-சிந்தனைக் கவிஞர் கவிதாசன்
சூழ்நிலைக் கைதியாக
இருந்தது போதும்
சூழ்நிலையை கைது செய்!
சூழ்நிலையில் கரைந்தது போதும்
சூழ்நிலையைக் கடந்து செல்!
வரலாறுகளைப் படித்தது போதும்
வரலாறுகளைப் படைத்திடு!
உலக வரலாறு என்பது
சாதனையாளர்களின்
வாழ்க்கை வரலாறு!
உனது பிறந்தநாளை
உலகமே
கொண்டாடும் உழை!
செயல்களை
உனது நிகழ்காலமாக்கு!
கடந்தகாலமும் எதிர்காலமும்
கவுரவப்பட்டுக் கொள்ளும்!
தேடல்களுக்குள் தொலைந்து விடு
புதுமைகளின் விலாசமாகலாம்!
விமர்சனங்களைக் கடந்து போ
கடந்து விடு
வெற்றியின் திசை தெரியும்!
எதிர்பார்ப்புகளை எதிர்த்து நில்
ஏளனங்களை எருவாக்கு
எழுச்சியை மூச்சாக்கு
சாதனைகள் சாத்தியமாகும்!
Leave a Reply