ம. திருவள்ளுவர்
தன்னாளுமை என்னும் மண்ணாளும் மகத்துவம்
தலைமை தாங்கத் தேவையான குணாதிசயங்களைச் சென்ற இதழில் கண்டோம். உரிய பண்புகளோடு தலைமைப் பொறுப்பை ஏற்றால் எத்தகைய நிலைமையையும் விரும்பத்தகுந்ததாக மாற்றிவிட முடியும். ஆனால் அதற்கு முன் ஒருவர்
தன்னைத்தானே தயார் செய்துகொள்ள வேண்டும். தன்னைத் தயார் செய்வது எப்படி என்பதை இந்த இதழில் பார்ப்போம்.
“ஆள்” – என்னும் தமிழ்ச்சொல்லின் அழகை உணர்ந்திருக்கிறீர்களா? “ஆள்” என்பது அழைப்பா? அல்லது ஆணையா?. “ஆள்” என்னும் சொல்லை மனிதனை அழைக்கும் விளிச் சொல்லாகவும் பார்க்கலாம். அதே நேரத்தில் மனிதனைப் பணிக்கும் கட்டளைச் சொல்லாகவும் பார்க்கலாம்.
வெறும் விளிச் சொல் என்றால் மனிதனைச் சுட்டுவதற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மாறாக அதை ஒரு கட்டளைச் சொல்லாகப் பயன்படுத்தும்போது அதன் பல்வேறு பரிமாணங்களைக் காணமுடிகிறது.
மனிதனை “ஆள்” என்கிறது தமிழ். இந்த ஒரு சொல்தான் ஆண்-பெண் இருபாலரையும் குறிக்கும் பொதுச் சொல்லாகவும் இருக்கிறது, இந்தச் சொல்லிலிருந்து தான் “ஆளுமை” – என்னும் சொல்லும் பிறந்திருக்கிறது. சொல்லின் உள்ளே மேலும் சென்று பார்த்தால் அது விளங்கும்.
“ஆள்” என்றால் “எதை” ஆள்வது? அல்லது “யாரை” ஆள்வது? எழுத்தாளர்,, பேச்சாளர், பொருளாளர் – எனப்படும் சொற்களெல்லாம் – தாம் கையாளும் தமது பேச்சை, தமது எழுத்தை, தம்மிடமுள்ள பொருளை ஆள்பவர் என்னும் பொருள்களிலேயே பயன்படுத்தப்படுகின்றன. எனவே தன்னை ஆள்வதையே “ஆள்” என்னும் சொல்லும் “ஆளுமை” என்னும் சொல்லும் குறிக்கின்றன. “ஆளுமை’ – என்னும் சொல்லை “ஆள் ‘ உமை” என்று பிரித்துப் பொருள் கொள்ளலாம். உம்மை நீயே ஆளவேண்டும். அதற்குப் பெயரே “ஆளுமை” என்று சொல்லாமல் சொல்லி நிற்கிறது “தமிழ்”. இதை அனைவருக்கும் உணர்த்துவதற்காக நான் கண்டெடுத்த சொல்லே “தன்னாளுமை” என்னும் உன்னதமான சொல்லாகும். ஆங்கிலத்தில் “Personality” என்னும் சொல் “PERSONA” என்னும் கிரேக்கச் சொல்லை அடிப்படையாகக் கொண்டு பிறந்தது என்பார்கள். “Persona” என்பது மேடை நடிகர்கள் தமது வேடத்திற்கேற்ப தம்மை வெளிப்படுத்திக் கொள்வதற்காகப் – புனைந்து கொள்ளும் “முகமூடி” யைக் குறிக்கிறது. முகமூடி இட்டுக்கொள்கிறபோது இடத்திற்கு இடம் தோற்றத்தை மாற்றிக்கொள்கிற தன்மையை நடிகர்கள் பெற்று – ரசிகர்களின் பாராட்டையும் பெற்றுவிடுகிறார்கள்.
பல்வேறு வேடங்களில் திறமையாக நடிக்கும் நடிகர்களின் சுயம் எத்தனை பேருக்குத் தெரியும்? அவர்களின் சுயத்தை மறைத்துவிடுவது அவர்கள் அணிந்து நடிக்கும் முகமூடிகளும் – அரிதாரமும தான். அந்த நடிகர்களைப் போலத்தான் நாமும் நாள்தோரும் ஆளுக்கேற்பவும் – இடத்திற்கேற்பவும் – சுழுலுக்கேற்பவும் பேசி நடிக்கிறோம். அப்படி பேசி நடிப்பது தவறா? என்ற கேள்வி எழலாம். இடத்திற்கேற்பவும் – சுழுலுக்கேற்பவும் – ஆளுக்கேற்பவும் நாம் மாறிக்கொள்வது இயல்பானது தான்: அதில் தவறில்லை ஆனால் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது தவறாகும். முகத்தை மறைக்கும் முகமூடிகளை விட மனதை மறைக்கும் மூடிகள் – நம் உண்மைத் தன்மையை மறைத்து விடக்கூடியவை. புதைத்து விடக்கூடியவை. உண்மையான சுயத்தை வெளிப்படுத்தாமல் வாழ்வது போலித்தனமான வாழ்கையாகிவிடும். வாழ்கை மலர வேண்டுமானால் மனம் திறந்த வாழ்கை அவசியம். மனதைத் திறப்பது எப்படி என்பதை நமது முந்தைய கட்டுரை ஒன்றில் பார்த்திருக்கிறோம்.
“பெர்சனாலிட்டி” என்பது மனிதர்கள் செயல்படும் முறைகளை வகைப்படுத்தும் ஆய்வாகும். ஒருவரின் என்பது – அவர் நடந்து கொள்ளும் முறை – எத்தகைய வகையில் அடங்கும் என்பதை இனம் காண உதவும் ஆய்வாகும். என்பது அவரது மனதை முழுமையாக வெளிப்படுத்தும் படியான செயல்பாடுகளைக் கொண்டதாகும். என்பது செயல்பாடுகளைக் குறிப்பதை போல என்பது அவரின் மனோபாவத்தைக் குறிப்பாதாகும். செயல்பாடுகள் சிறக்க மனோபாவம் சிறக்க வேண்டும். மனோபாவம் சிறக்க வேண்டுமெனில் – மனம் முழுமையாகத் திறக்கப் படவேண்டும்.
“பெர்சனாலிட்டி” என்னும் சொல் ஒருவரின் நடவடிக்கைகளில் ஒளிரும் ஆளுமையின் அளவீடாகவும் கருதப்படுகிறது. இதையே நான் ஒருவரின் தன்னாளுமையின் அளவீடு என்கிறேன். ஒருவர் தன்னைத் தானே ஆளும் தன்மையில் எவ்வளவு தூரம் உன்னதத்தை எட்டியிருக்கிறார்? என்பதையே ஒரு ஆளின் வளர்ச்சி குறிப்பிடுகிறது. ( “ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அது தாண்டா வளர்ச்சி” – என்னும் பாடல் வரிகள் நினைவு கூறத்தக்கவை.) தன்னாளுமை என்பது ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. எனவே தான் உலகில் நடைபெறும் செயல்களும் பல்வேறு விதமாய் அமைகின்றன.
தன்னை ஆள்வது என்றால் என்ன? “தான்” அல்லது “நான்” என்பது உளவியல் அடிப்படையில் இரண்டே இரண்டு கூறுகளால் மட்டுமே ஆனது. ஓன்று – பலம் மற்றொன்று பலவீனம். ஓருவனை பகுக்கும் எனது அணுகுமுறை – ஆன்மீகம் சார்ந்தது அல்ல. எனவே நான் உடல், உயிர், மனம், ஆன்மா என்றேல்லாம் இங்கே இப்போது கூறபோட்டுப் பார்க்கவில்லை.
“பலம், பலவீனம் ” என்னும் இரண்டு கூறகளால் ஆன “நானை” – நான் ஆள்வது எப்படி? இது நல்ல கேள்வி. பலமென்ன? – பலவீனம் என்னென்ன? எனப் பட்டியலிட்டபின் பல்வேறு உளவியல் சார்ந்த பயிற்ச்சிகளின் மூலம் நமது பலவீனங்களைக் குறைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு பாடுபட்டு வெல்வதே ஆகும். அப்படித் தன்னைத் தானே ஆளப் பழகுபவனே தன்னைத் தானே ஆண்டவனாகவும், பிற்காலத்தில் மனிதகுலத்தால் போற்றப்படுகிறான். இத்தகைய தன்மையை எட்டுகிற ஒவ்வொரு தனிமனிதனுமே தனக்குதானே ஆண்டவனாகத் திகழ்கிறான். தன்னைக் தானே ( தனது புலன்களையும் – மனதையும்), ஆண்டு கொண்டவன் வேறு யாரிடமும் யாருக்கும் அடிமையாவதில்லை.
தனக்குத் தானே ஆண்டவனாகத் திகழ்பவன் தன்னை வென்றவனாகிறான். அவன் அனைத்து விலங்குகளிலிருந்தும் விடுபட்டவனாகிறான். இதுவே மானுட அவலங்களிலிருந்து விடுபடும் விடுதலை நிலையாகும். நிரந்தர சுகந்தரும் சுதந்திரம் நிலையும் இதுவே. அப்படிப்பட்ட ஆளுமை கொண்டவர்களிடம் எவ்வித பயமும் இருப்பதில்லை. இவர்களை அதிகாரம் கொண்டு பயமுறுத்தி அடக்கிவிடமுடியாது. இவர்கள் சுயமாகவே கட்டுப்பாடு கொண்டவர்கள் – ஏனேனில் இவர்கள் தமது சுயத்தை மதிப்பவர்கள் – ஏனெனில் இவர்கள் சுய சிந்தனை கொண்டவர்கள்!
சுய சிந்தனையே சுயமதிப்பை உணர்த்தும். இந்த மதிப்பே சுய கட்டுபாட்டின் வித்தாகும். இந்த மூன்றும் ஒருவனுக்கு வாய்த்துவிட்டால் அது போன்றதொரு “பொதுநலன்” வேறு எதுவாக இருக்க முடியும்?
பொதுவாக மனிதனை உற்றுநோக்கினால் அவனை இப்படி வரையறுக்கலாம். மனிதன் – நிறைகுறை நிறைந்த அரைகுறையாவான். சில வரைமுறைகளின் மூலமும், குறைகளையெல்லாம் படிப்படியாகக் குறைத்து, நிறைகளையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்து வந்தால் அரைகுறையாய் பின்னமாய் இன்று திகழும் ஒவ்வொருவரும் நாளை முழுமையான மனிதர்களாக மலர்வார்கள் என்பதில் எனக்கு எவ்வித ஐயமுமில்லை.
நிறையாய் நிறையும் எதையும் நாம் இறையென்று அழைக்கலாமல்லவா? தன்னை ஆளும் தகுதி படைத்தவர்களையே இறைக்கு நிகரான ஞானிகளாக நம் சமூகம் ஏற்றுக்கொண்டு வருகிறது. ஞானம் அல்லது – “Enlightenment” என்பது வேறல்ல… தனக்குள் இருக்கும் நிறைகுறை உணர்ந்து, குறைவிடுத்து – நிறைகளால் நிறையும் முழுமையை உணரும்போது இருள் அகன்று ஒளிரும் பிரகாசமே – ஞானமென்னும் விடுதலை பெற்ற நிலையாகும். விடுதலை பெற்றபின் வேறென்ன வேண்டும்? தன்னை ஆளாத ஒருவரால் தரணியை ஆள இயலாது என்பதால் நாமும் தன்னாளுமை பெற்று மண்ணாளும் தகைமையைப் பெறுவோம்.
உங்களின் தன்னாளுமை வளர வேண்டுமா? – இதோ நீங்கள் செய்து பார்க்க வேண்டியவை (பயின்றவற்றையெல்லாம் பழகிப்பார்க்க வேண்டும்)
1. உங்கள் பலத்தை ஒவ்வொன்றாகப் பட்டியலிடுங்கள்.
(உங்கள் அறிவின் விரிவும், திறமைகளும், ஆக்கப்பூர்வமான மனோபாவமும், உங்கள் உறவின் பரப்பும் – உங்கள் பலமாய் விரியும்)
2. உங்கள் பலவீனங்களையும் பட்டியலிடுங்கள்
(மேற்கண்டவற்றில் உள்ள குறைபாடுகள் யாவும் இதில் அடங்கும்)
3. இரண்டின் பட்டியலையும் ஒப்பிட்டு, பலவீனத்திலிருந்து விடுபடவும், மேலும் பலம் பெறவும் – முறையான பயிற்சிகளை மேற்கொள்ள இன்றே முடிவெடுத்துத் திட்டமிடுங்கள்.
4. விடாமுயற்சி மேற்கொண்டு மேற்கண்ட இலக்குகளை குறிப்பிட்ட காலவரையறைக்குள் எட்டிவிடுங்கள். உங்களின் “தன்னாளுமை” உயரத்தை எட்டிவிடும்.
என்ன…. நமது தன்னாளுமையை மேம்படுத்தத் தொடங்கலாமா? தலைமை தாங்க தயாராகலாமா?
– தொடரும்
Mukthar Ahmed
இது தான் சத்தியம்.
இத்தனை நாட்களாய் ஏன் உங்களுடன் தொடர்புக் கொள்ளவில்லை என
வருந்துகிறேன்.
இனி தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படிப்பேன்.