வாக்குச் சீட்டு

ஏரிகள் நதிகள் குளங்களுக்கெல்லாம்
வான்மழைத் துளிகள் வாக்குச்சீட்டு!
பேரலை வீசும் சமுத்திரத்துக்கோ
ஆறுகள் எல்லாம் வாக்குச்சீட்டு!
தூரிகை தீண்டும் வண்ணங்களெல்லாம்
ஓவியன் கைகளில் வாக்குச்சீட்டு!
காரியம் நிகழ்த்தும் வல்லமை- நமக்கு
நாமே வழங்கும் வாக்குச்சீட்டு!

வாழ்க்கை ஒருவகை தேர்தல் களம்தான்
வாழும் கணங்கள் வாக்குச்சீட்டு!
ஆழ்ந்த கனவும் அதற்கொரு செயலும்
ஆற்றல் நிறைந்த கொள்கைக்கூட்டு!
சூழும் பகையோ சோம்பல் தயக்கம்
சூழ்ச்சிகள் முறித்து வெற்றியை நாட்டு!
தாழ்வும் உயர்வும் தொடலாம்; விடலாம்
தொடர்ந்து கேட்கட்டும் சாதனைப் பாட்டு!

நமது துறைதான் நமக்குள்ள தொகுதி
நிறைந்த ஆர்வமே நிற்கும் தகுதி!
அமையும் வாய்ப்புகள் ஆமிங்கு மிகுதி
அறிந்தவருக்கு வெற்றிகள் உறுதி!
நிமிடங்கள் எல்லாம் நமக்கென உணர்ந்தால்
நின்றுவிடாமல் நகர்ந்திடத் தெரிந்தால்
இமயம் கடந்தும் எல்லைகள் விரியும்!
எல்லாத் திசையிலும் உன்புகழ் தெரியும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *