அட்டைப்பட கட்டுரை மரபின்மைந்தன் முத்தையா

2010 புத்தாண்டில் வெற்றிபெற 15 வழிகள்

தெருவில் நடந்தால் ஹேப்பி நியூ இயர்! செல்ஃபோன் எடுத்தால் ஹேப்பி நியூ இயர்! ஈமெயில் திறந்தால் ஹேப்பி நியூ இயர்! அலுவலகம் நுழைந்தாலும் ஹேப்பி நியூ இயர்! இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் புழுதி பறக்கும் கூச்சல்களுக்கு நடுவே, எது புத்தாண்டு என்று ஒரு நிமிடம் யோசியுங்கள்.

எப்போதெல்லாம் புதிய வளர்ச்சி வருகிறதோ, எப்போதெல்லாம் பொருளுள்ள மாற்றம் நோக்கிப் போகிறோமோ, அப்போதெல்லாம் புத்தாண்டுதான். ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு, புதிய நிதியாண்டு, புதிய கல்வியாண்டு, உங்கள் பிறந்த நாள் எல்லாமே புதிய மாற்றம் ஆரம்பமாகிவிட்டதா என்று கேட்டு காலம் வைக்கிற அலாரம்தான்.

புத்தாண்டு வார்த்தைகளால் கொண்டாட வேண்டியதல்ல. வாழ்க்கையால் கொண்டாட வேண்டியது. இந்தப் புத்தாண்டை அர்த்தமுள்ளதாய், வெற்றிமிக்கதாய் ஆக்க, சில வழிகளைப் பார்ப்போமா?

பத்து நிமிடங்கள் முன்னதாக:

உங்கள் நாளை வழக்கமாகத் தொடங்குவதற்குப் பத்து நிமிடங்கள் முன்னதாகத் தொடங்குவது என்று முடிவெடுங்கள். காலை 5 மணிக்கு எழுபவரா நீங்கள்? 4.50க்கு எழுந்து பழகுங்கள். கூடுதலாகக் கிடைக்கிற பத்து நிமிடத்தில், அமைதியான காலை நேரத்தில் உங்களின் அன்றைய வேலைக்கான ஆற்றலின் கதவுகள் அகலத் திறப்பதை உணர்வீர்கள்.

பத்து நிமிடங்கள் தாமதமாக:

உங்களுக்கு வந்து சேரும் தகவல்களில் சில, ஒன்று உங்களைப் பரவசத்தின் உச்சிக்குக் கொண்டு செல்லலாம். அல்லது, பதட்டத்தின் உச்சிக்குக் கொண்டு போகலாம். அப்போது நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதில்தான் வெற்றியே இருக்கிறது. பரவசமோ, பதட்டமோ, உடனே எதிர்வினை ஆற்றாதீர்கள். பத்து நிமிடங்களுக்குப் பிறகு எதிர்வினை ஆற்றுவதை யோசியுங்கள். அந்த எதிர்வினை பதில் சொல்வதாக இருக்கலாம், திட்டுவதாகக் கூட இருக்கலாம். எதையும் பத்து நிமிடங்களுக்குப் பிறகு செய்யுங்கள்.

பத்து நிமிடங்கள் மௌனமாக:

நீங்கள் தியானப் பயிற்சி மேற்கொள்ளாதவராக இருந்தால், விரைவில் சரியான இடத்தில் தியானம் பழகுங்கள். அதுவரை ஒரு நாளின் மத்தியில், பத்து நிமிடங்களாவது மௌனத்தில் இருங்கள். அந்த நேரத்தில் செல்ஃபோனை அணைத்துவிடுங்கள்.

முதல் முப்பது நிமிடங்கள்:

ஒரு நாளின் முதல் முப்பது நிமிடங்களை உங்கள் ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்துங்கள். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா என்று உங்கள் வழக்கம் எதுவாக இருந்தாலும் சரி. ஒரு நாளின் முதல் முப்பது நிமிடங்களை அதற்காக செலவிடுங்கள். ஒருவேளை அந்த வழக்கம் இல்லையா? உடனே…. உடனே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

உணவிலும் ஓய்விலும் ஒழுங்கு:

வேலைச் சுமையைக் காரணம்காட்டி உணவு நேரத்தையும் ஓய்வு நேரத்தையும் அடிக்கடி தள்ளிப் போடுவது, உங்கள் உடலியக்கத்துக்குள் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும். உணவுப் பழக்கத்திலும் ஓய்விலும் மிதமான, இதமான முறைகளைக் கையாளுங்கள், வயதுக்கேற்ப சாப்பிடுங்கள், வயிற்றின் மீது வன்முறையைப் பிரயோகம் செய்யாதீர்கள்.

மறுநாளின் டைரியை முதல் நாளே எழுதுங்கள்:

ஒரு நாளில் நடந்த சம்பவத்தை எழுதமட்டுமல்ல டைரி. மறுநாளின் திட்டமிடுதலை நிகழ்த்துவதற்கும்தான். அடுத்த நாளின் அலுவல்களை, அவற்றின் முக்கியத்துவத்தின்படி, முதலிடம் – இரண்டாமிடம் என்று பகுத்து எழுதத் தொடங்குங்கள். மறுநாள் கண்விழித்துத் தயாரானதுமே களத்தில் இறங்க, இந்த திட்டமிடுதல் துணைபுரியும்.

அடைசல்கள் அகற்றுங்கள்:

அடைசல்கள், குப்பைகள், குவிந்துகிடக்கும் கோப்புகள் ஆகியவற்றில் பிரபஞ்ச சக்தி தேங்கிவிடுகிறது. அத்தகைய இடங்களில் செயலாற்றல் தூங்கிவிடுகிறது. போகி வரை பொறுத்திருக்காமல் குப்பைகளையும் வேண்டாதவற்றையும் உடனுக்குடன் அகற்றுங்கள். போகிக்கு மறுநாள் பொங்கல். குப்பைகளை அகற்றினால் பொங்கிவரும் செயலாற்றல்!!

மனிதர்களை நெருங்குங்கள்:

இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்வதற்கு சமஉரிமை இருக்கிறது. காரணத்துடனோ காரணம் இன்றியோ மனிதர்களை வெறுக்கும்போது, அந்த வெறுப்பு நமக்குள்ளே வேண்டாத சுரப்பிகளைத் தூண்டி பதட்டம் சுரக்க வைக்கிறது. மனிதர்களை நிறைகுறைகளுடன் ஏற்றுக்கொண்டு அவர்களை நேசிக்கத் தொடங்குங்கள். எல்லோரையும் நேசிப்பது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ, உங்களுக்கு ரொம்ப நல்லது.

அடுத்து என்ன? இதுவே மந்திரம்:

வெற்றியோ தோல்வியோ, சாதனையோ சவாலோ, எது நேர்ந்தாலும் அடுத்தது என்ன என்று கேளுங்கள். அப்போதுதான் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும். குழந்தை கண்ணாடியை உடைத்துவிட்டதா? அடுத்தது என்ன? அள்ளிப்போட வேண்டியதுதான். சொன்ன வேலையை உதவியாளர் செய்யவில்லையா? அடுத்தது என்ன? இப்போதாவது செய்யச் சொல்ல வேண்டியதுதான். அடுத்தது என்ன? (WHAT NEXT?) இது வெற்றியின் மந்திரங்களில் முக்கியமானது.

நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள்:

ஒவ்வொருநாள் விடியலிலும் உங்கள் மீது நீங்களே நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள். “இதே உற்சாகத்துடன் வேலையில் இறங்கலாம். இன்றைய வேலைகளை சரியாக முடிக்கலாம்” என்று உங்கள் மீது நீங்களே நம்பிக்கை வைத்து நாளைத் தொடங்குங்கள்.

நன்றி அறிவிப்புத் தீர்மானமும் போடுங்கள்:

ஒவ்வொருநாள் இரவும் உறங்கப் போவதற்கு முன்னால், (நீங்கள் பி.பி.ஓ. ஆசாமியாய் இருந்தால், ஒவ்வொரு பகலும் உறங்கப் போவதற்கு முன்னால்) நடந்து முடிந்த வேலைகளுக்காக, கடவுளுக்கும் துணை நின்றவர்களுக்கும் மனசுக்குள்ளேயே நன்றி சொல்லுங்கள். இன்று முடிக்க முடியாத வேலைகளையும் மறுநாள் முடிக்கப் போவதற்கு முன்கூட்டியே கடவுளுக்கு நன்றி கூறுங்கள்.

பணத்துக்கு வேலை கொடுங்கள்:

உங்கள் வருமானம் எவ்வளவாக இருந்தாலும் அந்தப் பணத்துக்கு வேலை கொடுங்கள். பணம், தன்னைத்தானே பலமடங்கு பெருக்கிக்கொள்கிற பேராற்றல் உடையது. ஈட்டிய பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். அது தானாகவே பெருகும்.

கடிகாரத்தை மட்டுமல்ல நேரத்தையும் கையில் கட்டுங்கள்:

உங்கள் நேரம் உங்கள் பொறுப்பிலும் கண்காணிப்பிலும் இருக்கட்டும். அரட்டை – அவதூறு – அனாவசியமான பேச்சு என்று அடுத்தவர்கள் உங்கள் நேரத்தைக் கொள்ளையடிக்க இடம் கொடுக்காமல் விழிப்புடன் இருங்கள்.


நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்:

இறுக்கமாய் இருப்பதால் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை – மன இறுக்கத்தையும் மன அழுத்தத்தையும் வளர்த்துக் கொள்வதைத் தவிர!! வெற்றியாளர்களும் வரலாற்று புருஷர்களும் நகைச்சுவை உணர்வு நிறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். நகைச்சுவை உணர்வு, வாழ்வின் பூட்டப்பட்ட பல கதவுகளைத் திறந்துவிடும்.

மனிதத்தன்மையே கடவுட் தன்மையின் ஆரம்பம்:

மற்றவர்களின் சிரமங்களைப் புரிந்துகொள்வதும், மனித நேயத்துடன் உதவுவதும், மற்றவர்களை மன்னிப்பதும், மனிதர்களின் பகுதிநேர வேலை. கடவுளுக்கோ, முழுநேர வேலை. முதல் உங்களையும், பிறகு மற்றவர்களையும் முழுமனதோடு மன்னித்து, மலர்ச்சியாய் – மகிழ்ச்சியாய் – வாழ்க்கை என்கிற கொண்டாட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுங்கள்.

நல்வாழ்த்துக்கள்…… புத்தாண்டில் தொடங்கும் உங்கள் புதிய வாழ்க்கைக்கு!

2 Responses

 1. James P Camaron

  Muyarchi Muthal Vettri, Paerchi Muzhu Vettri, Idhu Intha 15 patthigalukkum porundhum. Enakkum than. Nanddri.
  Eniya Nal Vazhthukkal.

  Enddrum Anbhudan Anban,

  James P Camaron
  Chennai 2.

  Thodarpukku. 044 285 44044, 99 6251 6251, 98 4141 6251

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *