மரபின்மைந்தன். ம.முத்தையா
ஒரு பிரம்மாண்டமான மாநாட்டில், பல்லாயிரக்கணக்கான மக்கள் அமர்ந்திருக்கும் நிலையில், கண்ணுக்கெதிரே விரிந்திருக்கும் மிகப்பெரிய மேடையில் ஒருவர் முழங்கிக் கொண்டிருப்பார். அவர்முன் திரண்டிருக்கும் ஜனத்திரளில் ஒரு துளியாய் இருந்து சொற்பொழிவைக் கேட்கையில், நமக்கென்று பிரத்யேகமாய் ஓர் உணர்வு ஏற்படாது.
பிரம்மிப்பின் பிடியில் இருந்து கொண்டிருப்போம். அந்த மனிதரின் தலையைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் நம் மனக்கண்ணில் தெரியும். கூட்டம் முடிந்து கிளம்பும்போது அவருக்கும் நமக்கும் மத்தியிலான இடைவெளி இரண்டு மடங்காகியிருக்கும்.
சிலரது சுயமுன்னேற்றக் கருத்துக்களைப் படிக்கும்போது இப்படியோர் இடைவெளி ஏற்படத்தான் செய்யும். இதற்கு நேர்மாறான அனுபவத்தை, லேனா தமிழ்வாணனின் எழுத்துக்களைப் படிக்கும்போதெல்லாம் பெற முடியும்.
நம் தோள்கள் மீது அழுத்தமாய் அவர் விரல்கள் படிந்திருப்பது போன்ற சிநேக பாவம் ஒரு நிரந்தரமான அனுபவமாய் ஒவ்வொரு வாசிப்பிலும் ஏற்படும்.
வாழ்க்கையை உன்னிப்பாய் கவனித்த தெளிவும், அந்தத் தெளிவில் பிறந்த தீர்மானமான சிந்தனைகளும் லேனாவின் பேனா ரகசியம்.
நிதர்சனமான உண்மைகளை நிதானமாகச் சொல்கிற உத்தி, வாழ்வின் ஒவ்வொரு சம்பவத்திலிருந்தும் பாடம் படிக்கிற பக்குவம், வார்த்தைச் சிக்கனம் போன்ற விதம்விதமான அம்சங்கள், லேனாவின் எழுத்துகளையும் கருத்து களையும் இளமையாகவே வைத்திருக்கின்றன. ஓர் உதாரணம் பாருங்கள்:
திட்டமிடுகிறோம். சில நேரங்களில் தோல்வி காண்கிறோம். அதனால் என்ன? சோர்ந்தா போவது?
ஒரு சர்க்கரைத் தூளை ஓர் எறும்பு இழுத்துச் செல்வதைக் கண்டேன். இரண்டையும் பிரித்தேன். எறும்பு போனது. திரும்பி வந்தது. மீண்டும் இழுத்தது. பிரித்தேன். திரும்பவும் போய்வந்து இழுத்தது. திரும்பத் திரும்ப அப்படிச் செய்தேன். நான் சோர்ந்து போனேன். அது வென்றது. அடடே! இந்தக் குணம் நம்மில் எத்தனை பேருக்கு இல்லாமல் போய்விட்டது.
சிலருக்குப் பாராட்டினால்தான் உற்சாகம் வருகிறது. இது கிச்சுக்கிச்சு மூட்டி வரவழைக்கப் படுகிற சிரிப்பைப் போன்றது. நிலைக்காது.
எப்போதெல்லாம் மின்சாரம் நிற்கிறதோ, அப்போதெல்லாம் உடனே ஜெனரேட்டர் ஓடுவது போல்,எப்போதெல்லாம் உற்சாகம் குறைகிறதோ அப்போதெல்லாம் உள்ளுக்குள் இருக்கும் உற்சாக ஜெனரேட்டர் ஓட ஆரம்பிக்க வேண்டும்.
அப்போதுதான் நம் வளர்ச்சி நிரந்தரமாகும்.
“ஒரு பக்கக் கதைகள்” என்கிற பாணி பிரபல வார இதழ்களில் வரத் தொடங்குவதற்கு நீண்ட காலம் முன்பாகவே, “கல்கண்டு” இதழில் ஒரு பக்கக் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார் லேனா தமிழ்வாணன்.
இளைஞர்கள் மத்தியில் ஒரு பரவலான வரவேற்பை இந்தக் கட்டுரைகள் இன்றளவும் தக்க வைத்திருக்கின்றன. எழுதுவதற்கு மேற்கொண்ட விஷயத்தை நேரடியாகத் தொடுவதும், வலிமையாக வலியுறுத்துவதும், அவரது கட்டுரைகளைக் கூர்மையாகவும் கனமாகவும் வைத்திருக்கின்றன.
ஒரு விஷயத்திற்கு உடனடியாக எப்படி வருகிறார் என்று பாருங்கள்.
மூன்று விஷயங்களால் வரக்கூடிய நஷ்டங்கள் மிகப் பயங்கரமானவை.
ஒன்று ஞாபகசக்திக் குறைவு. இரண்டு சோம்பல். மூன்று முன்யோசனைகள் இன்மை.
எந்தப் பிரச்சினையையும் முன்யோசனை யுடன் அணுகுகிறவர்கள் அவற்றை வெற்றிகரமாகச் சமாளிக்கிறார்கள்.
முன் யோசனையின்றி ஒரு பிரச்சினையை அணுகுவதென்பது எவ்வித ஆயுதமின்றி ஒரு போர்க்களத்தில் குதிக்கும் செயலுக்கும் ஒப்பானது.
வரட்டும், பார்த்துக் கொள்ளலாம் என்று மிதப்பான உணர்வு என்றைக்குமே நல்லதல்ல.
எப்படி வரும்? எந்த ரூபத்தில் வரும்? எவ்வளவு வரும்? எப்போது வரும்? என்றெல்லாம் யோசனை செய்து பார்த்து அவற்றிற்கு ஏற்ப நம்மைத் தயார் செய்து கொள்வதுதான் புத்திசாலித்தனமான அணுகுமுறை.
வெளியூரிலிருந்து இரயிலில் வரும் ஒருவரை வரவேற்கச் செல்லும் சாதாரண விஷயம் முதல், மகளுக்குத் திருமணம் செய்யும் பெரிய விஷயம் வரை அனைத்து விஷயங்களிலுமே முன்யோசனை வேண்டப்படுகிறது.
முன் யோசனையாளர்கள் வாழ்வில் ஏமாற்றத்தைத் தவிர்க்கிறார்கள்.
சந்தர்ப்பங்களை நழுவவிடாமல் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
நேரத்தையும் பொருளையும் மிச்சப்படுத்துகிறார்கள்.
இதற்கான முன்யோசனையை உடனே செய்து இவர்களது பட்டியலில் நாமும் இடம்பெற வேண்டும்.
சுயமுன்னேற்றச் சிந்தனை களை நாம் பலவிதமாய் வகைப் படுத்தலாம். சில சிந்தனைகள் மருந்துகள் போல, நினைவுகள் நோய் வாய்ப்படும்போது பயன்படுத்தலாம். சில சிந்தனைகள் கைகாட்டி மரங்கள் போல, குழப்பங்கள் நேர்கையில் பார்த்து நேர்வழியில் போகலாம். சில சிந்தனைகள் வாசனைத் திரவியம் போல, மேடைகளில் அலங்கார மாகப் பயன்படுத்தலாம்.
ஆனால், லேனா தமிழ்வாணனின் முன்னேற்றச் சிந்தனைகள் அன்றாட வாழ்க்கையில் ஆகாரம் போல் பயன்படுபவை. மிக நிதானமாக நம் மனதில் நுழைந்து, நம் வாழ்வியலை நாமே ஆராய்ந்து, திருத்தங்கள் செய்து கொள்ளத் துணை நிற்பவை.
அவரது எழுத்துக்களின் போக்கினை உற்று கவனித்தால் நிற்காத நீரோட்டமாய் ஒன்று ஊடாடிப் போவதை உணரலாம். அதுதான், வாசகன் மீதான அதீத அக்கறை. அதனால்தான், ஒரு விஷயத்தை ‘சுள்’ளென்றும், சொல்ல முடிகிறது. இதமாகவும் பேசமுடிகிறது. பள்ளி ஆசிரியர் போல் பக்குவமாக விரித்துச் சொல்லவும் முடிகிறது. பொறுமை-சோம்பல் இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை அவர் எழுதுகிறார் பாருங்கள்.
பொறுமையாகக் காத்திருங்கள் என்று எழுதவே பயமாக உள்ளது. காரணம் பாதிப்பேர் இதைத்தான் மிகப் பிரமாதமாய்ச் செய்து கொண்டிருக்கிறார்களே!
நம்ம லேனாவே சொல்லிட்டார் என்று கவிழ்ந்தடித்துப் படுத்துக்கொண்டு கால்களை விரயமாக்கி விட்டால் என்னாவது என்கிற பயமும் கூடவே வருகிறது.
காத்திருப்பது என்றால் சோம்பிக் கிடப்பது அல்ல! கண்கொத்திப் பாம்பாய்க் காத்திருப்பது. குட்டி மீன்களைத் தவிர்த்துவிட்டுக் கொழு கொழு மீன் வரும்வரை காத்திருக்கும் கொக்கின் செயலைப் போன்றது இது.
வங்கியில் போட்ட தொகையை முதிரும் முன் எடுத்தால் வட்டி நஷ்டம்தான். அழகான ரோஜா மலரை மொக்கிலேயே பறித்து என்ன பயன்? இனிக்கும் ஒரு பழத்தைப் பச்சைக் காயாய்ப் பறிப்பது எதற்காக? அடுப்பிலிருந்து வெந்து இறங்குமுன் மாவாக அள்ளித் தின்ன நினைக்கும் அவசரம் சரியான செயலாகுமா?
“இப்பவே எனக்கு பிஸ்கெட் வேணும்” என்று அடம் பிடிக்கும் குழந்தைக்கும், அவசியமே இல்லாத சூழ்நிலையிலும் அவசரப்படும் மனிதர்களுக்குமிடையே என்ன வித்தியாசம் இருக்க முடியும்?
பொறுமையாய் இருப்பது என்பது அடியோடு செயல்படாமல் இருப்பதல்ல; மெதுவாகவும் உறுதியாகவும் இலக்கை நோக்கி நகர்வது. மாறாக தள்ளிப் போடுவதோ, தப்பிப்பதோ அல்ல!
தங்களை ஒழுங்குபடுத்தியிருக்கிற மனிதர்கள் பலரும் உலகின் கண்களுக்குமுன் தங்களை சரிவர வெளிப்படுத்திக் கொண்டதில்லை. மனித வாழ்க்கையில் இது ஒரு நுட்பமான பிரச்சினை. “நம் செயலை எப்படி வெளிப்படுத்து வது” – இது குறித்தும் லேனா மிக வித்தியாசமாக எழுதுகிறார்.
இந்த உலகம் சரியான ஏமாளி-கோமாளி உலகம். ஒருவன் பார்க்கிற கணத்தில் மற்றவன் என்ன செய்து கொண்டிருக்கிறானோ அதைத்தான் அவன் அதிகம் அல்லது உண்மையாகச் செய்கிறான் என்று நம்புகிறது.
ஒரு காவலாளி, சில கணங்கள் அசந்தால் கூட, இரவு முழுக்க அவன் தூங்கிக் கொண்டிருந்தான் என்று நம்புவதும்; திடீர்ச் சோதனையின்போது அவன் தற்செயலாக விழித்துக் கொண்டிருந்தால், அடடா! இவனைப் போன்ற உண்மையான காவலாளி வேறு எவனுமே இல்லை என்ற முடிவுக்கு வருவதும் எவ்வளவு பேதமை! ஆனால் இந்தத் தவறுகள் மிகவும் விபரம் தெரிந்தவர்கள் மத்தியில் கூட நடக்கின்றன.
ஒருவர் ஒரு பொறுப்பை நம்மிடம் விட்டுவிட்டுச் சென்று திரும்பும்போது நாம் அந்தப் பொறுப்பை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோமா என்பது மிக முக்கியம். வெகுநேரம் அந்தப் பொறுப்பைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, ஒரு கணம் நாம் ஒரு பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தோமானால் அல்லது காப்பி சாப்பிட நகர்ந்துவிட்டால் நம்முடைய உண்மை உணர்வு இங்கே சந்தேகிக்கப்படுகிறது என்று பொருள்.
ஆக, எதையும் கண்கூடாக நிரூபிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது என்பதை உணர்ந்தால், பிரச்னைகள் வரா!
இவற்றையெல்லாம் கடந்து, லேனா தமிழ்வாணனின் மிகப்பெரிய பலமாக அறியப்படுவது, அவரது திட்டமிடுதல். பயணம் – அன்றாட நிகழ்ச்சி நிரல் – கடிதத் தொடர்புகள் – சென்னை பண்ணை வீட்டிலோ ஏற்காட்டிலோ எடுக்கும் மாதாந்திர ஓய்வுகள் – ஓய்விலும் நிகழும் எழுத்துப் பணிகள் என்று உற்சாகத்தின் காற்றாய் உலா வருகிறார் லேனா.
நேர நிர்வாகம் பற்றிய அவரது புத்தகம் வாசிக்க வாய்க்காதவர்கள், அவரது வாழ்க்கையை வாசிக்கலாம்.
லேனா தமிழ்வாணனின் வாசகர்கள், அவரைத் தங்கள் ஆதர்சமாக கொண்டாடி, உறவு பூண்டு உரிமை பாராட்டுகிறார்கள்.
அவர்கள் தனிவாழ்வுக்கும் பணிவாழ்வுக்கும் ஊக்கம் கொடுத்தபடியே தூரத்து நண்பனாய் துணையிருக்கிறார் லேனா தமிழ்வாணன்.
settumohamed
enna thavam seitheno? lena vin natpai pera…