன்பெயரை பதிவு செய்திருக்கும் லியனார்டோ டாவின்சி ஆவார்.
பொருட்களைப் பற்றியும், பொருட்களின் தன்மையைப் பற்றியும் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான நேரடி விளம்பரங்கள் வந்து கொண்டிருந்தபோது, “வாடிக்கையாளர்கள் முட்டாள்கள் அல்ல” என்ற அழுத்தமான வாசகங்களோடு ஒருவர் விளம்பரத் துறையில் நுழைந்தார். இன்றைக்கு மிகப் புதுமையாய் விளம்பரங்கள் வருகின்றதென்றால் அதற்கெல்லாம் அவர்தான் முன்னோடியாய்த் திகழ்ந்தார். தன்னுடைய புதிய புதிய கற்பனைத் திறன்களை விளம்பரங்களில் புகுத்தி ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் விற்பனையைப் பெருக்கினார். அவர் உலகின் மிகப்பெரிய விளம்பர நிறுவனமான “ஹெவிட், ஓகில்வி பென்சன் அண்ட் மேதர்” நிறுவனத்தின் இணை நிறுவனர் இங்கிலாந்து நாட்டின் ஓகில்வி டேவிட் மெக்கன்சி ஆவார்.
புதுமைகளை புகுத்தியவர்கள் பட்டியலை எடுத்தால் அதற்கு மட்டுமே ஒரு பெரிய புத்தகம் எழுதும் அளவிற்கு சாதனைகளைப் படைத்துக் காட்டியவர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். இவர்களை காலம் எப்போதும் மறப்பது இல்லை. ஒவ்வொரு துறையிலும் தன் பெயரை நிலைநிறுத்தியவர்கள் பட்டியலில் உங்கள் பெயரையும் இணைக்கும் வண்ணம் புதுமைகளைச் சிந்தியுங்கள். தனக்கு எதுவும் தோன்றவில்லையென்றாலும் கூட உங்கள் துறையில் என்னென்ன புதுமைகளை கொண்டுவர இயலும் என்று உங்கள் துறையில் பணியாற்றுபவர்களிடம், பொதுமக்களிடம், இளைஞர்களிடம், மாணவர்களிடம் கருத்துக்களை கேட்டறியுங்கள். அப்போது நீங்கள் நினைத்துப் பார்த்திராத பயனுள்ள தகவல்கள் உங்களுக்கு வந்து சேரும். அவற்றில் பின்வருவனவற்றை கவனத்தில் வைத்து புதுமைகளை, மாற்றங்களை அறிமுகப்படுத்துங்கள்.
நீங்கள் அறிமுகப்படுத்தும் மாற்றமானது முன்பிருந்ததை விடவும் எந்தவகையில் மக்களுக்கு பயனுள்ளது என்பதில் தெளிவு.
அறிமுகமாகும் மாற்றத்தினால் பாதிப்புகள் ஏதுமில்லை என்பதில் உறுதிப்பாடு
உங்கள் போட்டியாளர்களிடமிருந்து எந்தெந்த வகையில் வித்தியாசப்படுகின்றீர்கள் எனும் பட்டியல்
செய்யப்படும் மாற்றமானது மக்களின் பாரம்பரிய கலாச்சாரங்களுக்கு எவ்வகையிலும் கேடுவிளைவிக்கவில்லை என்னும் உறுதி
குறிப்பிட்ட காலத்திற்குப்பின் மேலும் புதுமைகளை அறிமுகப்படுத்துவதற்கேற்ற வடிவமைப்பு
புதுமையைக் கொண்டுவரும் போது ஏற்படும் செலவுகளால் விலை அதிகப்படுத்தும் சூழல் ஏற்படலாம். அது மக்களின் வாங்கும் சக்தியை பாதிக்காமல் பார்த்துக்கொள்ளுதல்.
Leave a Reply