நம்பிக்கை தரும் நாட்டுப்பற்று

-வழக்கறிஞர் ஸ்டாலின் குணசேகரன்

வல்லமை தாரோயோ – திருச்சி

“அமெரிக்காவின் தலைவர் உலகத்தின் தலைவராக கருதப்படுகிறார். அந்தப் பதவிக்கே இளம் வயதில் வரமுடிகிறது என்றால் அதற்குக் காரணம் அவர் நெஞ்சில் ஆழமாயிருந்த நம்பிக்கைதான். விடாமுயற்சி, நம்பிக்கை, அர்ப்பணிப்பு உணர்வு, தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று இடையறாமல் சிந்திப்பது, வளர்த்துக் கொண்டிருக்கிற தகுதியை முறையாகப் பயன்படுத்த வேண்டுமென்கிற எண்ணம் இவை கலந்த கூட்டுத் தொகுப்பாகத்தான் ஒபாமா அமெரிக்கா அதிபராக வெற்றி பெற்றிருக்கிறார். இது அமெரிக்காவில்.

இது அமெரிக்காவால் முடியும், ரஷ்யாவால் முடியும், சாப்பாட்டிற்கே சிரமப்படுகிற ஏழை நாட்டில் சந்திரனைப் பற்றி நினைக்க முடியுமா என்று எண்ணியவர்கள் ஏராளம். ஆனால் இன்று சந்திரனைப் பற்றி நினைக்க முடிந்தது அல்ல, சந்திராயன் என்ற விண்கலத்தை சந்திரனுக்கு இந்தியா அனுப்பியிருக்கிறது. இந்தியர் அனைவரும் பெருமைப்படத்தக்க விஷயம் இது.

1959ல் விண்வெளிக்கு முதல் விண்கலம் ரஷ்யாவிலிருந்து செலுத்தப்பட்டது. இதுவரை 67 முறை விண்கலன்கள் விண்வெளிக்கு செலுத்தப் பட்டிருக்கிறன. சந்திராயன் 68வது விண்கலம். ஆனால் ரஷ்யாவும், அமெரிக்காவும் தங்கள் விண்கலங்களில் பொருத்தாத புதிய புதிய கருவிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதில் ஐந்து கருவிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை.

ஏறத்தாழ ஐம்பது வீடுகள் கொண்ட கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே இருக்கிற ஒரு கிராமத்தில் மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் திரு.மயில்சாமி அண்ணாதுரை. தாத்தா ஒரு பெட்டிக்கடை நடத்தியவர். தந்தை ஆசிரியர். தொடக்கப் பள்ளி இறுதிவரை தமிழ் போதனை முறையிலே படித்தவர். ‘சந்திராயன்’ திட்ட இயக்குநராக இந்தத் திட்டத்தை எத்தனை நாள் அடைகாத்து வைத்திருப்பார்?

இயற்கையான, இயல்பான, உணர்வுப்பூர்வமான நம்பிக்கைதான் நீடிக்கும். திருக்குறளையும், பாரதியார் கவிதைகளையும் படித்தால் நெஞ்சில் ஆழமான நம்பிக்கை பதியும்.

‘வினைத்திட்பம்’ என்ற ஓர் அதிகாரம் மட்டும் போதும். பாரதியாரின் ஆத்திச்சூடி முழுவதும் படித்தால் போதும்.

நம் நாட்டுத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்தாலே நம்பிக்கை வளரும். வ.உ.சி யின் வாழ்க்கையை மட்டுமே படித்தால் கூட போதும்.

1917ல் ரஷ்யப் புரட்சி நடைபெறுகிறது. அதன்பிறகு இந்தியாவில் 1920ம் ஆண்டு தொழிற்சங்கம் தோன்றியது. ஆனால் 1908 ஆம் ஆண்டு, இந்தியாவில் தொழிற்சங்கச் சட்டம் உருவாவதற்கு முன்பே, தொழிற்சாலையில், தொழிலாளர்களை கொடுமைப்படுத்துவதைப் பார்த்தபிறகு, தொழிற்சங்கம் உருவாக்க வேண்டுமென்று எந்த சங்கத்தையும் முன்னுதாரணமாக கொள்ள முடியாத அந்த காலகட்டத்திலேயே ஒரு தொழிற்சங்கத்தை நம்பிக்கையோடு தொடங்கினார் வ.உ.சி. அதன் சார்பில் நடைபெற்ற போராட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றார்.

சுதேசிக் கப்பல் வாங்குவதற்காக பம்பாய் சென்றவர், அவருடைய மகன் உலகநாதன் இறந்த போதும், தமிழகம் திரும்பி வராதவர். கப்பலோடு தான் தமிழகம் திரும்பினார்.

மகன் இறந்த போதும், உறுதி குலையாது எடுத்த லட்சியம். நிறைவேறவேண்டுமென்று சிந்தித்தாரே, அப்போது அவருக்கு அந்த நம்பிக்கையை உருவாக்கியது நாட்டுப்பற்றுதான்.

சமூக சிந்தனை ஒருவனுக்கு நம்பிக்கையை உருவாக்கும். தான் மட்டுமே முன்னேற வேண்டுமென்று சிந்திப்பவன், ஒரு வேளை முன்னேற முடியாமல் போகிறபோது அவன் சோர்வடைவான். நானும் முன்னேற வேண்டும் நாடும் முன்னேற வேண்டுமென்று சிந்திப்பவன் சோர்வடைய மாட்டான்.

பரீதாபாத்தில் அரசின் விஞ்ஞான ஆய்வுக் கூடம் ஒன்றுள்ளது. அதன் தலைமை விஞ்ஞானி ஒரு பெண்மணி. அவர் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக், நைலானிலிருந்து பெட்ரோல் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்துவிட்டார்.. அதைப் பற்றி மத்திய அமைச்சர்களுக்கு கடிதமெழுதியிருக்கிறார். எப்படியோ ஒரு ஜப்பானிய நிறுவனம் இதை அறிந்து அவரைச் சந்தித்து ஜப்பானுக்கு நீங்கள் வந்து இந்த முறையைச் சொல்லித் தந்தால் உங்களுக்கு எவ்வளவு சம்பளமோ அதைத் தந்துவிடுகிறோம் என்றார்கள். அதற்கு அந்தப் பெண்மணி, “இல்லை நான் ஜப்பானுக்கு வர இயலாது. ஏனென்றால் இந்தியாவின் வரிப்பணத்தில் நான் கற்ற கல்வி ஜப்பானிய மக்களுக்கு பயன்பட அல்ல” என்று மறுத்துவிட்டார்.

இதைக் கேள்விப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவன அதிகாரிகள் அவரிடம், “உங்கள் நாட்டுப் பற்றை பாராட்டுகிறோம். நீங்கள் எங்கள் நிறுவனத்தில் பணியாற்றி நீங்கள் கண்டுபிடித்த முறையின் மூலம் பெட்ரோல் தயாரிக்கலாம்” என்றார்கள் .

பூர்த்தி செய்யப்படாத காசோலை ஒன்றையும் அளித்தார்கள். அதை மறுதலித்து அந்தப் பெண் விஞ்ஞானி, “நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஜப்பான் நிறுவன அதிகாரிகளை திருப்பி அனுப்பினேன். இப்போதும் சொல்கிறேன். என் கல்வியை இந்திய மக்களுக்காக பயன்படுத்துவேனே தவிர, தனிப்பட்ட முதலாளிகள் லாபமடைவதற்காக அல்ல ” என்று சொன்னார்.

எவ்வளவு உறுதி, நம்பிக்கை அந்தப் பெண்மணிக்கு இருந்திருக்க வேண்டும் என்று சிந்தியுங்கள்.

‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ புத்தகத்தை எழுதத் தொடங்கியபோது, ஒரு எழுத்தாளரிடம் இந்த முயற்சியை பற்றி சொன்னேன். கிட்டத்தட்ட ஆறுமணி நேரம் நான் பேசினேனே தவிர அவர் பேசவில்லை. நான் வலுக்கட்டாயமாக அவரைப் பேச வைத்த போது, “இந்த முயற்சி வெற்றி பெறாது” என்றார். நான், “வெற்றி பெற்றால்?” என்றேன்.

அவர், “விடுதலைப் போராட்டத்தின் போது அந்தமான் சிறையில் ஏழு ஆண்டுகள் தண்டனை பெற்றவருக்கு கிடைக்கக்கூடிய மரியாதை, பெருமை, இந்த புத்தகத்தை உருவாக்கினால் கிடைக்கும்” என்றார். அந்த ஒரு வார்த்தைதான் எனக்குள் நெருப்பை பற்ற வைத்தது. ஆறாண்டு காலம் இடைவிடாத முயற்சியில் விடுதலை வேள்வியில் தமிழகம் உருவானது. ஆயிரம் அலுவல்களுக்கிடையில் முதல்வர் கருணாநிதி அணிந்துரை வழங்கினார்.

வேறு பதிப்பகங்கள் வெளியிட முன்வராத சூழலில் நானே வெளியிட்டேன்.

நாட்டிற்காக அனைத்தையும் இழந்ததல்லவா சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். நான் நான்கைந்து வருட காலம் இதற்காக ஒதுக்கினேன். சிறையில் நாம் வாடவில்லை. வரலாற்றை பதிவு செய்கிறோம். இது தியாகமல்ல. அவர்களுக்கு நன்றி செலுத்துகிற கடமை.

நம்பிக்கை என்பது பணம் மட்டும் சம்பாதிக்க அல்ல. தொழிலதிபராக பணக்காரராக மட்டுமல்ல. ஒரு பெரிய வீரனாக, நம் லட்சியத்தின் வாயிலாக நாட்டின் புனிதமான வழிகாட்டியாகவும் நாம் உருவாக வேண்டுமென்றா ல், எதிர்பார்ப்பில்லாமல் இந்த சமுதாயம் பயனடைய வேண்டுமென்று லட்சிய வெறியோடு செய்யக்கூடிய காரியம்தான் வெற்றி பெறும். பெறவேண்டும். அதுதான் தேசத்தின் வெற்றி.

2 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *