வல்லமை தாராயோ

திருச்சி 18.01.2009

திருச்சி மாநகரில் இப்படி ஒரு நல்ல நிகழ்ச்சியினை அறிமுகப்படுத்தி தொடர்ந்து சிறப்பாக நடத்தி வரும் நமது நம்பிக்கை, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் தினமலருக்கு என் நன்றி.

வல்லமை எல்லோருக்கும் வேண்டும். எதற்கு வல்லமை? வெற்றி பெறுவதற்கு வல்லமை. சமீபத்தில் ஸ்லம்டாக் மில்லியனர் என்கிற திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காக, ஏ.ஆர். ரஹ்மான் அவர்களுக்கு உலகளாவிய விருது

கிடைத்திருக்கிறது. இது அவருடைய வெற்றி. டாக்டர் அண்ணாதுரை அவர்கள் சந்திராயன் என்கிற விண்கலத்தினை ஏவியதன் மூலம் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

இவை உதாரணங்கள்தான். வெற்றி என்றால் அது, இவற்றைப் போல, உலக அளவில் திரும்பிப் பார்க்க வைக்கும் அண்ணாந்து பார்க்க வைக்கும் பெரியனவாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.

நம் அளவில் நாம் செய்து கொண்டிருப்பதில் பெறும் வெற்றிகள் எல்லாம் இதே அளவு முக்கியமானவைதான். படிப்பு, வேலை, சுய முன்னேற்றம், தொழிலில் வெற்றி, விடுதலை, அரசியல் மாற்றங்கள், சமூக மாற்றங்கள், கண்டுபிடிப்புகள் என்று எதுவாகவும் இருக்கலாம். அப்படிப்பட்ட நம் தேவைகளை நான்கு பகுதிகளாக பிரிக்கலாம்.

(1) நம் முன்னேற்றம் (2) பிறர் அல்லது பொது முன்னேற்றம் (3) நம் தற்காப்பு (4) பிறரை காப்பாற்றுவது.

விரும்புவது, வேண்டுவது இவற்றில் எதுவாகவும் இருக்கலாம். அதற்காக நாம் முயற்சித்தால் அது கட்டாயம் கிடைக்கவேண்டும். அதுதான் முயற்சிக்கு கிடைக்கும் மரியாதை.

சிலருக்கு அவர்கள் வேண்டுவது கிடைக்கவில்லை. அதற்கு என்ன காரணம்? நிறைவேறிய ஆசைகளுக்கும் நிலுவையிலேயே இருக்கும் ஆசைகளுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் கமிட்மெண்ட், உறுதிப்பாடுதான்.

விரும்புவதை அடைவதில் தீவிரம் காட்டுபவர்கள் அதனை அடைந்து விடுகிறார்கள். வெறும் விருப்பம் மட்டுமே உள்ளவர்கள், அது தவிர (சௌகர்யம் பொழுதுபோக்கு, பாதுகாப்பு போன்ற சில) பிறவற்றில் நாட்டம் உள்ளவர்களாக இருப்பதால் அவர்களால், அவர்கள் விரும்புவதை அடையமுடியவில்லை.

எதையும் விட்டுக் கொடுக்காமல் வேண்டுவதை பெறமுடியாது. எது முக்கியம் என்று தீர்மானிக்க வேண்டும் அப்படி முடிவெடுத்த பிறகு அதன் பின் 100 சதவிகிதம் போக வேண்டும். வெறும் விருப்பங்கள் போதாது. வேட்கை வேண்டும்.

உறுதி உள்ளவர்கள் வெற்றி பெறுகிறார்கள். அந்த உறுதிதான் வல்லமை. நமக்குள்ளே இருக்கும் வல்லமை. உள்ளத்தில் உறுதி. எது வேண்டும், எது வேண்டாம் என்கிற உறுதி.

நமக்கு தெரியாத நமது வல்லமை

நம் உடம்பின் சில பாகங்களை நம்மால் பார்க்கவே முடியாது. சில பாகங்களை பார்க்கமுடியும் ஆனால் பார்த்ததே இல்லை. நமக்கு தெரியவே தெரியாத நம்முடைய மற்றொரு இடம் எது தெரியுமா? மனம்தான். மனவெளிதான். ஆம். அது ஒரு சாதாரண அளவு இடமல்ல. அது ஒரு பரந்த வெளி. அதில் சிலர் சஞ்சரிக்கிறார்கள். வேறு சிலருக்கு அது அவர்களுடைய இடம் என்றேதெரியாது. அதை பயன்படுத்தாமலேயே விட்டு விடுகிறார்கள். உயிரை விடும்வரை கூட.

வேலை நடக்கிறது

மனதிற்கு ஓய்வே கிடையாது. எதையாவது சிந்தித்துக்கொண்டேயிருக்கிறது. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 60,000 விதம் விதமான சின்ன சின்ன எண்ணங்கள், ஊதினால் சோப்புக் கரைசலில் இருந்து கிளம்பி காற்றில் அலையும் பறக்கும் முட்டைகள் போல வந்து போகின்றன. நில்லாமல் ஓடும் ஓர் அரவை யந்திரம் போல, நாளெல்லாம் மனது எதை எதையோ அரைத்துத் தள்ளிக்கொண்டே இருக்கிறது.

இதுதான் பிரச்சனை. எல்லாம் அல்ல முக்கியம். சிலதான். நாம் வேண்டுகிற சில அல்லது ஒன்றின் மீது மனதை நிறுத்த வேண்டும். நிலை நிறுத்துவது. ஒரு வெல்டர் கை நடுக்கமில்லாமல், வெட்டுகிற தகடு மீது நெருப்பினை பாய்ச்சுவது போல கவனத்தினை வேண்டும் ஒன்றின் மீதே வைக்க வேண்டும்.

மாடு பிடியில் இளைஞர்களின் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள திமிறும் காளையாக மனம் துள்ளும், உதறும். விடக்கூடாது. படிப்போ, வேலை அல்லது தொழில் முன்னேற்றமோ அல்லது வேறு எதுவுமோ. நம் பிடி நழுவக்கூடாது. கவனம் மாறவே கூடாது. தவம் போல அதே எண்ணமாக இருப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதே இல்லை.

ஓரிடத்தில் அமர்ந்துவிடுகிறார்கள். கண்ணை மூடிக்கொள்ளுகிறார்கள். மனதைத் திறக்கிறார்கள். என்னவோ செய்கிறார்கள். மிக வலிமையானவர்களாக எழுகிறார்கள். எப்படி?

வல்லமை என்பது வெளியில் மட்டுமல்ல. அபரிதமாக உள்ளேயே இருக்கிறது. சிலர் கண்டுபிடிக்கிறார்கள். ஒரு தானிய மூட்டைக்குள் ஒரு தோட்டமே இருக்கிறது. நம்மிடம் இல்லாத வல்லமை என்ன? ‘ ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி’ என்பார் மாணிக்க வாசகர். உள்ளே இருக்கிறது ஒளி.

மனதை பயன்படுத்துவது

இளையராஜாவும், ஏ.ஆர். ரஹ்மானும் மாயமா செய்கிறார்கள்? உள்ளிருந்து பீறிடுகிறது. அவர்கள் அதனை, அந்த கிணற்றினை அகழ்ந்து இருக்கிறார்கள். பூமிக்கு அடியில் தண்ணீர் இருக்கிறது. பெட்ரோல் இருக்கிறது. சரியான இடத்தில் ஆழ்குழாய் கிணறு தோண்டியவர்களுக்கு அது பாய்கிறது. எம்.எஸ்.வி. பற்றி சொல்லுவார்கள். ஆர்மோனியப் பெட்டியில் கை வைத்தால் அது விளையாடும் என்று. இசை என்கிற ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்து கிடக்கும் அவருடைய மனவெளியில் அவர், கைகள் இரண்டையும் அகல விரித்துக் கொண்டு, ஒரு பறவையைப் போல அப்படியும் இப்படியும் பறக்கிறார். உயர, தாழ என்று பல வித்தைகள் காட்டுகிறார்.

கண்ணதாசன், வைரமுத்து போன்றவர்கள் கவிதைகளாக கொட்டுகிறார்கள். அது அவர்களின் கிணறு. இறைக்க இறைக்க வற்றாத கிணறு. எல்லோரிடமும் அப்படிப்பட்ட வல்லமை இருக்கிறது.

கிராமபோன் தட்டின் மீது வைத்த ஊசி கிளம்பும் ஓசை போல, இசை போல, மனதின் மீது நாம் கண் வைத்தால், சரியாக வைத்தால் அதன் சக்தியை பார்க்கலாம். ஊசியை வைக்காத வரை அதன் மகிமை தெரியாது. பார்ப்பதற்கு சாதாரண தட்டு போலத்தான் இருக்கும். உள்ளே எவ்வளவோ இருக்கிறது. பஹல் செய்கிறவர்கள் பெறுகிறார்கள். கொடுக்கிறார்கள்.

உறுதி மட்டுமே வேண்டும். நம்மால் முடியும் என்கிற உறுதி. அதை செய்தே ஆவோம் என்கிற உறுதி. அதற்காக மற்றவற்றை இழக்கும் உறுதி. என்ன விலையானாலும் சரி; எதை இழக்கவேண்டி வந்தாலும் சரி; எவ்வளவு சிரமப்பட வேண்டி இருந்தாலும் சரி;

இது Add on இல்லை. இதுதான். இது மட்டும்தான் என்று நாம் விரும்புவதன் மீது வைக்கும் உறுதி.

வல்லமை நம்மிடமே இருக்கிறது. நம்மிடம் இருப்பதை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இருப்பது தெரிய வேண்டும். வல்லமை சேரும். மனமே வலிமை. அது நம்மிடமே இருக்கிறது. மனதை அடக்குகிற, விரிக்கிற, ஒடுக்குகிற, குவிக்கிற, பழக்குகிற, வல்லமை வேண்டும்.

வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *