மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

– மரபின் மைந்தன் முத்தையா

முயற்சி என்பது தொடர்கதை தோல்வி என்பது சிறுகதை

வேகவேகமாய் மலைமுகடுகளில் ஏறிக்கொண்டிருந்தனர் அந்த இளைஞர்கள். அடிவாரத்தில் இருக்கும் கிராமத்தில் வசிக்கும் அவர்கள் முகத்தில் கோபமும் வன்மமும் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அதைவிட அதிகமாய் ஆயாசமும் சோர்வும். தங்கள்

கிராமத்திலிருந்த நான்கு வயதுக் குழந்தை ஒன்றினை மலை மேலுள்ள கிராமத்தினர் கடத்தி விட்டதால் இவர்கள் மீட்கப் புறப்பட்டிருந்தார்கள்.

மலையேறுவது இவ்வளவு கடினமான விஷயம் என்று அவர்கள் கருதியிருக்கவில்லை. மூச்சு வாங்க வாங்க மலையின் மேல் ஏறிக் கொண்டிருந்த போது தூரத் தொலைவில் ஒரு பெண்ணுருவம் தெரிந்தது. இன்னும் நெருங்க நெருங்க அந்தப் பெண்ணின் கைகளில் ஒரு குழந்தை இருப்பதும் புரிந்தது. நன்றாகப் பார்த்தால், காணாமல் போன குழந்தை அது! மீட்டு வருவதோ அந்தக் குழந்தையின் தாய்!

வியப்புடன் அந்தப் பெண்ணைச் சூழ்ந்து கொண்டனர் இளைஞர்கள். ஒருவர் கேட்டார் “ஏறவே சிரமமான இந்த மலையில் நாங்களே தடுமாறுகிறோம். நீ எப்போது, எப்படி ஏறினாய்?” குழந்தையின் அன்னை கூறினாள், “அண்ணா, காணாமல் போனது என் குழந்தை” – பொட்டில் அறைந்தது போலிருந்தது அந்த இளைஞர்களுக்கு.

இன்னொருவர் குழந்தையைக் காப்பாற்றப் போனதால் அந்த இளைஞர்களுக்கு தூரம் தெரிந்தது. வலியும் தெரிந்தது, தன்னுடைய குழந்தையை மீட்கப் போனதால் அந்த பலவீனமான பெண்ணுக்கு மலை – மலையாகவே தெரியவில்லை.

மலைபோல் பெரியது எதை நாம் எதிர்கொண்டாலும், அதைத் தீர்ப்பதில் நமக்கு எவ்வளவு வேகமும் விருப்பமும் இருக்கிறது என்பதைப் பொறுத்தே அதை வெற்றி காண முடியும்.

பெரிய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கைதேர்ந்தவர்கள் என்று சிலர் இருப்பார்கள். அவர்கள், ஆயிரம் பிரச்சினைகளை அநாயசமாக கையாள்வது எப்படித் தெரியுமா? ஒவ்வொரு பிரச்சினையையும் புதிதாகப் பார்ப்பதன் மூலம்தான். “இதென்ன பெரிய விஷயம்” என்று அலட்சியமும் அலட்டலுமாய் எதிர்கொண்டால் எதிர்பாராத நேரத்தில் அந்த அலட்சியமே நம்மை சறுக்கி விழச் செய்யும்.

இது புதிய பிரச்சினை என்ற விழிப்புணர்வுடன் அதனை அலசி ஆராய்ந்தால், புதிய வழிமுறைகள் கிடைக்கும். புதிய தீர்வுகளும் பிறக்கும். இதுகூட ஒரு மலையேற்றம் மாதிரிதான். மலையில் ஏறுகிறபோது, நீங்கள் கடந்து வந்த தூரத்தைப் போலவே கடக்கப் போகிற தூரமும் முக்கியம். எத்தனை தூரம் கடந்து வந்திருந்தாலும், எடுத்து வைக்கப் போகிற அடிகள்தான் இலக்கைக் கடக்க உதவப் போகின்றன. ஐம்பது மைல் தூரமுள்ள மலையைத் தாண்டுகிறீர்கள் என்றால், இருபது மைல் தூரத்தை இரண்டு மணி நேரத்தில் ஏறிவிட்டீர்கள் என்பது மட்டும் சாதனையாகாது. மீதமுள்ள முப்பது மைல் தூரத்தைத் தாண்டும் சக்தி இருக்கிறதா என்பதே உங்கள் சாதனையின் அளவுகோல் ஆகும்.

மலர்ச்சியுடன் தொடங்குவது, மனவலிமை குன்றுவது, பாதியில் திணறுவது என்று பலவீனமான உள்ளம் இருந்தால் சின்னப் பயணம்கூட சிரமமாகத்தான் இருக்கும்.

புகழ்வாய்ந்த மலையேற்ற நிபுணர் ரெய்ன்ஹோல்ட் டெஸ்னர் இருபது வயதிலிருந்து சிகரங்களைத் தொடுவதில் சிறுத்தை வேகம் காட்டுபவர். ஆக்சிஜன் சிலிண்டரின் உதவியில்லாமல் பல்லாயிரம் அடிகளைப் பாய்ந்து கடப்பதில் புகழ்பெற்றவர் இவர் – “மலைகளின் முகடுகளைக் கடப்பதுபற்றி நான் மூளையால் சிந்திக்கவில்லை – கால்களால் சிந்தித்தேன்” என்றார் இவர்.

கால்களால் சிந்திப்பது என்றால், உடனே காரியத்தில் இறங்குவது என்று பொருள். ஒரு காரியத்தை நடைமுறைப்படுத்த உடனடியாய் முடிவெடுக்கும்போது மகத்தான சக்தி நம்மில் நிறைகிறது.

பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நேரடியாய் ஈடுபடுவதில் சாதகங்களும் உண்டு. பாதகங்களும் உண்டு. பாதகங்களை நினைத்து பயப்படுபவர்கள், உண்மையில் பிரச்சினையைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை. நம்மைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்று தயக்கம் காட்டுபவர்கள். அதன் காரணமாகவே தீர்வு நோக்கி நகராமல், பிரச்சினையை உள்ளுக்குள்ளேயே ஊறப்போட்டு, ஆனவரைக்கும் ஆறப்போட்டு, நெருக்கடி முற்றிய பின்னால் நிமிர்ந்து பார்ப்பார்கள்.

மாறாக, பிரச்சினையைத் தீர்ப்பதே முக்கியம் என்று முதலடி எடுத்து வைத்துவிட்டால் மலையைப் பார்த்து மலைத்து நிற்க வேண்டியிராது.

பல தொழிலதிபர்கள் இப்படி கணப்பொழுதும் தாமதிக்காமல் களத்தில் இறங்கி, தங்களுக்குத் தடையாய் இருந்த மலைகளை விழுங்கியதால் ‘மலைவிழுங்கி மகாதேவர்களாக’ விளங்குகிறார்கள்.

அவர்களைக் கேட்டால், “நேரடியாய்க் களத்தில் இறங்குவதால் நம்முடைய பலம் நமக்கே முதலில் தெரிகிறது” என்கிறார்கள். உண்மைதான் ஒரு சிக்கலைத் தீர்க்கிறபோது, அதன் உச்சம் தொடுகிற சூழ்நிலை ஒவ்வொருவருக்கும் உருவாகும். மலையுச்சியை நெருங்குகிறபோது, பிராணவாயு போதாத போது பனிமழையின் குளிர் தாங்காத போது, மலையேறும் வீரர்கள் தங்கள் யுத்தத்தின் நடுக்கமான கணங்களில் நிற்பார்கள். ஓடமுடியாதவர்கள் நடந்தாவது இலக்கினைத் தொடுவார்கள். நடக்க முடியாதவர்கள் தவழ்ந்தாவது இலக்கினைத் தொடுவார்கள். அப்போதும் அவர்கள் “கால்களால்தான்” சிந்திப்பார்கள்.

போராட்டத்தின் உச்சிப் பொழுதில், நம் மனோசக்தியை நாமே மறுபரிசீலனை செய்வதெல்லாம் முடியாத காரியம். எப்படியாயினும் இலக்கைத் தொடுவது என்கிற ஒற்றைச் சிந்தனைநோக்கி உடல் – உள்ளம் – உயிர் எல்லாம் குவிகிறபோது அந்த முயற்சி வெற்றியடைகிறது.

கடைசி நேரப் பின் வாங்குதல் நம்மை பிரச்சினையிலும் நிறுத்தாமல், தீர்விலும் பொருத்தாமல் நடுவே நிறுத்திவிடுகிறது. அது திரிசங்கு சொர்க்கமல்ல. திரிசங்கு நரகம். செய்துமுடி அல்லது செத்துமடி என்ற தீவிரத்துடன் மோதுபவர்கள், செய்து முடித்திருக்கிறார்கள்.

வெளியே இருக்கும் மலைபோன்ற பிரச்சினைகளுக்கு மட்டுமல்ல, மனிதனின் மனதுக்குள் நடக்கிற போராட்டங்களுக்கும் இது பொருந்தும். உணர்ச்சிக்கும் அறிவுக்கும் நடக்கிற போராட்டம் – சபலத்துக்கும் சங்கல்பத்துக்கும் நடக்கிற போராட்டம் என்று, எல்லாவற்றையும் இதே தீவிரத்துடன்தான் மேற்கொள்ள வேண்டும்.

தன்னோடு நடந்த போராட்டத்தில் தன்னையே பணயம் வைத்தவர்களின் பயணங்கள், வெற்றிப்பயணங்கள் ஆகியிருக்கின்றன.

“மோகத்தைக் கொன்றுவிடு – அல்லால் – எந்தன் மூச்சை நிறுத்திவிடு

தேகத்தைச் சாய்த்துவிடு – அல்லால் – அதில் சிந்தனை மாய்த்துவிடு” என்று மகாகவி பாரதி முன்மொழிவதும் இதைத்தான்.

சாதக பாதகங்கள் என்று யோசித்து சிலர் தயங்கி நிற்கிறார்கள் என்பதாகப் பார்த்தோம். இதில் இருக்கிற ஒரே பாதகம், தோல்வி பற்றிய பயம்தான். உண்மையில் முயற்சி என்பது தொடர்கதையானால் தோல்வி என்பது சிறுகதைதான்.

தவறுகளைத் திருத்திக் கொண்டு மீண்டும் சிலர் முயன்றிருக்கிறார்கள். பலரோ தோல்வி தந்த அதிர்ச்சியிலும் அவமானத்திலும் துவண்டு போய் விழுந்திருக்கிறார்கள். தோல்வியால் விழுந்தவர்கள் எவருமில்லை. தோல்வி தந்த அவமானத்தால் தங்கள் மீது தாங்களே அவநம்பிக்கையடைந்து, அதனால் விழுந்தவர்கள்தான் அதிகம்.

இரண்டில் ஒன்று பார்ப்பவர்கள் சாமர்த்தியசாலிகள். இரண்டையுமே பார்த்துத் தயங்குபவர்கள் குழப்பவாதிகள். நீங்கள் ….. சாமர்த்தியசாலியா? குழப்பவாதியா?

(மலைகள் நகரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *