விரும்புங்கள் அடைவீர்கள்

– ருக்மணி பன்னீர்செல்வம்

உங்கள் ஆழ்மனம் எதை விரும்புகிறதோ அதை அடைவதற்கு உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஈடுபட்டிருப்பது ஒரு துறையாக இருக்கும். ஆனால் உள்ளம் விரும்புவது வேறு துறையாக இருக்கும்.

மெல்ல மெல்ல நீங்கள் விரும்புவதை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

நாம் மனப்பூர்வமாய் எதை விரும்புகி றோமோ அதைத்தான் நம்மால் சிறப்பாக செய்ய முடியும்.

மற்றபடி காலத்தின் கட்டாயத்திற்காகவும், பொருளாதார தேவைக்காகவும் ஈடுபாடு இல்லாத துறையில் நம்மை இருத்தி வைப்பதென்பது இரண்டு துரோகம் செய்ததற்கு சமம்.

ஆம். ஒன்று நாமே நமக்கிழைக்கும் துரோகம். அடுத்தது செய்து கொண்டிருக்கும் தொழிலுக்கு செய்யும் துரோகம்.

என்னதான் நேரத்திற்கு கட்டுப்பட்டு கடமையைச் செய்கிறேன் என்று சமாதானம் சொன்னாலும் ஈடுபாடு இல்லாமல் செய்த சமையல் ருசியில்லாமல் இருப்பதைப் போல்தான் ஆழ்மன விருப்பமின்றி நாம் செய்யும் வேலையும் தரமில்லாமல் இருக்கும்.

வெளிப்படுத்த முடியாத ஏக்கத்தோடும், வெளிக்காட்டாத துக்கத்தோடும் வாழ்வது வாழ்க்கையாகுமா?

இதனால்தான் பலரும் ‘எப்படி யிருக்கிறீர்கள்?’ என்றால் ‘ஏதோ இருக்கிறேன்’ என்கிறார்கள். அந்த ‘இருக்கிறேன்’ என்ற பதிலில் எத்தனையோ பொருள் அடங்கியுள்ளது.

மேலோட்டமான ஆசைகளுக்கும், ஆழ்மன ஆசைகளுக்கும் இடையேயான வித்தியாசங்களை முதலில் உணர வேண்டும்.

‘இப்படிச் செய்யவேண்டும் என்று நினைத்தேன்’, ‘அப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தேன்’ என்று பலரும் நம்மிடம் பேசுவதைப் பார்க்கலாம்.  ஆனால் ஏதோ சில காரணங்களைக் கூறி அவற்றால் அப்படிச் செய்ய முடியவில்லை என்று அவர்களே அதற்கு விளக்கமும் சொல்வார்கள்.

உண்மையில் அவர்கள் கூறுவதெல்லாம் அவர்களின் மேலோட்டமான ஆசைகளே.  அவை ஆழ்மன ஆசைகளல்ல.

அப்படியிருந்திருந்தால் அவர்கள் எப்பாடு பட்டாவது அதை அடைந்திருப்பார்கள்.

ஏதோ ஒன்றில் அல்லது சிலவற்றில் தனக்குத் தெரிந்த ஒருவர் வெற்றி பெற்றுவிட்டால் தானும் அப்படி வந்திருக்கலாமே என்று இயல்பாக எழும் எண்ணம்தான் அது.

தான் அடைய முடியாத ஒன்றிற்கு சூழலை ஒருவர் காரணம் காட்டுகிறார் என்றால் ஒன்று அது அவருடைய சக்தியெல்லைக்கு அப்பாற் பட்டதாய் இருக்கும். இரண்டு அதை அடைவதற்கு அவர் வேறெதையும் இழக்கத் தயாராயில்லை.  மூன்று கிடைக்கும்வரை முயற்சி செய்யவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக அது அவருடைய ஆழ்மன விருப்பம் இல்லை.

ஒரு இலட்சியத்தை மனதில் வரித்துக் கொண்டால் அதை அடையும்வரை போராடியே ஆக வேண்டும்.

“சிறு துன்பத்திற்காக அஞ்சி தன் இலட்சியத்தைக் கைவிட்ட மனிதன், தானே பெருந் துன்பத்தைத் தழுவிக்கொள்கிறான்”  என்கிறார் அறிஞர் வில்லியம் பிளேக்.

ஒரு வழியில் வெற்றி கிடைக்கவில்லை என்றால் மற்றொரு வழியில் முயற்சி செய்வது தானே வளர்ச்சியின் வரலாறு.

சர்.சி.வி. இராமன் – தன்னுடைய அயராத முயற்சிகளின் விளைவால் அற்புதக் கண்டு பிடிப்பை நிகழ்த்தி நம் நாட்டிற்கு நோபல்பரிசை பெற்றுத் தந்த விஞ்ஞானி. இராமன் அவர்கள் கல்லூரியில் பயிலும்போது அப்பாராவ் என்கின்ற அவருடைய நண்பர் ஒளியைப் பற்றி ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்தார்.

அப்பாராவின் ஆராய்ச்சியில் அவருக்கே புரியாத புதிர்களும், தவறுகளும் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. ஆனால் சி.வி. இராமனிடம் அச்சிக்கல் களை கூறியதும் மிக எளிமையான முறையில் தீர்த்து வைத்தார் இராமன்.

தன்னுடைய முடிவுகளை தான் மேற் கொண்ட முறைகளை இன்னும் செம்மைப்படுத்த விரும்பிய இராமன் தன்னுடைய பேராசிரியரிடம் அக் கட்டுரைகளை கொடுத்து திருத்தித் தருமாறு கூறினார்.

தன்னைவிட தன் மாணவர் அறிவாளியாய் இருப்பதை பொறாத அப் பேராசிரியர் அக்கட்டுரையினை திருத்தித் தராமல் காலங் கடத்தினார்.

அதனையறிந்து கொண்ட இராமன் பேராசிரியரிடமிருந்து அக்கட்டுரையை வாங்கி அமெரிக்க நாட்டிலிருந்து வெளிவரும் அறிவியல் இதழுக்கு அனுப்பி வைத்தார். மிகச்சிறப்பாய் இருந்த இராமனின் கட்டுரையை பாராட்டி வெளியிட்டது அப் பத்திரிகை.

ஒரு பாதை சரிப்படாத போது மாற்றுப் பாதையை தேர்ந்தெடுப்பதுதான் புத்திசாலித்தனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *