முதுமைக்காலம் பொற்காலம்

– நல்லாசாமி

நம் ஒவ்வொருவரின் கடுமையான உழைப்பின் பலனை, எதிர்கால நலன் கருதி தகுந்த முதலீட்டுத் திட்டங்களில் சேமித்து வைப்பதனால், முதுமைக்காலம், தேவைகளை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாது கௌரவமாகவும் அமைவதனால், பொற்காலமே.

அவ்வாறல்லாமல், நிதி நெருக்கடியால் அவதியுற்று, பிறர் தயவை எதிர்பார்த்து வேதனையுறும் முதியோர்களுக்கு அது சாபமே. முதுமை இயற்கை. அவரவர் கடமைகளிலிருந்து ஓய்வு பெறுவது தவிர்க்க இயலாதது. நம்மில் பலர் ஓய்வு காலம் நெருங்கி வருவது கடைசி தருணம் வரையிலும் உணராமல் கடந்து வந்துவிடுகிறோம். இன்னும் சிலர், “இப்போது அதற்கு என்ன அவசரம். இன்னும் காலம் இருக்கு. பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று சேமிப்பை தள்ளிப்போடுகின்றனர். இவை இரண்டுமே முதுமைக் காலத்தை வேதனை நிரம்பியதாக அமைத்துவிடும்.

இத்தொடர்களின் முதன்மை குறிக்கோள், உங்களின் நிதி நிலைமையையும், வாழ்க்கைத் தரத்தையும் எவ் வகையிலும் சமரசம் செய்து கொள்ளாமல், முதுமைக் காலத்தை இனிமையானதாக அமைத்துக் கொள்ள உதவுவதே. இதன் மூலம் நாங்கள் கூறும் தகவல்களும்., அணுகுமுறைகளும் உங்களின் முதிர்வுகால சவால்களை வெற்றிகரமாக சமாளித்து கவலையற்ற முதுமைக்காலம் அமைய உதவும் என நம்புகிறோம். மற்றொரு முக்கியமான கருத்து யாதெனில், ஒவ்வொருவரின் தேவைகள் காலத்திற்கேற்ப மாறுபடுவதால், நிதி ஆலோசகரின் அறிவுரைகளின்படி தங்களுக்கேற்ற திட்டங்களை வகுத்து, தக்க கால கட்டங்களில் அதன் செயல்பாடுகளை சரிபார்த்து பலன் அடையுங்கள்.

ஓய்வூதிய திட்டமிடுதல் மட்டுமின்றி அனைத்து வகையான திட்டமிடுதலுக்கும் முதலும், முக்கியமானதொரு விஷயம் என்னவென்றால், தேவைகளை சரிவர ஆராய்ந்து உணர்ந்தபின் மேலும், காலம் தாழ்த்தாமல் மிக்க கவனத்துடன் அத்திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பதேயாகும். செயல்படுத்தப்படாத திட்டங்கள் யாவுமே மற்றுமொரு பொழுதுபோக்கு கட்டுரையே. ஒவ்வொரு நெடுபயணமும் ஒரு சிறிய முதலடி மூலமே துவங்குகின்றன.

ஓய்வூதிய சேமிப்பின் தேவைப்பாடு:

1. சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, நம் முந்தைய தலைமுறையினர் 58-60 வயது வரை வேலை செய்து ஓய்வு பெற்றபின் அதுவரையில் சேமித்ததைக் கொண்டு மீதமுள்ள 5-6 வருடங்களை சுலபமாகக் கழித்து தங்கள் வாழ்வை இனிதே நிறைவு செய்து கொண்டனர். இக்கால கட்டங்களில், செலவிற்கான வாய்ப்புகள் குறைவு, விலைவாசி கட்டுக்குள் இருந்தது, கூட்டுக்குடும்ப முறை, ஆரோக்கியமான வாழ்க்கை முறை இவை யாவுமே இன்று எந்தநிலையில் உள்ளதென்பதை அனைவருமே உணர்ந்துள்ளோம்.

2. நவீன மருத்துவ வசதிகள், காப்பீட்டுத் திட்டங்கள் போன்ற காரணங்களால் 60-65 என்றிருந்த சராசரி ஆயுட்காலம் தற்போது 75க்கும் மேல் என்பது கண்கூடான உண்மை. போதாக்குறைக்கு வேலைப்பளு காரணமாக தங்களின் வேலை செய்யும் காலத்தை 45-50 என குறைத்துக் கொண்டுவிட்டனர். இதன்மூலம், ஓய்வு காலம் 20-25 வருடங்கள் என்பது யாருமே நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்றாகி விட்டது. அதாவது 30-35 வருடங்கள் வேலை செய்து சேமிக்கும் செல்வத்தைக் கொண்டு மீதமுள்ள 20-25 வருடங்கள் வாழ வேண்டும் என்பது யாரையுமே யோசிக்க வைக்கும் புள்ளி விவரம்.

3. முன்பிருந்த கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை என்பது இன்று அரிதான ஒன்றாகிப் போனது. அதிலிருந்து ஒற்றுமையுணர்வும் நிதிச்சுமை பகிர்வும் முதியவர்களுக்கு பெரும் உறுதுணையாக இருந்தது. இன்றைய தனிக்குடித்தன வாழ்வு முறை, அதுவும் பெற்றோர் ஓரிடத்திலும் குழந்தைகள் வேறொரு இடத்தில் குறிப்பாக, வெளிநாடுகளில் வேலை நிமித்தமாக செல்வது இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க இயலாததாகி விட்டது. எனவே, தங்களின் முதுமைக் கால தேவைகளுக்கு ப்ரியமானவர்களினை எதிர்பார்த்து சார்ந்திருக்காமல் சுயமாக சேமித்து நிம்மதியாகவும் கௌரவமாகவும் வாழலாம்.

4. மேலை நாடுகளில் உள்ளதுபோல நாட்டிலுள்ள முதியோர்களுக்கு இலவச வசதிகள், காப்பீட்டுத் திட்டங்கள் போன்ற சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் நம்நாட்டில் இல்லை. நடைமுறையில் உள்ள ஓய்வூதிய திட்டத்திலும் வட்டிக் குறைப்பு, சலுகைகள் விலக்கப் படுவது என மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதுவுமில்லாது, பெருகிவரும் நோய் வாய்ப்புகளும் அதற்கான செலவுகளும், முதுமைக் கால சேமிப்பை பெரிதும் கரைத்து விடுகின்றன. எனவே அவரவர் மருத்துவ செலவுகளுக்கான சேமிப்பை தாங்களாகவே ஏற்படுத்திக்கொள்வது அவசியமாகிறது.

5. ஓய்வுக்காலம் என்பது அனைவருக்கும் ஒரு காலகட்டத்தில் வந்தேயாகும். அதன் உண்மைகளை உணர்ந்து செயல்படுவதால் எதிர்பாராத ஆச்சரியங்களுக்கும் அதிர்ச்சிகளுக்கும் ஆளாக வேண்டியதில்லை. ஓய்வுக்குப் பிறகு செலவேயிராது என்பது எவ்வளவு மடமையோ அதேபோல செலவு குறைவு என்பதுமாகும். மருத்துவச் செலவுக்கான காரணங்களும், சந்தர்ப்பங்களும் அதிகரிப்பதோடு, கடும் விலைவாசி ஏற்றத்தாலும் செலவினங்கள் மிகுதியே. தெளிவாக சொல்வதானால் வருமானம் நின்று செலவு மட்டுமே கொண்டிருப்பதுதான் ஓய்வுக்காலம். முதல் வேலையில் சேர்ந்ததிலிருந்து தக்க முதலீட்டுத் திட்டத்தில் சிறுகச்சிறுக சேமித்து வந்தால், முதுமைக்கால சவால்களை எளிதாக சமாளித்து விடலாம்.

சேமிப்பின் சூட்சுமங்கள்:

1. சேமிப்பின் முதற்படி, அதற்கான தேவைகளை உணர்தல். நிதித் தேவைப்பாடு என்பது ஒருவரின் பல்வேறு கால கட்டங்களில் மாறிக் கொண்டேயிருக்கும். தேர்ந்த நிதி ஆலோசகரிடம் கலந்தாலோசித்து பொருத்தமான திட்டங்களை தேர்வு செய்து கொள்ளவும்.

2. ஓய்வூதியம் போன்ற தேவைகள் நீண்டகால அடிப்படையில் சிறுகச் சிறுக சேமிப்பதாகும். எனவே சம்பாதிக்கத் துவங்கும் காலகட்டத்திலிருந்தே இதற்கான சேமிப்பைத் துவங்குவது நன்று. காலம் கடத்துவதால் சேமிப்பு குறைவதோடு, அதன் வளர்ச்சியும் பாதிக்கப் படுகிறது.

3. வகுத்த திட்டங்கள் நான் எதிர்பார்த்தபடி செயல்படுகின்றனவா? என்று தக்க இடைவெளிகளில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால் உரிய ஆலோசனைப்படி திருத்தி அமைத்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் காலம் கடந்து, தவறிழைத்துவிட்டோம் என்று வருந்திப் பயனில்லை.

4. வாழ்வின் முக்கிய காலகட்டங்களில் தேவைப்படும் நிதியை அதற்குரிய சேமிப்பு கணக்கிலிருந்து எடுப்பது உத்தமம். உதாரணத்திற்கு, ஓய்வூதிய திட்டத்திலிருந்து பணம் எடுத்து வீடு கட்டுதல், குழந்தைகளின் கல்விக்கு செலவிடுதல், திருமணம் போன்ற காரணங்களுக்காக எடுத்துவிட்டு, அதனை மீண்டும் சரி செய்யாதவர்கள், தங்களின் முதுமை காலத்தில் அவதியுறுவது நாம் உணர்ந்ததே. எனவே, ஒவ்வொரு தேவைக்கும் தனித்தனியே சேமிப்பு கணக்கை துவக்கி பராமரித்து, அந்த காரணங்களுக்கு மட்டும் பயன்படுத்தி நிம்மதியாக வாழலாம்.

5. எவ்வளவு சேமிப்பது என்ற கேள்விக்கு எவ்வளவு வேண்டும், எப்போது தேவை என்பதே பதிலாகும். உதாரணம்: ஒருவர் தன் 25வது வயதில் மாதா மாதம் ரூ.10,000 சேமித்தால், சுமார் 6% வளர்ச்சி வகிதத்தில், தன் 60வது வயதில் சுமார் ரூ.1.25 கோடி சேமித்திருப்பார். அல்லது அதே நபர் 10 வருடங்கள் கழித்து தனது 35 வயதிலிருந்து சேமிக்கத் துவங்கினால், தனது 60வது வயதில் வெறும் ரூ. 65 லட்சத்தைத்தான் எட்டியிருப்பார். எனவே அவருக்கு காலம் குறைவாக இருப்பதால், இதனை ஈடு செய்ய சற்று அதிகமாக சேமிக்க வேண்டும். இல்லையேல் அவர் தேவைகள் பூர்த்தியாகாது அல்லது தேவைகளை குறைத்துக் கொள்ளும் நிலை ஏற்படும்.

அடுத்த கட்டுரையில் ஒருவருக்கு இன்றைய மதிப்பில் ஓய்வூதியம் எவ்வளவு தேவைப்படும் என்பதை விரிவாக உதாரணங்களோடு காண்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *