டாக்டர் கேப்ரியல் ந.ந.
மனோதத்துவ பயிற்சியாளர்
மலேசியா சிங்கப்பூர் நாடுகளின் புகழ்பெற்ற மனோதத்துவ பயிற்சியாளர் 600க்கும் மேற்பட்ட அனுபவ பயிற்சி வகுப்புகள் நடத்தியுள்ள டைனமிக் உள மனோவியல் பயிற்சி இயக்குநர் மாஸ்டர் டாக்டர் கேப்ரியல் ந.ந நேர்காணல்.
நீங்கள் நடத்திவரும் டைனமிக் உள மனோவியல் பயிற்சி பற்றி?
அதீதமான தன்விழிப்புணர்வு என்பதைத்தான் ‘டைனமிக் உள மனோவியல் பயிற்சி’ என்று சொல்கிறோம். ஒரு மனிதனுக்கு அதீதமான ஆற்றல் இருக்கிறது. அதை அவன் அறிந்துகொள்ள வேண்டுமென்றால் அதற்கு அதீதமான விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அதற்கு மனிதனுக்குள் உருவாக்கப்பட்டிருக்கும் சில நம்பிக்கை முறைகளை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. இந்த பூமிக்கு ஒரு குழந்தையாக வரும்போது ஒன்றும் தெரியாமல் வருகிறோம். நமக்கு ஒன்றும் தெரியாது என்பதே அப்போது நமக்குத் தெரியாது. வந்தபிறகு குழந்தைக்கு சில விஷயங்கள் சொல்லித் தரப்படுகின்றன. சில விஷயங்கள் கற்றுத் தரப்படுகின்றன. சில விஷயங்கள் கட்டாயப் படுத்தி திணிக்கப்படுகின்றன. அந்த விஷயங்களில் வேண்டியவை, வேண்டாதவை என்று பல இருக்கும். அவற்றை மனிதன் உணர வேண்டுமென்றால் அவனை மீண்டும் குழந்தை நிலைக்குக் கொண்டு போக வேண்டும். இப்போதைய நிலையில் வைத்து பழைய பதிவுகளை அகற்றுவது சாத்தியமில்லை. மறுபடியும் குழந்தை நிலைக்குக் கொண்டு சென்று அதீதமான விழிப்புணர்வை வழங்குவதே டைனமிக் உள மனோவியல் பயிற்சியின் நோக்கம்.
இதற்கு நம்பிக்கை முறைகளை மாற்றி அமைக்க வேண்டியதன் அவசியம் என்ன?
இன்று பெரும்பாலானவர்கள் எல்லாமே விதிக்கப்பட்ட விதியின்படி தான் நடக்கிறது என்று உறுதியாக நம்புகிறார்கள். மனித வாழ்க்கை இப்படித்தான் இருக்கவேண்டும் என்று இறைவன் விதித்ததாகத் தெரியவில்லை. அப்படி விதித்திருந்தால் மாற்றங்கள் சாத்தியமில்லை. ஏழை ஏழையாகவே இருப்பான். பணக்காரன் பணக்காரனாகவே இருப்பான். படிக்காதவன் படிக்காதவனாகவே இருப்பான்.
ஆனால், மாற்றங்கள் நிகழ்கின்றன. ஏழை பணக்காரன் ஆகிறான். படிக்காதவன் கல்வியாளன் ஆகிறான். இதை எல்லாம் வைத்துப் பார்க்கிறபோது மாற்றங்கள் சாத்தியம் என்பதும் விதிக்கப்பட்ட வாழ்க்கை என்று ஒன்றுமில்லை என்பதும் நமக்குப் புரிகிறது. மன ஆற்றலைக் கொண்டு ஒவ்வொரு தனி மனிதனும் தன் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்ள முடியும். இது சாத்தியமாக வேண்டுமென்றால் நம்பிக்கை முறைகளிலிருந்து மனிதன் மீண்டு வந்தாக வேண்டும்.
இன்று மனிதர்களின் பொதுவான மனிலை எப்படி இருக்கிறது?
பெரும்பாலான மனிதர்கள் கடந்த காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த கால சம்பவங்கள் ஏற்படுத்திய பாதிப்பு அவர்களின் உள்மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. சில கசப்பான அனுபவங்கள், அந்த அனுபவங்கள் ஏற்படுத்திய பதட்டங்கள், அடக்கி வைத்த உணர்ச்சிகள், உணர்ச்சிகளை அடக்கி வைத்ததன் காரணமாக ஏற்படும் மன பீதி போன்றவை அவர்களின் மனதில் எங்கேயோ இருக்கிறது. இதன் காரணமாக பெரும்பாலானவர்கள் மன உளைச்சலுக்கும், மன இறுக்கத்திற்கும் ஆளாகிறார்கள். பழைய அச்சங்களின் பிடிக்குள் அகப்பட்டு கடந்த காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பழைய அனுபவங்களின் நினைவுகளிலிருந்து அவர்களை விடுவித்து விழிப்படைய வைப்பது எங்கள் பணியாக இருக்கிறது.
கசப்பான அனுபவங்களெல்லாமே வாழ்வுக்கான படிப்பினைகள்தான். பழைய அனுபவங்களின் பாடம் பெற்று மனிதன் எதிர்காலத்தில் எச்சரிக்கையாக வாழ்கிறான். அப்படியிருக்கும்போது கடந்த கால நினைவுகளிலிருந்து மனிதனை விடுவிடுக்க வேண்டிய அவசியம் என்ன?
95% மனிதர்கள் கசப்பான அனுபவங்களிலிருந்து பாடம் பெறுவதில்லை. அந்த அனுபவங்களே அவர்களுக்குப் பெரிய சிக்கலாக மாறிவிடுகின்றன. எங்கள் வகுப்புகளில் கூட, “மனிதனுக்கு அவமானம் வேண்டும். கேவலங்கள் வேண்டும், மனக்கஷ்டங்கள் வேண்டும்” என்று நான் சொல்வதுண்டு. ஏனெனில் அவற்றில் பாடம் கற்றுக்கொள்கிற மனிதன்தான் முன்னேற்றப்பாதை நோக்கிச் செல்ல முடியும். ஆனால், பெரும்பாலானவர்கள் அந்த அவமானத்தின் புதைகுழிக்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.
“என்னைத் தவறாக சொல்லி விட்டார்களே” என்று மனதுக்குள் குன்றிப் போகிறவர்கள் எதிர்காலம் பற்றி எண்ணுவதில்லை. அவர்கள்தான் கடந்த காலத்திலேயே வாழுகிற மனிதர்கள். அவர்களிடம் போய் “உன் அனுபவத்திலிருந்து பாடம் படி” என்று சொன்னால் அவர் களுக்குப் புரியாது. அவர்களை அந்தப் பாதிப்பிலிருந்து மீட்டுக் கொண்டுவர இத்தகைய பயிற்சிகள் தேவைப்படுகின்றன.
உங்கள் பயிற்சி வகுப்பு என்னவிதமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது?
முழுமையான பயிற்சியை வழங்கி ஒரு முக்கியமான விஷயத்தை பங்கேற்பாளர்களுக்குச் சொல்லுகிறோம். “இதற்கு முன் நீங்கள் வாழ்ந்தது பழைய வாழ்க்கை. இப்போது வாழ்வது புதிய வாழ்க்கை. எந்த வாழ்க்கையை நீங்கள் வாழப் போகிறீர்கள் என்று தேர்ந்தெடுக்கும் உரிமை இப்போது உங்கள் கைகளில் இருக்கிறது. விழிப்புணர்வோடு அந்தத் தேர்வை மேற்கொள்ளுங்கள்” என்று சொல்கிறோம்.
மனிதனைப் பொறுத்தவரை மாற்றத்திற்கு எது தடையாக இருக்கிறது என்று எண்ணிப் பார்க்கச் சொல்கிறோம். ஒருவருக்கு பணக்காரராக ஆசை வருகிறது. அதற்கு எது தடை? அவருடைய சோம்பேறித்தனம் தடை. எனவே, இலட்சியத்தை அடைய வேண்டுமென்றால் சோம்பேறித்தனம் கூடாது. பொறுப்பற்ற போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.
முடிவெடுக்கும் ஆற்றல் மிக மிக அவசியம். ஒரு பிரச்சனையில் நீங்கள் எடுக்கிற முடிவு உங்கள் சொந்த முடிவாக இருக்க வேண்டும். அதற்காக அடுத்தவர்களிடம் ஆலோசனை கேட்கக் கூடாது என்று அர்த்தமில்லை. சரியானவர்களை அணுகி ஆலோசனை கேட்க வேண்டும். தவறான மனப்போக்குள்ளவர் களிடம் ஆலோசனை கேட்டால் விரலுக்கேற்ற வீக்கம், ஏழைக்கேற்ற எல்லுருண்டை, மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான், படைத்தவன் பயிர் வளர்ப்பான் என்றெல்லாம் சொல்லி மனித முயற்சியைக் குலைத்து விடுவார்கள்.
வெற்றி பெறவேண்டும் என்பது உங்கள் கனவாக இருக்கிறது. அந்த வெற்றியை அடைவதற்கு துணிவு தேவைப் படுகிறது. அந்தத் துணிவு உங்களிடம் இருக்கிறதா என்று கேட்டு உள்மன ஆற்றலை உசுப்புகிறோம்.
இன்றைய இளைஞர்களிடம் நீங்கள் பொதுவாகக் காண்கிற பலவீனங்கள் என்ன?
வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவற்றை நாம் பலவீனங்கள் என்கிறோம். இந்த பலவீனங்கள் நாட்டிற்கு நாடு வேறுபடுகின்றன. மலேசியா என்று எடுத்துக் கொண்டால் மாகாணத்திற்கு மாகாணம் அவை வித்தியாசப்படுகின்றன. இளைஞர்களிடம் பொதுவாக பொறுப்பேற்கிற குணம் குறைவாக உள்ளது. ஒரு வேலையை கடமை என்று கருதி செய்கிறபோது அதில் ஈடுபாடு குறையும். ஆனால், அந்த வேலையைத் தன்னுடைய பொறுப்பென்று உணர்ந்து செய்கிற போது அதை செம்மையாக செய்து முடிக்க இயல்கிறது.
இரண்டாவதாக, நமது போதனை முறையில் குளறுபடிகள் இருக்கின்றன. கற்றல், கற்பித்தல் முறைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் இன்றைய இளைஞர்களின் நிலையை வெகுவாக மேம்படுத்த முடியும். ஆங்கிலேயர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொள்கிறபோது பட்ண்ய்ந் ஆண்ஞ் என்று எதையும் பெரிதாக எண்ணிக்கொள்ளச் சொல்வார்கள். ஆனால் நமக்கு பட்ண்ய்ந் நம்ஹப்ப் என்று சொல்லிக் கொடுத்து விட்டார்கள். உண்மையில் எதையும் பெரிதாகவே நாம் யோசிக்க வேண்டும். நினைப்பு பிழைப்பைக் கெடுக்கும் என்று பலர் சொல்வார்கள். ஆனால், நான் நினைப்பு பிழைப்பைக் கொடுக்கும் என்று சொல்வேன். பெரிதாக நினைத்தால்தான் அந்த நினைவே நம் நிலையைப் பெரிதாக உயர்த்தும்.
உள்மன ஆற்றலைப் பெருக்கிக்கொள்ள நீங்கள் சொல்லும் வழிகள் என்ன?
மனிதன், தன் மனதை மிக கவனமாகக் கண்காணிக்க வேண்டும். மனம் மனிதனைப் பயன்படுத்தாது. மனிதன்தான் மனதைப் பயன்படுத்த வேண்டும். பெற விரும்பும் வெற்றிகளை மனதில் காட்சியாக்கிக் கொள்வது மிகுந்த பயன்தரும். ஒரு பெரிய கட்டிடம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த இடம் வெற்றிடமாக இருந்தபோது யாரோ ஒருவர் அங்கே ஒரு கட்டிடத்தை கற்பனை செய்தார். அந்தக் கனவிற்கு ஒரு முன்மாதிரி வடிவத்தை உருவாக்கினார். அதற்கு மாடல் என்று பெயர். பிறகு ஒப்பந்ததாரரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். அந்தக் கட்டிடம் உருவம் பெற்றது. கற்பனை முதல் நிலை. காட்சிப்படுத்துவது இரண்டாம் நிலை. அதை நடைமுறைக்கு கொண்டு வருவது மூன்றாம் நிலை.
மனித வாழ்க்கையும் இப்படித்தான். வருங்காலத்தை படமாகப் பார்த்துப் பழகிவிட்டால், மூளை அதை அழுத்த மாகப் பதிவு செய்து கொள்ளும். மூளையைப் பொறுத்தவரை அங்கு பதிவாகியிருப்பவை அனைத்துமே காட்சிகள்தான். நீங்கள் நல்ல விஷயத்தை பதிவு செய்தால் உங்களுக்கு நல்லது. ஒரு கட்டிடத்திற்கு உங்கள் திட்டத்திற்கேற்ப வடிவம் கொடுப்பது போலவே உங்கள் வாழ்க்கைக்கும் நீங்களே வடிவம் கொடுக்கலாம்.
இத்தகைய தனிமனித உயர்வுக்கான தேடல்களும், பயிற்சிகளும் ஒருபுறம் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இன்னொருபுறம் தனிமனிதர்களுக்கு நடுவே இடைவெளி அதிகரிக்கிறது. விவாகரத்துகள் பெருகுகின்றன. பெற்றோர் களுக்கும், பிள்ளைகளுக்கும் நடுவே பிரச்சினைகள் வளர்கின்றன. இதற்கு என்ன தீர்வு?
எங்கள் பயிற்சியில் இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். விழிப்புணர்வு என்பது ஆளுமை மேம்பாடு மட்டுமல்ல. ஐந்து முக்கியத் தளங்களில் மனிதர்கள் விழிப்புணர்வடைய எங்கள் பயிற்சிகள் வழிகாட்டுகின்றன.
1. தனிமனித விழிப்புணர்வு
2. குடும்ப விழிப்புணர்வு
3. பொருளாதார விழிப்புணர்வு
4. சமுதாய விழிப்புணர்வு
5. இறை விழிப்புணர்வு
இந்த 5 அம்சங்களையும் மனிதன் சமநிலையில் வைத்துக் கொண்டிருந்தால்தான் அவனுடைய வாழ்க்கைக் கப்பல் சரியான திசையை நோக்கி பயணம் செய்யும். புயலே அடித்தாலும் பாதுகாப்பான வாழ்க்கைப் பயணம் சாத்தியமாகும்.
ஒவ்வொரு மனிதனும் உள்மன அளவில் தனித்தனி உலகம். அந்த உலகம் சரியாக இருந்தால்தான் வெளியுலகத்தில் வெற்றிகள் சாத்தியம்.
Leave a Reply