காற்று வீசுது

– மரபின் மைந்தன் ம.முத்தையா

காற்று வீசுது உன் பக்கம் – நீ
கண்கள் மூடிக் கிடக்காதே!
நேற்றின் தோல்விகள் போகட்டும் – இந்
நாளை இழந்து தவிக்காதே!

பொறுமைத் தவங்கள் முடிகையிலே – நீ
புதிய வரங்களை வாங்கிவிடு!
உரிமை உள்ளது, அதனாலே – உன்
உழைப்புக்கு ஊதியம் கேட்டுப்பெறு!
வாள்முனைத் தழும்புகள் இல்லாமல் – ஒரு
வீரனின் தோள்களில் அழகில்லை
தோல்வியின் சுவடுகள் இல்லாமல் – உன்னைத்
தொடுகிறவெற்றியில் சுகமில்லை!
கானல் நீரை மறந்துவிடு – உன்
கைகளில் தண்ணீர்க் குவளையெடு
போனவை எல்லாம் போகட்டும் – இனி
புதிதாய் பயணம் துவங்கிவிடு
மின்னல்கள் வெட்டும் ஆகாயம் – உன்
மழையை ஒளிக்கப் போவதில்லை
தன்னைத் தேய்க்கத் தயங்கிவிட்டால் – இங்கு
தங்கத்தை நம்ப யாருமில்லை
நீயே உனக்குள் ஒடுங்காதே – அட
நத்தை போலச் சுருங்காதே
வாழ்ந்தே தீர வேண்டும் நாம் – நீ
வீணாய் எதற்கும் தயங்காதே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *