திண்டுக்கல் சிகரம் உரை

ஏற்றமிகு வாழ்வுக்கு ஏழு வழிகள்

திண்டுக்கல் – “சிகரம் உங்கள் உயரம்” தொடக்கவிழாவில்
சோம. வள்ளியப்பன் பேச்சு

இந்தியா இப்போது என்ன நிலைமையில் இருக்கிறது என்று பலரும் யோசித்துக்

கொண்டிருக்கும் நேரம் இது (15.3.2009). முன்பு நம்முடைய GDP 9% ஆக இருந்தது. உலகளவில் வேகமாக வளர்கிற நாடுகளில் நமக்கு இரண்டாவது இடம் என்று சந்தோஷமாக இருந்தோம். சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா. இப்போது இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 9% அல்ல 6.5, 7 சதவீதமாக குறைந்திருக்கிறது. இந்தியாவின் உற்பத்தி மட்டுமல்ல, ஏனைய வளர்ச்சிகள் குறைந்து கொண்டிருப்பதை பார்க்கிறோம்.

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இந்தியாவின் ஏற்றுமதி கணிசமாக குறைந்திருக்கிறது. 17 சதவீதம் குறைந்திருக்கிறது. 2008-09ற்கு 200 மில்லியன் டாலர் ஏற்றுமதி என்கிற இலக்கினை இந்தியப்பேரரசு முடிவு செய்திருக்கிறது. அதிலும் ஒரு சுணக்கம் வந்திருக்கிறது.

செல்கின்ற இடங்களில், ‘இந்தியாவின் வளர்ச்சி குறைந்திருக்கிறதே! பங்குச் சந்தை இறங்கியிருக்கிறதே! பல்வேறு துறைகளிலும் வியாபாரம் சுணக்கம் கண்டிருக்கிறதே! இந்நிலைமை மாறுமா? நீடிக்குமா? அவ்வளவுதானா? என்று மக்கள் கேட்கிறார்கள்.

இருட்டைக் கண்டு பயப்படுகிறவர்கள் மனிதர்கள் அல்ல. மறுநாள் விடியும் என்ற நம்பிக்கை நிச்சயம் இருக்கிற காரணத்தால், இருள் நமக்கு பயம் கொடுப்பதில்லை. வருடத்திலே சில மாதங்கள் மழை பெய்யும். கொட்டோ கொட்டென்று கொட்டும் . நிற்குமா என்று சந்தேகப்படும் அளவு ஊற்றும். வெளியில் இறங்கி வேலை செய்ய முடியாது. இந்த மழைதான் நிரந்தரம் என்று நம்புவதில்லை. மழை நிற்கும். அடுத்து கோடை வரும் என்றுதான் நம்புகிறோம். கோடை வருகிறது. வெயில் மண்டையை பிளக்கிறது. இந்த வெயிலும் நிலையானது என்று நம்புவதில்லை. ஒரு தினத்திற்குள் ஏற்படும் தட்ப வெட்பநிலை மாற்றம், ஒரு ஆண்டுக்குள் ஏற்படும் பருவ மாற்றம், இவையெல்லாம் எவ்வளவு இயற்கையோ, அதுபோல பொருளாதாரத்திலும் ஏற்ற, இறக்கங்கள் வரவே செய்யும். தவிர்க்க முடியாது.

1990 களின் தொடக்கத்தில் ‘தாராளமயமாக்கல்’ வந்தவுடன் பல நிறுவனங்கள் தடுமாறிப் போயின. நம்முடைய போட்டி உலகத்தோடு என்று சொல்லிவிட்டார்கள். கோடிக்கணக்கில் முதலீடு செய்து தொழில் தொடங்கியவர்கள் எல்லாம் இனி என்ன செய்வது என்று திகைத்து நின்றார்கள். அதெல்லாம் முடிந்து போன கதை. நம்முடைய நிறுவனங்கள் அவற்றையெல்லாம் தாண்டி வெகுதூரம் வந்தாகிவிட்டன. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இருக்கிற பல பெரிய நிறுவனங்களை விலைக்கு வாங்குகிற தொழில் நுட்ப அறிவும், மனோதைரியமும், பணபலமும் இந்தியர்களுக்கு வந்துவிட்டது.

ஆக இன்றிருக்கிற பொருளாதார சுணக்கம் என்பது தற்காலிகம். எப்படி குதிரை, தன் மேல் விழுகிற மண்ணையெல்லாம் உதறிக்கொண்டு ஓடுமோ. அப்படி பொருளாதாரமும் பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் சிலிர்த்துக் கொண்டு ஓடும்.

மாற்றங்கள் வரும். ரயில் சென்று கொண்டிருக்கிறது. இடையில் குகைக்குள் செல்கிறபோது இருட்டாகத்தான் இருக்கும். ஆனால் ரயில் குகைக்குள்ளேவா போய்க் கொண்டிருக்கும்! அந்த இருட்டு தற்காலிகமானது. விரைவில் அந்த இருட்டை விட்டு ரயில் வெளியே வரும்.

ஆக, செய்தி 1, இதுவும் கடந்து போகும் என்பதுதான்.

இந்த பொருளாதார சுணக்கம் என்பது மாறும். ஒரு வகையில் பார்த்தால் இது தேவையும் கூட. ஏனென்றால் ஐ.டி போன்ற சிலவற்றிலேயே நம்முடைய ஆற்றலையும், வளங்களையும் அதிகமாக குவித்து வைத்திருப்பதை சரி செய்கிற முக்கியமான ஏற்பாடுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இது, ஒரு சூழ்நிலையின் அங்கம். இதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இதிலிருந்து நாம் மேலே வரலாம். இது தற்காலிகம். சில சமயங்களில் நீண்டதாக இருக்கும். வேறு சில சமயங்களில் குறுகிய காலத்தில் முடிவதாக இருக்கும். இந்தியாவில் இருக்கிற இளைஞர்கள் எண்ணிக்கையைப் பார்க்கிறபோது. இந்த சுணக்கம் சீக்கிரம் முடிவுக்கு வரும் என்றே எடுத்துக் கொள்ளலாம்.

2. உறுதி மட்டுமே வேண்டும்:-

ஒரு பிரச்சனை வருகிறபோது அதில் அமிழ்ந்து போகிறவர்கள்தான் அதிகம். சிலர் மட்டும்தான் அந்தப் பிரச்சனைகளைத் தாண்டி வெளியே வருகிறார்கள்.

அது அரசர்கள் காலம் ஒருவன் தவறு செய்து விட்டான். செய்த தவறுக்கு தண்டனை என்ன என்று அறிவித்தபோது, அவனுக்கு ‘சாய்ஸ்’ கொடுத்தார்கள். ‘ ஒன்று ஒரு வீசை வெங்காயத்தை பச்சையாகக் கடித்து சாப்பிட வேண்டும். அல்லது நூறு கசையடிகள் வாங்கிக் கொள்ள வேண்டும் அல்லது 10 பவுன் அபராதம் கட்ட வேண்டும். மூன்றில் எதுவென்று சொல். அதை செய்தால் போதும்’ என்றார் அரசர். இவன் யோசித்தான். “நாம் எதற்காக 10 சவரன் தங்கத்தை அபராதமாகக் கட்ட வேண்டும்.? ஏன் கசையடி வாங்க வேண்டும்? அந்த இரண்டையும்விட வெங்காயத்தை தின்று விடலாம், அது சாப்பிடும் பொருள்தானே!” என்று நினைத்தான். சாப்பிட ஆரம்பித்தான். நான்கு ஐந்து கூட சாப்பிட்டு இருக்க மாட்டான். எரிச்சல் தாங்கவில்லை. கண்களிலும் மூக்கிலும் நீர் கொட்ட ஆரம்பித்தது. ‘ஐயா என்னால் முடியாது கசையடியே கொடுத்து விடுங்கள்’ என்றான். கசையடி ஆரம்பித்தது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே முதுகுத் தோல் உரிந்து ரத்தம் வழிந்தது. ‘ஐயா போதும். நிறுத்துங்கள். 10 பவுன் தந்துவிடுகிறேன்’ என்று கொடுத்தான்.

வெங்காயம் தின்று அவஸ்தைப்பட்டு, கசையடி வாங்கி தோலுரிந்து, கடைசியில் பவுன்களையும் கொடுத்தான் இப்படி செய்தற்கு அவன் தொடக்கத்திலேயே 10 பவுன் அபராதம் கட்டிவிட்டிருக்கலாம். ஒரு தண்டனைக்கு பதில் அவன் மூன்றையும் அனுபவித்துவிட்டான்.

வியாபாரமோ, படிப்போ, மண வாழ்க்கையோ எதைத் தேர்வு செய்தாலும், யோசிக்கிற போது பலவற்றை யோசியுங்கள். முடிவெடுத்த ஒன்றை உறுதியாகச் செய்யுங்கள்.

தச்சர்களைப் பற்றி ஒரு வாசகம் உண்டு. “தச்சர்கள் பலமுறை அளப்பார்கள், ஒருமுறை அறுப்பார்கள்” என்று. அறுத்த பிறகு அளக்க முடியாது, பலனில்லை.

எனக்கு தெரிந்த இளைஞர் ஒருவர் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார். வேலை கிடைப்பதற்கு முன் ‘கேட்’ (CAT) பரீட்சை எழுதலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார். கேம்பஸ் இன்டர்வியூ வந்தவுடன் ‘கேட்’ மீதிருந்த கவனம் போய்விட்டது. பெரிய நிறுவனத்தில் சேர்ந்த பிறகு மீண்டும் ‘கேட்’ எழுதலாம் என்று நினைத்தார். அதற்காக தயாரிக்க ஒரு பகுதி நேர வகுப்பில் சேர்ந்தும் விட்டார். அப்போது நிறுவனத்தில் நல்ல புராஜெட் ஒன்றைக் கொடுத்தார்கள். இனி என்ன! எதற்காக ‘கேட்’ தேர்வு எழுத வேண்டுமா? என்று யோசித்தார். அதனால் அதில் கவனம் செலுத்தவில்லை. இப்போது பொருளாதார சுணக்கம் வந்துவிட்டது. அவரது புராஜெட்டுகள் பாதியில் மூடப் படவிருக்கிறது. அதனால் மீண்டும் ‘கேட்’ தேர்வுக்கு ஆயத்தம் செய்ய வேண்டியதுதான் என்று நினைக்கிறார். வெங்காயம் தின்றவனுக்கும் இவருக்கும் அதிக வேறுபாடில்லை.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் ஏதோ ஒன்றின் மீது இதுதான் என்று உறுத்தலோடு நம்பிக்கையோடு நிற்கிறார்கள். பல வெற்றியாளர்கள் நம் முன்னே இங்கே மேடையில் இருக்கிறார்கள். கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் ‘கவிதைதான்’, ‘எழுத்துதான்’, ‘தமிழ்தான்’ என்று நின்றார்; வென்றார்.

உலகத்தில் எந்த வெற்றியாளரையும் ஆராய்ந்து பார்த்தால் தெரியும். அவர்கள் எல்லாம் ஏதோ ஒன்றின் மீது வைத்த கண்ணை எடுக்காமல் இருந்திருக்கிறார்கள். அவர்களது மொத்த ஆற்றலையும், வேகத்தையும், உழைப்பையும் அந்த விரும்புகிற ஒன்றின் மீது வைத்து திணித்திருக்கிறார்கள், அப்படி செய்கிறபோது, வெற்றியைத் தவிர வேறு என்ன கிடைக்கும்.

3. உங்கள் உலகை மாற்றுங்கள்:-

ஒரு பெண்மணியைப் பற்றி சொல்கிறேன். அந்த பெண்மணியின் தாய் சிறுமியாக இருந்தபோதே கற்பழிக்கப்பட்டாள். அதன்மூலம் குழந்தை பிறந்தது. அவமானம் என்று கருதி, பிறந்த குழந்தையை தூக்கிப் போட்டு விட்டார். அந்தக் குழந்தையை யாரோ தூக்கி வளர்த்திருக்கிறார்கள். நிராகரிக்கப்பட்டுவிட்ட அந்தக் குழந்தைக்கு தந்தை யாரென்று தெரியாது,

குழந்தை வளர்ந்து ஒன்பது வயது சிறுமியாக இருக்கிறபோது அந்தப் பெண்ணை சிலர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். வளர்ப்பவர்களில் ஒருவராலேயே அந்தச் சிறுமி கற்பழிக்கப்படுகிறாள், அவளது 13 வயதில், ஒரு குழந்தையை பிரசவிக்கிறாள். அந்தக் குழந்தை பிறந்த சில நாட்களில் இறந்து விடுகிறது. இதுதான் அந்தப் பெண்ணின் பின்புலம்.

இப்படிப்பட்ட பெண்ணின் வாழ்க்கையில் என்னவாகியிருக்க வேண்டும்? அந்தப் பெண் இதற்காக குத்துக்காலிட்டு மூலையில் அமர்ந்து அழுது கொண்டிருக்கவில்லை. அந்தப் பெண்ணின் இன்றைய நிலை என்ன தெரியுமா? 13,500 கோடி சொத்துக்கு அதிபதி அவர்.

2008ல் இவரது ஆண்டு வருமானம் 1925கோடி ரூபாய் மாதம் ஏறக்குறைய 160 கோடி பணம் மட்டுமல்ல, 1986ல் அகாடெமி அவார்டுக்கு நியமிக்கப்படுகிறார். எம்மி அவார்டுகள் பெறுகிறார். அந்தப் பெண்ணின் பெயர் ஓப்ரா வின்ப்ரே. தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கலாம். உலக அளவில் ஒளிபரப்பாகிற நிகழ்ச்சிகளில் மிகப் பிரபலமான ‘டாக் ஷோ’ அவர் நடத்துகிற நிகழ்ச்சி.

எவ்வளவு சாதாரணப் பின்புலம். எவ்வளவு சீரழிக்கப்பட்ட வாழ்க்கை! முடிந்து போவதற்கான அத்தனை காரணங்களும் இருந்திருக்கிறது. அவற்றை தூக்கிப் போட்டு மிதித்துவிட்டு, அவர் போயிருக்கிற உயரம்! எவ்வளவு பெரிய மன வலிமை இருந்தால், எந்தக் குட்டையிலிருந்தாலும் எழுந்து உயர்வேன் என்று காட்டுகிற தெம்பிருந்தால், அந்தப் பெண்மணி இந்த அளவு உயர்ந்திருப்பார்.

நம்முடைய உலகம் வெளியில் இல்லை. நம்மால் முடியும் என்று நினைத்தால், நாம் செய்ய முடியாதது எதுவுமே கிடையாது. பெரும்பாலானவர்கள் முடங்கிப் போவதற்குக் காரணம், அவர்களுடைய குணம்தான் அவர்களின் உலகத்தை அவர்களே அவர்களின் பார்வையில், மனதில் சிறியதாக சுருக்கி வைத்திருப்பதுதான்.

4. நம் நடத்தையை நாம் தேர்வு செய்ய வேண்டும்:-

உலகம் சொல்லிக் கொடுத்ததுபோல் நாம் செய்யவே வேண்டாம். ‘அடித்தால் அழ வேண்டும்’ அல்லது திருப்பி அடிக்க வேண்டும். இப்படித்தான் உலகம் சொல்லிக் கொடுக்கிறது.

ஸ்டீபன் கோவே சொல்வார், ‘Reaction வேண்டாம்.Response செய்யுங்கள்” என்று. அடித்தால் திருப்பி அடிப்பது Reaction. அடித்தால் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து விட்டுச் செய்வது,Response. அறிவுப்பூர்வமானது. Reaction உணர்வுப்பூர்வமானது. பல சமயங்களில், எவரேனும் நமக்குக் கொடுமை செய்தால், திட்டினால் அழுகிறோம், துரோகம் செய்தால் வருத்தப்படுகிறோம். இவையெல்லாம் Reaction . வெற்றியாளர்கள் என்றால் Response செய்ய வேண்டும்.

5. வாய்ப்பு வரும் முன் தயாரித்துக் கொள்ள வேண்டும்

லெஸ் பிரவுன் அமெரிக்க இளைஞன். படிக்காதவன். அருகிலுள்ள வானொலி நிலையத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு. ஒருநாள் வானொலி நிலையத்திற்கு சென்று வேலை கேட்க யாரை அணுக வேண்டும் என்று கேட்டுத் தெரிந்துக் கொண்டு அதிகாரியைச் சந்திக்கிறான். அவர், ‘ நீ படித்திருக்கிறாயா? ‘இல்லை’ ‘உனக்கு வர்ணனை செய்யத் தெரியுமா?’ ‘தெரியாது’. ‘உனக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கத் தெரியுமா?’ ‘தெரியாது’ ‘அப்படியென்றால் உனக்கு வேலையில்லை’

‘நன்றி ஐயா’

பணிவோடு சொல்கிறான். பவ்யமாக திரும்பிச் சென்றுவிடுகிறான்.

மறுநாள், அதே இடம் அதே மேலாளர். அதே லெஸ் பிரவுன், அதே வேண்டுகோளை வைக்கிறான். ‘ஐயா வேலை ஏதும் உள்ளதா?’ அதே பதில் வருகிறது. அவனும் மாறாமல் அதே பவ்யத்துடன் நன்றி சொல்லிப்போகிறான். இப்படி மூன்று நாட்கள். வேலை இல்லை என்று சொன்னபோதும் தொடர்ந்து, விடாமல், கண்ணியத்தோடும், பவ்யத்தோடும் அவன் நன்றி சொல்லிப் போவதைக் கண்ட நிலைய அதிகாரி, நான்காவது நாள், ‘எனக்கு உணவு வரவில்லை. வாங்கி வர முடியுமா?’ என்கிறார். உடனே ஓடிப்போய் வாங்கி வருகிறான். அதன்பின், நிலையத்திலிருக்கிற அனைவரின் தேவைகளைக் கவனிக்கிற எடுபடி வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறான். ஒரு நாள் நிலைய அதிகாரி அவனை அழைத்து தரையைக் கூட்டிப் பெருக்கும் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்கிறாயா என்கிறார். சரி என்று சந்தோஷமாக சேருகிறான். வேலைதான் பெருக்கி கழுவுவது. ஆனால் அவன் கூடுதலாக செய்ததோ அங்கு என்ன நிகழ்ச்சிகளை எப்படி தயாரிக்கிறார்கள். வர்ணனையாளர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பனவற்றை உற்றுக் கவனித்தது.

அதையெல்லாம் கவனித்தவன், தான் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்கிறான்.

அங்கு வர்ணனை செய்பவர்களில் ஒருவர் குடிகாரர். ஒருநாள், அவர் குடித்துவிட்டு வந்தார், அவரால் மேடையேற முடியவில்லை. யாரை இப்போது மேடையேற்றுவது என்று நிலைய அதிகாரி பதறுகிறார். தயங்கி நம்பிக்கையில்லாமல் கேட்கிறார். “லெஸ் பிரவுன் உன்னால் ஏதாவது சமாளிக்க முடியுமா?” இவர் கேட்பார் என்று யூகித்து ஐந்து நிமிடத்திற்கு முன்பே, தன் வீட்டிற்கு போன் செய்து, ‘அம்மா வானொலிப் பெட்டியை பாடவிட்டுக்கொண்டிரு. இன்று உன் மகனின் குரலை நீ கேட்கக் கூடும்’ என்று சொல்லியிருந்தான் லெஸ் பிரவுன்.

லெஸ் பிரவுன் வர்ணனை செய்கிறார். இதற்குமுன் இப்படியொரு வர்ணனை எவரும் கேட்டதில்லை என்பது போல் பிரமாதமாகச் செய்கிறார். அற்புதமான வர்ணனை.

வாய்ப்பு வருகிறவரை காத்திருப்பவர்கள் ஜெயிப்பதில்லை. வாய்ப்பு வருவதற்கு முன்பாகவே தயாரித்து, வாய்ப்பு வருகிறபோது அதனைக் கவ்விக் கொள்கிறவர்கள் ஜெயிக்கிறார்கள். லெஸ் பிரவுன் வாய்ப்பு என்றைக்கு வரும் என்று யோசிக்கவில்லை. எந்த இடத்திலிருந்தாலும் அந்த இடத்தில் நடப்பதை, வெற்றி பெற்றுத் தருவனவற்றை கவனித்துக் கொண்டிருப்பவர்கள் ஜெயிக்கிறார்கள்.

எவர் ஒருவர் பணிவாக தொடர்ந்து முயற்சி செய்கிறாரோ அவரை எவராலும் உதாசீனப்படுத்த முடியாது. ஒன்று வேண்டுமென்றால், நீங்கள் திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். ஒருமுறை கொடுக்கவில்லை யென்றால், இரண்டாவது முறை கேலி பேசினாலும் மூன்றாவது முறை அரசியல் செய்தாலும் நான்காவது முறை, எத்தனை முறையானாலும் என்ன? விடவேண்டாம். ஜெயிப்பவர்கள் கணக்கு பார்ப்பதில்லை. இதுதான் வேண்டும் என்று உறுதியாக இருப்பவர்கள் எத்தனை முறை அவமானப்படுத்தப்பட்டாலும் புறக்கணிக்கப்பட்டாலும் தொடர்ந்து முயற்சிக்கிறார்கள்.

6. தீர்வுகள் நேரடியாக வருவதில்லை

பல சமயங்களில் நம்முடைய பிரச்னைகளுக்குத் தீர்வுகள் நேரடியாக வராது. தீர்வுகள் நேரடியாக எதிர்பார்ப்பவர்கள்தான் வாழ்க்கையை ஒரு தோல்விக் களம் என்று நினைக்கிறார்கள். நமக்கு என்ன வேண்டும் என்பது பல சமயங்களில் நம் முன்னாலேயே இருக்கிறது. அதை வாய்ப்பு என்று கண்டுபிடிப்பவர்கள் ஜெயிக்கிறார்கள். வாய்ப்பு என்று தெரியாதவர்கள் தோற்றுவிடுகிறார்கள். வாய்ப்பு எல்லோர் முன்னாலும் நடமாடுகிறது. அது இல்லாத நடமாடாத இடமே கிடையாது. சிலபேருக்கு மரத்தைப் பார்த்தால் மாங்காய்களாகத் தெரியும். சிலருக்கு மாங்காயே தெரியாது.

வாய்ப்புக்களை எப்படிக் கண்டுபிடிப்பது?

சாய்ராம் என்கிற மாணவன் படித்து பொறியியல் கல்லூரியில், வாடகைக்கு புத்தகம் வாங்கிப் படிக்கிறான். அப்படி படிக்கிறவன் நம்மைப் போல எத்தனையோ பேர் வாடகைக்கு வாங்கிப் படிக்கிறார்களே! இவற்றை யார் வாங்கிக் கொடுக்கிறார்கள் என்று யோசிக்கிறான். இதுதான் கூடுதலாகப் பார்க்கிற பார்வை என்பது. மூன்றாவது கண் கொண்டு பார்ப்பது.

வாடகைக்குப் புத்தகம் கிடைத்தால் வாங்கிப் படிப்பது சாதாரணம். வாடகைக்கு கொடுக்கிறாரே, அவர் யார்? அவருக்கு அதில் என்ன லாபம்? அவர் போல எத்தனை பேர் புத்தகங்களை வாடகைக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்? இதனுடைய மொத்த சந்தை மதிப்பு என்ன? என்பதெல்லாம் அந்த இளைஞனுக்கு சிந்திக்கத் தோன்றியிருக்கிறது. அதன் விளைவாக பின்பு சொந்தமாக அவனே ஒரு வாடகை புத்தக நிலையத்தை மூன்றாம் ஆண்டு படிக்கிறபோது தொடங்குகிறான். நான்காம் ஆண்டில் அதனைத் தொடர்கிறான். விரிவாக்குகிறான். கல்லூரிப் படிப்பு முடிகிறது. வாடகை புத்தக நிலையத்தை நடத்த விரும்பும் அவனை குடும்பமே எதிர்க்கிறது. பொறியியல் பணிக்குப் போகவில்லை. எம்.வி.புக் என்கிற ஒன்றை ஆரம்பிக்கிறான். அது விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ‘ யார் மனசுல யாரு’ என்கிற நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்கிற அளவுக்கு வளர்ந்தது.

இதைத்தான் படித்தோம், இதைத்தான் செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை. படிக்கலாம். படிப்பது அவசியம். அது குறைந்தபட்சம். பிறகு எதை வேண்டுமானலும் செய்யலாம். வாய்ப்புகளை பார்க்கத் தெரிய வேண்டும்.

வாய்ப்பு இல்லை என்று சொல்வது மிகச் சுலபம். எல்லாம் கெட்டுவிட்டது என்று பழி போடுவது மிகவும் சுலபம். இன்றைக்கு இருக்கிற பல அற்புதமான தொழில் வாய்ப்புகள் எல்லாம் பத்து ஆண்டுகளுக்கு முன் இல்லாதவை. உலகம் வளர்கிற வேகத்தில் மக்களும் சந்தையும் பெருகுகிற வேகத்தில் எவ்வளவு சின்ன விஷயத்தையும் பெரிய சந்தையாக்க முடியும்.

நம்மிடமிருக்கிற திறமையை அதன் உச்சபட்சத்தில் கொண்டு செல்கிறபோது, அதனுடைய பரப்பளவு விரிவடைந்து, பெரிய பலனைத் தருகிறது. சாதாரணமான திறமை. அவற்றை எடுத்து மெருகேற்றி வைக்கிற இடத்தில் வைக்க வேண்டும். பிறகு தெரியும் அதன் வீச்சு.

7. நிறுத்தாமல் தொடர்ந்து செய்கிறவர்கள் வெல்கிறார்கள்

ஏதோ ஒன்றின் மீது தவம் போன்ற கவனம் செலுத்துகிறபோது, அது எல்லாவற்றையும் கொண்டு வந்து கொடுக்கும்.

“போல்வால்டில்” உலக சாதனைகளைப் படைத்த ரஷ்ய வீராங்கனை எலினாவிடம் எப்படி உங்களால் இவ்வளவு உயரம் தாண்ட முடிகிறது என்று கேட்டபோது, ‘முதலில் என் இதயம் கம்பிக்கு மேலே போய்விடும். பிறகு என் உடல் வேறு வழியில்லாமல் பின்னால் செல்லும். இதயம் போய்விட்டதென்றால் உடல் போய்தானே தீரவேண்டும்!

நம்மால் முடியும் என்று நினைப்பதை செய்யக்கூடிய வல்லமை நம்மிடமிருக்கிறது. இறைவன் எல்லோருக்கும் அந்தத் திறனை கொடுத்திருக்கிறான்.
எவர் ஒருவர் தன்னால் முடியும் என்று நினைக்கிறாரோ அவரைக் கீழே சாய்க்கவே முடியாது. சாதாரணத்திலிருந்து மேலே வந்தவர்கள் எல்லாம் என்னால் முடியும் என்று நினைத்தவர்கள்தான். தன்னால் முடியாது என்று நினைத்தால் ஒரு பதர்கூட மேலே வரமுடியாது. என்னால் முடியும் என்று நினைக்கிற மனிதர்கள், முனைகிறார்கள், முளைக்கிறார்கள், ஜெயிக்கிறார்கள்.

நாமும் ஜெயிப்போம்.

  1. சிவஹரி

    மிகவும் பயனுள்ள தன்னம்பிக்கை கட்டுரை இது.

    தன்னம்பிக்கையின் உயர்வினைப் பற்றி ஏழு வகையான வழிகளில் ஏற்றமுற விளக்கியிருக்கின்றது.

    பகிர்ந்தமைக்கு நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *