ரகசியம்தான் அதிசயம்!

-மரபின் மைந்தன்.ம.முத்தையா

பார்க்க முடியா இடங்களில் எல்லாம்
பாம்புச்சட்டை கிடக்கிறது;
கேட்கும் குயிலிசை கண்ணுக்குத் தெரியாக்
கிளையில் இருந்து பிறக்கிறது;

ஊரே உறங்கிக் கிடக்கும் வேளையில்
ஒவ்வொரு பொழுதும் விடிகிறது!
யாரும் அறியா நொடியில் தானே
எங்கோ அரும்பு மலர்கிறது!
உன்னில் இருக்கும் இலட்சியம் அப்படி
உருவம் பெறட்டும் தனிமையிலே!
தன்னை இழைத்துத் தவம் போல் தவித்துத்
தானாய் மலர்ந்திடு புதுமையிலே!
நீயும் நானும் வியக்கிற படைப்புகள்
நேற்று வரையில் ரகசியம்தான்
ஓய்வில்லாத உழைப்பின் உச்சியில்
ஒருநாள் பூத்த அதிசயம்தான்!
உனக்கே உனக்கென உள்ளது வாழ்க்கை;
உருவம் பெறும்வரை பொறுத்துவிடு!
கணக்குகள் எல்லாம் கனிந்து வருகிற
கணத்தினில் கூட்டை உடைத்துவிடு!
நிலத்துக்குக் கீழே நிலக்கரி அழுந்தும்;
நிச்சயம் ஒருநாள் ஒளி வீசும்;
கனத்துக் கிடக்கும் கனவுகள் மலர்ந்தால்
உந்தன் வெற்றியை ஊர்பேசும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *