ஆயிரம் ஆயுதம்!

– இயகோகா சுப்பிரமணியன்

சிகரத்தில் கொடியை நாட்டிய பிறகு
நின்றவர் யாரும் கிடையாது – வேறொரு
சிகரம் தேடிச் செல்லாமல்
வாழ்க்கைப் பயணம் முடியாது!

முடிவே இல்லா வெற்றிப் படிகளில்
கடைசிப் படியே கிடையாது – விதிப்படி
நடப்பென சோம்பிக் கிடந்தால்
முதல்படி கண்ணுக்குத் தெரியாது!
மற்றவர் சாதனை மீறி நின்றால்தான்
தனியிடம் உனக்கென உருவாகும் – நீ
பெற்றவர் நிழலில் ஒதுங்கிட நினைத்தால்
உள்ளதும் இழந்திட மனம் வாடும்!
இளமையில் வறுமை பசி பட்டினியுடன்
வாழ்பவர் பலப்பல ஆயிரமே! – மன
உறுதியும் உழைப்பும் உன்னிடமிருந்தால்
இவைதான் போரிடும் ஆயுதமே!
உடைவாள் ஏந்திய படையாள் போல
ஒவ்வொரு நாளும் போராடு – பின்
அடைவாய் வெற்றி, அடுத்த கணமே
இன்னொரு போர்க்களம் நீதேடு!
இடியும் மின்னலும் தொடர்ந்து தாக்கியும்
வானம் என்றும் உடைந்ததில்லை – சில
தடையும் தோல்வியும் பட்டுணராமல்
வெற்றியை எவரும் அடைந்ததில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *