திரு. எ. சௌந்திரராஜன்.
CRI பம்ப்ஸ்
ஆண்டொன்று 7,50,000 பம்ப்புகள் உற்பத்தித் திறன். 65 நாடுகளுக்கு ஏற்றுமதி. அமெரிக்காவுக்கு சப்மெர்சிபிள் பம்ப், மோட்டார்கள் ஏற்றுமதி செய்த முதல் நிறுவனம். அமெரிக்காவின் மத தரச்சான்றிதழ் பெற்ற சப்மெர்சிபிள் மோட்டார்களைத் தயார் செய்யும் முதல் நிறுவனம். இப்படி, பல முத்திரைகளைப் பதித்திருக்கும் CRI மிக, எளியமுறையில் 1961ல், அமரர் திரு.கே.கோபால் அவர்கள் தொடங்கிய நிறுவனம். அவர் மறைவுக்குப் பிறகு, அவர்தம் இளம் புதல்வர்கள்
நான்குபேர், தங்கள் தந்தையின் இலட்சியக் கனவைத் தோள்களில் சுமந்து கொண்டார்கள். முயன்று, போராடி, முனைப்புக்காட்டி, முன்னேறி, இன்று CRI என்னும் முத்திரையை உலகெங்கும் வலம் வரச் செய்திருக்கிறார்கள். வேகத்தடைகளை வெற்றி கண்ட இந்த வரலாற்றுப் பயணம் குறித்து, கண்களில் மின்னும் நம்பிக்கையுடனும், உள்ளே பொங்கும் வேட்கையுடனும் நம்மோடு பேசினார், CRI நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் திரு. எ. சௌந்திர ராஜன்.
சவால்களால் வளர்ந்த நிறுவனம் CRI என்று சொல்கிறார்கள். அரும்பு நிலையிலிருந்தே தனித்தன்மையோடு நீங்கள் வளர்ந்தது எப்படி?
எங்கள் தந்தையார் 1961ல் இந்த நிறுவனத்தை துவக்கினார். நேர்மையும் கண்டிப்பும் மிக்க மனிதர் அவர். அவரது மறைவுக்குப் பிறகு 1980-ல், பம்ப் துறையில் நாங்கள் நுழையும்போது பலரும் பம்ப் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் பலரும் கவனம் செலுத்தாத உத்திகளில் கவனம் செலுத்தி வித்தியாசமான முறையில் தொடக்க நிலையிலிருந்தே செய்யத் தொடங்கினோம். அதைவிட முக்கியமாக எங்கள் வழியில் வந்த பல வாய்ப்புகளையும் சரியாகப்
பயன்படுத்திக் கொண்டோம்.
உதாரணமாக சொல்லப்போனால், மின் அழுத்தம் குறைவது, நிலத்தடி நீர் மட்டம் குறைவது, போன்றவை ஏற்பட்டன. இந்த சவால்களை எதிர்கொண்டோம். குறைந்த மின்னழுத்தத்தில் செயல்படக்கூடிய பம்ப்புகளை வடிவமைத்தோம். 400 வோல்டேஜுக்கு பதிலாக 200 – 250 வோல்டேஜ் அளவுகளில் செயல்படக்கூடிய பம்ப்புகளை உருவாக்கினோம். இப்படியாக சவால்களை எதிர்கொண்ட அனுபவம் எங்களை மேலும் மேலும் செதுக்கியது.
பம்ப்புகள் விநியோகம் மற்றும் விற்பனையில் நீங்கள் அறிமுகப்படுத்திய புதுமைகள் என்ன?
புதிய பம்ப்பாக எங்கள் பெயர் அறிமுகமான கால கட்டத்தில் ஒரு புதுமையைச் செய்தோம். தயாரிப்பாளர் களிடமிருந்து மாநில மற்றும் மாவட்ட விநியோகஸ்தர்களை அடைந்தபிறகு தாலுகா டீலர் மூலமாக பம்புகள் விவசாயி களைச் சென்றடையும் முறைதான் அப்போது நடைமுறையில் இருந்தது. நாங்கள் புதிய பிராண்ட் என்பதால் 15% முதல் 20% கூடுதலான தள்ளுபடியை இந்த விநியோகஸ்தர்கள் எதிர் பார்த்தார்கள். தரமான பொருட்களை அந்தளவு விலையைக் குறைத்துத் தர இயலாது என்பதால் வாடிக்கையாளர்களை நேரடியாக சென்றடையும் முறையைக் கொண்டு வந்தோம். டர்ண்ய்ற் ர்ச் நஹப்ங் என்கிற அந்த அணுகுமுறை கூடுதல் செலவைத் தவிர்த்தது. மெக்கானிக்குகள், டீலர்கள் என்று தாலுகா வாரியாக எங்கள் பம்ப்புகள் சென்றடைந்தன.
இந்த உத்தியின் சிறப்பம்சம் என்ன?
இதற்கு Needle Marketing என்று பெயர். ஊசி ஒரு சிறிய பகுதி வழியாக நுழைந்து அந்தப் பகுதி முழுவதையும் ஆக்ரமிப்பதைப் போன்றது. இதன் மூலம் எங்கள் தொடர்புகள் வாய்மொழி விளம்பரம் மூலம் வளர்ந்தன.
தொடக்கத்தில் மிகவும் சிரமப்பட்டோம். செகந்தரா பாத்தில் இயங்கிய “ஒரு நபர் அலுவலகம்” தொடங்கினோம். நானே அலுவலகத்தைக் கூட்டி பெருக்குவதில் ஆரம்பித்து விற்பனை வரையில் பார்த்துக் கொள்வேன். ஒவ்வொரு வாரமும் ஸ்கூட்டரிலேயே ஆந்திர கிராமங்களில் 1500 கி.மீ.வரை பயணம் செய்வேன். பத்துமுறை போனால் ஒரு பம்ப் விற்கும். இவ்வாறு வாடிக்கையாளர்களை நேரடியாக சந்திப்பதினால் அவர்களின் தேவைகளை உடனுக்குடன் அறிய முடிந்தது. அதைப்பற்றி உடனுக்குடன் சகோதரர்களிடம் தெரிவிப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டேன். அவர்களும் இரவு பகலாக தேவைகளுக்கேற்றவாறு புதிய பம்ப் மாடல்களை வடிவமைத்துத் தருவார்கள். இவ்வாறு சகோதரர்கள் நாங்கள் தோளோடு தோள் நின்று சவாலான நேரங்களை கடந்து வந்தோம். மேலும் விவசாயிகளுக்குக் கடன் கொடுத்தும் ஊக்குவித்தோம். இளைஞர்களையே டீலர்களாக நியமித்தோம். ஏனெனில் மூத்தவர்களுக்கு அனுபவம் இருக்கும். ஆனால் இளைஞர்களுக்கு சாதிக்கும் வெறி இருக்கும்.
இந்தக் கூட்டு முயற்சியின் தேவையை எத்தகைய சூழல்களில் உணர்ந்தீர்கள்?
எங்கள் வியாபாரத்தின் அடித்தளமே கூட்டு முயற்சிதான். ஏனெனில் சகோதரர்கள் நால்வரும் எங்களுக்கான துறைகளை தெளிவாக இனம் பிரித்து, செயல்பட்டுக் கொண்டுள்ளோம். இதனால் அவரவர் துறைகளில் தனி கவனம் செலுத்தி மேன்மைப்படுத்த முடிகிறது. உதாரணமாக எங்களது மூத்த சகோதரர் திரு.வேலுமணி திட்டமிடல், நிதி நிர்வாகம், கட்டுமான விரிவாக்கம் என்ற துறைகளையும், இளைய சகோதரர் திரு.ராஜேந்திரன் பம்புகளைப் பற்றிய ஆரய்ச்சி மற்றும் மேம்பாடு எனவும், மற்றுமொரு இளைய சகோதரர் திரு.செல்வராஜ், தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் உற்பத்தியை மேம்படுத்துதல், நான், வியாபார விரிவாக்கம் மற்றும் விற்பனைத் துறையையும் எடுத்துக் கொண்டு இவைகளில் ஆழ்ந்த கவனம் செலுத்தி செயல்பட்டு வருகிறோம். இந்த முயற்சியில், நிறுவன அதிகாரிகள் மற்றும் தொழில் மற்றும் தொழிலாளர்களையும் சேர்த்து ஒரு குடும்பமாக பாவித்து செயல்பட்டு வருகிறோம்.
இந்த ஒட்டுமொத்த குடும்பமும் ஒத்த சிந்தனையும் நோக்குடனும் கடுமையாக பாடுபட்டு வருவதே எங்களது வளர்ச்சிக்கு காரணமாகும்.
CRI நிறுவனத்தைப் பொறுத்தவரை அதிகபட்ச உற்பத்தி என்பது உங்கள் தனித்தன்மையாக விளங்குகிறது. இதுவும் துணிச்சலாக எடுக்கப்பட்ட முடிவு. இது எப்படி சாத்தியமானது?
எங்கள் தந்தையார் காலத்திலிருந்தே, எங்கள் முழு கவனத்தையும் மோப்டார் பம்ப்புகளில் மட்டுமே செலுத்துகிறோம். பலரும், கூடவே மற்ற தொழில்களிலும் ஈடுபடுவார்கள். நாங்கள் அப்படிச் செய்யவில்லை. முழு கவனத்தையும் ஒரே தயாரிப்பில் காட்டினோம். இதனால் உற்பத்தி பெருகுவதோடு, உற்பத்திச் செலவும் குறைகிறது. பம்ப் உற்பத்தி என்பது பொதுவாகவே லாபம் குறைவான தொழில். இதில் போட்டியாளர்களை விடவும் கூடுதலாக 1% அல்லது 2% வரை லாபம் பெறமுடிந்தால் அதுவே பெரிய விஷயம்தான்.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம்கூட இதுதான். சீனாவில் நடப்பதெல்லாம் அதிகபட்ச உற்பத்தி. எனவே உற்பத்தியில் கவனம் செலுத்துகிற போது உலக அளவில் போட்டியிட்டு உங்களால் சந்தையைப் பிடிக்க முடியும்.
இந்தியாவிலேயே முதல்முதலாக பம்ப் ஏற்றுமதியை வெற்றிகரமாகச் செய்த நிறுவனம் CRI. இந்த எண்ணம் வந்தது எப்படி?
ஏற்றுமதியில் நாங்கள் ஈடுபட முதல் காரணம், சர்வதேசச் சந்தையில் நுழைய வேண்டும் என்கிற ஆசை. இரண்டாவது காரணம், இந்தியாவுக்குள் சர்வதேசப் போட்டியாளர்கள் நுழைகிறார்கள். நம் இடத்திற்கு அவர்கள் வரும் முன் அவர்கள் இடத்திலேயே இடத்தில் நம் சக்தியை சோதித்துப் பார்க்கலாம் என்கிற எண்ணம். அதுமட்டுமில்லாமல், பம்ப் துறையை எடுத்துக்கொண்டால், இந்தியாவில் அதற்கான சந்தையின் மொத்த மதிப்பு 3000 கோடி. அதில் பங்குபோட 500 பேர் போராடுகிறோம். ஆனால் சர்வதேச பம்ப்பின் சந்தை மதிப்பு, 1,50,000 கோடி. அந்த விரிந்த களத்தில் பங்கேற்க வேண்டும் என்று கருதினோம்.
சர்வதேசச் சந்தையில் நுழைகிறபோது ஆரம்பத்தில் எங்களைப் பற்றி எங்களுக்கே குறைவான மதிப்பீடுதான் இருந்தது. பல நாடுகளுக்கும் சென்று அவர்கள் உற்பத்தி நிலைகளைப் பார்வையிட்டோம். பம்ப் துறையில் உலக அளவில் முன்னணியில் இருப்பது ஐரோப்பாதான். அவர்களிடம் என்ன தான் தொழில் நுட்பங்களும் ரோபோக்களும் இருந்தாலும், நம்மால் முடியாத விஷயமில்லை என்று முடிவெடுத்தோம். சர்வதேசச் சந்தைக்கான பம்ப் தயாரிப்பின் ஆய்வுக்கு மட்டும் பத்தாண்டுகள் செலவிட்டோம். முழுமுனைப்போடு ஏற்றுமதியில் ஈடுபட்டோம். அமெரிக்காவின் மத தரச்சான்று பெற்ற முதல் இந்திய நிறுவனமாக இதஐ திகழ்கிறது. அதே போல ரெஸின் ஃபில்டு மோட்டார் தயாரிக்கும் நிறுவனங்களில் உலகிலேயே இரண்டாவது நிறுவனம் இதஐ. இதில் தொடர்ந்து பல வடிவமைப்புகளை உருவாக்கி ஒன்று தவறினால் இன்னொன்று என்று விடாமல் முயன்று வந்தோம். நம்மால் முடியும் என்கிற நம்பிக்கைதான் உந்து சக்தியாக இருந்தது.
பல வெற்றிகரமான தயாரிப்புகள் சர்வதேசச் சந்தையில் தாக்குப்பிடிக்காமல் போகின்றன. நீங்கள் வெற்றி பெற்றதன் ரகசியம் என்ன?
இந்தியாவில் இதுவரையில் மூடப்பட்ட சந்தைக்குள்ளேயே அனைவரும் இயங்கி வந்துள்ளார்கள். நாம் ஏற்கெனவே தயாரித்த பொருளை சர்வதேச அளவில் விற்க முடியும் என்று நினைப்பவர்கள்தான் தோற்கிறார்கள். அந்தச் சந்தையின் தேவைகளை சந்திக்கும்விதமாக செயல்படுபவர்கள் தான் ஜெயிக்க முடியும்.
சந்தையின் தேவைகள் என்றால், உற்பத்தி என்று மட்டும் பொருளல்ல. நம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் முறையில் இருந்து எல்லாமே அதில் அடங்கும். உதாரணமாக நாம் இந்தியாவில் தருகிற விவரணைப்பட்டியலை அங்கே கொடுத்தால் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். ஒவ்வொன்றிலும் துல்லியமான விபரங்களை நாம் தரவேண்டும். உதாரணத்திற்கு வெண்கலம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அந்தப் பட்டியலில் வெறுமனே குறிப்பிட்டால் போதாது. எந்த உலோகம், எத்தனை சதவிகிதம் இருக்கிறது என்பது வரை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். வெண்கலம் என்றால் அதில் ஈயம் கலந்திருக்கக் கூடாது. அந்த விவரம் கூடக் குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும்.
நமது விசிட்டிங் கார்டு, நாம் பயன்படுத்தும் கடித முகப்பு போன்றவைகளின் துல்லியமின்மை காரணமாகக் கூட நமது முயற்சி அங்கு பாதிக்கப்படும். கடிதத்தில் கூட மிகக் கவனமாக சில வார்த்தைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
அவர்கள் கேட்கும் அளவைகளுக்கு உட்பட்டு, தயாரிப்பில் பல மேம்பாடுகளை ஏற்படுத்தித் தரவேண்டும். அதேநேரம் அவர்கள் என்ன கேட்டாலும் “சரி” என்று ஒப்புக் கொண்டாலும் அவர்களுக்கு சந்தேகம் வந்து விடும். எனவே ஏற்றுமதியில், தரம், தயாரிப்பை மேம்படுத்துதல், அணுகுமுறை என்று, அத்தனை அம்சங்களுமே முக்கியம். தரத்திற்கும் நம்பிக்கைக்கும் அவர்கள் முதலிடம் கொடுப்பார்கள். குறித்த நேரத்திற்குக் கொடுக்க வேண்டும் என்பார்கள்.
ஏற்றுமதியில் இதஐன் தனித்தன்மை என்று எதனைக் கருதுகிறீர்கள்?
ஏற்றுமதிக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று சில நிபுணர்களை முதலில் அழைத்துக் கருத்துக் கேட்டோம். அவர்கள் பொதுவான வழிகாட்டுதல்களையே தந்தார்கள். கேட்லாக் அனுப்பலாம், கண்காட்சியில் பங்கேற்கலாம் என்பது போன்ற யோசனைகளைச் சொன்னார்கள். ஆனால் களத்தில் இறங்கிய பிறகுதான் ஏற்றுமதித் துறையின் பல்வேறு நுட்பங்கள் பிடிபட்டன.
ஒவ்வொரு தொழிலுக்கும் ஏற்ப ஏற்றுமதியின் தேவைகளும் பொறுப்புகளும் மாறுபடும். படைப்புகளை எடுத்துக்கொண்டால் அவை வெகுவேகமாக விற்றுத் தரக்கூடிய தயாரிப்புகள் அல்ல. அவை செயல்திறனில் சிறந்து விளங்கினால் மட்டுமே சந்தையில் பெயர் பெறமுடியும்.
இதில் ஒன்றை முக்கியமாக குறிப்பிட வேண்டும். இயந்திர தொழில்நுட்பத் தயாரிப்புகளின் ஏற்றுமதியில் இந்தியாவுக்குப் பெரிய பெயர் இருந்ததில்லை. வைரம், ஆடை, தோல், காலணிகள், சாஃப்ட்வேர் ஆகியவற்றின் ஏற்றுமதியில் இந்தியா பெயர் பெற்று விளங்குகிறது. ஆனால், இந்தியத் தயாரிப்பு (ஙஅஈஉ ஐச ஐசஈஐஅ) என்கிற முத்திரையோடு உலக அரங்கில் பம்ப்புகளை வெற்றிகரமாக ஏற்றுமதி செய்யும் முதல் நிறுவனம் என்கிற பெயர் இதஐ க்கு உண்டு.
தங்கள் நிறுவனத்தின் பெயரில் எங்கள் தயாரிப்புகளை உருவாக்கித் தரச்சொல்லி, ஆண்டுக்கு பல கோடி மதிப்பில் சில ஐரோப்பிய நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்ய முன்வந்தன. நாங்கள் உறுதியாக மறுத்துவிட்டோம். நமது தயாரிப்புகள், நமது தேசத்தின் முத்திரையோடு உலக அரங்கில் உலா வரவேண்டும் என்கிற ஆசைதான் அதற்குக் காரணம். எங்கள் தந்தையார் ஊட்டி வளர்த்த தேசப்பற்றின் வெளிப்பாடுதான் இது. இன்று 65 நாடுகளுக்கு பம்ப் ஏற்றுமதி செய்யும் ஒரே இந்திய நிறுவனம் இதஐ தான்.
CRI என்கிற பிராண்ட் மீது மிக கவனமாக இருக்கிறீர்களே?
ஒரு பிராண்ட் உருவாக்கம் என்பது தென்னை மரம் வளர்ப்பது போல. ஐந்து அல்லது பத்தாண்டுகள் கழித்து பலன் தரும். பிராண்ட்தான் ஒரு நிறுவனத்தின் அடையாளம். பிராண்ட் மூலம்தான் வாடிக்கையாளர் வரை சென்றடைய முடியும். மாற்றங்கள் என்ற ஆறாவளியில் வேர்கள் போல நிலத்தில் ஊடுருவி நின்று நிறுவனத்தை தாங்குவது பிராண்ட் தான். எங்கள் பிராண்ட் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அது நீடித்து நிலைக்கும் என்று நம்புகிறோம். தொடக்க காலத்தில் இருந்தே அதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். அந்த நாட்களில் பெரிதாக விளம்பரம் செய்ய நிதிவசதி இல்லாதபோதும் சுவர் விளம்பரங்கள் செய்தோம். அதிலும் நாங்கள் முன்னோடிகளாகத் திகழ்ந்தோம். இன்று பல ஊடகங்கள் வாயிலாக விளம்பரங்கள் செய்யும் உத்தியையும் பின்பற்றுகிறோம்.
எந்தத் தொழில் செய்தாலும் அது சுற்றுச் சூழலோடு சம்பந்தப்பட்டுள்ளது. நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கப் பம்ப்புகள் பயன்படுகின்றன. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
நிலத்தடி நீர் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பூமிக்கடியில் சேமிக்கப்பட்டிருக்கிறது. அதனை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி எடுக்கிறபோது சில கேடுகள் விளைகின்றன. இதற்கு சில சட்டங்களும் விதிகளும் நம் நாட்டில் வரவேண்டும்.
பிரேசில், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் இதற்கென்று சில கட்டுப்பாடுகள் உள்ளன. இஸ்ரேலில், இத்தனை லிட்டர்கள்தான் நிலத்தடி நீர் எடுக்கலாம் என்று அதற்காகத் தனியாகவே மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. எந்த அறிவியலுக்கும் தொழில் நுட்பத்திற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. அணுசக்தியை சரியாகப் பயன்படுத்தினால் ஆக்கத்திற்கும், தவறாகப் பயன்படுத்தினால் அழிவுக்கும் காரணமாகிறது. அதே போலத்தான் இதுவும்.
அன்றாட வாழ்க்கையில்கூட தண்ணீரின் மறுபயன் பாட்டுக்கு நிறைய திட்டங்கள் வரவேண்டும். சமையலறையில் காய்கறிகளைக் கழுவும் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் எந்த மாசும் இல்லை. அதை வேறுவிதங்களில் பயன் படுத்தலாம்.
அமெரிக்காவில் ஒரு நண்பர் வீட்டில் தங்கியிருந்தபோது நான் பார்த்த ஒரு சம்பவத்தை என்னால் மறக்கவே இயலாது. என் நண்பரின் மகளுக்கு ஐந்து வயதுதான் இருக்கும். காலையில் படுக்கையிலிருந்து எழுந்தபிறகு அந்தக் குழந்தை பிரிட்ஜில் வைத்திருந்த பாலை ஒரு கோப்பையில் ஊற்றியது. அந்தக் கோப்பையை மைக்ரோ ஓவனில் வைத்துப் பாலை சூடு செய்தது. அதிலேயே போர்ன்விடா கலந்து பருகிவிட்டு கோப்பையைக் கழுவி வைத்துவிட்டது.
இதுவே நம் ஊரில் என்றால், பாலைக் காய்ச்ச ஒரு பாத்திரம். காபி வைக்க இரண்டு பாத்திரங்கள், அதனை ஊற்றிக் கொடுக்க ஒரு பாத்திரம் என்று ஏறக்குறைய நான்கைந்து பாத்திரங்களைப் பயன்படுத்துவோம். இதற்குக் கூடுதலான எரி சக்தி, உடல் சிரமம், தண்ணீர் என்று அனைத்தும் செலவாகிறது. எனவே தண்ணீரை மறுசுழற்சி செய்வது மிகவும் முக்கியம். நிலத்தடி நீர் எடுப்பதற்கும் உரிய விதிமுறைகள் கொண்டுவர வேண்டும்.
ஒரு தொழிலில் வெற்றி பெறுவதற்கு எவையெல்லாம் தடைகள் என்று எண்ணுகிறீர்கள்?
பொதுவாகவே கடந்த கால அனுபவங்களும், வெற்றிகளும்தான் நிகழ்காலத்தின் தடைகள் என்று கருதுகிறேன். இப்படிச் சொல்வது உங்களுக்கு வியப்பாகக் கூட இருக்கலாம். அன்றைய சூழலில் ஒரு குறிப்பிட்ட அணுகுமுறை நமக்கு வெற்றியைத் தந்திருக்கலாம். இப்போது சூழல்கள் மாறுகின்றன. தேவைகள் மாறுகின்றன. எதிர்பார்ப்புகள் மாறுகின்றன.
சேவைத்துறை என்று எடுத்துக்கொண்டால் ஒரு வாடிக்கையாளர், செல்ஃபோனிலிருந்து பல்வேறு நுகர் பொருட்களுக்கு வாடிக்கையாளராக இருக்கிறார். நமக்கும் வாடிக்கையாளராக இருக்கிறார். எனவே நம்மிடமும் அது போன்ற சிறந்த சேவைகளை எதிர்பார்க்கிறார்.
இன்றைய சிக்கலுக்கு, பழைய தீர்வுகள் பயன்படாது என்பதைப் பலரும் உணர மறுக்கிறார்கள். நாம மாற மறுப்பது தான் வளர்ச்சிக்குப் பெரிய தடை என்பதை அனைவரும் உணர வேண்டும்.
கிராமங்கள் வரை சென்று மெக்கானிக்குகளையும் டீலர்களையும் உங்கள் தொழிலில் ஈடுபடுத்துகிறீர்கள். அவர்களுக்கு எத்தகைய பயிற்சிகளைத் தருகிறீர்கள்?
இதுவரை ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் மெக்கானிக்குகளுக்குப் பயிற்சிகள் கொடுத்திருக்கிறோம். உற்பத்தி நிலையிலிருந்து விளக்கி தொழில் நுட்பம் கற்றுத் தருகிறோம்.
புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனம் மூலம், வாடிக்கை யாளர்கள் தங்கள் பம்ப்புகளைத் தேர்வு செய்வதற்குரிய மென்பொருள் ஒன்றை உருவாக்கி இருக்கிறோம். இந்தியாவில் இதை முதலாவதாக நாங்கள்தான் செய்திருக்கிறோம்.
எங்கள் பம்ப்புகளில் ஆயிரக்கணக்கான மாடல்கள் இருக்கின்றன. உங்கள் தேவையைக் குறிப்பிட்டுவிட்டால் உங்களுக்கு உகந்த மாடலை அந்த மென்பொருளே தேர்வு செய்து கொடுக்கும். அதற்கு எவ்வளவு மின்சாரம் செலவாகும், என்ன செயல்திறன், எவ்வளவு தண்ணீர் தரும் என்பது போன்ற விபரங்களை எல்லாம் அது தந்துவிடும். தொழில்நுட்ப பயிலரங்குகளையும் அடிக்கடி நடத்துகிறோம்.
இன்றைய சர்வதேச போட்டிகளுக்கு ஈடுகொடுக்க வேண்டுமென்றால் தொழில் முனைவோர்களுக்கு எத்தகைய தகுதிகள் அவசியம் என்று கருதுகிறீர்கள்?
மாற்றங்களை மதிக்க வேண்டும். மனப்பான்மைகள் மாற வேண்டும். அதுமட்டுமின்றி வேகம் மிகமிக அவசியம். முடிவுகள் எடுப்பதில் வேகம் காட்ட வேண்டும். நாங்கள் அயல் நாட்டின் தரத்திற்கேற்ப பொருள் வடிவமைக்கப் பத்தாண்டுகள் செலவிட்டதாகச் சொன்னேன். அது ஆரம்பநிலையில் அவசியம். அதற்கடுத்து படுவேகமாக செயல்பட்டால்தான் வெல்ல முடியும். விரைவாக முடிவுகள் எடுக்காவிட்டால் பல வாய்ப்புகளை இழக்க வேண்டும்.
தொழிலுலகில் கொரியா, ஜப்பானை வென்றது இந்த வேகத்தால்தான். ஜப்பான் நிதானமாக திட்டமிட்ட பிறகே செயல்படும். இது வெற்றிக்கான மிகப் பழைய அணுகுமுறை. ஆனால் கொரியா அப்படியல்ல. சாம்சங், எல்ஜி, ஹூண்டாய் போன்ற கொரிய நிறுவனங்கள் இந்தியாவுக்குள் நுழைந்து ஐந்து ஆண்டுகளிலேயே 5000 கோடி விற்று வரவு செய்துவிட்டன.
அடுத்தது நம்பிக்கை. பொதுவாக எல்லாமே மிகைப்படுத்தி சொல்லப்பட்டு விட்டன. ஒருவர் வெற்றிபெற்ற கதையைக் கேட்டாலும் மிகைப்படுத்தி சொல்வார்கள். தோற்ற கதையை கேட்டாலும் மிகைப்படுத்தி சொல்வார்கள். ஆனால் நம்பிக்கையோடு செயல்படுபவர்களுக்கு, நினைத்ததை விட வெற்றி மிக அருகில் இருக்கிறது என்பது தெரியும்
கிடைக்கிற வாய்ப்புகளை 90% வரை செய்து விட்டு, கடைசி 10% முயற்சியை முழுமையாகச் செய்யாமல் கோட்டை விட்டவர்கள் அதிகம். எனவே தளராமல் முழுமையாக முயற்சி செய்வதும் அவசியம்.
கூட்டுத் தொழில், கூட்டுக் குடும்பம், இரண்டின் வெற்றிக்கும் இதஐ காட்டும் வழி என்ன?
கூட்டுக் குடும்பமானாலும், கூட்டுத் தொழிலானாலும், அங்கத்தினர்கள் சிறியவர் பெரியவர் என்ற பாரபட்சமில்லாமல் அனைவர் கருத்துக்களுக்கும் செவிசாய்க்க வேண்டும். அனைவரையும் கலந்தாலோசித்து செயல்படவேண்டும். மேலும் சக அங்கத்தினர்கள் மீது வைக்கிற நம்பிக்கை மிகவும் முக்கியம். ஒருவருக்கொருவர் நேர்மையாக நடந்து கொள்வது அவசியம். அனைவரையும் அவரவர் நிறைகுறைகளோடு ஏற்றுக் கொள்வதே நல்லது. கட்டுப்பாட்டோடு கூடிய சுதந்திரத்தை அனைவருக்கும் தர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக இவை அனைத்தையும் பிணைக்கக்கூடிய சக்தியாகப் பாசம் இருக்க வேண்டும்.
Leave a Reply