நமது நம்பிக்கை மாத இதழ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து வழங்கும் “வல்லமை தாராயோ” தொடர் நிகழ்ச்சி, திருச்சியில் 21.09.08 அன்று நடைபெற்றது. அதில் பேராசிரியர் முனைவர் த. ராஜாராம் எழுச்சியுரை ஆற்றினார். அவர் உரையிலிருந்து சில பகுதிகள்.
“தன் மனைவியிடமிருந்துகூட தனக்கான அங்கீகாரம் கிடைக்கிற நிலையிலும், பாரதி, “எத்தனை கோடி இன்பம் வைத்தாய். எங்கள் இறைவா” என்று பாடுகிறான்.
எந்த இடத்திலும் அவன் நம்பிக்கை இழக்கவில்லை. “நம்பினோர் கெடுவதில்லை, நான்கு மறைத் தீர்ப்பு” என்கிறான்.
அடுத்த வேளை சோற்றுக்கு எந்த ஒரு உத்திரவாதமில்லாமல் பாண்டிச்சேரியில் வாழ்ந்து வந்தான். வாடகை தர இயலாத நிலையிலும் அவன் கவிதையில் தெறித்திருக்கிற நம்பிக்கையை நாம் கவனிக்க வேண்டும். எந்தவொரு இடத்திலும் சோகத்தை வெளிப்படுத்தியதே இல்லை.
வறுமையில் உழன்றாலும், கடவுளிடம் வரம் கேட்கப் போகிறபோதுகூட, தன்னுடைய வாழ்க்கையை மேம்படுத்த பிரார்த்திக்கவில்லை.
இப்பொழுது படித்தவர்கள் மத்தியில் தங்களுடைய வீடுகளில் எவ்வளவுதூரம் தமிழ் பேசாமல் இருக்கிறார்களோ அவ்வளவு அவர்கள் அறிவாளிகள் என்கிற பொய்மைத்தனம் இருக்கிறது. ஆங்கிலம் அறிந்திருப்பதே அறிவினுடைய அடையாளமல்ல. ஆங்கிலம் தெரிய வேண்டுமே தவிர, ஆங்கிலத்தனம் கூடாது.
உறவுச் சொற்களைக் கூட தமிழில் சொல்வதில்லை. ஆங்கிலேயர்களிடம் கூட்டுக் குடும்ப முறையில்லை. சித்தப்பா, பெரியப்பா போன்ற உறவுகளின் அருமை இல்லை.
ஆனால், இந்தியாவில் அப்படியல்ல “ஆன்ட்டி” என்கிற ஒற்றைச் சொல்லால் யாரைக் குறிப்பிடுகிறோம், அத்தையையா? சித்தியையா? பெரியம்மாவையா?
படித்தவர்கள் என்ற பெயரில் பாமரர்களாக இருந்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை.
நாம் யார் என்று முதலில் அறிந்துகொள்ள வேண்டும். அதைத்தான் கல்வி தரவேண்டும். அப்போதுதான் மனிதனுடைய நம்பிக்கை என்பது சரியாக இருக்கும். ஆனால் தவறான நம்பிக்கையை தருவதைவிட கொடுமையானது வேறு எதுவுமில்லை. இன்றைக்கு, கல்விமுறையில் படித்தவர்கள், கற்றுக் கொடுப்பவர்கள் இப்போது இந்த நிலையில்தான் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். ரொம்ப சுலபமாக முன்னேற வேண்டும் என்று நினைக்கிறோம். முன்னேறியவர்களின் வாழ்வைப் பார்த்தால் அவ்வளவு சுலபத்தில் எதுவும் நடந்திருக்காது என்று நமக்குப் புரியும்.
“மனிதனாக வாழ்ந்திட வேண்டும்… மனதில் வையடா” என்ற பட்டுக்கோட்டையாரின் பாடலை முதலில் கேட்டபோது அர்த்தம் விளங்கவில்லை. அவனுக்கு மனிதர்களாக உலவுபவர்கள் எல்லாம் மனிதர்களல்ல என்று தெரிந்திருக்கிறது.
மற்ற விலங்குகளைப்பார்த்து அதன் குணங்களோடு இருக்கச் சொல்வதில்லை. ஆனால் மனிதனை பார்த்து மட்டும்தான் மனிதனாக வாழ் என்று சொல்கிறோம்.
அடுத்த வரி, “வளர்ந்து வரும் உலகத்திற்கே நீ வலது கையடா!” என்பது. மனிதனுடைய அறிவு உலகினுடைய துன்பத்தைப் போக்குவதற்கு பயன்படுகிறதல்லவா. இப்படித்தான் வாழ வேண்டும். அப்போதுதான் வாழ்விற்கு ஒரு பொருள் இருக்கும்.
வாழ்ந்த நாட்களை அவர்களுக்கானதாக ஆக்கிக் கொண்டு மறைந்தவர்களே காலமானவர்கள். மற்றவர்கள் இறந்தவர்கள். பாரதி சொன்ன வேடிக்கை மனிதர்கள் இவர்கள். மனிதன் வேடிக்கை மனிதனாக வீழ்வதற்கு பிறக்கவில்லை. ஏதேனும் சாதித்துப் போவதற்கு
Leave a Reply