உங்கள் குழந்தைகளும் சாதிப்பார்கள்
-மரபின் மைந்தன் முத்தையா
ஒரு குழந்தைக்கு, தன்னைப் பற்றிய அபிப்ராயமும், தன் தகுதிகள் குறித்த அறிமுகமும் பெற்றோர்களின் பாராட்டிலிருந்தோ வசவில் இருந்தோ பிறக்கிறது. சின்னத்தவறொன்றுக்கு “அட மக்குப் பயலே!” என்று தலையில் குட்டு வாங்கும்போது குட்டு, தலையில் பதிகிறது. தான் ஒரு மக்கு என்கிற எண்ணம் மூளையில் பதிகிறது.
அக்கறையாலும் அன்பாலும், குழந்தை திருந்த வேண்டும் என்ற தவிப்பிலும்தான் எல்லாப் பெற்றோரும் கண்டிக்கிறோம். ஆனால் குழந்தைகள் மனதில் என்ன பதிவை விடுகிறோம் என்பதுதான் முக்கியம்.
உங்கள் குழந்தை சராசரியாகப் படிக்கிறதா? இன்னும் படுக்கையை நனைக்கிறதா? சொன்னதைக் கேட்க மறுக்கிறதா? சொல்வது காதில் விழுவதேயில்லையா? விருந்தினர் வந்தால் எழுந்து உள்ளே போய் விடுகிறதா? சகஜ பாவமில்லாமல் சங்கோஜமாய் வளர்கிறதா? இத்தனை இருந்தாலும்…. நம்புங்கள்! உங்கள் குழந்தையும் சாதிக்கும்.
படிப்படியாய் சில முயற்சிகளை மிக இயல்பாகவும் நிதானமாகவும் வீட்டில் நாம் எடுத்தால்போதும். ஒரு தாவரம் துளிர்விட்டுத் தளிர்விட்டு வளர்வதைக் கண்கூடாகப் பார்ப்பது போல் குழந்தையின் வளர்ச்சியைக் காண முடியும்.
முதலாவதாக, தாங்கள் பிறந்து வளர்ந்த குடும்பம் – பாரம்பரியம் குறித்தெல்லாம் குழந்தைகள் தெரிந்து கொள்வது முக்கியம். பணத்தை மையப்படுத்தியே வாழ்வதாய் கருதப்படுகிற மேலைநாடுகளில்கூட ஊஅஙஐகவ பதஉஉ என்று தங்கள் வேர்களைத் தேடும் வேலையில் இளைய தலைமுறை இறங்கியிருக்கிறது.
தாத்தா பாட்டி – அவர்களுக்கும் முந்தைய தலைமுறை- அவர்கள் செய்துவந்த தொழில் – அவர்களுடைய ஆளுமை – அவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் போன்றவை குறித்தெல்லாம் குழந்தைகளுக்கு உற்சாகமாக சொல்லுங்கள். தன்னுடைய பரம்பரை குறித்த அறிவு மனதுக்குள் மிகுந்த நம்பிக்கைய வளர்க்கும். ஒரு வேளை முன்னோர்கள் சிரமப்பட்டு உயர்ந்திருந்தால்கூட அவர்கள் கதையே ஒரு முன்னுதாரணமாய் அந்த இளம் இதயங்களில் நிலைக்கும். கடந்த கால உறவுகள் பற்றிய தகவல்களும், நிகழ்கால உறவுகள் உடனான நேரடி அறிமுகமும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். “எங்கே சார்! உறவுகள் வந்தால் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள்!” என்று நீங்கள் கேட்கலாம்.
கோவையில், “சிகரம் உங்கள் உயரம்” அமைப்பின் கிளை அமைப்பாகிய “வளரும் சிகரங்கள்” குழந்தைகள் அமைப்பின் உறுப்பினர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். இதே பிரச்சினையை அவர்கள் முன் வைத்தேன். 27 குழந்தைகளில் பெரும்பாலானவை சொன்ன பதில் சுவாரசியமாக இருந்தது.
“என்னுடன் இவ்வளவு கலகலப்பாகப் பேசுகிறீர்களே! உறவினர்கள் வந்தால் ஏன் ஓடி ஒளிகிறீர்கள்?” என்பது நான் கேட்ட கேள்வி. அதற்குக் குழந்தைகள் சொன்ன பதில், “நீங்கள் எங்ககிட்டே ஃபிரண்ட் மாதிரி பேசறீங்க அங்க்கிள்! அவங்க எங்களை அதிகாரமா, “நான் பெரியவன்! தெரிஞ்சுக்கோ”ங்கிற தொனியிலே பேசறாங்க. எங்க அப்பா அம்மாவும் எங்களை அறிமுகப்படுத்தக் கூப்பிடும் போதே நாய்க்குட்டியைக் கூப்பிடற மாதிரி கூப்பிடறாங்க”.
இதுதான் விஷயம். இதுவேதான் விஷயம். குழந்தைகள், தங்களை உரிய மன முதிர்ச்சியுடன் நடத்த வேண்டும் என்று ஓரளவு விவரம் வந்த பிறகு விரும்புவது இயற்கை. இது நியாயமும் கூட. நாம் பச்சைக் குழந்தைகளைக் கொஞ்சும்போது அவர்கள் மொழியில் பேச ஆசைப்பட்டு “அப்புக்கண்ணா! புஜ்ஜுக்குட்டி” என்று கொஞ்சுகிறோம். கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளிடம் நாம் பெரியவர்கள் என்ற வீராப்பைக் காண்பிக்கப் படாதபாடுபடுவோம்.
சின்னக் குழந்தைகளை மட்டுமின்றி பதின் பருவத்துக்கு முன்னும் பின்னும் இருக்கும் குழந்தைகளை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதில் தங்களை பெரியவர்கள் எப்படி எடைபோடுகிறார்கள் என்பது வெளிப்படுகிறது.
குழந்தைகளிடம் இயல்பாக, இனிமையாக நீங்கள் விருந்தினர்கள் முன்னிலையில் நடந்து கொண்டால் விருந்தினர்களும் அதுபோல் நடந்து கொள்வார்கள். வீட்டுக்கு வருபவர்கள் பலரும், ஏதோ விசாரணைக் கமிஷன் நீதிபதிகள் போல் குழந்தைகளிடம் பரீட்சை பற்றியும் மதிப்பெண் பற்றியும் மட்டுமே கேட்பார்கள். இவை தவிர குழந்தைகளின் உலகத்தில் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. எனவே குழந்தைகளை இயல்பாக நடத்துங்கள். விருந்தினர்களும் அப்படியே நடந்து கொள்வார்கள்.
அடுத்தது, குழந்தைகளை அவர்கள் செயல்களின் மூலம் அடையாளப் படுத்தாதீர்கள். குழந்தைகளிடம் நீங்கள் காட்டுகிற அடிப்படையான அன்பை, அவர்களின் தவறுகள் நிமித்தமாய் நிறுத்திக் கொள்ளாதீர்கள். “உன் மார்க் குறைந்துவிட்டது. அம்மா ஒரு வாரத்துக்கு உன்னிடம் பேச மாட்டேன்” என்பது அபத்தத்திலும் அபத்தமான தண்டனை.
தவறு செய்தாலும், தன் அடிப்படையான உறவை பெற்றோர்கள் தகர்த்துக்கொள்ள மாட்டார்கள் என்பது பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டிய நம்பிக்கை. அப்போதுதான் குழந்தைகளிடம் பாதுகாப்புணர்வு தோன்றும்.
பகலில், என்ன விஷயமாக நீங்கள் பிள்ளைகளைக் கண்டித்திருந்தாலும் சரி, இரவு உறங்கப் போகும் முன்னால், அந்தக் குற்றவுணர்வை மாற்றிவிடுங்கள். சிரித்துப் பேசியோ, சினிமா போன்ற விஷயங்கள் குறித்து ஜாலியான ஒரு விவாதத்தை நடத்தியோ பிள்ளைகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வாருங்கள்.
தவறு அவர்கள் மேல் இருந்து நீங்கள் திட்டியது நியாயம் என்றாலும் நம்பிக்கையை – சிதைக்கும் விதமாய் எதையும் எக்காரணம் கொண்டும் செய்யாதீர்கள்.
சுதந்திரம் குழந்தைகளுக்கு சரியாக வழங்கப்படும்போது அதுவே சுய கட்டுப்பாட்டையும் உருவாக்கிவிடும். விளையாட்டுக்கான நேரம் படிப்புக்கான நேரம் என்பதில் பல பெற்றோர்கள் தவறு செய்வார்கள். மாலை ஐந்து முதல் ஆறு, விளையாட்டுக்கான நேரம் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஐந்து மணிக்கு விளையாடப் போகும்போதே “ஆறு மணிக்குப் படிக்க வரணும்! தெரியுமில்லே” என்று பயமுறுத்தி அனுப்பினால், ஆறுமணிக்கு வருவதை ஆனவரை தள்ளிப் போடவே குழந்தைகள் விரும்பும். இரண்டுக்கும் சமமான முக்கியத்துவத்தை பெற்றோர்கள் தரவேண்டும். “உன் விருப்பத்துக்காக விளையாடு! என் விருப்பத்துக்காகப் படி!” என்பது நீங்கள் தருகிற தவறான சமிக்ஞை. பெற்றோர்கள் தங்களைப் பற்றிப் பெருமையாக நினைக்கிறார்கள் – பாராட்டுகிறார்கள் – தங்களை நம்புகிறார்கள் என்பதைக் குழந்தைகள் உணர்ந்தாலே அவர்களின் செயல் திறன் கூடுகிறது. பொறுப்பு வளர்கிறது.
படிப்பைப் போலவே மற்ற திறமைகளும் முக்கியம் என்பதைப் பெற்றோர்கள் உணர்ந்து கொள்வதும், உணர்த்துவதும் முக்கியம்.
சின்னச் சின்ன அக்கறையிலேயே குழந்தைகள் மகிழ்ந்துவிடுவார்கள். வெளியே சொல்ல மாட்டார்களாக இருக்கும். ஆனால் மனதுக்குள்ளே மகிழ்வார்கள். தங்களைத் தாங்களே திருத்திக் கொள்வார்கள். உங்கள் எதிர்பார்ப்பில் இருக்கிற நியாயத்தைப் புரிந்துகொண்டு தங்களை சீரமைத்துக் கொள்வார்கள்.
நம்புங்கள்….. உங்கள் குழந்தைகளும் சாதிப்பார்கள்!!
fathima
nice.thank you for your lines there are many things that we haven’t think before carry on write more there will be our wishes.