– சோம.வள்ளியப்பன்
டாஸ்கிங் மல்டி டாஸ்கிங்
எல்லாம் ஒன்றல்ல. வேலைகளில் Variations & Similarities உண்டு.
செய்கிற வேலைகளில் சிலவாகிற நேரத்தினை குறைத்து, மீதமாகும் நேரத்தில், வேறு பயனுள்ள வேலைகளைச் செய்ய வேண்டும். இதுதான் நமது நோக்கம். இதனை செய்யக்கூடிய பல்வேறு வழிமுறைகளை ஒவ்வொன்றாக பார்த்து வருகிறோம்.
எல்லா வேலைகளும் ஒரே அளவு முக்கியமானது அல்ல என்பதையும் அதன் காரணமாக எல்லா வேலைகளையும் ஒரே அளவு கவனமாக செய்ய வேண்டியதில்லை என்பதையும் முன்பே பார்த்தாகிவிட்டது. இதன் பொருட்டே நல்ல அளவு நேரமிச்சம் கிடைக்கும்.
அடுத்து, இன்னும் கூடுதலாக நேர மீதம் செய்யமுடியுமா? (ஈரத் துண்டினை இன்னும் இறுக்கமாக பிழிந்து தண்ணீரை அகற்றுவதைப் போல!) என்று பார்க்கலாம்.
முக்கியமான வேலையைச் செய்கிறோம். அதனை கூடுதல் கவனத்துடன் தான் செய்தாக வேண்டும். செய்வோம். ஆனாலும் அதிலும்கூட நேரத்தினை மீதம் செய்ய முடியும்.
செய்யும் பல வேலைகளை முக்கியத்தின் அடிப்படையில் தரம் பிரிப்பது போலவே, ஒரு வேலையையே பல சிறு பகுதிகளாக (கூறுகளாக) பிரிக்கலாம். முழு வேலைக்கும் பெயர் ‘ஒர்க்’. அதன் பகுதிகளுக்குப் பெயர் டாஸ்க் (Task).
இனி அந்த பல ‘டாஸ்க்’குகளில் எவற்றை மட்டும் கூடுதல் கவனத்துடன் செய்தால் போதும் என்று பார்க்க வேண்டும். மற்றவற்றை செய்யும் நேரத்தில் காலமிச்சம் செய்யலாம்.
வளர்ந்த நாடுகளுக்குப் போய் வந்தவர்கள் சொல்லுவதைக் கேட்டிருக்கலாம். அங்கே அமைக்கப்பட்டிருக்கும் சில துரிதப் போக்குவரத்துச் சாலைகள், (ஆட்டோபான், எக்ஸ்பிரஸ் காரிடார்) பல கி.மீ. தூரங்களுக்கு, இழுத்துவிட்ட நேர்கோடுகள் போல இருக்கும். குண்டு குழிகள், ஏற்ற இறக்கங்கள் இல்லாத வாகனப் பாதைகளாக, வண்டிகள் ஓட்டுபவர்களுக்கு சிரமம் ஏதும் கொடுக்காத ஓடுபாதைகளாக அவை செய்யப்பட்டிருக்கும்.
அப்படிப்பட்ட சாலைகள் நெடுக்குப் போக்கில் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு., ஒவ்வொரு பாதைக்கும் என்று (அதிகபட்சமல்ல) குறைந்த பட்ச வேகம் அறிவிக்கப்பட்டிருக்கும். அந்த பாதையில் செல்லுகின்ற அனைத்து வாகனங்களுமே அந்த குறிப்பிட்ட வேகத்தில்தான் சென்றாக வேண்டும்.
அப்படிப்பட்ட சாலைகளில் வாகனம் ஓட்டுவதற்கும், (உதாரணத்திற்கு) கோவை ராஜ வீதி அல்லது சென்னை மைலாப்பூர் மாட வீதிகளிலோ வாகனங்கள் ஓட்டுவதற்கும் என்ன வேறுபாடுகள் இருக்க முடியும்?
அங்கே வண்டிகள் ஓட்டுவது எளிது. காரணம், ஊகிக்கத் தக்க வகையில்தான் அனைவரும் ஓட்டுவார்கள். எதிர்பாராத சூழல்கள், நிமிடத்திற்கு நிமிடம் ஸ்டியரிங்கினையும், கிளட்சையும் மாற்றவேண்டிய அவசியம், பிரேக்கினையும் பயன்படுத்த வேண்டிய தேவை போன்றவை வராது. அப்படியென்றால், ஏறி அமர்ந்து, ஓட்டத் துவங்கியதும் என்ன செய்கிறோமோ அதுதான் அதிக நேரத்திற்கு. கப்பலை ஒரு பாதையில் திருப்பி, ஓடவைத்தபின் மாலுமி புத்தகம்கூட படிக்கலாம், பாட்டுக் கேட்கலாம். பெரியதாக ஏதும் நிகழ்ந்துவிடாது.
ஆனால், நம் நாட்டில் மட்டுமல்ல, எந்த நெரிசல் மிகுந்த சாலையில் வண்டி ஓட்டுவதென்றாலும் மிகவும் கவனமாகவே செய்ய வேண்டியிருக்கும். காரணம் வேலையில் தொடர்ந்து தேவைக்கு ஏற்ப செய்ய வேண்டிய மாறுதல்கள்.
இதுதான் நாம் தினசரி செய்கிற செய்ய வேண்டியிருக்கிற வேலைகளில் கண்டுபிடிக்க வேண்டிய விஷயம். எந்த பகுதிகள் அதிக மாறுபாடுகள் இல்லாமல் செய்ய வேண்டியவை? எவை அடிக்கடி பார்த்துப் பார்த்து மாறுபாடுகள் செய்ய வேண்டிய வேலைகள்? அல்லது வேறுபாடு காட்டவேண்டிய வேலையின் பகுதிகள்?
வேலைகளில், வேலை பகுதிகளுக்கிடையே (Task-ல்) உள்ள மாறுபாடுகளும் ஒற்றுமைகளும் (Variations & Similarities) என்ன என்ன? பெண்கள் பூ கட்டுவதைப் பார்த்திருக்கலாம். பேசிக் கொண்டே கட்டுவார்கள். எவருடன் பேசுகிறார்களோ அவர்கள் முகத்தினைப் பார்த்துக்கொண்டே, சுலபமாக, வேகமாக கட்டுவார்கள். காரணம் அந்த வேலை ஒரே மாதிரியானது. இரண்டு மல்கைப் பூக்களை எடுக்க வேண்டியது. ஒன்றுக்கு ஒன்று எதிர் எதிராக சேர்த்துவைத்து, நாராலோ (நூலாலோ) கட்ட வேண்டியது.
மீண்டும் இரண்டு பூக்கள். அடுக்கல். கட்டல். விரல்கள் தொடர்ந்து விளையாடும். வேகம் காட்டும். இது, இந்த வேலையில் இருக்கும் ஒரே மாதிரியான (Similarities) ‘டாஸ்க்’குகள். இதுதான் வேலையில் மிகவும் அதிகமான பகுதி.
திடீரென பேச்சில் இருந்து அவர்களின் கவனம் மாறும். இப்போது கட்டிய பூச்சரத்தினை உயர்த்திப் பிடித்து, அதன் நீளத்தினை, எவ்வளவு வந்திருக்கிறது, சரியாக வந்திருக்கிறதா என்றெல்லாம் ஒரு பார்வை பார்த்துக் கொள்ளுவார்கள். அல்லது, பூக்குவியலை, கைகளால் நிரவிவிடுவார்கள். அல்லது பூக்களின் மீது கொஞ்சம் தண்ணீர் தெளிப்பார்கள். இவற்றை தேவைப்படும் போது மட்டுமே, தேவைப்படும் அளவு மட்டுமே செய்வார்கள்.
இது அந்த பூக்கட்டல் வேலையில், இந்த பகுதிகள் (டாஸ்க்குகள்)தான் மாறுபாடான (Variations) பகுதிகள்.
வாகனங்கள் ஓட்டுவது, பூக்கட்டுவது எல்லாம் உதாரணங்கள்தான். நேர மிச்சம் செய்ய வேண்டியது இதில் மட்டுமல்ல. இதே அணுகு முறையினைப் பயன்படுத்தி, நாம் செய்கிற அலுவலக வேலைகள், வீட்டு வேலைகள் தொழிற்சாலை வேலைகள் என பலவற்றிலும் நேரம் மிச்சம் செய்யலாம்.
முதல் அர்த்தமுள்ள முழுமையான ‘டாஸ்க்’ குகளை பிரித்தல். அதன் பிறகு அவற்றில் ஒரேபோல இருக்கும் Similar வேலைகளையும், வேறுபாடான வேலைகளையும் பகுப்பு செய்தல்.
இப்படி அதிக கவனமின்றி செய்யக்கூடிய பகுதிகளை கண்டறிந்து, அவற்றை வேகமாகவோ அல்லது அவற்றைச் செய்யும்போது கூடவே வேறு சில அதிக முக்கியமில்லாத மற்றும் அதிக ‘சிமிலாரிட்டி’ இருக்கும் வேலைகளையும் செய்யலாம்.
ஆமாம், ‘மல்டி டாஸ்கிங்’ தான்.
தொடரும்
Leave a Reply