உஷார் உள்ளே பார்

– சோம. வள்ளியப்பன்

-தொடர்

ஒரு அரசு நிறுவனத்தில் சக்தி வாய்ந்த பதவியில் இருந்த ஒரு நல்ல மனிதர் அவர். பொதுக் காரியங்களில் ஈடுபாடு கொண்டவர். பலருக்கும் தாரளமாக உதவியவர். பல சாதாரண பின்புலம் இல்லாத மனிதர்களுக்கும்கூட தகுதி அடிப்படையில் வாய்ப்புகள் கொடுத்தவர்.

என்ன காரணமோ தெரியவில்லை. ஒரு முறை அவரைப்பற்றி ஒரு பத்திரிகையில் யாரோ மட்டமாக எழுதிவிட்டார்கள். அவர் பெயரைப் போடவில்லையே தவிர மற்றபடி அவர்கள் விவரித்த விதத்தில் அவர் இன்னார் என்று சுலபமாக ஊகிக்கும்படி எழுதியிருந்தார்கள். அவர் பதவி உயர்வுகள் பெற சில கேவலமான வழி முறைகளை பின்பற்றுகிறார் என்பதுதான் அவரைப் பற்றி எழுதியிருந்த விபரம்.

அவருக்கு ‘வேண்டிய’ ஒருவர் நினைவாக அவருக்கு போன் செய்து, உங்களைப்பற்றி இந்த பத்திரிகையில் என்னவோ போட்டிருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டார். அவர் அந்த பத்திரிகையை உடனே தேடி வாங்கி பதற்றதுடன் படித்தார். மனிதர் ஆடிப்போய்விட்டார். அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பிப் போய், அறைக்குள் நுழைந்து கதவைத் தாழ் போட்டுகொண்டவர், வெகுநேரம் கதவை திறக்கவேயில்லை.

‘என்னைப் பற்றி இப்படி எழுதி விட்டார்களே. இனி என்ன செய்வது? மற்றவர்கள் முகத்தில் எப்படி விழிப்பது? இனி நான் என்ன செய்வேன்? நான் என்ன இப்படிப்பட்டவனா? இதெல்லாம் சரியில்லை பொய் என்று எப்படி என்னால் எல்லோருக்கும் நிரூபிக்க முடியும்? சமுதாயத்தில் இனி என் மதிப்பு என்ன ஆகும்? போச்சே மதிப்பு மரியாதை எல்லாம் போச்சே போச்சே. இராப்பகலாக அவர் மனது கிடந்து அரற்றியது. அதையே நினைத்து நினைத்து வருந்தியது. அதன் பிறகு அவரால் வேறு எதைப் பற்றியும் சிந்திக்க முடியவில்லை. மனிதர் தளர்ந்து போனார். இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் அவரால் அலுவலகம் போக முடிந்தது. அதுவும் மனைவியின் வற்புறுத்தலால்.

அலுவலகம் போய்விட்டாரே தவிர அவரால் அங்கே பழையமாதிரி இயல்பாக இருக்க முடிய வில்லை. அதிகாரத்துடன் பேச முடியவில்லை. அவரைப் பார்க்க வருகிற வெளிஆட்களை மட்டுமல்ல. அவரது அலுவலக ஊழியர்களையே கூட சந்திப்பதை தவிர்த்தார். கூனிக்குறுகிப் போனார்.

அவரை பற்றி எழுதப்பட்டிருந்த அந்த தாளை எவருக்கும் தெரியாமல் தனியாக பல முறை படித்துப் பார்த்தார். மனது வெதும்பினார். அதன் தாக்கம் அவர் மனதில் பல மாதங்களுக்கு இருந்தது. போகவேயில்லை.

அவருடைய மன ஊளைச்சலுக்கு என்ன காரணம்? அவரை பற்றி வந்த தவறான கேவலப் படுத்தும் விதமாக வெளியான செய்திதானே!

கேள்வி இதுதான். யாரோ சொல்லி விட்டார்கள். பேசிவிட்டார்கள். தன்னைப்பற்றி தவறாக எதிலோ வந்துவிட்டது என்பதால் ஒருவர் இவ்வளவு மன உளைச்சல் அடைய வேண்டுமா என்ன?

சங்கடத்திற்குக் காரணம், தன்னைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற அவருடைய பயம் மற்றும் பதைபதைப்புதான். அவருடைய அந்த நினைப்புதான் அவ்வளவு வருத்தத்திற்கும் காரணம்.

அந்த நினைப்பு சரிதானா?

சில சமயங்களில் மனது செய்கிற மாயைகளில் இதுவும் ஒன்று. நடந்துவிட்ட செயல் உண்மைதான். அவரைப்பற்றி அவதூறாக எழுதி விட்டார்கள். அது வெளிவந்துவிட்டது. அது நிச்சயம் நடந்ததுதான். அதில் சந்தேகம் இல்லை. மாற்றம் இல்லை. மாற்றவும் முடியாது.

ஆனால் நடந்த ஒன்றை அவர் எப்படி எடுத்துக் கொள்ளுகிறார் என்பது வேறு. ஒன்று நிகழ்ந்ததில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.

நடைபெற்ற செயலால் ஏற்படப்போகும் விளைவினை மனது எடுத்துச் சொல்லும் விதத்தைப் பொறுத்துதான் எவருக்குமே அதன் தாக்கம் இருக்கும். ஒருவருடைய மனதுதான் நிகழ்வின் விளைவுகளை சம்மந்தப்பட்டவருக்கு எடுத்துச் சொல்லுகிறது.

எவரும் நடந்த செயலுக்காக வருத்தப் படுவதில்லை. அச்சப்படுவதில்லை. அந்த நிகழ்வால் ஏற்படப் போகும் விளைவினை நினைத்துத்தான் கவலை உண்டாகிறது. நடந்தது வேறு. அதனை பற்றிய நினைப்பு வேறு.

பத்திரிகையில் அவரைப்பற்றி அவதூறாக வந்த செய்தியின் விளைவு விபரீதமாக இருக்கும் என்று அவர் மனது எடுத்துச் சொல்லியதால் தான் அவருக்கு அத்துணை வருத்தமும் பயமும் ஏற்பட்டது. அவ்வளவு சங்கடப்படும் அளவு. அப்படி பூதாகரமாக ஏற்படப்போகும் விளைவினை பெரிதுபடுத்திக் காட்டியிருக்கிறது அவர் மனது. என்னவோ அந்த செய்தித்தாளை உலகமே படித்துவிடுவதுபோலவும் படித்துவிட்டு இவரை பார்த்து, “சீ, நீயெல்லாம் ஒரு மனிதனா?” என்று பார்க்கிற எல்லோரும் கேட்பது போலவும் ஒரு பிரம்மையை உண்டாக்கியிருக்கிறது. இப்படி யாக அவர் மனதிற்குள் பெரும் கூச்சல், இரைச்சல் அமளி. அதனால் குழப்பம்.

மனது இப்படியெல்லாம் சொல்லுகிறதே. இப்படித்தான் நடக்கப்போகிறதா? உண்மையா? இப்படி நடக்கமுடியுமா? இப்படியா நடக்கும்? என்றெல்லாம் அந்த நேரம் அவரது அறிவால் அமைதியாக தெளிவாக யோசிக்க முடியவில்லை. காரணம் மனது செய்த மாயம், மனது சொல்லுவதை அப்படியே ஏற்றுக்கொண்டு மனிதர் வருத்தத்தில் ஆழ்ந்துபோய்விட்டார்.

அந்த பத்திரிக்கை என்ன உலகி லேயே அதிகம் விற்கும் பத்திரிகையா? அப்படியே கூடுதலாக விற்கும் பத்திரிகையாவே இருந்தாலும் அந்தச் செய்தி என்ன தலைப்பு செய்தியா? அந்த பத்திரிகையின் ஒரே செய்தியா அது? அந்த செய்தியைப் படிக்கிற ஒவ்வொரு வருக்கும் அவரைத் தெரியுமா? படித்தாலும் என்ன சொல்லுகிறார்கள் என்று புரியுமா? புரிந்தாலும் நம்புவார்களா?

எதுவுமே இல்லை. ஆனால் அப்படி மனது கற்பனை செய்துகொள்ளும். அதுவாகவே பெரிது படுத்திக் கொள்ளும். இருப்பதை அதிகமாக்கி காட்டும் கம்ப்யூட்டரில் 150% 200% 300% என்று பெரிதுபடுத்திப் பார்ப்பதைப் போல விஸ்தாரமாக்கும்.

தவிர அந்த செய்தி என்ன சாசுவதமா? ஒருநாள் செய்திதானே மக்களுக்கு அந்த ஒரு செய்தியை நினைப்பு வைத்துக் கொள்ளுவது தவிர வேறு வேலை இல்லையா? நாளாக நாளாக மறந்து போகாதா? செய்தியின் தாக்கம் எவ்வளவு நாளைக்கு?

ஆக அப்படிப்பட்ட ஒரு செய்தி அவரை அவ்வளவு தூரம் கலங்கடித்திருக்கத் தேவையில்லை. ஆனாலும் கலங்கினார். அவர் மட்டுமில்லை. அப்படி ஏதும் நிகழ்நதால் நம்மில் பெரும் பாலானவர்கள் ஆடித்தான் போய் விடுவோம். பத்திரிகையில் அவதூறான செய்தி வந்தால் மட்டுமா இப்படிப்பட்ட வருத்தம் வரும்? இதே போன்ற சோர்வும் மன உளைச்சலும் சங்கடமும் எவருக்கும் வரலாம். நிகழ்வு வேறாக இருக்கலாம். நிகழ்த்துபவர் வேறாக இருக்கலாம்.

மனது தெரியாமல் செய்கிற தவறுகள் இரண்டு. முதலாவது கிடைக்கிற தகவலை அப்படியே எடுத்துச் சொல்லாமல், அதன் வீரியத்தினை அதிகரித்து காட்டுவது. இரண்டாவது தாக்கதத்தின் அதன் கால அளவை நீட்டித்து முடிவில்லாதது போல காட்டுவது.

ஒரு தேர்வில் பெயில் ஆகிவிட்டால் என்ன? ஒரு தேர்தலில் வெற்றியை தவறிப்போனால் என்ன? ஒரு வர்த்தகத்தில் நட்டம் ஏற்பட்டுவிட்டால் என்ன? ஒருவர் தவறாக பேசிவிட்டால் என்ன? ஒன்றை இழந்துவிட்டால்தான் என்ன? அந்த ஒன்றே ஒன்றுகளால் பெரிய தாக்கம் இல்லை. ஆனால் அந்த சமயம் மனது. அந்த இழப்பை அவதூற்றை பிரம்மாண்டமாக்கும். பலமடங்கு அதிகரித்துப் பேசும். வாதிடும். மனக்குழப்பம், கவலை, வருத்தம் உண்டாக்கும்.

மனது விரித்துச் சொல்லும். விபரீதங்களை நினைத்து சிலர், மிகத்தீவிரமான முடிவுகள் கூட எடுத்துவிடுகிறார்கள். பிரச்சனையில் இருந்து மட்டுமல்ல வாழ்க்கையிலிருந்தே ஓடி தப்பித்துக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுவிடுவார்கள். எல்லாமே தற்காலிகம். மனது பயமுறுத்துவதை விட குறைந்த அளவே தாக்கம் தருபவையே எதுவும் என்பதை சரியாக புரிந்துகொண்டு விட்டால் போதும். வெற்றியாளர்கள் அப்படித் தான் சிந்திக்கிறார்கள்.

பயமுறுத்துவது மற்றவர்களை மட்டுமல்ல. அதைவிட முக்கியமாக தங்கள் மனதையே எதிர்த்த அவர்கள் கேள்விகள் கேட்கிறார்கள். அவர்களால் முடிகிறது.

மற்றவர்களும் அவர்கள் மனதும் சொல்லுவதை அப்படியே அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. உடனே கவலையில் ஆழ்ந்து விடுவதில்லை.

மாறாக உணர்வினைக் குறைத்து அறிவினை ஆட்சிப் பீடத்தில் ஏற்றுகிறார்கள். உண்மை நிலையினை உணர்கிறார்கள். அமைதியாக செயல் தொடர்கிறார்கள்.

மனதின் கூச்சலை அடக்குவது அனாவசிய விரிவாக்கத்தினை எதிர்ப்பது, தடுப்பது உண்மை அமைதியாக சிந்திக்க தலைப்படுவது. மனதினுள் அமைதியை கொண்டுவருவது தெளிவாக சிந்திப்பது தேவையான அளவு மட்டும் யோசிப்பது.

எவருக்கும் இது சாத்தியம்தான்.

Leave a Reply

Your email address will not be published.