– ருக்மணி பன்னீர்செல்வம்
ஒரு கை ஓசையெழுப்பாது. தனிமரம் தோப்பாகாது. இவையெல்லாம் நம்முடைய பெரியோர்கள் நமக்குத் தந்திருக்கின்ற மிகச் சிறந்த பொன்மொழிகள். ஒரு கட்டுரை அளவிற்கு சொல்லவேண்டிய செய்திகளையெல்லாம் ஒரேயொரு
பொன்மொழியில் சுருக்கித் தந்துள்ள நம்முடைய பெரியவர்கள் எவ்வளவு பாராட்டுக்குரியவர்கள்.
தன்னுடைய தொழிலை தன்னுடைய நிறுவனத்தை மிகப்பெரிய அளவில் கொண்டு வரவேண்டும் என்ற கனவுடையவர்கள் பலர். இவர்கள் தனியாய் போராடுவதைக் காட்டிலும் தன்னோடு ஒத்த கருத்தையுடையவர்களோடு இணைந்து செயல்படும்போது வெற்றியை எளிதில் அடையலாம்.
உயர்ந்த குறிக்கோள்களுடன் ஒன்றிணைந்தவர்களின் முயற்சிகளுக்கு எப்போதுமே மிகச்சிறந்த பலன்கள் கிடைக்கும்.
முன்னேற்றத்திற்கான திட்டங்கள் வகுக்கும் போது அவற்றை நம்மோடு இணைபவர்களுடன் பகிர்ந்துகொண்டால் புதிய புதிய சிந்தனைகள், புதிய வழிமுறைகள் கிடைக்கின்றன.
வேலைகளைப் பகிர்ந்தளிக்கும்போது வேலையின் பளு குறைகின்றது. துன்பத்தின் சுமை குறைகின்றது. மகிழ்ச்சியின் அளவு கூடுகின்றது.
நிதிச் சுமையை பகிர்ந்து கொள்ளும்போது தேவையற்ற பயம் நீங்குகிறது. நிர்வாகத்தை பகிர்ந்து கொள்ளும்போது விரிவாக்கம் செய்ய வாய்ப்புகள் கிடைக்கின்றது. இவற்றால் வருவாய் பெருக வழி ஏற்படுகின்றது.
மிகக் கனமான ஒரு பொருளை ஓரிடத்திலிருந்து நகர்த்தும்போது இருவர் முன்புறமிருந்து இழுக்கலாம். அதேநேரத்தில் பின்புறமிருந்து இருவர் தள்ளிவிட்டால் அந்த வேலை எளிதாய் முடியும்.
வேறுபட்ட விசைகள் ஒன்றுகூடி செயல்படும்போது வேலை சுலபமாகிவிடுகின்றது. எனவே வெவ்வேறு ஆற்றல் படைத்தவர்களை நம்மோடு இணைத்துக் கொள்வதன் மூலம் வெற்றிக்கான பாதையை நாம் மிருதுவாக்கிக் கொள்ள முடியும்.
கூடி முயற்சி செய்தால் நாம் கோடிகளைப் பெறலாம்.
வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்பதுதான் நமது நோக்கமாக இருக்கும்போது முதலில் செய்யவேண்டிய பணி நமக்குள் ஒளியைப் பெருக்கிக் கொள்வதுதான்.
பிறையாய் இருக்கின்ற வரை எவற்றிலும் பிரதிபலிக்காத நிலாதான் பூரணத்துவம் பெற்றவுடன் பௌர்ணமியாகி நதி, குளம், குட்டை, கிணறு, கண்ணாடி என்று எல்லாவற்றிலும் வெளிப் படுகிறது. நமக்கு எதிர்த் திசையில் இருக்கும் போது நம்முடைய இரண்டு கண்களிலும்கூட தன்னை வெளிப்படுத்துகின்றது.
உலக மக்களால் மிக உயர்ந்த விருதாக கருதப்படும் நோபல் பரிசினை 1901 தொடங்கி இன்றுவரை 800 பேர் பெற்றுள்ளனர். இவர்களில் பெண்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் மிகவும் குறைவு. 36 பெண்கள் மட்டுமே இதுவரை நோபல் பரிசினைப் பெற்றிருக்கிறார்கள்.
2009-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்றவர்களின் பட்டியலைப் பார்த்தவுடன் ஒரு மகிழ்ச்சிக்குரிய செய்தி கிடைத்தது. இவ்வாண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசினை மூவர் கொண்ட குழு பெற்றுள்ளது. இது கூட்டு முயற்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசாகும்.
இதில் மேலும் மகிழ்ச்சிக்குரிய செய்திகள் மூவருக்கான நோபல் பரிசில் வெவ்வேறு வயதுடைய பெண்கள் இரண்டுபேர் என்பதும் முதல்முறையாய் இரண்டு பெண்கள் இணைந்து பாடுபட்டு தங்களின் ஆராய்ச்சிக்காக இப்பரிசினைப் பெற்றிருக்கிறார்கள் என்பதும்தான்.
ஆஸ்திரேலியாவைத் தாயகமாய்க் கொண்ட எலிசபெத் பிளாக்பர்ன், அமெரிக்காவின் காரல் கிரைடர் ஆகிய இரு பெண்களுடன் இணைந்து மருத்துவத்திற்கான நோபல் பரிசினை பகிர்ந்துகொள்பவர் இங்கிலாந்தில் பிறந்த ஜேக் ஸாஸ்டெக் ஆவார்.
சாதனைகள் படைக்க ஒரேமாதிரி குறிக்கோள்கள் கொண்டவர்களுடன் ஒன்றிணையும்போது இனம், வயது, பாலினம், நாடு இவையெல்லாம் பொருட்டல்ல என்பதை மேற்கண்ட மூவர் கூட்டணி மிகத்தெளிவாய் நமக்கு பறைசாற்றுகிறது.
மருத்துவத் துறையில் பல ஆண்டுகளாக இம் மூவரும் ஒன்றிணைந்து மேற்கொண்ட கூட்டு முயற்சியால் மனித குலத்திற்கு வருங்காலத்தில் பெரும் நன்மைகள் விளையப் போகின்றன என்பதை இவர்களின் ஆராய்ச்சி வெளிப்படுத்துகின்றது.
புற்றுநோயை குணப்படுத்த மருத்துவத் துறையில் இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்த ஆராய்ச்சிகளுக்கெல்லாம் முடிவு கட்டப்பட்டு புதிய கோணத்தில் ஆய்வுகள் மேற்கொள்ள வழி வகுக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசினைப் பெற்ற இவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரை தெரிவிக்கின்ற செய்திகள் மருத்துவ உலகினை குலுங்க வைத்திருக்கின்றதென்றால் அது மிகையில்லை.
அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரை சொல்லும் சில விஷயங்கள்:
நம் உடலில் உள்ள செல்கள் பிரிகின்ற போது அதிலுள்ள குரோமோசோம்களை ஒவ்வொரு செல்லுக்கும் பிரதியெடுப்பது ஒரு குறிப்பிட்ட என்ஸைம் என்பதை கண்டுபிடித்து அந்த என்ஸைமிற்கு ‘டெலோமிரஸ்’ என்று இவர்கள் பெயரிட்டிருக்கிறார்கள்.
குரோமோசோம்களின் வால் போன்ற பகுதிக்கு டெலோமியர் என்று பெயர். இந்த டெலோமியர்தான் குரோமோசோம்களின் இறுதிப் பகுதியோடு ஒட்டியபடி ஒரு பாதுகாப்பு கவசமாய் இருந்து குரோமோசோம்களை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது.
எலிசபெத் பிளாக்பர்னின் வார்த்தைகளில் சொல்வதென்றால் ஷு லேஸின் முனை போன்று காணப்படும் இந்த டெலோமியர் சிதைந்து போனால் செல்கள் அழிந்துவிடுகின்றன. முதிர்ச்சி ஏற்படுகின்றது. டெலோமியர் நன்றாக இருக்கின்றவரை அதாவது அதன் நீளம் குறையாதவரை செல்கள் இளமையோடு இருக்கின்றன.
ஆனால், அதே நேரத்தில் கேன்சர் செல்களில் டெலோமியரின் நீளம் குறையாமல் இருப்பதால் செல்கள் அழியாமல் இருக்கின்றன. கேன்சர் செல்களைக் கண்டுபிடித்து அதிலுள்ள டெலோமியரை அழித்துவிட்டால் கேன்சர் செல்களும் அழிந்துவிடும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்கு புதிய வழி கிடைத்துவிடும்.
நல்ல நிலையில் இருக்கும் செல்களில் டெலோமியரின் நீளம் குறையாமல் பாதுகாத்தால் என்றும் இளமையோடு வாழவும் வழி பிறக்கும்.
மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களின் உற்பத்தியிடமாக இருப்பதும் இந்த டெலோமியர்கள்தான்.
இந்த டெலோமியர்களை தேவைக்கேற்றபடி மாற்றியமைக்க முடியுமா என்பதுதான் இப்போது மருத்துவர்கள் மேற்கொண்டிருக்கும் ஆராய்ச்சி. அவ்வாறு செய்யமுடியும் என்கின்ற நிலை ஏற்பட்டால் மனிதர்களின் பல்வேறு நோய்கள் மறைந்து போய்விடும்.
இவற்றிற்கெல்லாம் பாதை காட்டியிருப்பவர்கள் 1.4 மில்லியன் டாலர் நோபல் பரிசுத் தொகையினைப் பெறுகின்ற அந்த மூவர் குழுவினர்தான்.
Leave a Reply