செங்கோல்: இதனை இதனால்

– இரா.கோபிநாத்

தொடர் – 23

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அழ்னை அவன்கண் விடல்

-என்றார் வள்ளுவர்.

ஏன் சார், நானே செய்து முடித்து விட்டால்? எனக்கே எல்லா நல்ல பெயரும் கிடைக்குமே? நான் வேகமாக முன்னேற முடியுமே?

தவறு. ஒரு நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் தலைவர், தானே எல்லா வேலைகளையும் செய்ய முற்பட்டால் சிறக்க முடியாது. மற்றவருக்குப் பங்களித்து, அவர்களையும் இணைத்துக்கொண்டால் மட்டுமே அது முடியும்.

தேவலோகத்தில் கூடப் பொறுப்புகளைப் பகிர்ந்தளித்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் ஒரு கடவுள், ஒரு உபகடவுள், ஒரு துணைக்கடவுள் என்று பல நிலைகளில் வகுத்துக் கொண்டிருக்கிறார்களே அளவில் அடங்காத மாய சக்தி பெற்றிருந்தும் ஏன் இப்படி? ஒவ்வொருவரும் தனது செயல்பாட்டை உன்னிப்பாகக் கவனித்துச் சிறப்பாக, அதிசிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்.

நேரம் என்பது எவ்வளவு சிறந்த ஒரு உபகரணம் என்பதையும், அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் சென்ற இதழில் பார்த்தோம். அதற்கு முந்தின இதழில் ஒரு நிர்வாகி, படிப்படியாக உயர்ந்து வரும்போது அவரது பாத்திரம் மற்றும் பொறுப்புக்கள் எப்படி மாறி வருகின்றது, அந்த மாற்றத்தின் போது அவரது நேரம் என்ற விடையங்களில் செலவிடப்பட வேண்டும் என்பது குறித்துப் பார்த்தோம். எப்படிப் பயன்படுத்தினாலுமே ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான் எல்லாருக்கும் கிடைக்கும். அந்த உச்சவரம்பு என்பது எல்லோருக்கும் பொதுவானது. இதன் காரணமாக மனிதனின் சாதனைகளுக்கும் ஒரு உச்ச வரம்பு இருக்கத்தானே செய்யும்? அதனை மீறிச் சாதனைகளைக் கொண்டு செல்ல இயலாது என்று எண்ணத்தோன்றும். ஒரு வகையில் இது உண்மை என்றாலும், அதனையும் மீறிச் சாதனை செய்யவேண்டுமென்றால் 24 மணி நேரம் என்பது சற்றே கூடினால் எப்படி இருக்கும்.

ஒருவர் தன்னுடன் பணிபுரியும் தோழர்களுக்குத் தனது திறமையைக் கற்றுக்கொடுத்து, அவர்களிடம் சில பொறுப்புக்களை ஒப்புவித்தால் அவருக்கு இன்னும் அதிக நேரம் கிடைத்ததாகுமே! ஒரு நிறுவனம் உருவாவதற்குக் காரணமே அதுதானே. தனி மனிதனால் எத்தனை வேலைகளைச் செய்ய முடியும். அதனால் இன்னும் சிலரைச் சேர்த்துக் கொண்டால் நமது இலக்கை அடைவதற்கு இத்தனை கைகள் (அவர் தமது நேரமும்) கிடைத்ததாகுமே. அதற்கு ஈடாக அவர் அவர் இலக்கை அடைவதற்கு நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ (நேரம் தவிர), பணமோ, பதவிகளோ ஒரு தோழமை பாவமோ கொடுத்து அவர் தமது நேரத்தைப் பெற்றுக் கொண்டதாகுமே. ஒரு நிறுவனத்தில் ஒரு தலைவருக்கு அந்தப் பதவியைத் தந்து, அவரோடு இணைந்து வேலை செய்ய ஒரு குழுவையும் தந்து, அந்தக் குழுவினருக்குச் சம்பளமும், சலுகைகளும் அந்த நிறுவனம் வழங்குவதன் நோக்கமும் அதுதான். இராஜாவே அரசாங்கத்தின் எல்லா வேலைகளையும் தானே செய்ய முற்பட்டால் என்ன நிலைமை ஏற்படும்?

ஒரு நிறுவனத்தின் அடிப்படைக் கட்டமைப்பு ஒரு கூம்பு வடிவத்தில் உருவாவதன் காரணமும் இதுதான். ஆனாலுமே மற்றவருக்குப் பொறுப்பை ஒப்படைத்து (DELEGATION). நாம் வேறு சில செயல்களைச் செய்வது என்பது நடைமுறையில் அவ்வளவு சுலபமாக நடப்பதில்லை. ஒரு தலைவர் (நிர்வாகி) தனது குழுவில் இருப்பவர்களுக்கு, தான் இன்றைக்குச் செய்து கொண்டிருக்கும் வேலைகளில் சிலவற்றை ஒப்படைத்தால், அவருக்கு (தலைவருக்கு) மேலும் சில செயல்கள் செய்ய நேரம் கிடைக்கும். ஆனால் அவ்வாறு பெரும்பாலான இடங்களில் நடப்பதில்லை. இராஜாவே எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார்.

இதற்குப் பல காரணங்கள் உண்டு:

முதல் காரணம் தவறு செய்துவிடுவாரோ என்ற பயம்:

நாம் பொறுப்பை ஒப்படைப்பவர் இந்தச் செயலைச் சரியாகச் செய்யவில்லை என்றால் நமக்குத்தானே கெட்ட பெயர் ஏற்படும், அதைவிட நாமே செய்து விடுவதுமேல் என்ற எண்ணம் இதற்கு ஒரு முக்கிய காரணம். ஒருவேளை இவர் நாம் சொன்ன வேலையைச் சரியாகச் செய்யவில்லை என்றால் என்னைத்தானே எனது மேலதிகாரிகள் பழிப்பார்கள் என்ற பயம்.

மற்றவர்கள் நமது நிறுவனத்தில் வளர்ந்தால் தான், நாம் மேலும் வளர முடியும். அவர்கள் வளர வேண்டுமென்றால் அவர்களுக்கு நாம் செய்து கொண்டிருக்கும் வேலைகளையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம். செய்து பார்த்துத்தான் கற்றுக்கொள்ள முடியும். அந்தக் கற்றுக்கொடுக்கும் காலம்தான் நமக்குக் கொஞ்சம் சிரமமாக இருக்கும். சற்றுப் பொறுமையோடு அந்த நிலையைக் கையாண்டோமென்றால் அதன் பிறகு நமக்கு இலாபம்தான்.

இன்று நாம் அதே வேலையைச் சிறப்பாகச் செய்வதற்கு என்ன காரணம்? பயிற்சியும் அனுபவமும் தானே? மற்றவர்களும் அப்படிச் சிறந்த நிலையை அடையலாமே.

அவர்களிடம் கொடுத்தால் வேலையைக் குழப்பிவிடுவார்களோ, தரம் குறைந்துவிடுமோ என்பதெல்லாம் வீணான மனப்பிரமைதான்.

ஒருவரிடம் இவ்வாறு ஒப்படைக்கும்போது சில முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்.

வேலையில் கட்டுவது வேறு, பங்களிப்பது என்பது வேறு. DELEGATING IS REQUIRED, NOT ABDICATING.

1. நாம் பங்களிக்க இருக்கும் செயல்பாட்டிற்கு என்ன மாதிரியான விசேஷ குணங்கள் செயல்படுத்துபவருக்குத் தேவை? என்று பட்டியலிட வேண்டும்.

2. அந்த விசேஷ‘ குணங்கள் நமது குழுவில் யாருக்கு இருக்கிறது என்று கண்டெடுத்து அவருக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும். (இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து….)

3. பயிற்சிகொடுக்கும் போது, மிகுந்த பொறுமை வேண்டும். ஒவ்வொருவர் கற்றுக்கொள்ளும் விதமானமும் வித்தியாசப்படும். நமக்கு இன்று இருக்கும் அறிவும் திறமையும் வைத்து அவரை ஒப்பிடக்கூடாது, நாம் ஆரம்ப காலத்தில் இருந்த நிலையை மனதில் கொள்ளவேண்டும். அவரைச் சிறந்தவராக மாற்றுவது நம்முடைய பொறுப்பு என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அதற்குத் தேவையான வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். தவறே செய்யக்கூடாது என்பது இல்லை, தவறுகள் இயற்கையானது, அவற்றிலிருந்து மேலும் கற்றுக்கொள்ள முடியும் என்று உற்சாகப்படுத்த வேண்டும்.

4. பயிற்சிக் காலம் முடிந்த பிறகும், முதலில் இலகுவான இலக்குகளை அமைத்துக்கொடுத்து அவருள் தன்னம்பிக்கை வளர்க்க வேண்டும், இன்னமும் நெறிப்படுத்த வேண்டிய விடையங்களை அவருக்கு உணர்த்த வேண்டும். அந்தச் செயலுக்கு வேண்டிய எல்லா உபகரணங்களையும் அவருக்கு எட்டச் செய்ய வேண்டும். (இதனை இதனால் இவன் முடிக்கும்…)

5. அவர் இந்தச் செயலுக்கு முழுமையாகத் தயார் ஆகிவிட்டார் என்ற நிலையில் அவருக்கு முழுச் சுதந்திரத்தையும் கொடுத்து நாம் சற்றேவிலகி நிற்க வேண்டும். (இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்)

6. இந்தச் செயல்பாட்டை இன்னும் சிறப்பாகச் செய்வதற்கு ஏதேனும் புதுமைகள் புகுத்த வேண்டியிருந்தால், அதற்கும் அவருக்கு உரிமை இருக்கிறது என்று தெளிவுபடுத்த வேண்டும்.

7. இலக்குகள் இணைந்து நிர்ணயித்து, அதனைக் கண்காணிக்கும் கால அளவுகளையும் ஒத்துக்கொண்டு, அந்த அந்தக் கால அளவுகளில் செயல்பாட்டைத் தணிக்கை செய்து மாற்று வழிகளைக் கண்டெடுத்து, உற்சாகப்படுத்தி நடத்திச் செல்ல வேண்டும்.

8. நம்மை விடவும் சிறப்பாக அவர் இந்தச் செயலைச் செயல்படுத்தினால் அதுதான் நமது வெற்றி என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

பொறுப்பை மற்றவருக்குப் பங்களிக்கத் தயங்குவற்கு இரண்டாவது காரணமென்ன வென்றால், ஒரு வேளை இவருக்குப் பொறுப்பு கொடுத்துச் சிறப்பாகச் செய்து முடித்துவிட்டால், பிறகு என்னுடைய நிலைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம்.

இந்த பயம் தேவையற்றது, இதனைச் சந்திக்கும் வழிமுறைகளை அடுத்த இதழில் பார்ப்போம்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *