இன்சூரன்ஸ்

– கிருஷ்ண. வரதராஜன்

பிஸினஸ் ஆர்வம் உள்ள ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய பகுதி

பிஸினஸ்ல பின்னுங்க…

ஒரே வணிகத்தை, ஒரே ஊரில், ஒருவர், லாபகரமாக செய்கிறார். இன்னொருவர், சீக்கிரமே நிறுவனத்தை இழுத்து மூடிவிடுகிறார். எனவே வெற்றி தோல்வி, வணிகத்தை பொறுத்தது இல்லை,

நாம்வ செய்கிற விதத்தைப் பொறுத்தது. எனவே, இப்பகுதியில் ஒவ்வொரு வணிகமாக எடுத்து அலசப்போகிறோம். தோற்றவர் தோற்றது எதனால், வென்றவர் வென்றது எதனால் என்ற அலசல் வணிகம் செய்பவர்களுக்கு மட்டுமல்ல வணிகம் துவங்கலாமா? என்று யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் உதவியாக இருக்கும். இந்த மாத அலசல் இன்சூரன்ஸ் பற்றி..

காட்டிற்கு, வேட்டைக்காக சென்ற ராஜா, வயதான ஒருவர் தள்ளாத வயதிலும் சுள்ளி பொறுக்கிக்கொண்டிப்பதைப் பார்த்தார். அழைத்து விசாரித்தார். மகன் இறந்து விட்டதாகவும் மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளை பாதுகாக்க சுள்ளி பொறுக்கி விற்று ஒருவேளைக் கஞ்சி குடிப்பதாகவும் சொன்னார். வயதானவரைப் பார்த்து இரக்கப்பட்ட ராஜா, அவருக்கு அங்கே இருந்த சந்தன மரங்களைக் காட்டி, “இவையனைத்தும் இனி உனக்கே சொந்தம்” என்று தானம் கொடுத்துவிட்டு வேட்டைக்கு காட்டிற்குள் சென்றார்.

1 வாரம் கழித்து திரும்பி வரும்போது எதிரில் தலையில் சுமையோடு பெரியவரைக் கண்டார். ராஜாவுக்கு அதிர்ச்சி. இவருக்கு நாம் நுôற்றுக்கணக்கான சந்தன மரங்களை அல்லவா தானம் கொடுத்தோம்? இவர் வறுமை நீங்கி மகிழ்ச்சியாக இல்லாமல் இன்னும் காட்டிலே என்ன செய்துகொண்டிருக்கிறார்? என்று அவரை அழைத்து விசாரித்தார்.

முதியவர் சொன்னார், “அரசே உங்களுக்கு நன்றி. முன்பு ஒருவேளை கஞ்சி குடிக்கவே கஷ்டப்பட்டோம் இப்பொழுது நீங்கள் கொடுத்த மரங்களை எல்லாம் எரித்து கரியாக்கி அருகில் உள்ள நகரத்தில் விற்று மூன்று வேளையும் கஞ்சி குடிக்கிறோம்” என்றார்.

ராஜாவுக்கு எப்படி இருந்திருக்கும்? என்று யோசித்துப்பாருங்கள். சந்தன மரமே உங்களிடம் இருந்தாலும் அதன் அருமையை புரிந்து கொள்ளாவிட்டால் உங்கள் வாய்ப்பு மேம்பட ஒரு நாளும் வாய்ப்பில்லை. இன்சூரன்ஸ் துறையும் ஒருவகையில் சந்தன மரம்தான். பலர் அதை சந்தன மரமாகவே பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையை வாசனையாக்கிக்கொள்கிறார்கள். ஆனால், சிலர் அதை கரியாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

எதற்கும் உற்சாகம் இழக்காதவர்களுக்கான வணிகம் இன்சூரன்ஸ். நல்ல வருமானம் என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு வரும் பலரும் அதற்கேற்றவாறு உழைக்க வேண்டியிருக்கும் என்பதை உணர்வதில்லை. அதனாலேயே புதியவர்கள் சீக்கிரம் துவண்டுவிடுகிறார்கள்.

சேவைக்கே வருமானம்

பாலிஸி கேட்டு, அலைந்து அலைந்து, நம்பிக்கை அவநம்பிக்கை இரண்டிற்கும் இடையில் ஊசலாடி, சீக்கிரமே துவண்டுவிடுவது இன்சூரன்ஸிற்கு மட்டுமல்ல எல்லா விற்பனைத் துறைக்குமே உள்ள பிரச்சனைதான்.

இன்சூரன்ஸ், நமக்கு வருமானம் என்று அலைபவர்கள்தான் சீக்கிரமே துவண்டுவிடுவார்கள். ஒரு குடும்பத்திற்கு எதிர்கால பாதுகாப்பு என்ற நோக்கத்தையும் அதோடு இணைத்துக்கொள்பவர்கள் ஒரு நாளும் துவள்வதில்லை.

இத்துறையில், ஏதாவது ஒரு பாலிஸி பிடித்து, நமக்கு எப்படியோ காசு வந்தால் சரி என்று இருக்கிறவர்களால் தற்காகமாக வெற்றி பெறமுடியுமே தவிர நிரந்தரமாக வெற்றி பெறமுடியாது.

இன்று எப்படியாவது 1 பாஸியாவது போட்டுவிட வேண்டும் என்பதற்கு பதிலாக இன்று 10 பேருக்காவது இன்சூரன்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நினையுங்கள். உற்சாகமாக வேலையும் செய்ய முடியும் வெற்றியும் கிடைக்கும்.

என் நண்பர் ஒருவர், அந்த ஊரில் உள்ள மிகப்பெரிய செல்வந்தரிடம் தொடர்ந்து அலைந்து அவரை சம்மத மனநிலைக்குக் கொண்டு வந்து விட்டார். இந்த அளவுக்கு சலிக்காமல் வந்து பார்க்கிறாரே என்ற காரணத்திற்காக மட்டும்தான் அவர், இன்சூரன்ஸ்ஸிற்கு சம்மதித்தார். பாலிஸியில் கையெழுத்திட்டு “இப்போதைக்கு 1 லட்சம் போடுங்கள், போதும்”. என்றார். நண்பர் கொஞ்சம் கூட தாமதிக்காமல் சொன்னார், “நன்றி சார். இன்று எனக்காக பாலிஸி போட்டிருக்கிறீர்கள். நாளை வருகிறேன். உங்களுக்காக ஒன்று போடுங்கள்”.

தன் வேலை பற்றிய தெளிவுதான் இப்படி பதிலுக்குக் காரணம். தன் குடும்பத்தின் எதிர்கால பாதுகாப்பிற்கு ஒருவருக்கு இன்சூரன்ஸ் அவசியம். இன்சூரன்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் உயரிய சேவைக்காக நமக்கு சன்மானம் என்பதுதான் அவரின் எண்ணம். அதனால்தான் தைரியமாகச் சொன்னார் “நீங்கள் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டியது எனக்காக அல்ல உங்களுக்காக” என்று. இப்படி விடாமுயற்சி உள்ளவர்கள் மட்டுமே இத்துறையில் வெல்ல முடியும்.

ஒவ்வொரு சந்திப்பும் சந்தோஷம்

“உன் நண்பனை கழட்டிவிட வேண்டும் என்றால் கடன் கொடு. உன்னை உன் நண்பர்கள் கழட்டிவிட வேண்டும் என்றால் இன்சூரன்ஸ் ஏஜென்டாகிவிடு” என்று ஜாலியாக கேலி செய்யும் அளவிற்கு இன்சூரன்ஸ் ஏஜென்டு என்றால் பலரும் தலைமறைவாகிவிடுவது என்னவோ உண்மைதான். இதற்குக் காரணம் ஒவ்வொரு சந்திப்பையும் சுவாரஸ்யமாக அமைத்துக்கொள்ளாததுதான்.

பேசினதையே பேசிக்கொண்டிருக்காமல், புதிது புதிதாக எதையாவது சொல்லி அடுத்து எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும். யாரை சந்திக்கச் செல்கிறோமோ அவர்கள் தொழில்சார்ந்த புதிய தகவல்களை சொல்லி அசத்தலாம். இல்லையானால் அவர்கள் தொழில்சார்ந்த சந்தேகங்களை ஆர்வமாகக் கேட்டு நம் அக்கறையையும் பாராட்டுகளையும் தெரிவித்து நம் சந்திப்பை இனிமையாக்கலாம்.

நம்புவதே நடக்கும்.

‘பாலிஸி எடுப்பார்’ என்று நினைத்தால் எடுப்பார். ‘எடுக்க மாட்டார்’ என்று நினைத்தால் எடுக்க மாட்டார். என்ன இது புதிய தத்துவம் என்று நினைக்கிறீர்களா? விளக்கமாகப் பார்ப்போம் வாருங்கள்.

சைக்கிள் ஓட்டிக் கற்றுக்கொள்ளும்போது பாருங்கள். சைக்கிளையும் உடம்பையும் பேலன்ஸ் பண்ண முடியாமல் நாமே தடுமாறிக் கொண்டிருப்போம். அந்த நேரம் பார்த்து எதிரில் யாராவது வந்துவிட்டால் நம் பயம் அதிகமாகிவிடும். அதுவும் வயதானவர்கள் என்றால், இரட்டிப்பாகிவிடும். “தாத்தா மேல் மோதிவிடப்போகிறோம்” என்று நினைப்போம்/ நினைத்த மாதிரியே அடுத்த நிமிடம் மோதிவிடுவோம். காரணம் மனம் தாத்தாவை நோக்கிச் சென்று முதலேயே மோதிவிட்டது. உடல் அதை பின்பற்றுகிறது.

அதே கதைதான் இதுவும். எதிரில் இருப்பவர், பாஸி எடுக்க மாட்டார் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டால், உங்கள் பேச்சில் உற்சாகம் குறைந்துவிடும். கருத்துக்களைத் துணிவோடு சொல்லமாட்டீர்கள். தடுமாறுவீர்கள். இதே எடுக்கப்போகிறார் என்று தெரிந்தால் பேச்சில் என்ன ஒரு உற்சாகம். துள்ளல்.

நன்றாக யோசித்துப்பாருங்கள். எடுக்க விரும்பாதவரிடம் அல்லவா உற்சாகமாகப் பேசி அவரை எடுக்க வைக்கவேண்டும். ஏன் இப்படி மாறி நடக்கிறோம்? எல்லாம் பாலிஸி கிடைக்காதோ என்ற தோல்வி பயம்.

மனதில் உறுதி வேண்டும் என்று பாரதி சொன்னது இன்சூரன்ஸ் ஏஜென்டுகளைப் பார்த்துதான். ஒருவரை பார்க்கச் செல்லும்போது பத்து லட்சத்திற்கு பாலிஸி வாங்கிவிட வேண்டும் என்று, உற்சாகமாகப் பேசுவார்கள். இரண்டு முன்று முறை அலைய நேர்ந்துவிட்டால் அந்தத் தொகையை பாதியாக குறைத்துவிடுவார்கள். பேசும்போது, பார்க்கலாம் என்பது போல பேசினால் அம்மா தாயே என்கிற ரேஞ்சிற்கு சிலர் இறங்கிவிடுவதும் உண்டு.

பத்து லட்சத்திற்கு பாலிஸி என்கிற உறுதி கடைசியில் காற்றில் பறந்து எப்படியாவது ஒரு பாலிஸி வாங்கினால் போதும் என்கிற நிலையில் ஊசலாடிக்கொண்டிருப்பார்கள். வேலை முடியும் முன்னே வருமானத்தை மட்டுமே மனதில் கொண்டு வருவதால்தான் இந்த ஊசலாட்டம். கிருஷ்ணர் சொன்னதும் கூட இவர்களுக்காகத்தான், “கடமையைச்செய் பலனை எதிர்பாராதே”.

இன்னும் சில புதியவர்கள், எப்படியாவது பாலிஸி எடுத்தாகவேண்டும் என்ற அவசரத்தில் குறைந்த தொகைக்கான இன்சூரன்ஸை பரிந்துரைப்பார்கள்.

நகைக்கடைக்கு நகை வாங்கச் செல்கிறீர்கள். கடைக்காரர் அவரிடம் உள்ளதில் ஏதாவது ஒரு நகையை உங்களுக்கு விலையில்லாமல் இலவசமாகத் தர விரும்புகிறார் என்றால் எதை வாங்குவீர்கள்? அங்கே உள்ள பிளாட்டினம் நகையையா அல்லது தங்கம், வெள்ளி நகைகளையா? மதிப்புத் தெரிந்தவர்கள் விலை உயர்ந்த பிளாட்டினத்தைதான் வாங்குவோம். ஆனால், சிலபேர் பிளாட்டினத்தைக் கேட்கும் தைரியமில்லாமல் வெள்ளியை வாங்கிக்கொண்டு வருவார்கள். இழப்பு யாருக்கு? கேட்கத் தயங்கியவருக்குத்தான்.

மறக்கத்தெரிந்த மனமே..

இத்துறையில், தோற்றவர்கள் யார்? என்று சர்வே எடுத்துப்பார்த்தால், நாம் செய்யும் வாடிக்கையாளர் சேவைக்காகத்தான், வருமானம் என்பதை மறந்து வருமானம் வந்தவுடன் அதாவது பாலிஸி போட்டவுடன் அந்த வாடிக்கையாளரையே மறந்துவிடுபவர்கள்தான்.

இன்சூரன்ஸ் அலுவலகத்தின் வாசலில் நடந்த சம்பவம். டுவீலரை நிப்பாட்டிக் கொண்டிருந்தவரை நிறுத்தி, “சார் என்னைத் தெரியுதா?” என்று கேட்டார் ஒருவர். டுவீலர் வைத்திருந்தவரால் எவ்வளவு யோசித்தும் நினைவுக்கு கொண்டுவர முடியவில்லை. கேட்டவரே சொன்னார், “எப்படி உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கும். பாலிஸில கையெழுத்து வாங்கின அன்னைக்கு என்னை பார்த்திருப்பீங்க. நாலு வருஷம் ஆச்சு இல்லையா”.

பாலிஸிதாரரை மறப்பவர்கள் சிலர். அவர்களையாவது மன்னிக்கலாம். இன்சூரன்ஸ் கம்பெனியையே மறந்துவிடுபவர்களும் இருக்கிறார்கள்.

ஒரு கம்பெனி பெயரைச் சொல்லி அதுதான் உலகத்தின் சிறந்த இன்சூரன்ஸ் கம்பெனி என்று பேசி பாலிஸி வாங்கிச் செல்வார்கள். நான்கைந்து மாதம் கழித்து ஏதாவது சந்தேகம் கேட்க நாம் தொடர்புகொண்டால், தற்போது உலகத்தின் வேறொரு சிறந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தில் முகவராக இருப்பதாகச் சொல்வார்கள். நாம் உதவிகேட்க முடியாமல் அழுவதா? சிரிப்பதா? என்று தெரியாமல் தவிப்போம்.

நம்மிடம் புதிதாக ஒரு இன்சூரன்ஸ் பாலிஸி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் வைத்து, “நானே உங்களுக்கு போன் பண்ணனும்னு நினைத்தேன் சார்” என்று வேறு தைரியமாக சொல்வார்.

இவர்கள், தான் மட்டும் தோற்பதில்லை, மற்றவர்களையும் தோற்க வைப்பவர்கள். இதெல்லாம் தோற்பவர்கள் தோற்றதற்கான சில காரணங்கள். ஆனால், நாம் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டியது, இன்சூரன்ஸ் துறையில் வென்றவர் வென்றதற்கான காரணம். இல்லையா? அது அடுத்த இதழில்…

  1. ஞானசேகரன்

    மிகவும் பயனுள்ள பதிவு…அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *