ஆபத்திலும் சோகத்திலும் கூட…

– சோம. வள்ளியப்பன்

‘உங்களுக்குள் கற்றுக்கொள்ளும் மனப்பான்மை இருந்தால் போதும். சொல்லித் தருவதற்கு எல்லா இடத்திலும் எந்நேரமும் ஆசிரியர்கள் தோன்றுவார்கள்’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.

மார்ச் மாதம் 11ம் தேதி. மதியம் 2.46 மணி. ஜப்பானின் மேற்காக, பசிபிக் மகாசமுத்திரத்தில், கடலுக்கு அடியில் 34 கி.மீ ஆழத்தில், சுமார் ஆறு நிமிடங்கள் வரை நீடித்த, ரிக்டர் அளவுகோலில் 9 என்று பதிவாகிய ஒரு பூகம்பம் அது. அதன் காரணமாக, ஜப்பானின் பல்வேறு பகுதிகளில், சில ஆள் உயரங்களுக்கு எழும்பி வந்து தாக்கின ஆழிப்பேரலைகள். சில இடங்களில் 10 கி.மீ அளவுகூட, நிலத்திற்குள் வந்தது கடல் நீர்.

12 ஆயிரத்து சொச்சம் மக்கள் சாவு. 5000 பேர் காயம். 15,000 நபர்களை காணவில்லை. ஒண்ணேகால் லட்சம் கட்டிடங்கள் சேதம். 44 லட்சம் மக்களுக்கு மின்சாரம் இல்லை. 15 லட்சம் பேருக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. புக்குஷிமா அணுமின் நிலையத்தை சுற்றியிருந்த 20 கி.மீ சுற்றளவில் வசித்துவந்த மக்கள், கதிர் வீச்சின் பாதிப்பில் இருந்து காப்பாற்றப்படுதற்காக, அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டார்கள்.

ஒரு கோடிக்கும் சற்று கூடுதலான மக்கள் வசிக்கும் ஜப்பானின் முக்கியமான பெரிய ஹோன்ஸ்சு தீவு. (உலகின் 7வது பெரிய தீவு) இந்த நில அதிர்வால், அது இருந்த இடத்தில் இருந்து 2.4 மீட்டர் (7.9 அடி) கிழக்காக, வட அமெரிக்கா பக்கம் நகர்த்தப்பட்டிருக்கிறது. பூமிப்பந்து அதன் அச்சில் இருந்து, 10 செ.மீ (3.9 இன்ச்) பிழன்றிருக்கிறது. இதன் காரணமாக, உலகம் முழுவதற்கும் ஒரு நாளின் அளவே, 1..8 மைக்ரோ வினாடி குறைந்துவிட்டது. இந்த சுனாமியால் உண்டான மொத்த பொருட்சேதத்தின் மதிப்பு, சுமார் 13 லட்சம் கோடி ரூபாய்.

இவ்வளவும் நேர்ந்ததை கேள்விப்பட்டவர்கள், ஊடகங்களின் மூலம் தெரிந்து கொண்டவர்கள். அதிர்ந்து வாயடைத்துப் போய் விட்டார்கள். சோகமும் பச்சாதாபமும் நெஞ்சை முட்ட, நிகழ்பனவற்றை ஊடகங்கள் மூலம் கனத்த இதயத்துடன் செய்வதறியாது பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவ்வளவு பெரிய ஆபத்தினையும் சீரழிவினையும் நேரடியாக சந்தித்த மக்கள் எப்படி நடந்து கொண்டார்கள்?

அது அவசியம் தெரிந்து கொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் வேண்டியது. ஒரு மனிதனின் குணாதிசயம், அவனது உண்மை சொரூபம் அவன் சிரமத்தில் இருக்கும் போது நடந்து கொள்ளுவதில் தெரிந்துவிடும் என்பார்கள். சாவின் விளிம்பிலும், பசி தாகம் உடைமைகள் உறவினர்கள் இழப்பு என்கிற சொல்லொணா துயரங்களின் நடுவிலும், பாதிப்படைந்த ஜப்பானியர்கள் நடந்து கொண்ட விதம், நம்மால் நம்ப இயலாதது என்றுதான் சொல்ல வேண்டும்.

அவ்வளவு அபாயத்திலும், உயிரினைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய கட்டாயத்திலும் கூட, சாலைகளில் வேகமாக செல்லவேண்டிய நிர்ப்பந்தத்திலும் வரிசைகளிலேயே சாலை விதிகளின்படியே சென்றிருக்கிறார்கள். அவ்வளவு பதற்றத்திலும் ஒலிப்பான்களை அலறவிடவில்லை.

குளிரூட்டப்பட வேண்டிய கட்டாயத்தில் இருந்த, சேதமடைந்து கதிர்வீச்சு செய்ய தொடங்கி விட்ட அணுஉலையின் ஊழியர்களில் 50 பேர், அவர்களுக்கு பாதிப்பு இருக்கும் என்று நன்றாகவே தெரிந்திருந்தும் அங்கேயே தங்கியிருந்து அந்த வேலையினை தொடர்ந்திருக்கிறார்கள்.

ராணுவமும் அரசின் குழுக்களும் சுனாமி பாதிப்புகளை சரி செய்வதிலும் அணுகதிர் வீச்சு கட்டுப்பாட்டிலும் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, தன்னார்வ குழுக்களும் சமுதாய குழுக்களுமே மக்களுக்கு உணவும் தண்ணீரும் ஏற்பாடு செய்து கொண்டிருந்திருக்கின்றன.

பாதிக்கப்பட்ட மக்கள் பசியோடும் தாகத்துடனும், வாழ்நாள் சேமிப்பில் உருவாக்கிய உடைமைகளையும் சில உறவு களையும் இழந்துவிட்ட காரணத்தினால், அதைவிட கூடுதல் சோகத்துடனும், நிவாரணம் வழங்கப்படும் இடங்களுக்கு வந்தவர்கள், முண்டியடிக்காமல், ஒருவர் பின் ஒருவராக, அமைதியாக, வரிசைகளில் நின்றிருக்கிறார்கள். அவர்களை காவலர்களோ, வேறு எவருமோ அப்படி நிற்கச் சொல்லவில்லை.

எவரும் முன்வந்து மற்றவர்கள் ஒழுங்கு படுத்த வில்லை. அனைவருமே அவர்களாகவே முன்வந்து வரிசை அமைத்துக்கொண்டு நின்றிருக்கிறார்கள். நிற்பவர்களில் வயதானவர்கள் குழந்தைகள், உடல்நலம் சரியில்லாதவர்களும் இருந்தார்கள். ஆனாலும் வேறு எவருக்கும் முன்பாக, தங்கள் கைகளை, எனக்கு முதலில்… என்று அவர்கள் நீட்டவில்லை. மற்றவர்களைக் காட்டிலும் தனக்கு ஏன் கூடுதலாகவோ, முன் கூட்டியோ தரவேண்டும் என்று, தங்கள் பக்கத்து நியாயத்தினை எடுத்துப் பேசவில்லை. பச்சாதாபம் எதிர்பார்க்கவில்லை.

பேரழிவின் காரணமாக வரிசையில் நின்ற அனைவருக்கும் தேவையான பொருட்கள் முழுவதும் கிடைக்கவில்லை. ஆனாலும் அங்கே கூச்சலில்லை. குழப்பமில்லை. அடிதடியில்லை. குற்றஞ்சொல்லி எவரையும் திட்டிய காட்சிகள் அரங்கேறவில்லை.
செண்டாய்யில் இருந்த ஓட்டல் ஒன்றில் சூடாக சூப் செய்து எடுத்து வந்து வெளியில் வைத்து வெளியில் போவோர் வருவோரை அழைத்து கொடுத்துக் கொண்டிருந் தார்கள். அதனைப் பெற்றுக் கொண்ட பலருக்கும் அதுதான் சுனாமிக்கு பிறகு கிடைத்த முதல் ஆகாரம். ஆனால், வாங்கிய எவரும், இரண்டாவது முறை வரிசைக்கு வரவில்லை. தங்கள் பசியாற்றிக் கொள்ள, மற்றொரு கப் சூப் கிடைக்குமா என்று பார்க்கவே யில்லை.

இடிபாடுகளில் சிக்கியவர் களை தேடித் தேடி காப்பாற்று கிறார்கள். இடிபாடுகளுக்கு இடையே சிக்கி சிரமப் பட்டுக் கொண்டிருந்த ஒரு பெண் மணியினை மீட்கிறார்கள். அப்போது அவர், தன்னை மீட்பவர் களிடம் சொல்லியிருக்கிறார், “மன்னித்துக் கொள்ளுங்கள். என்னால்தான் உங்களுக்கு எவ்வளவு சிரமம்”.
ஒரு கடையில் பொருட்கள் வாங்க நின்று கொண்டிருந்தபோது மின்சாரத் தடை ஏற்பட்டு இருள் சூழ, உள்ளேயிருந்த மக்கள், கைகளில் கூடைகளில் இருந்த பொருட்களை அப்படி அப்படியே வைத்துவிட்டு, கடைக்கு வெளியே வந்து விட்டிருக்கிறார்கள்.

நள்ளிரவில் வாகனப் போக்குவரத்திற்காக சப்-வேக்கள் மீண்டும் திறக்கப்பட்டபோது, வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையில் நின்று போயிருக்கின்றன.
மொத்தத்தில் அவ்வளவு பெரிய ஆபத்திலும், துயரத்திலும் சோகத்திலும், எவரும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு, சரிந்து விழுந்து அழவில்லை.
கடைகளை சூறையாடுவது, அள்ளிக் கொண்டு ஓடுவது போன்ற எதுவும் அங்கே நடைபெறவில்லை. பல உணவு வியாபார நிலையங்கள் விலைகளை தாங்களாகவே குறைத்திருக்கின்றன.

பணம் பட்டுவாடா செய்யக் கூடிய ஏ.டி.எம் இயந்திரங்கள் காவல் இல்லாமலேயே பத்திரமாக இருந்திருக்கின்றன. அப்போதைய தற்காலிக தேவைகளுக்கு மட்டுமே மக்கள் பொருட்களை வாங்கியிருக்கிறார்கள். அதனால், எல்லோருக்கும் ஏதாவது கிடைக்கும் என்கிற நிலை இருந்திருக்கிறது.

மிகப்பெரிய பேரழிவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தபோதும் மனிதத்தன்மையை, அடுத்தவரின் தேவைகளை, சட்டத்தினை, ஒழுங்கினை மதிக்கத் தவறாதது மட்டுமல்ல. அவற்றையெல்லாம் கூடுதலாகவே பின்பற்றி இருக்கிறார்கள் ஜப்பானியர்கள். எவர் தூண்டுதலோ வழிகாட்டுதலோ கண்காணிப்போ இல்லாமல் தாங்களாகவே இயல்பாகவே செய்திருக்கிறார்கள்.

ஜப்பானிய மக்களால் எப்படி இவ்வாறு நடந்துகொள்ள முடிகிறது என்று உலகின் பல பகுதிகளில் உள்ளோரும் வியப்படையவே செய்திருக்கிறார்கள். இது பற்றி இணையங்களிலும் பல விவாதங்கள் நடந்திருக்கின்றன. விவாதங்களில் கலந்து கொண்டவர்கள் எழுதியவற்றுள் முக்கியமான சில.

“கொள்ளையடிப்பது (லூட்டிங்) என்பது ஜப்பானில் நடக்கவே நடக்காது என்றும் அப்படிப்பட்ட செயலுக்கு ஜப்பானிய மொழியில் ஒரு சொல் இருக்குமா என்றே தெரியவில்லை”.

4 Responses

  1. k.ramesh

    dear sir,
    this is realy very great sir, thank you sir.

  2. kasthuri kumar

    Dear Sir, When i am Reading M eys Are crying.SO,Nice Japan People.

    Thanks For Sharing.

    Kasthuri Kumar,
    Oman.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *